ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காணொலியில் கழகத் தலைவர் - நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவில் இருக்கும் ஒழுக்கசீலர் ஓமாந்தூரார் - சமூகநீதியின் சின்னம் பி.பி. மண்டல்
August 26, 2020 • Viduthalai • கழகம்

* கலி. பூங்குன்றன்

இந்த இரு பெரும் மாமனிதர்கள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்று மாலை 6 மணியளவில் காணொலி மூலம் அரிய கருத்துரையை வழங்கினார்.

ஒழுக்கசீலர் ஓமாந்தூர் பி. இராமசாமி (ரெட்டியார்)

75 ஆண்டுகள் வாழ்ந்த ஓமாந்தூரார் அவர்கள் சென்னை மாநில பிரதமராக (Premicr) ஈராண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தாலும் - அந்தக் கால கட்டம் தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் முத்தாய்ப்பானது.

'விவசாய முதல் அமைச்சர்' எனும் தலைப்பில் எழுத்தாளர் சோமலே அவர்கள் ஓமாந்தூரார் வாழ்க்கை வரலாற்றினை - ஒரு வரலாற்று நூல் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக எழுதியுள்ளார் (1979).

வெறும் எட்டாம் வகுப்பே படித்த ஓமாந்தூரார் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசக் கூடிய ஆற்றல் பெற்றவர்.

எந்தப் பாராட்டு விழாவிலும் பங்கேற்க மாட்டார். பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ள மாட்டார்.

தனது டாக்டரான இரத்தினவேல் சுப்பிரமணியம் அவர்களிடம் வைத்த நிபந்தனை எத்தகையவை?

(1) எனக்கு மருத்துவர் மட்டும்தான் நீங்கள்; அதற்காக எந்தவிதப் பதவி உயர்நிலையையும் எதிர்பார்க்கக் கூடாது.

(2) சிபாரிசு செய்யக் கூடாது.

(3) அரசியல் பேசக் கூடாது

என்ற மூன்று முத்தாய்ப்பான நிபந்தனைகளைத் தொடக்கத் திலேயே வைத்தார் என்றால் அந்த மனிதர் மாமனிதர்தானே!

சென்னை மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், இருந் திருக்கிறார்; தன்னை எதிர்த்த சத்திய மூர்த்தி அய்யரை 35 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர்.

எட்டாம் வகுப்பே படித்த ஓமாந் தூரார் முதல் அமைச்சராக எப்படி செயல்பட முடியும் என்றெல்லாம் நினைத்தவர்களுக்கு ஆச்சரியக் குறியாக நின்றார்.

அன்று அய்.சி.எஸ். படிப்பு என்பது மிக பெரிய உச்சமான நிலை. அத்தகைய அதிகாரிகளே ஓமாந் தூராரிடம் அஞ்சுவார்கள் அடக்கமாக நடந்து கொள் வார்கள் என்றால் அவரின் நிர்வாகத் திறனைஅறிந்து கொள்ளலாமே!

சமூகநீதித் துறையில் அவரின் சாதனைகள் அசாதாரணமானவை.

நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் ஓர் அமைச்சராகவிருந்த எஸ். முத்தையா முதலியார் அவர்கள் முதல் இடஒதுக்கீட்டு சட்டத்தை 1928இல் கொண்டு வந்தார். மொத்த 12 இடங்கள் எனில் அதில்

பார்ப்பனர் அல்லாதவர்கள்  - 5 (44%)

பார்ப்பனர் - 2 (16%)

முஸ்லிம்கள் - 2 (16%)

ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறித்தவர் - 2 (16%)

தாழ்த்தப்பட்டோர் -1 (8%)

ஓமாந்தூரார் முதல் அமைச்சராக வந்த நிலையில் எடுத்த எடுப்பிலேயே ஒரு காரியத்தைச் செய்தார்.

ஆந்திர அய்யங்கார்ப் பார்ப்பனரான ‘ஆந்திரகேசரி’ என்று அழைக்கப்பட்ட பிரகாசம் முதல் அமைச்சரான நிலையில், ஒரு தந்திரமான ஏற்பாட்டைச் செய்தார். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் தகுதியின் அடிப்படையில் 20 விழுக்காடு மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஆணை பிறப்பித்தார். (1946).

நடைமுறையில் இருந்த ஆணைப்படி, மருத்துவக் கல்லூரிகளில் பார்ப்பனர்களுக்கு 56 இடங்கள் கிடைக்க வேண்டும். பிரகாசம் பிறப்பித்த ஆணையின்படி பார்ப்பனர்களுக்கு 96 இடங்கள் கிடைத்தன.

ஓமாந்தூரார் பதவி ஏற்றவுடன் செய்த முதல் வேலை ‘ஆந்திர கேசரி’ பிரகாசம் பிறப்பித்திருந்த தகுதியின் அடிப்படையில் 20 விழுக்காடு இடங்களுக்கான ஆணையை ரத்து செய்தார்.

இடஒதுக்கீட்டிலும் ஒரு மாறுதலைச் செய்தார். மொத்த இடங்கள் 14.

பார்ப்பனர் அல்லாதாருக்கு 6 இடம் (44%)

பிற்படுத்தப்பட்டோருக்கு 2 இடங்கள் (14%)

தாழ்த்தப்பட்டோருக்கு 2இடங்கள் (14%)

ஆங்கிலோ இந்தியர்களுக்கு 1 இடம் (7%)

முஸ்லிம்களுக்கு 1 இடம் (7%)

பார்ப்பனர்களுக்கு 2 இடங்கள் (14%)

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் முதல் முதலாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு என்று தனி ஒதுக்கீட்டுக்கு வழி செய்த தாகும்.

இத்தகு செயல்பாடுகளைக் கண்ட பார்ப்பனர்கள் ஓமாந் தூராரை ‘தாடி இல்லாத ராமசாமி’ என்று அடையாளப்படுத்தினர்.

ஓமாந்தூராரின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்ட பார்ப்பனர்கள் பிரச்சினையை காந்தியாரிடமே கொண்டு சென் றனர். காந்தியாரைச் சந்தித்த முதல் அமைச்சர் ஓமாந்தூரார் அவர்கள், மக்கள் தொகையில் பார்ப்பனர்கள் எத்தனை சதவீதம் - அதே நேரத்தில் ஒவ்வொரு துறையிலும் அவர்களின் ஆதிக்கம் எந்த அளவு எண்ணிக்கையில் இருக்கிறது என்பதைப் புள்ளி விவரங்களுடன் விவரித்தார்; காந்தியார் உண்மையைப் புரிந்து கொண்டார்.

மறுபடியும் பார்ப்பனர்கள் காந்தியாரிடம் முறை யிட்டபோது பார்ப்பனர்களைப் பார்த்து ‘வேதம் ஓத வேண்டிய உங்களுக்கு ஏன் ஸ்டெதாஸ்கோப்பு - உங்களுக்கு ஏன் டீஸ்கொயர்? என்று கேட்டார்.

இந்தப் பதிலை காந்தியாரிடம் பார்ப்பனர்கள் எதிர்ப் பார்க்கவில்லை. (காந்தியாரை மகாத்மா ஆக்கியவர் களும் அவர்கள்தானே - பின்னர் கோட்சேயை அனுப்பியவர்களும் அவர்கள்தானே!)

ஓமாந்தூராரின் சமூகநீதி நடவடிக்கைகளைக் கண்டு ‘ஹிந்து’ பத்திரிக்கை அவரை வகுப்புவாதி என்று அடையாளம் காட்டியது.

ஓமாந்தூரார் என்ன செய்தார்? தன் செயலாளர் மூலம், ஹிந்து பத்திரிகை ஆசிரியரை தன்னை சந்திக்குமாறு கூறினார். ‘ஹிந்து’ ஏட்டின் ஆசிரியரும் ‘ஆவலோடு’ நல்லது நடக்கப் போகிறது என்ற எண்ணத்தோடு முதல் அமைச்சரை வந்து சந்தித்தார்.

‘என்னை வகுப்புவாதி என்று உங்கள் ஏட்டில் எழுதியுள்ளீர்கள். உங்களை ஒன்று கேட்கிறேன், உங்கள் ‘இந்து’ப் பத்திரிக்கை அலுவலகத்தில் எத்தனைப் பார்ப்பனர் அல்லாதாருக்கு இடம் கொடுத்துள்ளீர்கள்?’ என்று நறுக்குத் தெறித்ததுபோல கேட்டார். என்ன பதில் சொல்ல முடியும்? மவுனம்தான்.

நேர்மையாளரான ஓமாந்தூரார் தனக்குச் சரி என்று பட்டதை யாராக இருந்தாலும் நேருக்கு நேர் கூறும் பண்பாளர்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவி என்று வரும்போது - அப்பொழுதெல்லாம் முதல் அமைச்சரின் கருத்துக் கேட்கப்படும். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.வி. ராஜமன்னாரை நியமிக்கும் பிரச் சினையில் உறுதியாக நின்றார். அதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியின் பதவி காலியாக இருந்தது. சிதம்பரம் நாகபூஷணம் சோம சுந்தரம் அவர்களை முதல் அமைச்சர் ஓமாந்தூரார் சிபாரிசு செய்தார்.

தலைமை நீதிபதியும் அவர் பெயரை சிபாரிசு செய்திருந்தார். இந்த நிலையில், அந்த ஓரிடத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்ட உருவாக்கக் குழுவில் இடம் பெற்றிருந்த என்.கோபால்சாமி அய்யங்காரின் மருமகனான வி.கே. திருவேங்கடாச்சாரியைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் நேரு வரை அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது.

முதல் அமைச்சர் ஓ.பி.ஆர். டில்லி சென்றபோது பிரதமர் நேருவைச் சந்தித்தார்.

அப்பொழுது உள்துறை அமைச்சர் படேலும் உடன் இருந்தார். முதல் அமைச்சர் ஓ.பி.ஆரைப் பா£ர்த்து பிரதமர் நேரு - "நீங்கள் 'பிராமின்', 'நான் பிராமின்' கண்ணோட்டத்தோடு பிரச்சினைப் பார்க்கிறீர்களா?" என்று கேட்டபோது- முதல் அமைச்சர் ஓ.பி.ஆர். தன் இருக்கையை விட்டு எழுந்திருந்து ‘இந்தாருங்கள் என் முதல் அமைச்சர் பதவியின் ராஜினாமா’ என்றாரே பார்க்கலாம். பிரதமர் நேரு அதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

முதல் அமைச்சரிடம் பிரதமர் சமாதானம் கூறி, முதல் அமைச்சர் விருப்பப்படியே சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி பதவி நியமனம் நடக்க சம்மதம் தெரிவித்தார்.

திருவண்ணாமலை ரமண ரிஷி பக்தராகவும், இறுதி காலத்தில் வடலூர் இராமலிங்க அடிகளாரின் பக்தராகவும் ஓமந்தூரார் விளங்கினார். எனினும் தந்தை பெரியாரிடத்தில் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொண்டவர் - தந்தை பெரியாரிடத்தில் காங்கிரசில் தொண்டராக இருந்து பணியாற்றியவர்.

தந்தை பெரியார் செயல்படுத்தி வந்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை செயல்படுத்திட ஒரு குழுவையும் அமைத்தார்.

ஓமாந்தூரார் முதல் அமைச்சராகவிருந்தபோது தந்தை பெரியாரைத் தாமே நேரில் வந்து சந்திக்க விரும்பினார். தந்தை பெரியாரோ, அது முறையல்ல; முதல் அமைச்சரை நான்தான் போய் சந்திக்க வேண்டும் என்று கூறி முதல் அமைச்சரை நேரில் சென்று சந்தித்தார்.

நீங்கள் உட்கார வேண்டிய நாற்காலியில் நான் அமர்ந்துள்ளேன் - அப்படியிருக்கும்போது - ஓயாமல் போராட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கிறீர்களே என்று சொன்னதுண்டு, கேட்டுக் கொண்டதும் உண்டு.

காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட போது - நாட்டில் மதக்கலவரம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள, தந்தை பெரியாரை அழைத்து வானொலியில் பேசச் செய்தார். சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்பற்றி முதல் தகவலே ஓ.பி.ஆர். அவர்களின் மகன் மூலமாகவே வெளியில் வந்தது. ஓ.பி.ஆர். அவர்களின் மகனும் வ.வே.சு. அய்யர் நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தில் பயின்றார்.

அங்கு பார்ப்பன மாணவர்கள், பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கிடையே வேறுபாடு காட்டப்பட்டது. உணவு, குடிக்கும் தண்ணீர் பானை வரை வேறுபாடு அங்கு நிலவியதை தனது தந்தையார் ஓபியாரிடம் கூற, அந்தத் தகவலை பெரிய நயினாவிடம் (தந்தை பெரியாரிடம்) போய் சொல்லு என்று அனுப்பி வைக்க, அதன் அடிப்படையில்தான் சேரன்மாதேவி குருகுலப் போராட்டமே நடந்தது என்பது வரலாறு.

ஓமாந்தூரார் முதல் அமைச்சர் பதவியை விட்டு விலகிய பிறகும், அவருக்குக் கவர்னர் பதவி முதல் பல பதவிகளும் தேடி வந்ததுண்டு; ஆனால் அவற்றை யெல்லாம் அவர் ஏற்கவில்லை; துறவி போல் வாழ்ந்தார்.

காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சியை ராஜாஜி துவக்கிய போது (அந்தக் கட்சிதான் பிறகு சுதந்திரா கட்சி என்று பெயர் பெற்றது).

ஓமாந்தூராரை அக்கட்சியில் சேர அழைப்பு விடுத்தபோது - நான் வளர்ந்த காங்கிரஸ், நான் வளர்த்த காங்கிரசை  விட்டு விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மறுத்துவிட்டவர்.

75 ஆண்டு காலம் வாழ்ந்தவர்; கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோதுதான், தமிழக சட்டமன்ற வளாகத்துக்கு ஓமாந்தூரார் பெயரைச் சூட்டினார் என்ற தகவலையும், திராவிடர் கழகத் தலைவர் தெரிவித்தார்.

(பி.பி. மண்டல் பற்றி தொடரும்)