ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கல்விக் கொள்கை அறிக்கையா - சமஸ்கிருத உபந்நியாசமா
August 5, 2020 • Viduthalai • தலையங்கம்

கல்விக் கொள்கை அறிக்கையா - சமஸ்கிருத உபந்நியாசமா?

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பிஜேபியைத் தவிர அனைத்துக் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தங்கள் எதிர்ப்புக் குரலை உயர்த்தி விட்டன.

இதன்மூலம் பிஜேபி தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. பிஜேபியின் நிறுவனமான ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை' (Bunch of Thoughts) எனும் நூலில் இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு சமஸ்கிருதமே என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார். அதைக் கவனத்தில் கொண்ட மத்திய பிஜேபி ஆட்சி இப்பொழுது அறிவித்திருக்கும் கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்திற்கு அதிகமான இடங்களில் முக்கியத்துவம் கொடுத்து வரைந்திருப்பதன் தன்மை எத்தகையது - அதன் மூல வேர் எங்கிருக்கிறது என்பது எளிதிலேயே விளங்கக் கூடியதாகும்.

இந்தக் கல்வித் திட்டத்தில்கூட இந்திய அரசமைப்புச் சட்டம் எட்டாம் அட்டவணையில் 22 மொழிகள் இருக்க, செத்த மொழியான இந்த சமஸ்கிருதம்பற்றி மட்டும் வரிந்து வரிந்து வரையப்பட்டு இருப்பதன் நோக்கம் என்ன?

தேசிய கல்விக் கொள்கை அறிக்கை 4.17 என்ன சொல்லுகிறது?

"இந்தியச் செவ்வியல் செம்மொழிகளின் முக்கியத்துவம், தொடர்பு மற்றும் அழகியல் போன்ற காரணிகள் புறந்தள்ளப்பட்டு விடக் கூடாது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது வரைவில் குறிப்பிட்டுள்ளதும், மற்றொரு முக்கியமான நவீன மொழியுமான சமஸ்கிருதம் ஒன்று கூட்டப்பட்ட கிரேக்க,

லத்தீன் மொழிகளின் இலக்கியங்களைக் காட்டிலும் செறிவு மிக்கதா கவும், கணிதம், தத்துவம், இலக்கணம், இசை, அரசியல், மருத்துவம், கட்டடக் கலை, உலோகவியல், நாடகம், கவிதை, கதை சொல்லல் மற்றும் பிற (சமஸ்கிருத ஞான மரபு என்றறியப்பட்ட) ஆயிரக்கணக் கான ஆண்டுகளாக பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாலும், மதச்சார்பற்றவர்களாலும் வாழ்வின் பலதரப்பட்ட சமூகப் பொருளாதார மற்றும் வாழ்வியல் முறைகளைச் சார்ந்த எழுத்தாளர் களாலும் எழுதப்பட்ட ஏராளமான செல்வங்களையும் உள்ளடக்கி யுள்ளது. எனவே, சமஸ்கிருதம் மும்மொழிப் பாடத் திட்டத்தின் ஒரு மொழியாகப் பள்ளிக் கல்வித் திட்டத்தில் எல்லா நிலைகளிலும், கல்லூரிகளிலும் ஒரு முக்கியமான வளமூட்டக் கூடிய விருப்பப் பாடமாக வழங்கப்படும். இந்த மொழிச் சுவையுடனும் அனுபவப் பூர்வமாகவும் மட்டுமல்லாமல் தற்காலத்திற்குப் பொருந்தும் வகையில் சமஸ்கிருத ஞான மரபுகளின் வழியில் முக்கியமாக ஒலிப்பு மற்றும் உச்சரிப்பு முறைகளின் மூலமாகக் கற்பிக்கப்படும். ஆரம்ப மற்றும் இடைநிலை சமஸ்கிருதப் பாடப் புத்தகங்கள் எளிய தரமான சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு, மாணவர்கள் உண்மையிலேயே அனுபவித்துக் கற்கும் வண்ணம் சமஸ்கிருத மொழியின் மூலமே கற்பிக்கப்படும்"

இவ்வாறு தேசிய கல்விக் கொள்கையில் விழுந்து விழுந்து எழுதப்படுவதன் நோக்கமென்ன?

இந்தியாவில் உள்ள எந்த ஒரு மொழியையும் மூன்றாவது மொழியாகப் பயிலலாம் என்று கூறிவிட்டு, சமஸ்கிருதத்தின் மகாத்மியங்கள்பற்றி 'சாங்கோ பாங்கமாக' இப்படி எழுதுவதன் உள்நோக்கம் எளிதில் புரிந்து கொள்ளப்படக் கூடியதே.

கல்விக் கொள்கையில் ஏன் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைத் தேர்வு செய்து படியுங்கள் என்று சிபாரிசு செய்து அம்மொழி படிப்பதற்கான சூழலையும், வாய்ப்பையும் உருவாக்கும் திட்டம் இவர்களிடத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதில் ஏதும் கடினம் இல்லை.

இந்த அளப்போடு அறிக்கை நின்றுவிட்டதா? இவர்களுக்கு இருக்கும் சமஸ்கிருத வெறி விண்ணைத் தொட வேண்டுமே!

22.15 என்ற பகுதி என்ன கூறுகிறது?

Òகலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த வேறு துறைகளிலும் பங்களித்த சமஸ்கிருத மொழியை அனைவரிடமும் கொண்டு சேர்க்க, வரையறுக்கப்பட்ட ஒற்றை வழியில் அல்லாமல், பள்ளிகளின் வாயிலாகவும், பயிற்றுவிக்கப்படும். மும்மொழி பாடத் திட்டத்தில் ஒரு மொழியாக மட்டுமின்றி, உயர்கல்வியிலும் பயிற்றுவிக்கப்படும். வெறுமனே மொழிப்பாடம் மட்டுமின்றி, புதுமையான கலா ரசிகமான வழிகளில் இது மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்படும். உதாரணத்திற்குக் கணிதம். வானியல் (சோதிடம்), தத்துவவியல், பொறியியல், மொழியியல், நாடகம், யோகா பாடங்களின் வாயிலாக பயிற்றுவிக்கப்படும். இம்முறையிலான கல்விக் கொள்கையின் மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைந்து சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் பல துறை சார்ந்த பாடங்களை - படிப்புகளை பயிற்றுவிக்கும் நிறுவனங்களாக உருமாறும், ஒருவகையான புனிதத்துவம் மிக்க பல்வேறு படிப்புகளை கற்றுக் கொடுக்கும்முறையாக செயல்படத் துவங்கும்"

என்று புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் பற்றிய 'பஜகோவிந்தம்' படுவேகமாகவே கேட்கிறது.

இதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை. 'ஞானகங்கை'யில் இந்தியாவின் ஆட்சி மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம் என்று கூறப்பட்டுள்ளதன் பாஷ்யம்தான் இந்தக் கல்வி அறிக்கையில் சமஸ்கிருதம் பற்றிக் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.

இந்தத் திட்டம் இந்தியத் துணைக் கண்டத்தில் பார்ப்பனர் அல்லாதார் உணர்வைப் புது வீச்சில் தூண்டிட வகை செய்கிறது. பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புக் குறித்து விவாதப் பெரும் போரைத் தொடங்கி கொடுத்திருக்கிறது.

ஒன்றை கவனித்தீர்களா, சமஸ்கிருதத்தில் வானவியல் (சோதிடம்) இருப்பதாக - ஓர் இஸ்ரோ விஞ்ஞானியால் தயாரிக்கப் பட்ட கல்வியறிக்கையில் கூறப்பட்டுள்ளதிலிருந்தே இவர்களின் புத்தி - புராணத்தில் மேயப் போயிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாமே!