ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கரோனா (கோவிட் 19) தொற்றின் கொடுமை: எத்தனை நாள் என்றாலும் நம்பிக்கையோடு இருப்போம் - விடியாத இரவுகள் எங்கும்  கிடையாது!
August 4, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

கரோனா தொற்றின் கொடுமை எத்தனை நாள் என்றாலும், நம்பிக் கையோடு இருப்போம்; விடியாத இரவுகள் எங்கும் கிடையாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

கரோனா தொற்று (கோவிட் 19) நோயின் வேகமும், பரவலும் நம் நாட்டில் குறைந்த பாடில்லை. நேற்று (3.8.2020) வந்த ஒரு தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

மிகுந்த கவலையையும்,

அதிர்ச்சியையும் தரக்கூடிய செய்தி!

மிகவும் பாதிப்புக்கு ஆளான அமெ ரிக்காவில் நேற்று ஒரு நாளில் ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கையைவிட, மிக அதிக மான எண்ணிக்கை இந்தியாவில் ஏற்பட் டுள்ளது என்பது மிகுந்த கவலையையும், அதிர்ச்சியையும் தரக்கூடிய செய்தியாகும்.

தமிழகத்தில் இதுவரை 44 மருத்துவர்கள் கரோனாவுக்குப் பலியாகியிருக்கிறார்கள் என்பது மிகுந்த வேதனைக்குரிய செய்தி யாகும். இதில் பொது மருத்துவர்கள் 20 பேரும், சிறப்பு மருத்துவர்கள் 24 பேரும் அடங்குவர்.

இன்று கிடைத்த தகவலின்படி, இந்தியா முழுவதிலும் 175 மருத்துவர்கள் பலியாகி யிருக்கிறார்கள்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள் ஒரு சிலர், கருநாடக முதலமைச்சர் எடியூரப்பா,  கரு நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ்சிங் சவுகான், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பல எம்.பி.,க்கள், பல மாநில அமைச்சர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - பொதுநலத் தலைவர்கள், கலைத்துறையினர் உள்பட பலதரப்பட்ட மக்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருவது மிகுந்த வேதனையையும், வருத் தத்தையும் அளிக்கிறது.

அவர்கள் அனைவரும் முழுநலம் பெற்று மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி தமது கடமைகளை ஆற்ற வேண்டுமென நாம் விழைகிறோம்.

இதில் கொள்கை வேறுபாடு, அரசியல் மாச்சரியங்களுக்கு இடமே இல்லை.

மனிதநேயம் - நாடு, மொழி, இனம், மதம், ஜாதி, வட்டாரம் எல்லைகளைக் கடந்த அன்பின் வெளிப்பாடு தேவை அல்லவா - இந்த நேரத்தில்?

உலக நாடுகள் பலவற்றிலும் ஏற்பட் டுள்ள பல லட்சக்கணக்கான உயிர்ப் பலி கள் மிகுந்த துன்பத்தையும், துயரத்தையும் தருகின்றன!

ஒரே ஆறுதல்,

நோய் வந்தவர்களில்

பலரும் மீண்டு வருகிறார்கள்

கண்ணுக்குத் தெரியாத ஒரு தொற்றின் கொடுமையில், ஒரே நேரத்தில் பல நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழக்கும் சோகம், இதற்குமுன்  நம் காலத்தில் நிகழ்ந்ததில்லை. முன்பும்கூட பிளேக், காலரா, பெரியம்மை நோய்கள் என்று வந்தபோதிலும்கூட, அது ஒரே நேரத்தில் உலகத் தொற்றாக ஆகி பற்பல நாட்டு மக்களைப் பாதித்து, உயிர்ப் பலி ஆகும் பரிதாப நிலை ஏற்பட்டதில்லை.

ஒரே ஆறுதல், நோய் வந்தவர்களில் பலரும் மீண்டு வருகிறார்கள். தனி மருந் தில்லா நோய் என்பதைச் சமாளிக்க மருத் துவர்கள் பல்வேறு உத்திகளையும், மருந்து களையும், சிகிச்சைகளையும் செய்து, மக் களைக் காப்பாற்றப் போராடி வருகின்றனர்.

ஊரடங்குகள் எதிர்பார்த்த விளைவு களைப் பெரும் அளவில் தரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை!

ரஷ்யாவிலும், இங்கிலாந்திலும், இஸ்ரே லிலும், அமெரிக்காவிலும், நம் நாட்டிலும் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயுற்சி ஆய்வு கட்டத்தில் உள்ளன என்பது ஆறுதலைத் தருகிறது.

விரைந்து மருந்துகள் மக்களுக்குக் கிடைத்து, இந்தக் கொள்ளை நோயின் கொடுமை தீரட்டும்.

கரோனா ஏற்படுத்திய

மிகப்பெரிய அவலம்!

இந்நோய் ஏற்படுத்திய மிகப்பெரிய அவலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது; சிறு குறு தொழில்கள் நசிந்துவிட்டன; விவசாயி களின் வாழ்வாதாரம் - முதுகெலும்பு உடைந்து எழ முடியாமல் கிடக்கும் நிலையில் உள்ளது!

தினக்கூலி பெறக்கூடிய தொழிலாளர்கள் பலர் சொல்லொணாத வறுமையில் இன் றைக்கும் பசி, பட்டினியோடு வாடிக் கொண்டு, வேலை இல்லாத நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையே உள்ளது.

வேலையில்லாத் திண்டாட்டம், வேலை கள் இழந்த நிலையில், வேதனைத் தீயில் வெந்து கருகக் கூடிய வாலிபர்கள், முதிய வர்கள் எண்ணிக்கையும் பெருக்கத்தில் உள்ளது! தற்கொலைகள் ஆங்காங்கே நிகழ்கின்றன!

ஒரு மனிதனின் செலவு மறுமனிதனின் வரவு என்பது பொருளாதாரத் தத்துவம்

மக்களிடையே பணப் புழக்கத்தை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை உயர்த்த ஏழை, எளிய தொழிலாளிகள், விவசாயி களுக்கு 5,000 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை மத்திய - மாநில அரசுகள் தந்தால், அது அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும்; நலிந்த சிறு தொழில்கள் எழுந்து நிற்க அதுவே உதவும்; காரணம், ஒரு மனிதனின் செலவு மறுமனிதனின் வரவு என்பது பொருளாதாரத் தத்துவம் அல்லவா? ஏனோ நமது மத்திய - மாநில அரசுகள் இந்த நல்ல யோசனைகளை ஏற்க மறுக் கின்றன!

துண்டு துண்டாக வெறும் ஆயிரம் ரூபாய் தருவது, ‘யானைப் பசிக்குச் சோளப் பொறி' - அதுவும் ஊரடங்கு முடக்கத்தின் காலகட்டத்தில்!

இதைவிட இரண்டு கொடுமைகள் நமது இதயத்தில் ஈட்டிகளைப் பாய்ச்சுவதுபோல உள்ளன.

‘நவீன தீண்டாமையைக்' கடைப்பிடிப்பது

மனிதத் தன்மையற்ற கேவலம்

  1. கரோனா தொற்று (கோவிட் 19) வந்து முதலில் ‘பாசிட்டிவ்' என நோய்த் தொற்று என்று கண்டறியப்பட்டவர்கள் உரிய சிகிச்சை பெற்று, குணமாகி ‘நெகட்டிவ்' என்று அறிவிக்கப்பட்ட பிறகு, அதிலிருந்து மீண்டு வந்த பின்பும், மற்ற நோயிலிருந்து விடுபட்ட நோயாளிகளை அனுதாபத்துடன் அணுகி ஆதரவு காட்டுவதுபோல் அன்றி, ஏதோ ஒதுக்கப்பட வேண்டிய சமூக விரோதிகள் - புறந்தள்ளி வைக்கப்பட வேண்டியவர்கள் என்பது போன்ற மனப் பான்மையுடன் ‘நவீன தீண்டாமையைக்' கடைப்பிடிப்பது, மனிதத் தன்மையற்ற கேவலம் ஆகும்.

இதனைத் தவிர்த்து அவர்களை அன் போடு அரவணையுங்கள் - மனிதநேயம் மரணமடைந்துவிடலாமா?

இதனால், மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் தம்பதிகள் செய்தி, கரோனாவைவிட கொடுமையானது அல்லவா?

கரோனாவிலிருந்து அவர்கள் தப்பினார் கள் - ஆனால், இப்படிப்பட்ட சமூக அவலக் கேட்டிலிருந்து அவர்களால் தப்ப முடியவில்லையே!

இதயமற்ற ஈனச் செயல்

  1. அதுபோல, கரோனாவினால் இறந்த வர்களைச் சுடுகாடு, இடுகாடுகளில் அடக் கம் செய்வதற்கும் மறுப்புக் கூறுவது சில மனிதர்களின் இதயமற்ற ஈனச் செயல் அல்லவா?

அவர்களுடைய இல்லத்து உறவுகளாக இறந்தவர்கள் இருந்திருந்தால், இப்படி நடந்துகொள்ள அவர்களுக்கு மனம் வருமா?

காப்பாற்றப் பாடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் முதல் பலருக்கும் இந் நிலையா? மனித சுயநலத்திற்கு ஓர் எல்லையே இல்லையா? அப்படி என்ன இந்த மனிதர்கள் ‘சாகா வரம் பெற்ற சஞ்சீவிகளா?' எனக் கேட்கவே தோன்றுகிறது.

எத்தனை நாள் என்றாலும், நம்பிக் கையோடு இருப்போம்.

விடியாத இரவுகள் எங்கும் கிடையாது!

 

கி. வீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

4.8.2020