ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காணொலியில் கழகத் தலைவர் "மூன்று நூற்றாண்டுகளில் சமூகநீதி" - ஒரு வரலாற்றுப் பார்வை!
August 19, 2020 • Viduthalai • கழகம்

* கலி. பூங்குன்றன்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் “மூன்று நூற்றாண்டுகளில் சமூகநீதி -  ஒரு வரலாற்றுப் பார்வை” எனும் தலைப்பில் காணொலி மூலம் முதல் சொற்பொழிவை நேற்று (18.8.2020) மாலை 6.30 மணிக்குத் தொடங்கினார்.

சமூகநீதி ஏன்?, இந்தக் குரல் எழுந்ததற்கான காரணம், சமூக நீதி கடந்து வந்த பாதை, அதற்கான இயக்கத் தோற்றம் - இன்றைய நிலை வரை பல்வேறு முக்கிய கூறுகளையும், அம்சங்களையும், தரவுகளையும் உள்ளடக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர் இது.

குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்தில் இதில் மகாராட்டிரம் முன்னோடி மாநிலமாகி விட்டது. அங்கு புனேவில் பிறந்த மகாத்மா ஜோதிராவ் பூலே (1827-1890) சமூகநீதிக்கான அடிக்கல்லை நாட்டிய புரட்சி வீரர்.

எப்படிப்பட்ட மகாராட்டிரம்? களங்கள் பல கண்டு ஓர் ராஜ்ஜியத்தை ஏற்படுத்திய, மராட்டியத்தை ஏற்படுத் திய மராட்டிய வீரன் சிவாஜி - அவன் பிறப்பால் சூத்திரன் என்று கூறி ஆரியம் அவனை அரியணை ஏறாமல் தடுத்தது அந்தப் பூமியிலே!

வாளெடுத்து வையத்தை நடு நடுங்கச் செய்த அந்த மாவீரன் கேவலம் தர்ப்பைப் புல்லுக்கு முன் - அது உருவாக்கி வைத்த வருணாசிரமத்தின் முன் மண்டியிட நேர்ந்தது.

ஆரியம் எத்தகைய ஆணவமும், ஆதிக்க வெறியும் கொண்டது என்பதைச் சித்தரித்து அறிஞர் அண்ணா வால் எழுதப்பட்ட நாடகம்தான் “சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்“ என்பதாகும்.

ஆரியத்தால் நாசமானது சிவாஜி ராஜ்ஜியம்; கஜானா காலியானது காகப்பட்டர் கூட்டத்தால்! ஆம், ஆரியம் அன்று முதல் ஏன் இன்று வரை கூட அதே குணக் கேடுகளுடன்தான், ஆதிக்க வெறியுடன்தான்  படம் எடுத்து ஆடுகிறது.

இத்தகு வல்லாண்மையும் வக்கிரப் புத்தியும் வேர் பிடித்த நாட்டிலே அதற்கு எதிர்வினைத் தத்துவம் தான் சமூகநீதி. பிர்மாவின் முகத்திலே பிறந்தவர்கள் நாங்கள்; படிப்பு என்பது எங்களுக்கே! நீங்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள் -  கல்வி என்பது உங்களுக்குத் தடுக்கப்பட்ட உரிமை என்ற கொடுமை உலகில் எங்குதான் உண்டு. கேட்டால் சுருதிகளும், ஸ்மிருதிகளும் அப்படித்தான் கூறுகின்றன என்பர்.

1930 ‘குடிஅரசு’ இதழிலே தந்தை பெரியார் எழுதுகிறார்.

ஸ்நாத மஸ்வம் கஷமத்தம்

ரிஜபம் காம மோஹிதம்

சூத்தரம க்ஷரசம் யுக்தம்

தூரதப் பரிவாஜ் ஷையேல்

பொருள்: குளிப்பாட்டிய குதிரையையும், மதங் கொண்ட யானையையும், காம விகாரங் கொண்ட காளை மாட்டையும், எழுத்துத் தெரிந்த சூத்திரனையும் பக்கத்தில் சேர்க்கக் கூடாது.

இந்த சுலோகம் குறித்தும் ‘குடிஅரசு’ தலையங்கத்தில் (30.11.1930) எடுத்துக் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

இன்றைய தினம் இதே பாங்கில் பார்ப்பனர்களின் போக்கு இல்லாதது போல் தோன்றலாம். ஆனால் கொல்லைப்புறம் வழியாக, சூழ்ச்சிப் பொறிகளையும், கண்ணி வெடிகளையும் வைத்து, பார்ப்பனர் அல்லாத வர்களின் கல்விக் கண்களைக் குத்திக் கொண்டு தானே இருக்கிறது.

சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று பகவான் கிருஷ்ணனே அருளினான் என்று கூறும் நாட்டிலே இவர்கள் கல்வியைப் பற்றிக் கனவுதான் காண முடியுமா?

பெண்கள் என்றால் பாவப் பிறவிகள் என்பது பார்ப்பனப் பாதகர்களின் கணிப்பு. பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது  (மனுதர்மம், அத்தியாயம் 11 - சுலோகம் 65).

இத்தகையதொரு நாட்டிலே தக்காணத்தில் புனேயில் புரட்சிக் கொடி தூக்கிய போர்வாளுக்குப் பெயர்தான் ஜோதிராவ் பூலே.

மகாராட்டிரத்திலே பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு உணர்வுக்கு அடிக்கல் நாட்டியவர். அவர் குடும்பம் சாதாரண ஏழை, எளிய குடும்பம்; பூ கட்டும் தொழில்தான் அவர்கள் குடும்பத் தொழில்.

ஜோதிராவ் பூலேவைப் படிக்க வைக்க வேண்டும் என்று அவர் தந்தையார் விரும்பினார். பூலே பள்ளியிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் அடைந்த அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவருடைய தந்தையாரைச் சனாதனப் பார்ப்பனர்கள் கண்டித்தனர். வேறு வழியின்றி இடையில் கல்விக்குத் தடை ஏற்பட்டது. ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல் படித்தார். மற்றவர்களையும், குறிப்பாகப் பெண்களையும் படிக்க வைக்க வேண்டும் என்ற நினைத்தார். முதலில் தன் மனைவி சாவித்திரி பூலே அவர்களுக்குக் கல்வி கொடுத்து ஓர் ஆசிரியை ஆக்கினார். அவர் மூலம் தம் வீட்டிலேயே பெண்களை வரவழைத்துக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார். சனாதனப் பார்ப்பனர்கள் சும்மா இருப்பார்களா? பூலேவின் தந்தையைக் கடுமையாகக் கண்டித்தனர். அவரும் வேறு வழியின்றி பள்ளியை மூடச் சொன்னார் இல்லாவிடின் வெளியேறச் சொன் னார். வெளியேற்றப்பட்டவர் பல இடர்ப்பாடுகளுக்கு இடையேயும் பள்ளியைத் தொடர்ந்து நடத்தினார்.

இந்தியாவில் சமூகநீதிக்காக முதல் குரல் கொடுத்த தந்தை என்று அவரைச் சொல்ல வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும், பெண்களுக்காக வும் குரல் கொடுத்தார். தந்தை பெரியார் போலவே ‘இந்து மதத்திலே இராமாயணம் போன்றவைகள் எல்லாம் ஆரிய ஆதிக்கத்தை நிலை நாட்டக் கூடிய இதிகாசங்கள் என்றார்.

ஆரியர்கள் ஈரானிலிருந்து வந்தவர்கள் என்று மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

இந்தக் கொள்கைக்கு நேர் எதிரான பாலகங்காதர திலகரையும் எதிர்த்தவர் பூலே.

மதம், தேசியம் என்ற இரண்டையும் இணைத்தவர் திலகர்தான். சாரதா சட்டத்தை எதிர்த்தவர் - சூத்திரர்கள் ஏன் படிக்க வேண்டும் என்று கேட்டவர்.

“இப்போது எல்லோரும் சட்டசபைக்குப் போக வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். எதற்காக செருப்புத் தைக்கிறவனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டு பவனும், வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருப்பவனும் சட்டசபைக்குப் போக வேண்டும்?” என்று கேட்டவர்தான் இந்த நாட்டில் லோக மான்ய திலகர்.

ஆனால் வரலாற்றில் இத்தகைய பிற்போக்குப் பேர் வழிகள் எப்படியெல்லாம் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளனர். மனிதநேயத்துடன் மானுட உரிமைக்காகப் பாடுபட்ட ஜோதிராவ் பூலேகள் எப்படி எல்லாம் இருட்டடிக்கப் பட்டுள்ளனர் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

அவர் வீடு, அவர் நடத்திய பள்ளி, பொதுக் கிணறு எல்லாம் புதர் மண்டிக் கிடக்கும் அவல நிலைதான்!

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புணர்வை முன்னிறுத்தியும், தீண்டாமை, ஜாதி ஒழிப்பை முக்கிய கருத்தாகக் கொண் டும், பெண்ணுரிமைக் கோட்பாட்டுடனும் “சத்திய சோதக் சமாஜ்” (உண்மை தேடுவோர் சங்கம்) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார் பூலே. மக்கள் மத்தியிலே பார்ப்பனர் எதிர்ப்புணர்வும், சீர்திருத்த உணர்வும் தலை தூக்க ஆரம்பித்த நிலையில்தான் அதனை மடைமாற்றம் செய்ய 12 ஆண்டுகளுக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்டது தான் (1885) காங்கிரஸ். பிரிட்டிஷாரும், பார்ப்பனரும் கைகோர்த்துக் கொண்டனர். ஒருவருக்கொருவர் தயவும், ஆதரவும் தேவைப்பட்டது.

1857ஆம் ஆண்டு நடைபெற்றது சிப்பாய்க் கலம் என்று சொல்லுவது எல்லாம் உண்மையல்ல! சிப்பாய்கள் துப்பாக்கியில் பசு மாட்டுக் கொழுப்பு இருக்கிறது என்று கூறி இந்துக்களையும், பன்றிக் கொழுப்பு என்று கூறி முசுலிம்களையும் கிளப்பி விட்ட மதக் கலவரம் என்பதுதான் உண்மை. இதனைத் தந்தை பெரியார் தெளிவாகவே விளக்கியுள்ளார்.

அந்தக் கலவரத்துக்குப்பிறகு வெள்ளைக்காரர்கள் சமாதானத்துக்கு வந்தார்கள். இந்தியர்களின் மத விஷயத்தில் தலையிடுவதில்லை என்று முடிவு எடுத்தனர். விக்டோரியா மகாராணி பிரகடனம்  என்று 1858இல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டு, வெள்ளைக்காரர்களை அண்டி கல்வியையும், வேலை வாய்ப்புகளையும் பெற்றனர் பார்ப்பனர்கள் என்பதுதான் வரலாறு.

எந்த அளவுக்கு இவர்களின் இணைப்பு இருந்தது?

இரண்டாவது காங்கிரஸ் மாநாடு பற்றி ஒரு புத்தகம் வெளிவந்தது. அந்த நூலை எழுதியவர் க.சுப்பிரமணிய அய்யர். புத்தகத்துக்குத் தலைப்பு என்ன தெரியுமா?

“ஆரிய ஜன அய்க்கியம் அல்லது காங்கிரஸ் ஜனசபை” என்பதாகும்.

இதற்குமேல் என்ன ஆதாரம் வேண்டும்? அம்பேத்கர் சொன்ன மூன்று ‘B’கள் British, Brahmin, Bania.

கல்கத்தா, பம்பாயில் கூடிய காங்கிரசுகளையும், சென்னையிலே கூடக் கூடிய மாநாட்டின் சிறப்பு என்ன?

ஒரு விளம்பரம் ‘சுதேசமித்திர’னில் வெளி வந்தது-

“இவ்வருஷத்துக் காங்கிரஸ் சபையில் ஒரு முக்கியமான புது அம்சம் ஜாதி ஆச்சாரம் பார்க்கும் பிரதிநிதிகளுக்குப் பிரத்தியேகமாக ஒரு பங்களா என்று அவர்களுடைய ஜாதி ஆச்சாரங்களுக்கு ஏற்றபடி ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன” என்பதுதான் இந்தச் சிறப்பு அழைப்பு!

இந்தப் பின்னணிகளை எல்லாம் புரிந்து கொண்டால் தான் இந்த நாட்டிலே சமூகநீதிக்கு போராட்டம் வெடிக்க வேண்டிய அவசியம் ஏன்  ஏற்பட்டது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அடுத்துப் பார்ப்போம்!

'சத்திய சமாஜ்' தொடராதது ஏன்?

மகாத்மா ஜோதிபா பூலேயைப் பொறுத்தவரை, தந்தை பெரியார் போன்றே அரசியல் பதவிப் பக்கம் செல்லாமல் மக்களிடத்தில் சென்றார்; கருத் துகளை எடுத்துக் கூறினார். ஆனால் அவரைத் தொடர்ந்து வந்தவர்கள் அதனை 'பகுஜன் சமாஜ்' என்று அரசியல் அமைப்பாக்கி தேர்தல் அரசியலில் புகுந்தனர்; பின்னர் சிலர் காங்கிரசுக்குச் சென்றனர். இதனால் ஜோதிராவ் பூலேவால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பும்,கரைந்து காணாமல் போயிற்று - இது வரலாறு கற்றுத் தரும் பாடம்!

- கேள்வி ஒன்றுக்குக் கழகத் தலைவர் பதில்