ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கருப்புக் கமலா எனும் கமலா ஹாரிஸ்
August 22, 2020 • Viduthalai • மற்றவை

* அ.முத்துக்கிருஷ்ணன்

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், செனட்டர் கமலா ஹாரிஸை, துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இந்தச் செய்தி  அமெரிக்காவிலும்,  இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மத்தியிலும், பெரும் களிப்பின் அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

கமலா ஹாரிஸின் தாய் சென்னையைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர்.  கமலாவின் தாய், தன்னை ஒக்லாந்தின் கருப்பினக் கலாச்சாரத்திற்கு மாற்றிக் கொண்டார், அவர் தனது இரு மகள்களையும் கருப்பினக் கலாச்சாரத்தின் படியே வளர்த்தார் என்றும், கமலா தனது பேட்டி ஒன்றில் தெரிவிக்கிறார்.

"எனது தாய் இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்துகொண்டே எங்களை வளர்த்தார்." என தனது சுயசரிதையான `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` புத்தகத்தில் கமலா குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் வாழச் சென்ற இடம், என்னையும், எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகத்தான் பார்க்கும். எனவே நாங்கள் தன்னம்பிக்கைக் கொண்ட கருப்பினப் பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்," என கமலா குறிப்பிட்டிருந்தார்.

தனது அடையாளம் குறித்து, தனக்கு எந்த ஒரு அசௌகரியமும் இதுவரை ஏற்படவில்லை என்றும், எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், `நான் ஒரு அமெரிக்கர்` என்றும் கமலா ஹாரிஸ் குறிப்பிடுவார்.

மாட்டுகறியையும், பன்றி இறைச்சியையும் விரும்பி உண்ணுபவர் கமலா ஹாரிஸ் என்பது அவரைப் பற்றிய செய்திகளை வாசிக்கையில் அறிந்து கொள்ள முடிகிறது.

கமலா ஹாரிஸ்-க்கும், நமக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, எந்த வாய்க்கால் தகறாருமில்லை அவர் வெற்றிபெற வேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். அவரது தாயார், அமெரிக்கா சென்று மடிசார் புடவை கட்டிக்கொண்டு பூஜை, புனஸ்காரம் என்று இல்லாமல், கருப்பினக் கலாச்சாரத்திற்குத் தன்னை மாற்றிக் கொண்டு, தனது கணவரை 'பஞ்சகச்சம்' கட்டுயா என்று கலாச்சார மிரட்டல் விடுக்காமல், அவருடன் இணைந்து, சிவில் உரிமை இயக்கங்களில் பங்குகொண்டார், போராடினார்.

தனது இரண்டு மகள்களையும், கருப்பினக் கலாச்சாரத்தின் படியே வளர்த்தார், அவர்களை BLACK GIRLS -ஆகவே வளர்த்தார். அதன் வழியே தான், அரசியல் உரிமை பெறும் பயணத்தில் அவர் ஒரு வக்கீலாக மாறுகிறார். அங்கிருந்து Attroney, Senator என்கிற படிகளில் ஏறுகிறார். அவர் துணை ஜனாதிபதியாக அல்ல, அதற்கு மேலும் வளர என் வாழ்த்துகள்!

நம் கேள்வி எல்லாம் ஒன்றே, இதே கமலாவின் தாய், சென்னையில் இருந்து கொண்டு, ஒரு கருப்பினத்தவரை அல்லது ஒரு தலித் இளைஞரைக் காதலித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? சூத்திரம் மிகவும் சுலபமானது! கமலா ஹாரிஸ்-ன் தாய் ஆணவக் கொலை செய்யப்பட்டிருந்தால் கூட  ஆச்சரியப்படுவதற்கில்லை.

தமிழ்நாட்டின் பிரபல கர்நாடக இசைப் பாடகர் சுதா ரகுநாதன். இவரது மகள் மாளவிகாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவர் சந்தித்த நெருக்கடிகளைக் கொஞ்சம் நினைவூட்டிப் பாருங்கள்! அவர் ஏன் மிரட்டப்பட்டார்? ஒரே காரணம் தான், அவரது மகள் மாளவிகா காதலித்தது ஆப்பிரிக்க நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட ஒருவரை. இதனைக் காரணமாக காட்டி, சுதா ரகுநாதனின் இசையில், அவர் செய்து வரும் கலைப்பணியில் கைவைக்க நினைத்தவர்கள், மிரட்டியர்கள் யார்? இது கற்காலத்தில் அல்ல, கடந்த ஆண்டான 2019ல் தான் நடந்தது!

சுதா ரகுநாதன் தனது மகளை கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஆப்பிரிக்க நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட மைக்கேலுக்குக் கல்யாணம் செய்ததை ஒட்டி, அவரை யார் மிரட்டினார்களோ, அதே கூட்டம் இன்று, கமலா ஹாரிஸ்!! கமலா ஹாரிஸ்!!! என்று கோஷம் போடுவதைத் தான் கேள்வி கேட்கிறோம். இது நிலைபடு மாற்றம் உங்களுக்குக் கொஞ்சம் கூட அருவருப்பாக இல்லையா என்று கேட்கிறோம்!

எப்பொழுதுமே தந்தைவழி (paternal) உறவு முறையைத் தூக்கிப் பிடித்து பெண்களை, அடிமை, சூத்திரர்கள் போல் நடத்தும் இந்தச் சமூகம், எப்படி ஒரே இரவில் தாய்வழி (maternal) உறவுகளை  மதிக்கிற சமூகமாக, அதைக் கொண்டாடுகிற சமூகமாக மாறியது?

பெண்கள் இன்று நம் சமூகத்தில் அடைந்திருக்கும் மரியாதை என்பது, அவர்கள் கல்வி கற்று, உத்தியோகங்களை நோக்கிச் சென்று, பெரும் பதவிகளை அலங்கரித்த பின்னர் வந்தது. பெண்களை வெறும் பிள்ளை பெறும் இயந்திரங்களாகப் பாவித்த இந்தச் சமூகத்தின் விதிகளுக்கு எதிராக, பெண்கள் கல்வி கற்க, பெண்கள் வாக்களிக்க, பெண்கள் வேலைக்கு செல்ல, பெண்கள் அரசியலில் நுழைய, பெண்கள் விமானிகளாகப் பறக்க, பெண்களுக்கும் சொத்தில் பங்கு எனும் நிலையை அடைய, யார் குரல் கொடுத்தார்கள், யார் போராடினார்கள், பெண் விடுதலையை யார் சாத்தியமாக்கினார்கள் என்பதைக் கொஞ்சம் சிந்தியுங்கள், தெரியவில்லை என்றால் வரலாற்றை எடுத்து வாசியுங்கள்.

நம்ம கருப்புக் கமலாவின் தாய், இந்த இழிவுகளில் இருந்து விடுவித்து, தன்னை இந்தக் கலாச்சாரத்தில் இருந்து அந்நியப்படுத்திக் கொண்டு, தன் மகள்களை ஒரு புதிய உலகத்திற்குத் தயார் செய்தார், அவர்களைப் பறக்க அனுமதித்தார், கருப்புக் கமலா, துணை ஜனாதிபதியாகிறாரா, அல்லது வருங்காலத்தில் ஜனாதிபதியாக கூட ஆகட்டும்! அவரை வாழ்த்துவோம்!

ஆனால், இந்தியாவில் ஜாதியை, தீண்டாமையை, பெண்ணடிமைத்தனத்தை இன்றளவும் இந்திய கலாச்சாரம் என்றும், இந்தக் கேடுகளை இந்தியா உலகத்திற்கு அளித்த கொடை! என்று பேசும் வாய்கள், கருப்புக் கமலாவைக் கொண்டாடுவது விந்தை, வேடிக்கை, பச்சோந்தித்தனம், அதிகாரத்தை நக்கிப் பிழைக்கத் துடிக்கும் வெறி என்பதை அம்பலப்படுத்திக் கொண்டேயிருப்போம்.

நமக்கு இருப்பது எல்லாம் எளிய கேள்விகளே, பகுத்தறிவைப் பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் இந்த கேள்விகள்  எழவே செய்யும், இந்த கேள்விகள் தான், இந்த நிலத்தை, நம்மைச்  சுயமரியாதையை நோக்கி  அழைத்துச் சென்றிருக்கிறது.

கமலா ஹாரிஸ்-அய் கொண்டாடும் தமிழ் பார்ப்பனர்களின் மனநிலை என்பது, அதிகாரத்தைச் சுவைக்கத் துடிக்கும் அல்லது அதை அடையத் துடிக்கும் ஒரு வெறியாகவே என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவில் மாட்டுக்கறியை உட்கொண்டால், வெட்டுவோம், அமெரிக்காவில் மாட்டுக்கறி உண்ணும் ஒருவரைக் கொண்டாடுவோம் என்பது ஒரு வெளிப்படையான ஏமாற்றுத் தந்திரம் என்பது மீண்டும் ஒருமுறை வெளிப்படுகிறது.

கமலா ஹாரிஸ் இந்தியா வந்தால், அவருக்கு மாட்டிறைச்சியையும், பன்றி இறைச்சியையும் சமைத்துப் போட்டு குல்லா போடும் இந்தக் கூட்டம், அதிகாரத்திற்காக - அதிகாரத்தை அடைய எதையும் செய்யும்.

அமெரிக்க ஜனாதிபதியை கொண்டாடும் இந்தியர்கள், அவர் கமலா ஹாரிஸைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை வாசித்து விட்டு, அவருக்கும் (ட்ரம்புக்கு) பதிலளிக்க வேண்டும்.

கமலா ஹாரிஸ் இன்று அமெரிக்க தேர்தலில் முன்னிறுத்தப்பட்டுள்ளது அவரது இந்திய வம்சாவளியைக் கொண்டாட அல்ல! மாறாக, அவரது கருப்பின வம்சாவளியை வைத்து BLACK LIVES MATTER மனநிலையை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளவே என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சோனியாவை இந்தியர் அல்ல என்று பழித்த அதே கூட்டம், இன்று கமலா ஹாரிஸை கொண்டாடுவதில், அவர்களின் போலியான இரு முகங்கள் வெளிச்சமாகிறது.

சோனியா, எந்த வகையில் இந்தியர் அல்லர் அல்லது கமலா ஹாரிஸ், எந்த வகையில் இந்திய வம்சாவளி என்பதை இந்த மூடர் கூட்டம் நமக்கு பதிலளிக்க வேண்டும்?

குறிப்பு 1: கருப்புக் கமலா உங்கள் பழக்க, வழக்கப்படி ஜமைக்காவை சேர்ந்தவராகத்தானே இருக்க வேண்டும், ஜமைக்கா அவரைக் கொண்டாடி வருவதை நீங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கிவிட கூடாது என்பதை மட்டும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பு 2: கமலாவின் தாயை ஆணவக் கொலை செய்ய அடியாளாக செல்லத் துடிக்கும் மனநிலையில் உள்ள சாதிவெறியர்களும் கருப்பு கமலாவைக் கொண்டாட இயலாது.