ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காதல் தேர்வு
September 19, 2020 • Viduthalai • மற்றவை

வியக்கவைக்கும் உலகியல் உண்மை ஒன்று.

எந்த ஒரு சமுதாயத்தில் பெண்கள் எந்தவித அடக்குமுறைக் கட்டுப்பாடும் இல்லாமல்  சுதந்திரமாக, சுயமாக தன் வாழ்விணையரைத் தேர்ந்தெடுத்து மணந்து கொண்டு, அவன் மூலம் மகிழ்ந்து குழந்தை பெறும் உரிமையை பெற்றிருக்கிறார்களோ, அந்த சமுதாயத்துப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மட்டுமே உலகச் சாதனைகளை நிகழ்த்தும் உன்னத மானுடர்களாக உருவாகிறார்கள்.

இந்த உண்மையை சமகாலத்தில், இவ்வுலகில் காணமுடிகின்ற பல்லாயிரம் சமுதாயங்களை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.  ஒரே சமுதாயத்தின் கடந்த கால  நிலையை நிகழ்கால நிலையுடன் ஒப்பிட்டாலும் இந்த உண்மையை உறுதிப்படுத்த முடிகிறது.

இரண்டும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் அமையும் சமுதாயங்களையும் காண முடிகிறது. அங்கும் எத்தனை சதவீதத்திற்கு பெண்கள் தங்கள் வாழ்விணையை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருக்கிறார்களோ, அத்தனை சதவீதம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சிறந்த சாதனையாளர்களாக உருவாவதையும் காண முடிகிறது.

இப்படியான பாலியல் தேர்வு உரிமை பெற்றிருக்கும் பெண்கள் உள்ள சமுதாயம் முற்போக்கானதாகவும், வளர்ச்சியை நோக்கிய சமுதாயமாவும், மனித வளக் குறியீட்டு எண்களில் சிறந்தவையாகவும், மனித உரிமை, மனித நேயம் பேணுபவையாகவும் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

எப்படி இது சாத்தியப்படுகிறது?

பெண்ணுக்கான இயல்பான உள்ளுணர்வு சிறந்த  சந்ததிகளை உருவாக்குவதற்கு உகந்ததாக இருக்கிறது. அவள் உள்ளுணர்வு சொல்லும். எப்படிப்பட்ட உடல் திறம் - அறிவுத்திறம் - மனத்திறம் கொண்டவனை காதல் கொண்டு கலவி செய்தால், அடுத்த சந்ததி சிறந்தவர்களாக உருவாவார்கள் என்பதை. அதன்படிதான் அவள் தனது காதல் தேர்வினை நடத்துகிறாள். தான் விரும்பியவனை விருப்பத்துடன் புணர்ந்து உச்சம் எய்திப் பெறும் விந்தால் மட்டுமே அவளால் உன்னதமான கருவினை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.  வயிற்றில் அனுபவித்து வளர்க்க முடிகிறது. ஆசையுடன் பிரசவிக்க முடிகிறது. இந்த இனிய அனுபவங்களைக் கடக்கும் பெண்ணால் மட்டுமே உன்னதமான குழந்தையை பெற்று வளர்த்து சிறந்த மானிடர்களாக சமுதாயத்திற்கு தர முடிகிறது.

இவை அனைத்தும் ஏதேனும் கட்டுப்பாடுகளுக்குள் நிகழும் போதெல்லாம் அப்போது  உருவாகும் ஒட்டு மொத்த சந்ததியையும் தோல்வியைச் சுமந்தவர்களாகவே அடையாளம் காண முடிகிறது. அடிமைப் பெண்ணுக்கு பிறந்த அடிமைகளாகவோ, அடக்குமுறை ஆணுக்குப் பிறந்த அடக்குமுறையாளர்களாகவோ மனிதம் தொலைத்து வாழ்வதையும் காண முடிகிறது.

நமது சூழலுக்கு பொருந்துவது போல் எளிமையாக சொல்ல வேண்டுமானால் காதல் திருமணம் அனைத்தும் பெண்கள் தன் உள்ளார்ந்த விருப்பத்துடன் தன் இணையரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு தருபவை. பெற்றோர் பார்த்து நடத்தப்படும் திருமணங்கள் எல்லாம் மதம், ஜாதி, சொந்தம், அந்தஸ்த்து, சொத்து, படிப்பு தொடங்கி எண்ணற்ற கட்டுப்பாடுகள் விதித்து அந்த கட்டுப்பாடுகளுக்குள் இயங்க வேண்டும் என பெண்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் நிர்பந்திப்பவை.

எனவே எந்தெந்த சமுதாயம் எல்லாம் காதல் திருமணத்தை உயர்த்திப் பிடிக்கிறதோ அந்தந்த சமுதாயம் எல்லாம் பண்பட்டு வளர்கிறது. மாறாக காதல் திருமணத்தை தடுக்கும் சமுதாயம் எல்லாம் அடிமை சமுதாயமாகவும், அடக்கு முறை சமுதாயமாகவும் மாறி சீர் கெட்டு காலப் போக்கில் அழிகிறது.

தாய்வழிச் சமுதாயமான தமிழ்ச் சமுதாயமும் சங்க காலத்தில் காதலும், உடன்போக்கும் ததும்பிய முற்போக்கு சமுதாயமாக இருந்ததை அகப்பாடல்கள் மூலம் அறிகிறோம். அதன் விளைவாக சமத்துவமும், பொருளாதார உயர்வும், மானுட மாண்பும் பெற்றிருந்த கால கட்டமாக சங்க காலத்தை அறிய முடிகிறது. அதற்கு பின் வந்த இடைக்காலத்தில் ஆணாதிக்கத்தின் விளைவாய் இந்த உரிமைகள் யாவும் பெண்ணிடம் இருந்து பறிக்கப்பட்டன. அதன் விளைவாக பிற்போக்குத்தனமான இழிவான சமுதாயமாக  தமிழ்ச் சமுதாயம் மாறிப்போனதை வரலாறு சுட்டிக் காட்டுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் உருவான பகுத்தறிவு இயக்கங்களின் விளைவாக பெண்ணடிமைத்தனத்தை விட்டொழித்த சமகால தமிழ்ச் சமூகம்,  இன்று பாலினச் சமத்துவத்தின் தேவையை நன்றாக உணர்ந்துள்ளது.

ஏனைய சமுதாயத்தைப் போல தமிழ்ச் சமுதாயமும் அழிவை நோக்கிப் போவதைத் தடுக்க வேண்டும் என்றால் இங்கு பெண்களின் பாலியல் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

செல்லும் இடம் எல்லாம் காதலை உயர்த்த வேண்டும்.

- இளங்கோவன் கீதா