ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கருப்புச் சட்டை மாநாட்டினை நடத்தி, கழகக் கொடி உருவாக்கம்
July 21, 2020 • Viduthalai • கழகம்

‘‘ஒப்பற்ற தலைமை-3'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வில் தமிழர் தலைவரின் சிறப்புரை

சென்னை, ஜூலை 21 1944ஆம் ஆண்டு திராவிடர் கழகமாக மாற்றியபொழுது, கருப்புச் சட்டை மாநாட்டினை நடத்தி, கழகக் கொடியை உருவாக்கினார் தந்தை பெரியார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

‘ஒப்பற்ற தலைமை'

கடந்த 4.7.2020 மாலை 5.30 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' (பொழிவு-3) எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இடையில் ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும் - கவாலியன் தியேட்டர் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய அரங்கத்தில், அதில் நாகை திராவிட நடிகர் கழகம் சார்பாக, ஒரு நாடகத்தை நாகை ஆர்.வி.கோபால் ஏற்பாடு செய்தார். கலைஞர் அவர்கள் மாணவப் பருவத்திலிருந்து நல்ல துடிப்பான எழுத்தாளராக, நாடக வசனங் களை எழுதக்கூடிய நிலையில் இருப்பவர். அந்த நாடகம் சீர்திருத்த நாடகமாகும். அப்பொழுது காங்கிரசுக்காரர் களுக்கு ஆத்திரம் - நடுவில் கொஞ்சம் தகராறு எல்லாம் ஏற்பட்டது. அதில் மிக முக்கியமாக, கலைஞர் தான் கதாநாயகனாக நடித்த இளைஞன் என்பதனால், கலைஞர் அவர்களை அன்றைக்கு அவர்கள் குறி வைத்திருந்தார்கள். ஆனால், அவரை அடையாளம் தெரியாது. பிறகு, அவர் மாநாட்டிற்கு வந்து வெளியே நின்றிருந்தபொழுது, அவரைத் தாக்கினார்கள். அந்தச் செய்திகளையெல்லாம் கலைஞர் அவர்களே அடிக்கடி அவரே எடுத்துச் சொல்லியிருக்கிறார். ‘‘நெஞ்சுக்கு நீதி''யில் பதிவு செய்திருக்கிறார். அதற்குப் பிறகுதான் அய்யா அவர்கள் அதிகமாக அவரை எழுதச் சொல்லி, குடிஅரசு அலுவலகத்திற்கு அவரை அழைத்தார். கருணானந்தம் அவர்கள் மூலமாக அறிமுகப் படுத்தினார் என்ற செய்திகள் எல்லாம் ஒரு பக்கத்தில். அன்றைக்கு நடந்த சம்பவங்களை நான் பார்த்தவன்.

அன்றைக்குக் காலையில் 11 மணிவரையில் நிகழ்ச்சிகள் எல்லாம் மிகச் சிறப்பாக நடைபெற்றன. புதுவையில் பிரெஞ்சு அரசியல் என்பது மிகவும் வித்தியாசமானது. புதுச்சேரி தோழர்களுக்குத் தெரியும். பிரெஞ்சு மொழியில், பாலிடிக்ஸ் என்பதை பொலிடிக்ஸ் என்று சொல்வார்கள். உச்சரிப்பு அப்படித்தான். மற்றவர்கள் பேசும்போதெல்லாம் பிரச்சினையில்லை.  புரட்சிக்கவிஞர் படத்தினை, பாவலர் பாலசுந்தரம் திறந்து வைத்து, புரட்சிக்கவிஞருடைய பெருமைகளைப்பற்றி உள்ளூரில் பேசுகிறார்.  அங்கே உள்ளூர் பிரச்சினை காரணமாக, எதிர்க்கோஷ்டியினர் அதனை எதிர்த்துக் கலவரம் செய்ய, கூச்சல், குழப்பம் செய்தனர். அதிலிருந்து அந்தக் கலவரத்தைப் பெரிதாக் கினார்கள். பிறகு, கலவரம் அதிகமானவுடன், அதிகாரிகள் வந்து, கலவரம் அதிகமாகிக் கொண்டே போகிறது; நாங் கள் இந்தக் கூட்டத்தை நிறுத்துகிறோம் என்று சொல்கிறார் கள். அது பிரெஞ்சு இண்டியா. அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சூழல் என்னவென்று சொன்னால், இந்தக் கூட்டத்திற்குக் கொடுத்த அனுமதியை ரத்து செய்கிறோம். வெளியில் கலவரம் நடைபெறுகிறது. பெண்கள் எல்லாம் பாதுகாப்பாகச் செல்லவேண்டும் என்று சொல்கிறார்கள்.

அய்யாவுக்கும் அந்தக் கவலைதான். சரி, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று காவல்துறை அதிகாரியி டம் கேட்கிறார்.

இந்தக் கூட்டத்தை நாங்கள் நிறுத்திவிடுகிறோம் என்று ஒரு காவல்துறை அதிகாரி சொல்கிறார். அந்த நாட்டுச் சட்டப்படி, ஒரு கூட்டத்தை நிறுத்துகிறோம் என்று சொன்னால், அந்தக் கூட்டத்திற்குக் கொடுத்த அனுமதி ரத்து செய்யப்படுகிறது என்று பொருள்.

புரட்சிக்கவிஞர் அவர்கள், கை ரிக்ஷாவில் ஏறுவதற் காக நடந்துவருகிறார். நான் அன்றைக்கு கடலூரைச் சேர்ந்த மாணவன். என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அந்தப் பக்கத்தில் நின்று கொண்டு வேடிக்கை பார்க்கிறார். என்னுடைய சகோதரர் கோவிந்தராசன் அவர்களும் பக்கத்தில் இருக்கிறார்.

புரட்சிக்கவிஞர் அவர்களைப்பற்றி ஏதோ சொன்னார் கள்; உடனே புரட்சிக்கவிஞர் அவர்களும் கடுமையாகப் பேச ஆரம்பித்துவிட்டார், புதுச்சேரி மொழியிலேயே!

அவர்மீது செருப்பைத் தூக்கி எறிந்தார்கள். அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.

இந்தச் சூழலில்தான், அரை நாள் மிகச் சிறப்பாக நடந்த ஊர்வலம் மாநாட்டினால், எதிரிகளுக்கு இன்னும் கொஞ் சம் தாக்கம் ஏற்பட்டது.

இளைஞராக இருந்த

கலைஞரைத் தாக்கினார்கள்!

இதற்கிடையில், அப்பொழுது ஒரு இளைஞனைத் தாக்கினார்கள் என்று செய்தி. அந்த இளைஞர்தான் கலைஞர் அவர்கள்.

அய்யாவிற்கு இருந்த கவலை என்னவென்றால், அந்த மாநாட்டிற்குப் பெண்கள் ஏராளமாக வந்திருந்தார்கள். அவர்கள் எல்லாம் பாதுகாப்போடு அவரவர் ஊர்களுக்குச் செல்லவேண்டும். ஏனென்றால், வேறொரு நாடு, வேறொரு பகுதி என்பதினால்.

22.7.1945 அன்று காலை புதுச்சேரிக்கு வந்த ரயிலில் சுமார் 5000 பேர், தோழர்கள் ஈ.வெ.ராமசாமி, டி. சண்முகம், சி.என்.அண்ணாதுரை, சத்தியவாணிமுத்து அம்மை, காஞ்சி தங்கவேல் முதலியார், ஆதிலட்சுமி அம்மை, அன்பழகன், நெடுஞ்செழியன், நடராஜன், அழகிரிசாமி, சேலம் நடேசன், ரோசு அருணாச்சலம், சம்பத், பாலசுந்தரம், கருணானந்தம், திராவிடமணி, பீட்டர், விழுப்புரம் சேர்மன் கோவிந்தராஜூலு நாயுடு, இஸ்மாயில், சிங்காரவேல், சாமி மற்றும் அனைவரும் தஞ்சை, திருச்சி, சேலம், வடஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை, கோவை முதலிய எல்லா ஜில்லாக்களிலிருந்தும் ஏராளமான மக்கள் பெண்கள் வந்து இறங்கியது சேலம் மாநாட்டை ஞாபகப் படுத்துவது போல் இருந்தது மற்றும் பேருந்துகளிலும் வண்டிகளிலும் மக்கள் அடிக்கடி வந்து பெருகிய வண் ணமே இருந்தார்கள்.

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டபடி கவி பாரதிதாசன் அவர்கள் மாளிகையில் இருந்து 9.30 மணிக்கு தலைவர்கள் ஊர்வலம் மேளம், பாண்டு, கொடிகள் வெற்றி வாழ்த்துரை, வளைவுகள் ஆகியவைகளுடன் சுமார் 3000க்கும் மேற் பட்ட மக்கள் பின் தொடர சுமார் ஒரு மைல் தூரம் அனேக கொடிகளையும், வளைவுகளையும், தோரணங்களையும் அற உரைகளையும் கண்டும் கடந்தும் சென்று 10.30 மணிக்கு கொட்டகையை அடைந்தது. கொட்டகையில் இருந்த மக்கள் உள் செல்வதற்கு இடம் இல்லாதபடி 4000, 5000 மக்கள் நிரம்பியிருந்தனர்.

தலைவர்கள் உள்ளே சென்று அமர்ந்ததும் திராவிட நாட்டு இசைகள் பலரால் பாடப்பட்டன. பிறகு கவி பாரதிதாசன் வரவேற்புரை கூறி, தோழர் அண்ணாத்துரை அவர்களை கொடி உயர்த்தும்படி வேண்டினார். பெரிய ஆரவாரத்தின் இடையில் ஒரு சிறு சொற்பொழிவுடன் கொடி உயர்த்தப்பட்டதும் தோழர் திருவொற்றியூர் டி.சண் முகம் அவர்கள் திராவிடர் என்கின்ற சொல்லை விளக்கி மாநாட்டைத் துவக்கினார்.

பிறகு பெரியார் தலைமை வகித்து ஒரு மணி நேரம் சொற்பொழிவாற்றி தலைமை உரையை முடித்து, தோழர் நெடுஞ்செழியனை அழைத்து திராவிட நாட்டுப் படத்தை திறக்கும்படி வேண்டினார். இந்த சந்தர்ப்பத்தில் ஈ.வெ.ராவுக்கு மயக்கம் ஏற்பட்டு ஆந்திர மற்றும் பிரயாணத்தில் ஏற்பட்ட ஒருவித களைப்பு உண்டானதால் தோழர் டி. சண்முகம் அவர்களை தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டு மக்களையும் கேட்டுக் கொண்டு ஜாகைக்குச் சென்றார்.

பிறகு நெடுஞ்செழியன் அவர்கள் சொற்பொழிவாற்றி திராவிட நாடு படம் திறந்து வைத்தார். பிறகு தோழர் அன்பழகன் பெரியார் படம் திறந்து உரையாற்றினார். இத்துடன் காலை நிகழ்ச்சிகள் இனிதே முடிந்து உணவுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. (குடிஅரசு 28.7.1945).

இது புதுச்சேரியில்.

சின்னாளப்பட்டியில் ஒரு பொதுக்கூட்டம் - அது தமிழ் நாட்டைச் சார்ந்தது - அன்றைய சென்னை மாநிலத்தைச் சார்ந்தது.

அதேநேரத்தில், பிரெஞ்சு இண்டியாவைச் சார்ந்தது புதுவைக் கலவரம்.

புதுச்சேரியில் பெரியாருக்குச் சிலை

அதற்கடுத்து நண்பர்களே, இன்றைக்கு அதே புதுச்சேரியில் பெரியாருக்குச் சிலை. எவ்வளவு மாறுதல்கள் நடைபெற்றிருக்கிறது என்பதைப் பாருங்கள்.

எதிர்ப்புகள் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் இயக் கம் வளரும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இங்கே புதுவைத் தலைவரும், மற்றவர்களும் இருக்கிறார்கள்.

அங்கே பெரியாருடைய சிலை - யார் திறந்தது? யார் அடிபட்டார்கள்? யார் மருந்து போட்டார்கள்? என்று பெரியாரைப்பற்றி கலைஞர் அவர்கள் சொல்வார்கள்.

அவர், அய்யா அவர்கள் மறைந்த பிறகு, என்னுடைய தலைமையில், கலைஞர் அவர்கள்தான் பெரியாரின் சிலையைத் திறந்து வைத்தார்.

புதுச்சேரியிலும் சுயமரியாதைத்

திருமணச் சட்டத்திற்கு சட்ட வடிவம்

அதுமட்டுமல்ல நண்பர்களே, அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தபொழுது, தமிழ்நாட்டில் இருந்த திராவிட முன் னேற்றக் கழக ஆட்சி - புதுச்சேரியிலும், திராவிட முன் னேற்றக் கழக ஆட்சி பரூக் அவர்கள் தலைமையில் அமைந்த சூழலில்,

தமிழ்நாட்டில் எப்படி அண்ணா அவர்கள் முதல மைச்சராக வந்தபொழுது, சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுத்தார்களோ, அதேபோல, புதுச்சேரி யிலும் சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம் கொடுத்தார்.

எனவே, சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்று, இந்து சட்டத் திருத்தம் 7-ஏ திருத்தம் புதுச்சேரியிலும் நடந்தது. இன்றைக்குப் புதுச்சேரியில், அதே புரட்சிக்கவிஞருடைய இல்லம், நினைவு இல்லமாக் கப்பட்டு இருக்கிறது; அரசு விழாக்கள் எடுக்கப்படுகின்றன.

1945 ஆம் ஆண்டு ஒரு சூழல்; ஆனால், பிற்காலத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் கொள்கை வெல்லும் - இதுதான் நிற்கும் - எதிரிகள் காணாமல் போய்விடுவார்கள். யார் எதிர்த்தார்களோ, அவர்கள் நம் வயப்படுவார்கள் என்பதற்கு அடையாளமாகத்தான் இத்தனை சான்றுகளை யும் உங்களுக்கு நான் சொல்கிறேன்.

கருப்புச் சட்டை மாநாட்டினை நடத்தி,

கழகக் கொடியை உருவாக்கம்

அதேபோல, அடுத்து மதுரை.  16.5.1946 ஆம் ஆண்டு.

மதுரைத் தோழர்களில்கூட அன்றைக்கு இளைஞராக இருந்திருப்பார்கள்;  மூத்த தோழர்கள் இன்றைக்குப் பலர் இல்லை. அய்யா அவர்கள் 1944 ஆம் ஆண்டு திராவிடர் கழகமாக மாற்றியபொழுது, கருப்புச் சட்டை மாநாட்டினை நடத்தி, கழகக் கொடியை உருவாக்கினார். அதற்கு முன்பாக, நாம் நீதிக்கட்சிக் கொடியைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தோம்.

முதலாவது சேலம் மாநாடு நடந்து முடிந்த பிறகு, அடுத்து திருச்சியில் மிகப்பெரிய பிரம்மாண்டமான இரண் டாவது மாநாடு நடைபெற்றது.

மூன்றாவதாக, ஒரு பெரிய நிகழ்ச்சி என்று சொன்னால், மதுரையில், கருப்புச் சட்டைப் படை என்று அழைத்து, ஈ.வெ.கி.சம்பத் அவர்களையும், கருணானந்தம் அவர் களையும் அமைப்பாளர்களாகப் போட்டார்.

படை என்றால், வேறொன்றும் கிடையாது - தொண்டர் படை என்பதுதான்.

தென்மாவட்டங்களில் மதுரைதான் தலைநகரம். எனவே மதுரையில் அந்த மாநாட்டினை நடத்தலாம் என்று சொல்லி, வைகை ஆற்றின் பாலத்தின்கீழே மிகப் பிரம்மாண்டமான பந்தலைப் போட்டு, இரண்டு நாள் மாநாடாக நடத்தவேண்டும் என்று தோழர் தவமணிராசன், கலைமான், முத்து, பழனிவேல் போன்ற ஏராளமான தோழர்களின் முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், அன்று சக்தி வாய்ந்த ஓர் எதிரி யார் என்றால், மதுரை வைத்தியநாத அய்யர், உள்ளூர் வழக்குரைஞர், மிகப்பெரிய காங்கிரஸ்காரர்.

மதுரையிலேயே கருப்புச் சட்டைக்காரர்கள் மாநாடு போடக் கூடிய அளவிற்கு வந்துவிட்டார்களா? என்று ஆத்திரம் பொங்க, 'அந்த மாநாடு நடைபெறக்கூடாது - அதைத் தடுத்து நிறுத்தவேண்டும்' என்று நினைத்து, பெரிய திட்டத்தைப் போட்டு இறங்கினார். கூலிப் படை யைப் பிடித்து அவர்களை வைத்து காலித்தனம் செய் தார்கள்.

‘‘கருப்புச் சட்டை மாநாடு''

ஏராளமானோர் கருஞ்சட்டை அணிந்து சென்ற ஒரு முதல் மாநாடு - ‘‘கருப்புச் சட்டை மாநாடு''தான். அந்த மாநாடு 15.5.1946 ஆம் ஆண்டு நடைபெற்றது.

அந்த மாநாட்டிற்காக எல்லா தலைவர்களும் சென்று அங்கே தங்கியிருக்கிறார்கள். என்னை உருவாக்கிய என்னுடைய ஆசிரியர் அவர்கள், பெரியார் அழைத்ததால், தன்னுடைய ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, இயக்கத்தில், அண்ணா அவர்கள் மத்திய செயலாளர் என்றால், இன்னொரு செயலாளர் ஆ.திராவிடமணி அவர்கள்.

எல்லாப் பணிகளையும் வேகமாகவும், சிறப்பாகவும் செய்வார் ஆ.திராவிடமணி அவர்கள். இப்படிப்பட்ட எல்லோரும் சேர்ந்து, அய்யா அவர்கள் மாநாட்டை நடத்துவதற்குச் சென்ற நேரத்தில், அங்கே என்ன நடந்தது? என்பதைப்பற்றிச் சொல்கிறேன். நிறைய செய்திகள் இருக் கின்றன; சில செய்திகளை உங்களுக்குச் சொல்கிறேன்.

காங்கிரஸ்காரர்கள் எப்படி அந்தக் கலவரத்தை நடத் தினார்கள் என்று சொன்னால் நண்பர்களே, திருச்சியில் ஒரு மாநாடு நடந்தபோது, இதேபோன்ற ஒரு கலவரத்தைத் தூண்டினார்கள் 1945 ஆம் ஆண்டில். எப்படியென்றால், மாநாட்டிற்காக வந்திருந்த தோழர்கள் கடைவீதியில் சென்றிருந்தபோது, ‘‘திராவிடர் கழகத்துக்காரர்கள் திருச்சி மலைக்கோட்டைக்குச் சென்று பிள்ளையாரை உருட்டி விட்டார்கள்; கோவிலுக்குச் சென்ற பெண்களைக் கொச் சைப்படுத்திப் பேசினார்கள்'' என்று ஒரு தவறான கற்ப னைச் செய்தியைப் பரப்பி, உள்ளூர் மக்களுக்கு, பக்தர் களுக்கு ஆவேசத்தை உருவாக்கக் கூடிய அளவிற்குச் செய்தார்கள்.

அதே முறையைத்தான் மதுரையிலும் கடைபிடித்தார் கள். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்ற கருப் புச் சட்டைக்காரர்கள் அசிங்கமாக நடந்துகொண்டார்கள்; பெண்களைக் கேவலப்படுத்தினார்கள்; கொச்சைப்படுத் தினார்கள் என்று ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தைச் செய் தார்கள்.

இராவணன் தலை வெடிக்கவில்லையானால், அதற்கு என்ன பொருள்?

இராவணன் காலத்திலிருந்து யாரையாவது இழிவு படுத்தவேண்டும் என்று சொன்னால், அய்யா அவர்கள் சொல்வார், ‘‘சீதை விரும்பி தான் இராவணன் பின்னால் போனாள் என்பதற்கு அடையாளம் என்னவென்று சொன்னால், தொட்டுத் தூக்கிப் போனான் என்று வால்மீகி இராமாயணத்தில் எழுதியிருக்கிறது. விரும்பாதவர்கள் தொட்டுத் தூக்கினால், அவன் தலை வெடித்துவிடும் என்று சாபம் இருக்கிறது, கதைப்படியே - அவன் தலை வெடிக்கவில்லையானால், அதற்கு என்ன பொருள்?'' என்று பெரியார் கேட்பார்.

அதுமாதிரி, திட்டமிட்டு, பெண்களோடு சம்பந்தப் படுத்துவார்கள்.

இப்பொழுதுகூட, யாரையாவது காலி செய்யவேண்டும் என்று நினைத்தால், ஒன்று, பணத்தைக் கையாடல் செய்துவிட்டார் என்று சொல்வார்கள்; இல்லையானால், ஒரு பெண்ணுக்கும், அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று சொல்வார்கள். அவர்கள், அண்ணன் - தங்கை யாகக்கூட இருப்பார்கள்; அவர்கள் தவறாகப் பழகினார்கள் என்று சொல்லி, நம்முடைய நாட்டில் மலிவான விஷமப் பிரச்சாரத்திற்கான சரக்குகள் இவை எல்லாம்.

50 ஆயிரம் பேர்

ஊர்வலமாகச் சென்றார்கள்

மதுரையில் முதல் நாள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. 50 ஆயிரம் பேர் ஊர்வலமாகச் சென்றார்கள், மிகப் பிரம் மாண்டமான பந்தல், எம்.ஆர்.இராதா நாடகம் எல்லாம் நடைபெற்ற அந்த மாநாடு எதிரிகளின் வயிற்றைக் கலக்கி விட்டது. நம்முடைய பகுதியிலேயே வந்து இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்தி விட்டார்களே என்ற கோபம்.

- தொடரும்