ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கரோனா காலத்தில் பல்வேறு  தேர்வுகளை நிறுத்தியிருக்கும்போது ‘நீட்’டை மட்டும் பிடிவாதமாக நடத்த மத்திய அரசு முடிவு செய்வது ஏன்
August 27, 2020 • Viduthalai • கழகம்

கரோனா காலத்தில் பல்வேறு  தேர்வுகளை நிறுத்தியிருக்கும்போது ‘நீட்’டை மட்டும் பிடிவாதமாக நடத்த மத்திய அரசு முடிவு செய்வது ஏன்?

மாணவர்கள் உயிர் முக்கியமா? தேர்வு முக்கியமா?

 ‘நீட்’டிலிருந்து விலக்குக்கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக!

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

சென்னை, ஆக.27 கரோனாவால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ள காலகட்டத்தில், பல்வேறு தேர்வுகளை நிறுத்தி வைத்திருக்கும் மத்திய அரசு ‘நீட்’டை நடத்துவதில் மட்டும் அவசரம் காட்டுவது ஏன்? மாணவர்களின் உயிர் முக்கியமா? தேர்வு முக்கியமா? என்று வினா எழுப்பிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தமிழ்நாடு அரசு அவசரமாக சட்டமன்றத்தைக் கூட்டி, ‘நீட்’டை விலக்கும் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என்று இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்று (27.8.2020) நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

நம் மாணவர்களுடைய மருத்துவக் கனவைப் பறிக்கக் கூடிய வகையில், கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக நீட் தேர்வு திணிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நீட் தேர்வினை என்ன நோக்கத்திற்காகக் கொண்டு வருகிறோம் என்று மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் சொன்னார்களோ, அந்த நோக்கம் எந்த வகையிலும் நிறைவேற்றப்பட்டதாக, கடந்த மூன்றாண்டுகளில் ஏற்பட்ட அனுபவம் காட்டவில்லை.

நூறு பேருக்குமேல் ஆள் மாறாட்டம் செய் துள்ளார்கள். அதுமட்டுமல்ல, கேள்வித் தாள்களில் குழப்பம்; 14 ஊழல்கள், தவறுகள் நடந்திருக்கின்றன என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அவர்களே சுட்டிக்காட்டி, அதனை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பி யிருக்கிறார்கள்.

அந்த அளவிற்கு ஊழல்கள் நடைபெற்று இருக்கின்றன.

இந்தத் தேர்வில் முதல் முறையாக எழுதி வெற்றி பெற்றவர்கள் அதிகம் கிடையாது. ஏராளமான அளவிற்குப் பணத்தினை செலவு செய்து, இரண்டு, மூன்று ஆண்டுகள் பயிற்சி வகுப்பிற்குச் சென்றுதான் அந்தத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட நீட் தேர்வு என்பது, உயர்ஜாதிக்கார மாணவர்களுக்கு வசதி! நகர்ப்புறங்களில் வசதி வாய்ப்புகள் உண்டு; கிராமத்துப் பிள்ளைகளுக்கோ, ஒடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கோ வாய்ப்புகள் இல்லை.

தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவக் கல்லூரிகளை நிறுவி, இன்று உலகம் முழுவதும் உள்ள வெளி நாட்டவர்கள் பாராட்டத்தக்க அளவில் நம்முடைய மருத்துவர்களை உருவாக்கி இருக்கிறோம்.

இந்நிலையில், நீட் தேர்வு என்பது அரசமைப்புச் சட்ட விரோதமான ஒன்றாகும்.

தேர்வுகளை நடத்தக்கூடிய உரிமை மத்திய அரசினுடைய மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது அரசமைப்புச் சட்டப்படி. பல்கலைக் கழகங்களுக்கு மட்டுமே இருக்கக்கூடிய உரிமையாகும். ஆனால், அந்த அரசமைப்புச் சட்ட உரிமையை மீறியே, கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசு இதனைச் செய்து கொண் டிருக்கிறது. இதற்குத் துணைபோகின்ற வகையில், உச்சநீதிமன்றமும் இருந்து கொண்டிருக்கின்றது.

கரோனா தொற்றால்

மக்கள் பாதிக்கப்பட்டுள்ள காலம் இது!

உங்களுக்கெல்லாம் தெரியும், இந்த ஆண்டு வெளியில் நடமாட முடியாத அளவிற்கு கரோனா தொற்றின் கொடுமையால் ஊரடங்கு இந்தியா முழுவதும் இருக்கிறது. அய்ந்து மாதங்களுக்கு மேலாக பொரு ளாதாரம் முடங்கியிருக்கிறது; வேலையின்மை பெருகியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன; தள்ளி வைக்கப்பட்டன. இப்படி இருக்கும்பொழுது, நீட் தேர்வை மட்டும் நடத்தவேண்டும் என்று இவர்கள் மீண்டும் மீண்டும் சொல்வதன் நோக்கமென்ன?

மாணவர்களுடைய உயிர் முக்கியமா? இந்த நீட் தேர்வு முக்கியமா?

ஏற்கெனவே, இந்த நீட் தேர்வு, அனிதாவில் தொடங்கி, சுபசிறீ வரையில் 12 உயிர்களைக் குடித்திருக்கிறது. ஆகவே, மீண்டும் இந்த நீட் தேர்வை நடத்தினால் என்னாகும் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள்.

இன்று காலையில் வந்திருக்கின்ற செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். 70 ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பலியாகின்றவர்களின் எண்ணிக்கை யிலும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக நம்முடைய நாடுதான் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில்,  இந்த நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று நாம் ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இந்த ஆண்டு இந்த நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று.

மற்ற மாநில முதலமைச்சர்களும் இதில் ஒரு தெளிவான நிலையை எடுத்திருக்கிறார்கள். எனவே, இதை அரசியல் கண்ணோட்டத்தோடு மத்திய அரசு பார்க்கக் கூடாது; மனிதநேயக் கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும்; சமூகநீதி கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மாணவர்களுடைய உயிர் பெரிதா? அல்லது வெறும் தேர்வு பெரிதா?

மாணவர்களின் உயிரோடு

விளையாட வேண்டாம்!

மாணவர்கள் உயிரோடு இருந்தால்தான், இந்த ஆண்டு தேர்வு எழுதாவிட்டாலும், அடுத்த ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டோ எழுதிக் கொள்ளலாம். இதற்காக மாணவர்கள் தங்களுடைய உயிரை இழக்கக் கூடாது.

எனவேதான், இந்த அறவழி ஆர்ப்பாட்டத்தினை இன்றைக்குத் தமிழகம் முழுவதும் நாங்கள் நடத்தி யுள்ளோம். இந்த உணர்வு இந்தியா முழுவதும் பரவலாக இருக்கிறது.

தமிழக அரசைப் பொருத்தவரையில், இந்த நீட் தேர்வை ஒரு பக்கத்தில் எதிர்க்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு, மற்றொரு பக்கத்தில் வேறுவிதமான குரல் கொடுக்கிறார்கள்.

மற்ற மாநில முதலமைச்சர்கள் எல்லாம், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்வோம்; பிரதமரைச் சந்திப்போம் என்றெல்லாம் சொல்கிறார்களோ, அதே போன்ற உறுதியான நிலைப்பாட்டினைத் தமிழக அரசு எடுக்கவேண்டும்.

ஏற்கெனவே தமிழக சட்டமன்றத்தில் இரண்டு மசோ தாக்களை  நிறைவேற்றி அனுப்பியதற்குக் காரணமே சொல்லாமல், அதனை திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.

அவசரமாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றட்டும் தமிழ்நாடு அரசு!

எனவே, இப்பொழுது அவசரமாக தமிழக சட்ட மன்றத்தைக் கூட்டி, ஓர் அவசரத் தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும். அதன்மூலமாக, தங்களுடைய முடிவை எடுத்துச் சொல்லலாம்.

ஏனென்றால், கல்வி என்பது இன்னமும் ஒத்திசைவு பட்டியலில்தான் (Concurrent List) இருக்கிறது; யூனியன் லிஸ்டிற்குப் போகவில்லை. எனவே,  அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு மத்திய அரசிற்கு முழு சுதந்திரம் கிடையாது.

அந்த வகையில், முதுகெலும்போடு நம்முடைய முதலமைச்சர் நடந்துகொள்ளவேண்டும். மிக உறுதிப் பாடோடு தமிழ்நாடு அரசு நடந்துகொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் இந்த அறப்போராட்டம் நடைபெறுகிறது.

இதில், மற்றவர்களுக்குத் தொந்தரவு இருக்கக்கூடாது; கரோனா தொற்று பரவக் கூடாது என்பதற்காகத்தான், அவரவர் வீட்டிற்கு முன்பாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒத்த கருத்துள்ளவர்கள், கல்வியாளர்கள் அத்துணைப் பேரும் இந்த அறவழிப் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களுடைய உயிரைக் காப்பாற்றவேண்டும். மாணவர்களுடைய உயிரா? தேர்வா? என்றால், உயிர்தான் முக்கியம் என்பதை, ஆறறிவு உள்ள யாரும் ஒப்புக்கொள்வார்கள்.

அரசு இதில் தேவையற்ற கவுரவம் பார்க்கக்கூடாது. இதை ஒரு கொள்கையாக எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்படவேண்டும். மனிதநேயத்தோடு அணுக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறினார்.