ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கருப்பினப் போராளி - மனிதநேயர் வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு நமது வாழ்த்துகள்!
August 16, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

 அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரான கருப்பினப் போராளி - மனிதநேயர் கமலா ஹாரிசுக்கு நமது வாழ்த்துகள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

அமெரிக்காவில் வரும் நவம்பரில் நடை பெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் (‘பிடான்' என்று குறிப்பிடுவது சரியல்ல) அக் கட்சியின் செனட்டராக (மேலவையின் உறுப் பினர்) உள்ள கமலா ஹாரிஸ் அவர்களை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.

வாழ்நாள் முழுவதும்

கருப்பின போராளியாக...

ஜெரால்டின் ஃபெராரோ மற்றும் சாரா பாலின் ஆகியோருக்குப் பிறகு, இவர் ஒரு பெரிய கட்சியின் மூன்றாவது பெண் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ஆவார்.

அதைவிட முக்கியம் அவர் வாழ்நாள் முழு வதும் கருப்பினப் போராளியாகவே சரியாகத் தயாரிக்கப்பட்டு களத்தில் நிற்கும் ஒருவராவார்!

இந்தச் செய்தி வந்தது முதல் அமெரிக் காவிலும், இந்தியாவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும், ஊடகங்களில் அவரது குடும்பம், ஊர், பெற்றோர், தாய் - தந்தை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால், மகிழ்ச்சி அடைவது இயல்புதான் என்றாலும், சில உண்மைகள் மக்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.

கமலா ஹாரிஸ் அவர்களின் தாய் சென் னையைச் சேர்ந்த ஒருவரின் மகள்; அவர் வெளிநாடு சென்று - கடல் கடந்த நிலையிலேயே அவர் சனாதன தர்மத்தை மீறியவராக, தனது பெண்களை நன்கு படிக்க வைத்தார்; அந்த அம்மையார் (கமலா அவர்களின் தாயார்) மிகச் சிறந்த ஆய்வாளராக - மருத்துவ விஞ்ஞானம் பயின்று, கருப்பின மக்களின் போராட்டங்களில் பங்கேற்று, அவர்களின் உரிமைகளுக்காக வாதாடி, தன் இரண்டு மகள்களையும் அதே உணர்வுடன் வளர்த்தவர், ஆளாக்கியவர். கமலாவின் தாய் ஜமைக்காவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டவர்.

தனது தாயார், தன்னை ஓக்லாந்தின் கருப்பினக் கலாச்சாரத்தின்படியே வளர்த்தார் என்று கமலா ஹாரிஸ் ஒரு பேட்டியில் கூறியதோடு, தான் இந்த அளவுக்கு வளர்ந்து ஆளாகியுள்ளமைக்கு  தனது அன்னையாரின் பயிற்சியும், பங்களிப்புமே  காரணம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

‘‘எனது தாய் இரு கருப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்துகொண்டே எங்களை வளர்த்தார்'' என தனது சுயசரிதையான ‘தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்'  (‘The Truth we hold') என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஓர் அமெரிக்கன்

‘‘நாங்கள் வாழச் சென்ற இடம் என்னையும், எனது சகோதரியையும் கருப்பினப் பெண் களாகத் தான் பார்க்கும்; எனவே, நாங்கள் தன்னம்பிக்கை கொண்ட கருப்பினப் பெண் களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்'' என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டி ருந்தார்.

தனது அடையாளம் குறித்து தனக்கு எந்த ஓர் அசவுகரியமும் இதுவரை ஏற்படவில்லை என்றும், எளிமையாகச் சொல்லவேண்டுமானால் நான் ஒரு அமெரிக்கன் என்றும், கமலா ஹாரிஸ் குறிப்பிடுகிறார்.

அவரது உணவுப் பழக்கம் தொடங்கி வாழ்வின் பல அம்சங்களும் குடியேறி உரிமை பெற்றுப் படித்து, பதவி பெற்று அமெரிக்க நாட்டின் பண்புகளை வரித்துக் கொண்ட ஓர் உரிமைப் போராளியாகவே காட்சி அளிக்கிறார்! அவர் ஓர் உயர்ஜாதி - பார்ப்பனர் என்று பெருமையுடன் கூறும் சில ஜாதிய உணர் வாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி:

ஜாதி உணர்வுக்கு இடமின்றி, மனித குல மாண்புடன் அங்கே சென்று வாழ்வதினால்தான் அவர் இவ்வளவு சிறந்த மனித உரிமைப் போராளியாகவும் - குறிப்பாக கருப்பின போராளியாகவும், மனித உரிமைகளுக்கும், மானுடம் போற்றும் சமத்துவ விழுமிய பாது காப்புகளுக்காகவுமான ஒருவர் ஜனநாயகக் கட்சி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது Black Lives Matter என்ற இயக்கம் தோன்றி, உரிமை முழக்கம் எழுப்பும் இக்கால கட்டத்தில், காலத்தின் கட்டாயமாகவே தோன்றுகிறது!

நிற வெறியும்,

பாலின வேற்றுமையும் ஒழிந்த

ஒரு புதிய சமுதாயம்!

முற்றுமாக, நிற வெறியும், பாலின வேற்றுமையும் ஒழிந்த ஒரு புதிய சமுதாயம் அங்கே பூத்துக் குலுங்க இது ஒரு புதிய பூபாளம் ஆகும்!

வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

16.8.2020