ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காணொலியில் கழகத் தலைவர் ஆயிரம் ஆயிரம் சாரங்கன்களும் ஆயிரம் ஆயிரம் கா.மா.குப்புசாமிகளும் நமக்குத் தேவை! கலி. பூங்குன்றன்
October 11, 2020 • Viduthalai • கழகம்

மேற்கு தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் "சுயமரியாதைச் சுடரொளி" மன்னை ஆர்.பி.சாரங்கன் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று (10.10.2020) மாலை 6.30 மணிக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் காணொலி மூலம் நினைவேந்தல் சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் இணைப்புரை வழங்கினார். மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், மறைந்த ஆர்.பி.சாரங்கன் அவர்களின் மகனுமான ஆர்.பி.சித் தார்த்தன் வரவேற்புரையாற்றினார். தமிழகம் தழுவிய அளவில் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும், அமெரிக்கத் தோழர்களும், தி.முகவினரும் காணொலியில் பங்கேற்றனர்.

தமிழர் தலைவர் தனது உரையில் முக்கியமாக குறிப்பிட்டதாவது:
ஆர்.பி.எஸ். அவர்கள் மறைந்தார் என்றாலும் நம் நினைவுகளில் என்றும் நிறைந்து நிற்பவர். தலைமையின் ஆளுமை, அரவணைக்கும் பண்பு, செயல் திறனால் நம்மோடு வாழ்ந்து கொண்டுள்ளார்.

அவரால் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர் பட்டாளம் நம்மிடம் சிறப்பாகச் செயலாற்றிக் கொண்டு இருக்கிறது. இவை எல்லாம் அவர் நம்மோடு உணர்வால், செயல்பாடுகளால் கலந்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாகும்.
செயலூக்கியாக இருந்தார் - அதுவும் மன்னார்குடி என்பது வைதீகத்தின் கோட்டையாகும்.

எங்கே நோய் இருக்கிறதோ அங்கே மருத்துவம் தேவை. தீண்டாமை, ஜாதிக் கொடுமை தாண்டவமாடும் இடத்திலே தந்தை பெரியாரும், அவர்களின் கொள்கைகளும் தேவைப்படுகின்றன. அந்த வகையில் தான் மன்னார்குடி கழகத்தின் பாசறையாக விளங்கியது.

1946 பிப்ரவரியில் நீடாமங்கலத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக மாநாடு இந்த வட்டாரத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

மன்னார்குடி திருக்குளத்தில், படித்துறையில் பார்ப்பனர்கள் மட்டுமே குளிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அவர்கள் குளித்து முடித்து  சென்றபின்தான் சூத்திரர்கள் என்று சொல்லப்படும் பார்ப்பனர் அல்லாதார் குளிக்க முடியும் என்கிற அளவுக்குப் பார்ப்பனர் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது.

சுயமரியாதை இயக்கத்தை நோக்கி இளைஞர்களும், பொது மக்களும் திரண்டனர். கே.ஆர்.ஜி.பால், பாபு செட்டியார் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் இங்கே பிரபலமானவர்கள். பாபு செட்டியார் இல்லத்தில்தான் தந்தை பெரியார் தங்குவார். ஆற்றுப் பகுதியில் இல.இராமச்சந்திரன் அவர்களின் பெயரில் இலரா படிப்பகம் ஒன்று நடைபெற்றது. மன்னை ப.நாராயணசாமி, ஆர்.பி. சாரங்கன், சு.பா. என்று அழைக்கப்படும் பாலகிருஷ்ணன் போன்றவர்கள் இயக்க வீரர்களாக உலா வந்தனர்.

இந்தச் சுற்று வட்டாரப் பகுதிக்கு மன்னார்குடி நமது இயக்கப் பாசறையின் மய்யப் பகுதியாக விளங்கியது.

இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்கள். நம் இயக்கத்தில் இடைவெளி என்பதே இருக்கக்கூடாது. அது ஒரு தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும்.
இது கட்சியல்ல - இயக்கம் ஆகும். இதில் இடைவெளி, தொய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

சாரங்கன் அவர்கள் இளைஞர்கள் என்னும் நாற்றுகளை உருவாக்கிக் கொடுத்தவர். இரத்த உறவை விடக் கொள்கை உறவு தான் கெட்டியானது.
மாவட்டத் தலைவராக ஆர்.பி.எஸ். இருந்தார் என்றால் மாவட்ட செயலாளராக ராஜகிரி தங்கராசு இருந்தார். இருவரும் வாழ்க்கை இணையர்கள் போல செயல்பட்டனர்.

அதேபோல தஞ்சை கா.மா.குப்புசாமி இந்த மூவரிடமும் ஒரு குறிப்புக் காட்டினால் போதும் - காரியத்தை அவ்வளவு அழகாக செம்மையாக செய்து முடிப்பார்கள்.

அதேபோல திருவாரூர் எஸ்.எஸ்.மணியம் அவர்கள்.
ராஜாஜி அவர்கள் குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்த போது - நீடாமங்கலம் அ.ஆறுமுகம் அவர்களின் தலைமையில் பட்டுக்கோட்டை டேவிஸ் அவர்களைத் தளபதியாகவும் நாகப்பட்டினத்திலிருந்து பிரச்சாரப்படை புறப்பட்டது.

ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்த இயக்கம் நம்முடையது.
இப்பொழுது அதே குலக்கல்வி தேசியக் கல்வி என்ற பெயராலே திணிக்கப்படுகிறது. தமிழுக்கு செம்மொழி என்ற ஒரு நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது திமுகவும், முத்தமிழறிஞர் முதல் அமைச்சர் கலைஞருமே! இது வரலாற்றுக் கல்வெட்டு.

இன்றைக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. என்ற பார்ப்பனீய ஆட்சி நமது செம்மொழியை புறக்கணிக்கிறது. பண்பாட்டு வரலாற்றை ஆராயப் போவதாகக் கூறி 16 பேர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளார்கள்.
அந்தக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இடமில்லை. உலகப் பிரமணர் சங்கத் தலைவராம் - அவர் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளார்.
பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பு நடத்தப்படுகிறது. ஹிந்தி சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. சமூக நீதி வீழ்த்தப்படுகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஜாதி மத வெறி தூண்டப்படுகிறது.
இவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய காலகட்டத்தில்தான் நாம் இருக்கிறோம் நமது இயக்கம் இருக்கிறது.

ஆர்.பி.எஸ். போன்ற தளபதிகள் இல்லையே என்று கலங்கக்கூடாது. அவரால் உருவாக்கப்பட்ட இளைஞர் பட்டாளம் நம்மிடம் இருக்கிறது.

இன்றைய தினம் வட இந்திய இளைஞர்கள் மத்தியில்கூட தந்தை பெரியார் வாழ்க என்ற முழக்கம் கேட்கிறது. ஆதிக்க சக்திகளை எதிர்த்து முறியடிக்க பெரியார் என்ற ஆயுதம் தேவை என்ற உணர்வு எங்கும் வெடித்துக் கிளம்பியுள்ளது. தந்தை பெரியார் மானுடத்தின் தலைவர்.

மானமும் அறிவும் மனிதனுக்குத் தேவை என்பது நமக்கு மட்டுமல்ல - உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையானதாகும்.
மனிதனுக்குச் சுயமரியாதை உணர்வு இருந்தால்தான் - உரிமை உணர்ச்சி ஏற்பட முடியும். அந்த வகையில் நமது இயக்கம் உலக மக்களுக்கான இயக்கமாகும்.

எந்த உரிமையை ஈட்டுவதாக இருந்தாலும் சுய மரியாதை உணர்வோடு மக்களிடத்தில் செல்ல வேண்டும். இப்பொழுது நீதிமன்றங்கள்கூட நம்பகத்தன்மை உடையதாக இல்லை. மக்கள் மன்றம் தான் தீர்வுக்கான ஒரே இடம்! ஒரே வழி!
தந்தை பெரியார் சிலையைக் கண்டே எதிரிகள் அஞ்சுகிறார்கள். எதிரிகளை அஞ்ச வைக்கும் தந்தை பெரியார் கொடுத்த கொள்கை எழுச்சிச் சுடரை ஏந்தி மக்களிடம் செல்லுவோம்.

ஜாதியில்லை - மதம் இல்லை. நம்மிடம் அறிவு உண்டு, துணிவு உண்டு, வெற்றி நமதே!
ஆர்.பி.எஸ். அவர்களின் நினைவு நாளில் இந்த உறுதியை எடுப்போம். வாழ்க பெரியார், வாழ்க ஆர்.பி.எஸ். புகழ்! வருக அவர்காண விரும்பிய சமுதாயம்! என்று கருத்துரை வழங்கினார் கழகத் தலைவர்.