ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
September 26, 2020 • Viduthalai • மற்றவை

தந்தை பெரியார் வழங்கிய முகவுரை

காமராஜர் கொலை முயற்சி பற்றிய தகவல்கள் அவை சம் பந்தமான பலரின், பல பத்திரிகைகளின் கருத்துகள் முதலியவை அடங்கிய இப்புத்தகத்திற்கு ஒரு முகவுரை எழுதிக் கொடுக்கும் படி நண்பர்  திரு. கி. வீரமணி அவர்கள்  என்னைக் கேட்டுக் கொண்டார். அதை ஏற்று ஒரு முகவுரை எழுதத் துணிந்தேன்.

காமராஜரைக் கொல்ல ஏற்பாடு செய்யப்பட்ட முயற் சியை ஒரு சமுதாயப் புரட்சிப் போராட்டத்தின் விளைவு என்றுதான் மக்கள் கருதவேண்டும்.

சமுதாயப் போராட்டம் என்பதை எப்போது நடந்தாலும் அதில் பலாத்காரம் நாசவேலை, கொள்ளை, கொலை இவற்றிற் காக சூழ்ச்சி  சதி முதலிய காரியங்கள் நடந்துதான் தீரும். மேலும் சமுதாயப் போராட்டம் என்றாலே அதற்கு எவ்விதக் கட்டுப் பாடும் திட்டமும்  முறையும் கையாளப் படமாட்டாமல், எதைச் செய்தாவது எந்த முறையைக் கொண்டாவது போராட வேண்டி யது என்பது அதற்கு உரிமையாகும். ஏனெனில் சமுதாயப் போராட்டம் என்பது நமது நாட்டில்  மதத்தைச் சாக்காக வைத்து நடத்தும் ஒரு வெறி கொண்ட போராட்டம் ஆகும். அதாவது மதவெறி மாத்திரமல்லாமல் முழுக்க முழுக்க சுயநலத்தையே அடிப்படையாகக் கொண்ட வெறியாகும்.

எப்படியென்றால், மதக் கொள்கைக்கு, மதப் பெரு மைக்கு மாத்திரம் கேடு வந்த காலத்தில் கிளம்பும் வெறி சாதாரண மத வெறியாகும். மதக் கொள்கைக்கு கேடு வருவதுடன்  அதனால் சுயநலம், தனது பெருமை,  தனது வாழ்க்கை நிலைக்கு கேடு வருகின்றது என்கின்ற நிலையில் ஏற்படுவது மதவெறியும் சுயநலவெறியும் கொண்டு முரட்டு மதவெறியாகும். அந்த வெறிக்கு ஆட்பட்டவர்கள் மானாவமானத்தைப்  பற்றிய கவலைகூட படக்கூடாது என்பது தர்மமாகும். இதற்கு உதாரணம் வேண்டுமானால் இராமாயணக் கதையை எடுத்துக் கொண்டு பார்த்தால் விளங்கும். அதாவது மற்ற மக்களைத் தாழ்த்தி இழிவுபடுத் தித் தங்களை உயர்த்திக் கொண்டு மற்றவர்கள் உழைப்பால் உண்டு கொழுத்து வாழும் மக்களுக்கு அந்தப் படியான தர்மத்திற்குக் கேடு வந்த காலத்தில் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைக் காட்டுவதற்காகவே ஏற்படுத்திக் கொண்ட ஒரு நடைமுறைச் சட்டம் (Proce dure Code)  என்றே சொல்லலாம்.

இராமாயணக் கதையை நடுநிலைகளில் இருந்து நல்ல வண்ணம் ஆராய்ந்து பார்த்தால் அதில் வரும் தேவர்கள், அவர்களது ஆதரவாளர்கள் பிரதான புருஷர்கள், கடவுளர் கள் என்பவர்களின் பிறப்புகள், செய்கைகள், போராட்டங்கள் முதலியவைகளுக்கு மானம், ஈனம்,  நீதி, நேர்மை, ஒழுக்கம், நாணயம் முதலாகிய உயர்பண்புகள் என்பவற்றில் எதுவுமே இருக்காது. ஏன் எனில், தங்கள் காரிய சித்திக்கு எது செய்தால் சித்தியாகுமோ அதைச் செய்ய பின்வாங்கக் கூடாது என்பதுதான் அதன் தத்துவ மாகும். இராவணனை இராமாயணத்தில் தவ சிரேஷ்டன் ஆகவும் வேதம் படித்தவனாகவும், மிக்க வலிவும் வரப் பிரசாதத்தால் கோடிக்கணக்கான ஆயுள்  கொண்டவனா கவும் சித்தரித்துக் கொண்டு அவனால் தங்கள் சமுதாய உயர் வாழ்வுக்கு உயர் வாழ்வு தர்மத்திற்கு கேடு வருகிறது என்ற காரணத்திற்காக   அவனை ஒழிப்பதற்காகக் கையாண்ட முறை களிலும் எந்த  கட்டத்திலும் எந்த இடத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் நியாயம், நேர்மை, ஒழுக்கம், வீரம் முதலிய உயர் பண்புகள் என்பவைகளில் எதையும் காட்டாமல்  அவைகளுக்கு  நேர் விரோதமாக நடந்து வெற்றி பெற்றதாகக் காட்டப்பட்டிருக்கிறது.

எப்படி என்றால்,

இராமன் தகப்பன் இழிமகன் - ஒழுக்கமற்றவன் - நேர்மை அற்றவன்.

இராமன், தகப்பன்  சேர்க்கையால் பிறந்தவன் அல்லன், இராமன், பட்டாபிஷேக விசயத்தில் தகப்பனும் யோக்கிய மாய் நடந்து கொள்ளவில்லை. மகனும் யோக்கியமாய் நடந்துகொள்ள வில்லை. அந்தக் கதையில் வரும் ரிஷிகள் மடையர்கள், அயோக்கியர்கள், இராமன் மனைவி எப்படி, யாருக்குப் பிறந்தாள் என்கின்ற பிறப்பு அறிய  முடியாதவர். இவைகள் ஒரு புறமிருக்க, இராமன் இராவணனைக் கொல்ல ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ளுவதற்காக, தன் மனைவி சீதையை இராணவன் பின் செல்லச் செய்து அவளை இராவணனால்    கர்ப்பம் (சூல்) பெறும் அளவுக்கு காரியம் செய்ததாகச் சித்தரிக் கப்பட்டிருக்கின்றது. யுத்த முறையில் வீரம் பார்க்க வேண்டிய தில்லை என்பதைக் காட்டுவதற்காக வாலியை அவன் முதுகுப் புறம் இருந்து கோழைத் தனமாகக் கொன்றதாக சித்தரிக்கப்பட்டு இருக் கின்றது. இதற்குக் காரணம் வாலி பலசாலியும் வரப்பிரசாதி யுமானதால், அவனை நேரில், முன்புறமிருந்துகொல்ல முடியாத தால் பின்புறமிருந்து கொல்ல வேண்டிய வந்ததாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது.

மற்றும் பிராமணர்களையும், ரிஷிகளையும், தேவர்களை யும், தர்மத்தையும் காப்பாற்றும் விஷயத்தில் எந்த அதர்மமான காரியத்தையும் செய்யலாம் என்பதாக திட்டம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட காரியங்களை இன்றைக்கும் நாளைக்கும் செய்து, தங்கள் உயர்வைக் காப்பாற்றிக் கொள்ளலாம். காப்பாற் றிக் கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுவதுதான் இராமா யணம், ஆதலால்,

காமராஜர் கொலை முயற்சி என்பது மதத்தைப் பற்றிய கவலையைக் கொண்டதாக இல்லாமல் ஒரு சமுதாயத்தின் உயர்வை உயர்வாழ்வை அடிப்படையாகக் கொண்டதே யாகும். உலகில் மற்ற மதக்காரர்களுக்கு ஏற்படும் மதவெறி எல்லாம் தங்கள் மதப்பெருமைக்குக் கேடு வருகின்றதே, குறைவு வருகிறதே என்கின்ற கவலையைப் பொறுத்த தாகத்தான் இருந்து வந்து இருக்கின்றது.

இந்து மதம் சம்பந்தமான மதவெறி அதிலும் மேல் ஜாதிக்காரர்களாக வாழும் பார்ப்பனர்களுக்கு ஏற்படும் மதவெறி தங்களின் உயிர் வாழ்வுக்கு கேடு வந்துவிடுமே என்கின்ற சுயநலத்தின்மீது ஏற்படும் வெறிதான் அதுதான் முரட்டு வெறியாகத் தோன்றி விடுகின்றது.

அப்படி தோன்றினதிலும்,  இப்படிப்பட்ட மத முரட்டு வெறிக்கு ஆதாரமான மத தர்மம் (மனுதர்மம்) என்பதில் தம் மதத்திற்கு கேடுவரும்போது,  எந்தவிதமான  அதர்மத் தையும்  கையாண்டாவது அதாவது கொலை, நாசவேலை, நாணயம் , ஒழுக்கம், சத்தியம் ஆகியவைகளைச் சிறிதும் பாராமல்  காரிய சாத்தியற்குத் தேவை என்று தோன்றுகின்ற  எந்தக் காரியத்தையும்  செய்யலாம் என்கின்ற உரிமை உயர் வகுப்பாருக்கு மத தர்மத்தின்படியும் இராமாயணப்படியும் அளிக்கப்பட்டிருப்பதால் உயர்ந்த வகுப்பார் என்பவர் களிடம்  எப்போதுமே ஒழுக்கம், நாணயம், நேர்மை ,  சத்தியம் முதலிய எதுவும் எதிர்பார்ப்பதற்கு   முடியாததாக இருந்துவருகின்றது. அதனால்தான் அவ்வகுப்பார் களுக்கு கொலை, கொள்ளை, நாசம் முதலிய துர்ச்செயல்கள் கூட மேல் வகுப்பார்களுக்கு காயத்திரி மந்திர ஜெபம் போன்ற முக்கியமும் அவசியமும் ஆன காரியமாக ஆகி வந்திருக்கிறது. இதற்கு நடப்பு ஆதாரம் என்னவென்றால் இன்றைய சமுதாயப் புரட்சிக் கொள்கையாகிய சமதர்மத் திட்டத்திற்கு எதிரிகளாகிய இரண்டு பார்ப்பனத் தலைவர் களும், அதாவது இராஜாஜியும், சங்கராச்சாரியும் அவர்க ளது சமுதாய மக்களுக்கு, தர்மத்துக்கு ஆபத்து வருமானால், எந்த அதர்மத்தையும் கையாண்டாவது தர்மத்தைக் காக்கலாம். அது அதர்மமாகாது, தர்மமேயாகும் என்றும், தர்மத்தைக் காப்பதற்காகத் தண்டப் பிரயோகம் செய்யலாம் என்றும் முறையே  கட்டளை இட்டு இருக்கின்றார்கள்.

அதற்குப் பின் ஜனநாயகம் காரணமாக  வலுவு குறைந்து இருப்பதாலும் சமுதாயப்புரட்சியால் தங்கள் உயர்வுக்கு, உயர் வாழ்வுக்குக் கேடுவரும் என்று கருதும் மந்திரிகளும், கலெக்டர் களும், அதிகாரிகளும் இக்காரியங்களுக்குத் தங்களால் கூடு மான அளவு அனுமதித்தும் ஆதரவு காட் டியும் உதவி செய்தும் வந்திருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட வர்களின்  உதவி வெறியர் களுக்கு தமிழ்நாட்டை விட அதிகமாக  வடநாட்டில் கிடைத்து வந்திருக்கிறது.

மதம், ஜனநாயகம் என்னும் பேரால் அனுமதி அளித்த தாக மந்திரிகளும் அதிகாரிகளுமே ஒப்புக்கொண்டு இருக் கின்றார் கள். இவையெல்லாம் இந்த புத்தகத்தில் காணலாம்.

நிற்க,

இப்படிப்பட்ட சமுதாயப் புரட்சிகூட அரசியல் காரண மில்லாமல் சில சமுதாயச் சீர்திருத்தம் காரணமாக இந்தியாவில் இதற்கு முன்னும்  பல தடவை  துவக்கப்பட்டு அதனால் குழப் பங்கள், பலாத்காரங்கள், நாச வேலைகள், கொலைகள், ஆட்சி மாற்றங்கள் முதலியன நடத்திருக் கின்றன.

அவைகளில் புராண சம்பந்தமான சரித்திர சம்பந்தமான பல பழைய நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க இன்றைய  இரண்டொரு நூற்றாண்டுகளில் நடந்ததை ஆதார பூர்வமான நிகழ்ச்சிகளில் 1857 ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய்க் கலகம் என்கின்ற நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கதாகும். என இதை எடுத்துக்காட்டாகக்  கூறுகின் றேன்  என்றால், இந்த சிப்பாய்க் கலகமென்னும் தேசியக் கலக மென்பது முக்கியமாய் சமுதாயச் சீர்திருத்த முயற்சியை எதிராகக் கொண்டு நடத்தப்பட்டதே யாகும்.

இந்த சிப்பாய்க் கலக நடப்பில் வெள்ளையர் ஆட்சியை மாற்றி முஸ்லிம் கையில் ஆட்சியைக் கொடுக்கும் அளவுக்கு நடந்திருக்கின்றது. இதில் ஆயிரக்கணக்கில் வெள்ளையர்கள் கொல்லப்பட்டும், மாபெரும் நாசவேலை கள் செய்யப்பட்டும் இருக்கின்றன.

இச்செயல்கள் எல்லாம் மத தர்மத்தைக் காப்பதற் கென்றே நடத்தப் பட்டவையாகும் என்பதை இன்றைய காமராஜர் கொலை முயற்சி என்ற குழப்பத்தின் போதும் குழப்பக்காரர்கள்  பச்சையாய் ஒத்துக் கொள்ளும் தன்மை யிலும் காமராஜரை எச்சரிக்கும் தன்மையிலும், அரசாங்கம் இணங்கி வராவிட்டால், 1857-இல் நடத்தப்பட்ட காரியங்கள் இப்போது நடத்தப் போகிறோம் என்பதாக எச்சரிக்கை விடுத்து இருக்கும் தன்மை மூலம் அறியலாம்.

(தொடரும்)