ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காணொலியில் கழகத் தலைவர் மனுவாதிகளுக்குப் பதிலடி எது
August 17, 2020 • Viduthalai • கழகம்

காணொலியில் கழகத் தலைவர் மனுவாதிகளுக்குப் பதிலடி எது?

* கலி. பூங்குன்றன்

நேற்று (16.8.2020) காலை 11 மணியளவில் நடை பெற்ற திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள், செய லாளர்கள் கலந்துரையாடல்  காணொலி கூட்டத்தில் பங்கு கொண்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சில வீச்சுகள்!

மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான ஆட்சியின் நடவடிக்கைகள் என்கிற போது,  5 வகை யாகப் பிரிக்கலாம்.

(1) பண்பாட்டுத் திணிப்பு

‘இந்துத்துவா’ என்ற பெயரில் பார்ப்பன சனாதனப் பண்பாட்டைத் திணித்து மக்களை மதவாரியாகப் பிரிப்பது, வாக்குகளை மத அடிப்படையில் பிரித்து (Polarisation) வாக்குகளை அள்ளி அதிகாரத்தைப் பிடிப்பது.

ஒரு நாடு

ஒரே மொழி

ஒரே கலாச்சாரம்

ஒரே ஆட்சி

ஒற்றைத் தலைமை

என்னும் பாசிசம் படம் எடுத்து ஆடுகிறது.

இப்படியெல்லாம் ஆட்டம் போட்ட பாசிஸ்ட்டு இட்லர் வரலாற்றில் என்ன ஆனார் என்பது  நினை வில் இருக்கட்டும்!

(2) சமூகநீதிக்குச் சாவுமணி

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறாத - நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்ட - இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்பதன் மூலம் சமூகநீதியின் ஆணிவேரை வெட்டி வீழ்த்தும் வேலை வேகமாக நடைபெறுகிறது.

உயர்ஜாதி ஏழைகளுக்கு என்று பொருளாதார அளவுகோலைத் திணித்து பார்ப்பனர் ஆதிக்கத்தை சட்டரீதியாகவே தூக்கி நிறுத்துதல் இதன் அடிப்படை நோக்கம்.

எந்த பார்ப்பனரும் கல்வியிலும் சமூக அந்தஸ் திலும் கீழ்நிலையில் உள்ளவர் அல்லர். இடஒதுக்கீடு என்பது கல்வியிலும் சமூகரீதியிலும் கீழே தள்ளப்பட்டவர்களைத் தூக்கி விடுதலே என்பதைப் புறந்தள்ளி, பார்ப்பனர்களுக்குக் கதவை அகலமாகத் திறந்து விடுதல்.

மாநிலங்களிலிருந்து பெற்ற மருத்துவக் கல்லூரி களுக்கான இடங்களைக் கைப்பற்றி பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது - ‘வெளியில் நில்’ என்று அடம்பிடிக்கும் ஆரிய ஆணவம்!

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், அதனை உடனடி யாகச் செயல்படுத்தாமல் சண்டித்தனம்!

நுழைவுத் தேர்வு என்ற பெயரால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களை ‘பெரிய வியாதியஸ்தர்கள் உள்ளே நுழையக் கூடாது' என்ற போர்டுபோல் வெளியே நிற்க வைத்தல்.

மருத்துவக் கல்லூரிக்கே ‘நீட்’ கூடாது என்று போராடிக் கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில், இனி கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் விஞ்ஞான (Arts and Science) பட்டப் படிப்பில் சேருவதற்குக்கூட நுழைவுத் தேர்வாம்!

20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் இருந்து வந்த நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்ட நிலையில் மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் ஆரிய அடவடித்தனம்!

(3) மொழித் திணிப்பு

தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரால் இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு! சமஸ்கிருதத்துக்காக பன்னூறு கோடி ரூபாய்கள் கொட்டப்படும் கொடுமை!

இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதமே என்பது ஆர்.எஸ்.எஸ். குருநாதரான எம்.ஸ்.கோல்வால்கரின் கோட்பாடு. அவரின் ‘ஞான கங்கை’ (Bunch of Thoughts) அதைத்தான் சொல்லுகிறது.

1937இல் சென்னை மாநிலத்துக்குப் பிரதமராக வந்த ராஜாஜி இந்தியைத் திணித்தார்.

சென்னை லயோலா கல்லூரியில் பேசும்போது சமஸ்கிருதத்தைக் கொண்டு வரவே முதற்கட்டமாக இந்தியைக் கொண்டு வருகிறேன் என்று சொன்னதை எண்ணிப் பார்க்க வேண்டும். (அதே காலக்கட்டத்தில் சென்னை மயிலாப்பூரில் சமஸ்கிருதக் கல்லூரியும் தோற்றுவிக்கப்பட்டது).

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டே மொழிகள்தாம்; ஒன்று தமிழ், இரண்டு ஆங்கிலம். மூன்றாம் மொழிக்கு இங்கு இடம் இல்லை என்று அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக வந்தபோது சட்ட ரீதியாகவே நிலை நிறுத்தப்பட்ட ஒன்று. இந்த நிலையில் மத்திய அரசு இந்தித் திணிப்பு என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்ட விரோதமே!

(4) தேசியக் கல்விக் கொள்கை

தேசியக் கல்விக் கொள்கை என்பது சந்தேகமே யில்லாமல் குலக்கல்வியே! ஆறாம் வகுப்பு முதல் பிற்பகல் படிப்பு என்பது உள்ளூர்த் தொழில் களில் பயிற்சி பெற வேண்டியது கட்டாயமாகிறது. கிராமப் புறங்களில் தொழில்கள் என்றால் என்ன? யதார்த்த நிலை என்ன?

சவரக் கடையும், சலவைக் கடையும், கொத்து வேலையும், தச்சு வேலையும்தானே! இந்தக் குடும் பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் எங்கே சென்று பயிற்சி பெறுவார்கள்? இயல்பாகவே அப்பன் தொழிலைத் தானே தேடிச் செல்லுவார்கள்; 1952-54இல் சக்கர வர்த்தி ராஜகோபாலாச்சாரியரால் திணிக்கப்பட்ட அதே குலக்கல்விதான் இப்பொழுதும் மாறு வேடம் பூண்டு வருகிறது.

அய்ந்தாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்புவரை அரசுத் தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி மேல் வகுப்புக்குச் செல்ல விடாமல் தடுத்து இடை நிற்றலுக்கு (Dropouts) ஆளாக்கப்படும் மாணவர்கள் கடைசியில் சரணடைய வேண்டியது அப்பன் தொழிலிடத்தில்தானே!

(5) மாநில உரிமைகள் பறிப்பு

மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள், துறைகள் ஒவ்வொன்றும் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன.

கல்விகூட ஒத்திசைவுப் பட்டியலில்தான் (Concurrent List) உள்ளது. மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டுதான் கல்வியின் கொள்கை வகுக்கப்பட வேண்டும். மாநில அரசுகளின் கருத்து களுக்குச் செவி கொடுக்காமலும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலும் தானடித்த மூப்பாக திணிக்கப் படுவதுதான் இந்த தேசியக் கல்விக் கொள்கை!

கல்விக் கொள்கையை வகுக்கும், திட்டமிடும் நிபுணர் குழுவில் கல்வியாளர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பது நினைவில் இருக்கட்டும்.

அய்.ஏ.எஸ். என்பதுபோல கல்வியிலும் அகில இந்திய சர்வீஸ் (IES) என்ற ஒன்றைக் கொண்டு வரவிருக்கிறார்கள்.

களி மண்ணைப் பிடித்து வைத்து பிள்ளையார் என்று சொல்வதுபோல, மாநிலம் - அதற்கான ஓர் அரசு என்று பெயரளவில் வைத்துப் பொம்மை விளையாட்டை நடத்துகிறார்கள்.

சரி - இதற்கெல்லாம் முடிவுதான் என்ன? இந்த மதவெறி நோய்க்கு “ஈரோடே” மாமருந்து!

என்னதான் ஆட்டம் போட்டாலும் தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாமல் பரிதவிக்கின்றன பா.ஜ.க.வும், சங்பரிவார்களும் என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார் என்ற சமூகப்புரட்சி மருத்துவர்தான் - அவர் கண்ட இயக்கம்தான்!

ஏழெட்டு மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிறது; இந்தத் தேர்தலில் பிஜேபிக்கும், அதன் அடிவருடிகளுக்கும் பெரியார் மண் கொடுக்கப் போகும் ‘மரண அடி’ - இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும்.

தி.மு.க. வெற்றியின் மூலம்தான் அது நிரூபிக்கப்பட வேண்டும்.

அதற்கு முதற்கட்டமாக வரும் தந்தை பெரியார் 142ஆம்ஆண்டு பிறந்த நாளை (செப்டம்பர் 17) புத்தெழுச்சியுடன் தமிழ்நாட்டில் கொண்டாட வேண்டும். வீட்டுக்கு வீடு வெளியில், தந்தை பெரியார் படம் வைக்கப்பட வேண்டும். தெரு முனைகளில் எல்லாம் தந்தைபெரியார் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட வேண்டும் - அலற வேண்டும் ஆரியமும் - அதன் அடிப்பொடிகளும்!

வாய்ப்புள்ள இடங்களில் ஊர்வலமாகப் படம் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இப்பொழுதே அதைப்பற்றி சுவர் எழுத்து விளம்பரங்கள் களைகட்ட வேண்டும்.

எங்கும் பெரியார், எதிலும் பெரியார் என்ற காட்சி- முழக்கம் நீக்கமற நிறைந்து காணப்பட வேண்டும்!

வீட்டுக்கு வீடு வேல், முருகன் படத்தை வைத்து வேடிக்கை காட்ட முயற்சித்து இந்துத்துவாவினர் தோல்வி கண்டதுதான் மிச்சம்.

தமிழர் இல்லம் என்பதற்கு அடையாளம் ‘விடுதலை’ என்று தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் அருள்மொழிபோல, வரும் செப்டம்பர் 17 அன்று தமிழர் இல்லம் என்று காட்டுவதற்குத் தந்தை பெரியார் படம் அலங்கரிக்கப்படட்டும்.

வெடிகுண்டு வேண்டாம் - அதில் நமக்கு நம்பிக்கையில்லை; வேறு ஆயுதங்கள் வேண்டாம் - அவை வீணர்களுக்கே சொந்தமாகட்டும்!

எங்கும் பெரியார் என்ற அதிரடியே எதிரிகளின் அடித்தளத்தை நொறுக்கும் - கதிகலங்க வைக்கும் - அடி வயிற்றையும் கலக்கச் செய்யும் ஆற்றல்மிகு அறிவாயுதம்!

இதுதான் நேற்றைய காணொலியில் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் பிரகடனப்படுத்திய பீடுறு செய்தி - செயல்படுவீர் தோழர்காள்!