ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காணொலியில் கழகத் தலைவர் அறிஞர் அண்ணா பிறந்த நாள் - அண்ணாவின் "வசந்தம்" எது
September 20, 2020 • Viduthalai • கழகம்

காணொலியில் கழகத் தலைவர் அறிஞர் அண்ணா பிறந்த நாள் - அண்ணாவின் "வசந்தம்" எது?

* கலி. பூங்குன்றன்

அறிஞர்அண்ணாவின் 112ஆம்ஆண்டு பிறந்த நாளையொட்டி - திராவிடர் கழகத்தின் சார்பில் காணொலி மூலம் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கருத்துரை வழங்கினார் (16.9.2020 பிற்பகல் 6 மணி).

(1) அண்ணாவின் வசந்தம் என்று கருதியது எதை?

(2) அண்ணாவின் சாதனை என்ன?

(3) அண்ணாவின் மொழிக் கொள்கை எத்தகையது என்பது குறித்து கருத்து விளக்கம் தந்தார்.

அந்த வசந்தம்

அண்ணா அவர்கள் முதலமைச்சராக ஆன நிலையில்  தந்தை பெரியார் பிறந்த நாள் 'விடுதலை' மலருக்குக் கட்டுரை தரும்படி கேட்டுக் கொண்டேன். (அண்ணாவே விடுதலை ஆசிரியராக இருந்தவர்தானே)

முதல்அமைச்சர் என்ற நிலையில் பணிச் சுமைகள் அதிகம். இந்த நிலையில் மதுரைக்குச் சென்ற அண்ணா - அவர்கள் அய்யா மலருக்குக் கட்டுரை ஒன்றினை எழுதி ஒருவர் மூலம் கொடுத்தனுப்பினார்.

கட்டுரையின் தலைப்பு என்ன தெரியுமா?  "அந்த வசந்தம்".

இப்பொழுது முதல் அமைச்சராக இருக்கும் இந்தக் காலக் கட்டம் அல்ல -  அந்தக் கால கட்டத்தில் தந்தை பெரியாரோடு காடு மேடுகளில் சுற்றி அலைந்து பிரச்சாரம் செய்த அந்தக் காலக் கட்டத்தைத்தான் முதல்அமைச்சர் - அண்ணா அவர்கள் 'வசந்தமாக'க் கருதினார். முதல் அமைச்சர் பதவியை சுகமான ஒன்றாக அவர் கருதவில்லை. சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தை, தான் தனது மகிழ்ச்சிக்குரிய காலமாக - வசந்த காலமாகக் கருதினார்.

(அன்றைய தருமபுரிமாவட்டம் நாகரசம் பட்டியில் "பெரியார் ராமசாமி கல்வி நிலையம்" எனும் பெயருடன் உருவாக்கப்பட்ட பள்ளியின் கட்டடத் திறப்பு விழா ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (19.12.1967) தந்தை பெரியாருடன் பங்கேற்றார் முதல் அமைச்சர் அண்ணா.

கட்டடத்தை திறந்து வைத்துப் பேசுகையில் தெரிவித்த கருத்து முக்கியமானது. 'பெரியார் அவர்களின் கருத்துகளை சட்டம் மூலம் செயல்படுத்தும் இந்த சர்க்காரின் அதிகார எல்லைக்கு உட்பட்டு என்னென்ன செய்ய முடியுமோ அவைகளைச் செய்ய எப்போதும் தயாராய் இருக்கிறேன்.'

'பெரியார் அவர்கள் சொல்கிற கருத்துகளையும் கொள்கைகளையும் பரப்புவதில் செயலாக்குவதற்கு நான் தயாராய் இருக்கிறேன். சர்க்காரிலே இருந்துகொண்டு ஏதோ சில காரியங்களைச் செய்யவா? அல்லது விட்டு விட்டு, உங்களோடு வந்து தமிழகத்திலே இதே பேச்சைப் பேசிக் கொண்டு உங்களோடு இருப்பதா?' என்பதை முடிவு செய்யும் பொறுப்பை பெரியார் அவர்களுக்கே விட்டு விடுகின்றேன். அவர் என்னோடு வந்து பணியாற்று என்றால் அதற்கும் தயாராக இருக்கிறேன்' என்றார் முதல் அமைச்சர் அண்ணா.

அதற்குப் பதிலாக தந்தை பெரியார் பேசியது என்ன தெரியுமா? முழு காலத்தையும்,ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் மிச்சம் வைக்காமல் ஆட்சியில் இருக்க வேண்டும். இந்த சமூகப் பணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார் தந்தை பெரியார். அய்யாவுடன் பணியாற்றிய அந்தக் காலத்தையே தான் வசந்தகாலமாக கருதினார் என்பதற்கு இதுமேலும் ஓர் எடுத்துக்காட்டே!

(2) அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக குறுகிய காலம் இருந்தாலும் அந்தக் குறுகிய கால கட்டத்திலேயே  முப்பெரும் சாதனைகள் என்னும் முத்திரையைப் பொறித்தார்.

சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம்.

சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டல்.

தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை, தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகள்தான்.

என்ற வரலாற்றில் நின்று நிலைக்கும் மூன்று சட்டங்களை ஒரு மனதாக நிறைவேற்றினார் அண்ணா.

தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக பாராட்டு விழா சென்னைக் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த முதல் அமைச்சர் அண்ணா அவர்கள், டாக்டர்கள் தடுத்தும் அந்த நிகழ்ச்சியிலே பங்கு கொண்டார்.

அப்பொழுது முதல் அமைச்சர் அண்ணா அவர்கள் பேசினார். "மத்தியிலே இருக்கக் கூடியவர்கள் நினைத்தால் எங்கள் ஆட்சியைக் கலைக்க முடியும் - அதற்கான அதிகாரம் அவர்கள் கையில் இருக்கிறது. அல்லது அவர்கள் அடுத்த ஆட்சிக்குக்கூட வரலாம். அப்படி வரும் நேரத்தில் இந்த மூன்று சட்டங்களின்மீது கை வைக்க முடியுமா? அந்த அச்சம் இருக்கும் வரையில் இந்த நாட்டை அண்ணாதான் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார் என்று பொருள்" என்று அண்ணா பேசினார் என்பதைப் பொருத்தமாக திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் காட்டினார்.

இந்திக்கு இங்கு இடமில்லை

இந்தி எதிர்ப்பு என்பது இன்று நேற்றல்ல, இந்தி - ஒரு கலாச்சாரத்தின் சின்னம் 1937 முதற்கொண்டே தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக் கனல் கனன்று கொண்டே இருக்கக் கூடிய ஒன்று. (தமிழிற்குத் துரோகமும், இந்தியின் இரகசியமும்" என்ற தலைப்பில் 7.3.1926 நாளிட்ட 'குடிஅரசு;' இதழில் தந்தை பெரியார் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

தமிழும், ஆங்கிலமும் என்று வரும்போது, ஆங்கிலத்திற்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டார்கள். இப்பொழுதும் கேட்பவர்கள் உண்டு.

சென்னைக் கோகலே மண்டபத்தில் இந்தி எதிர்ப்பு பொதுக் கூட்டம் - அதில் தந்தை பெரியாரும், மா.பொ.சி., அண்ணா முதலியோர் உரையாற்றினர்.

இந்தியை எதிர்த்தும் ஆங்கிலத்தை வலியுறுத்தியும் தந்தை பெரியார் பேசினார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒருவர் துண்டுக் காகிதத்தைக் கொடுத்தார். கேள்வி கேட்பது - பதில் சொல்லுவது என்பது அந்தக் காலத்தில் சர்வ சாதாரணம்.

'ஆங்கிலத்துக்கு வக்காலத்து வாங்கும் நீ இங்கிலீஷ் காரனுக்குப் பொறந்தவனா?' என்பதுதான் அந்தக் கேள்வி.

தந்தை பெரியார் கோபப்படவில்லை.

நான் யாருக்குப் பிறந்தவன் என்பது முக்கியமல்ல. நாம் யாருக்குப் பிறந்தோம் என்பது நமது அம்மாவுக்குத்தான் தெரியும் - உம்மையும் சேர்த்து.

ஆங்கிலத்தை ஆதரித்துப் பேசுகிறேன் என்றால், அதன் பயன் கருதிதான். தமிழருக்காக நாங்களும், எங்கள் இயக்கமும் எவ்வளவோ செய்திருக்கிறது.

நாங்கள் எதற்குச் சொல்லுகிறோம், என்ன சொல்லுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

ஆங்கிலத்தை நாங்கள் ஆதரிப்பதால், வெள்ளைக் காரனுக்குப் பிறந்தோம் என்று சொன்னால், ஆங்கிலேயர் கண்டுபிடித்த இரயிலிலும்,  ஆகாய விமானத்திலும் பயணம் செய்கிறவன் எத்தனை வெள்ளைக்காரனுக்குப் பிறந்தவன்? ஆங்கிலேயன் கண்டுபிடித்த மருந்தை சாப்பிடுகிறவன் எத்தனை வெள்ளைக்காரனுக்குப் பிறந்தவன்? என்று கேட்டார் தந்தை பெரியார்.

தமிழைப் பொறுத்தவரை - ஆங்கில மொழி போல் விஞ்ஞான மொழியாக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று விளக்கினார் தந்தை பெரியார்.

சிங்கப்பூரைப் பொறுத்தவரை அங்கேமூன்று மொழி களைப் பேசி வாழ்கிறார்கள். சீனமொழியை 74 விழுக்காடு மக்கள் பேசுகிறார்கள், அடுத்த படியாக மலாய் மொழி, மூன்றாவதாக தமிழ் பேசும் மக்கள்.

அந்நாட்டின் அதிபர் லீக்வான்யூ - மொழிப் பிரச்சினையை எப்படி தீர்த்தார் என்பதுமுக்கியமானது.

சீன மொழி பேசுவோர் அதிகம் என்பதால் சீன மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது?

ஆனால் அதிபர் லீக்வான்யூ என்ன முடிவு செய்தார்? ஆங்கில மொழியைக் கொண்டு வந்தார்.

அதற்கு அவர் சொன்ன காரணம் முக்கியமானது - மற்ற மூன்று மொழி பேசுகிறவர்களுக்கும் அதுபொதுவானது. வசதி குறைவு  (ஞிவீsணீபீஸ்ணீஸீபீணீரீமீ) என்றால் அனைவருக்கும் சமமாக அது இருக்க வேண்டும் என்று ஆழமாக நினைத்ததை செயல்படுத்தினார்.

சிங்கப்பூரை எடுத்துக் கொண்டால், ஒரு பொருளை வாங்கினாலும் கடைக்காரர் கொடுக்கும் ரசீதில் நான்கு மொழிகளும் இடம் பெற்றிருக்கும்.

அந்த முறையை இந்தியா ஏன் பின்பற்றக் கூடாது. மாநிலங்களவையில் அண்ணா ஆங்கிலத்தின் அவசியத்தைப் பற்றிப் பேசிய போது பூபேஷ்குப்தா போன்றவர்கள் கூட குறுக்கிட்ட துண்டு.

ஆங்கிலம் அனைவருக்கும் வசதியான ஒரு கருவி; அது  போலவே வசதியானாலும் சரி, வசதி குறைவானது என்றாலும் சரி, எல்லோருக்கும் அது பொதுவானதாக இருப்பதை அண்ணா அவர்கள் சுட்டிக் காட்டினார்.

இந்தியானாலும் சரி, சமஸ்கிருதமானாலும் சரி - அவை கலாச்சாரப்படை எடுப்பே! இன்றைக்கு மத்தியில்இருக்கக் கூடிய பிஜேபி ஆட்சியானது - இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புகுத்துவது அந்த அடிப்படையில்தான்.

12000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்த கலாச்சாரத்தை ஆராயப் போகிறார்களாம். அதற்கு ஒரு நிபுணர் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. சாஸ்திரிகளும், சர்மாக்களும், மிஸ்ராக்களும், தீட்சதரும் அடங்கிய குழு அது.

தமிழ்நாட்டுக்கோ, வங்கத்துக்கோ, மராட்டியத்துக்கோ பிரதிநிதித்துவம் கிடையாது. ஓய்வு பெற்றவர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்கான ஏற்பாடா? செம்மொழி தகுதி படைத்த தமிழுக்கு - அதன் அறிஞர்களுக்கு தென்னாட்டுக்குப் பிரதிநிதித்துவம் ஏன் இல்லை?

இதில் என்ன கொடுமை என்றால் அகிலஉலக பிராமண சங்கத்தின் தலைவர் என்ற பெயரில் ஒருவர் இந்தக் குழுவின் உறுப்பினராம்.

(வாஜ்பேயி பிரதமராக இருந்த போது - முரளி மனோகர் ஜோஷி மனிதவள மேம்பாட்டுத்துறை (கல்வி) அமைச்சராக இருந்தார்  - அவர் என்ன செய்தார்? சிந்துசமவெளி நாகரிகத் தில் காளைச் சின்னத்தை 'கிராபிக்' மூலம் குதிரையாக்கி ஆரிய நாகரிகம் என்று திரிபுவாதம் செய்யவில்லையா? ஆதிச்ச நல்லூர், கீழடிகளில் தொல்லியல் துறைப் பணிகளை முடக் குவது ஏன்? வரலாற்றைத் திரிப்பது என்பது ஆரியர்களுக்கு கை வந்த கலை.

(பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் அசுதோஷ் கோவரிகர் மொகஞ்சதாரோ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை எடுத் தார். 2016 ஆகஸ்டு 12ஆம் தேதி வெளிவந்தது. அத்திரைப்படம் முழுக்க சிந்து சமவெளி ஆரிய நாகரிகம் என்று காட்டப்பட்டது.

படத்தில் பல இடங்களில் சிவலிங்கங்களைக் காட்டினர். இந்த சிவலிங்கங்கள் அனைத்தும் கருநாடக மாநிலம் சமலா நதிக்கரையில் நேர்த்திக் கடன் என்ற பெயரில் பக்தர்கள் செதுக்கி வைத்தவை . அவற்றைக் காண்பித்து அந்தப் பகுதி மகோஷ்வதாரே என்றும், அங்கு வாழ்ந்தவர்கள் சிவபக்தர்கள் என்றும் அங்குப் பேசப்பட்ட மொழி சமஸ்கிருதம் என்றும் காட்டி, சிந்து சமவெளி நாகரிகம், ஆரிய நாகரிகம் என்று மோசடி வேலையில் ஈடுபட்டது இங்கு சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்).

"ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களே என்று - இந்திய மனித இனம் குறித்த மரபணு ஆய்வின் அடிப்படையில் டோனி ஜோசப் - பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெளிவாகக் குறிப்பிட்டதை கழகத் தலைவர் உரையிடையே குறிப்பிட்டார். (BBC.com 30.12.2018).

அறிஞர்அண்ணா அவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்த நிலையில் தந்தை பெரியார் பல நாள்கள் அடையாறில் எங்கள் வீட்டிலேயே தங்கி இருந்தார்.

அண்ணா மறைவு செய்தி கேட்டு பதறினார். சென்னை வானொலி நிலையம் அண்ணாவின் மறைவு குறித்து அய்யாவிடம் கேட்டனர். அந்த நள்ளிரவில் அய்யா எழுதிக் கொடுத்தார் "அண்ணா மறைந்தார் - அண்ணா வாழ்க!" என்றார்.

இது ஒரு ஆங்கில மரபு என்றாலும், அதனைத் தெரிந்து அய்யா எழுதிடவில்லை. அவருக்கு தோன்றியதை எழுதினார். (The king is dead; Long live king) அரசர் மறைந்தார் - அரசர் வாழ்க என்றால் அதன் பொருள் - அரசர்தான் மறைந்தாரே தவிர, அவரின் கொள்கை வாழ்க என்பது அதன் பொருள்.

அண்ணா மறைவுற்றார் என்றாலும், அண்ணாவின் கொள்கை வாழ்க என்ற பொருளில் தந்தைபெரியார் எழுதியதை கழகத் தலைவர் நினைவூட்டினர்.

இன்றைய கால கட்டத்தில் ஆரிய பார்ப்பன சனாதன படை எடுப்பு நடந்து கொண்டு இருக்கிறது.

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் வாளும்  - கேடயமும் நமக்கு! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? களங்களையும் சந்திப்போம்! - வெற்றி கொள்வோம்!

வாழ்க பெரியார்!

வாழ்க அண்ணா!

என்று கூறி முடித்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்,

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சிக்குத் திராவிடர் கழகத்  துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தலைமை  வகித்தார். பொருளாளர் வீ. குமரேசன் வரவேற்புரை ஆற்றினார். துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனி நன்றி கூறினார்.

ஏராளமான தோழர்கள், (வெளிநாட்டிலிருந்தும்கூட) காணொலியில் பங்கு கொண்டனர்.