ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கரோனாவைக் கட்டுப்படுத்திய ஸ்காண்டிநேவியன் நாடுகள்
July 17, 2020 • Viduthalai • தலையங்கம்

ஸ்காண்டிநேவியன் நாடுகளான ஸ்வீடன், நார்வே, பின்லாந்தில் கரோனா தொற்று முற்றிலும் கட்டுக்குள் வந்தது.

மார்ச் மாத முதல் வாரத்தில், சீனாவை அடுத்து அய் ரோப்பிய நாடுகள் கரோனா தொற்றால் கடுமையாக பாதிக் கப்பட ஆரம்பித்தன. அதனை அடுத்து அந்த நாடுகள்  மக்களுக்கான பொருளாதார தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பிறகு,  மக்களின் ஆதரவோடு  முழு ஊரடங்கை அறிவித்து நெருக்கடி மிகுந்த ஓஸ்லோ, ரோஸ்விக் போன்ற நகரங்களில் வாழும் மக்களின் அன்றாடத் தேவைகளை அரசும், இராணுவமும், சமூக ஆர்வலர்களும் இணைந்து நிறைவேற்றி வந்தனர்.

இந்த நிலையில் ஏப்ரல் மாதம் தொற்று உச்சநிலையை அடைந்து, பிறகு குறையத் துவங்கியது, மே இறுதி வாரத்தில் நார்வே மற்றும் பின்லாந்தில் கரோனா தொற்று முற்றிலும் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால், பெரிய நிலப்பரப்பைக் கொண்ட ஸ்வீடனில் தொற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தொடர்ந்து மக்களும், அரசும் முயற்சி செய்து முழுமையான ஒத்துழைப்போடு, கரோனா தொற்றை நாட்டிலிருந்து விரட்டிச் சாதித்தனர். கடந்த 3 வாரங்களாக ஸ்வீடன் நாட்டில் கரோனா தொற்று நோயாளி ஒருவர்கூட கண்டறியப்படவில்லை. அதே நேரத்தில் கடைசி கரோனா நோயாளியும் குணமடைந்து வீடு திரும்பினார். இதனை அடுத்து அந்த நாட்டு விமானப்படை தனது நாடு கரோனாவில் இருந்து விடுதலை அடைந்து விட்டதைக் குறிக்கும் வகையில் வானத்தில் அன்பின் சின்னத்தின் வடிவில் போர் விமானத்தைப் பறக்க விட்டுக் கொண்டாடியது.

மே மாத துவக்கத்தில் கரோனா தொற்றில் முதல் அய்ந்து இடங்களில் இருந்த இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகள் தற்போது கரோனாவிலிருந்து விடுதலையாகிக் கொண்டு இருக்கின்றன. ஆனால், வீராப்பு பேசிய  தலைவர்களைக் கொண்ட அமெரிக்கா மற்றும் பிரே சில் போன்ற நாடுகளில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் கரோனா தொற்று பரவிக்கொண்டு இருக்கிறது, 

இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களைத் தவிர, வேறு எந்த மாநிலமும் சரியான கரோனா தொற்று புள்ளிவிவரத்தைப் பகிராமல் உள்ளதால், தொற்று எண்ணிக்கை குறித்தும், தடுக்கும் நடவடிக்கைக்கான ஆலோசனைகளை வழங்குவதிலும் உலக சுதாதார நிறுவனம் குழப்பமடைந்துள்ளது.

உலக நாடுகளின் கரோனா தொற்று வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 36,18,739 ஆகவும், மரண மடைந்தோர் எண்ணிக்கை 1,40,185ஆகவும், இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலில்  நோயாளிகளின் எண்ணிக்கை 19,72,072 ஆகவும், மரணமடைந்தோர் எண்ணிக்கை 75,568 ஆகவும், மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை 9,68,876 ஆகவும், மரணமடைந்தோர் எண்ணிக்கை 24,915 ஆகவும் உள்ளது.

இந்தியாவில் தொற்றுப் பரவல் குறித்த சரியான தகவல்களை மாநில அரசுகள் பகிராத காரணத்தால் தொற்று குறித்த எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதுகுறித்து கரோனா தொடர்பாக ஆய்வு செய்துவரும் மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, வடமாநிலங்களில் அவர்கள் தரும் புள்ளி விவரங்களைவிட மிகவும் அதிக எண்ணிக்கையில் தொற்று இருக்கக் கூடும் என்று கூறியுள்ளனர். இவர்களின் கூற்றை உறுதி செய்வதுபோல் குஜராத் அரசு கடந்த 5 நாட்களாக மரணிப்போர் எண்ணிக்கையை வெளியிடவில்லை. ஆகை யால், ஜூலை 3 ஆம் தேதி அந்த அரசு கொடுத்த மரண விவரமான 57 என்ற எண்ணிக்கையை  மட்டுமே தொடர்ந்து ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

'சீழை மறைத்தால் சீக்கிரம் மரணத்திற்கு அழைப்பு' என்று பொருள். பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த, அதிகப்படுத்த நோய்த் தொற்று எண்ணிக்கையும் அதிகமாக வெளிவருகிறது என்பதுதான் உண்மை.

பரிசோதனைகளை மெதுவாகச் செய்யும் அணுகுமுறை ஆபத்தானது. எவ்வளவு சீக்கிரம் இந்தப் பரிசோதனைகள் முடிகிறதோ, அந்த அளவுக்கு நோயாளிக்கு மருத்துவ உதவி கிடைக்கப் பெறும், விரைவில் தீர்வும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

ஆளும் கட்சிகள் அரசியல் உள்நோக்கத்துடன் புள்ளி விவரங்களை வெளியிடுவது - எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

பொதுவாக நோய்த் தொற்று நீங்கி மக்கள் நலம் பெறுவதுதான் முக்கியம். இந்தியாவைப் பொறுத்தவரை இந்தப் பிரச்சினையில் வாய்ச்சவடால்தான் அதிகம்.

சந்தடி சாக்கில் மாநில ஆட்சிகளின் உரிமைகளைப் பறிப் பதில்தான் அதிகம் அக்கறை. கரோனாவை வெற்றிகரமாகக் கடந்துவந்த நாடுகளைப் பின்பற்றட்டும் - அரட்டைக் கச்சேரிகள் ஒழியட்டும்! ஒழியட்டும்!!