ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கம்யூனிஸ்ட் கட்சி நடத்தவிருக்கும் 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகமும் பங்கேற்கும்!
July 19, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ‘‘விபச்சார விடுதி'' என்று பதிவிடுவதா?

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  சென்னை யில் உள்ள தமிழ்நாடு கட்சித் தலைமை அலுவலகத்தின் படத்தினை வெளியிட்டு, ‘‘விபச்சார விடுதி'' என்று  முகநூலில் பதிவிட்டிருக்கும் காலிகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 22 ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் நாட்டின் பொது ஒழுக்கத்தையும், நன்னெறிகளையும்  கருத்தில் கொண்டு திராவிடர் கழகம் பங்கேற்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

இதன் விவரம் வருமாறு:

குஜிலியம்பாறை ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் நடத்திவந்த முகநூல் பக்கம் “கம்யூனிசம் வென்றே தீரும்... மார்க்சிய வழியில்...” என்பதாகும். இதில் மெல்ல மெல்ல புகுந்துவந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர் தங்கள் காவி, கழிசடைப் பதிவுகளை அந்தக் குழுவில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளனர். இந்தப் பிரச்சினை கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்துள்ளது. அதில் தான் பாலன் இல்லம் படத்தைப் போட்டு, அதை விபச்சார விடுதி என்று பதிவிட்டும், இடதுசாரி சிந்தனையாளரும், பெண்ணுரிமைச் செயல் பாட்டாளருமான தோழர் ஒருவரின் படத்தைப் போட்டு, அவதூறாகவும் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து தோழர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம், (பாலன் இல்லம்) சென்னை மாநகர், தியாகராயர் நகரில் உள்ள செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் அய்ம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது. 8 அடுக்கு மாடி கொண்ட கட்சி அலுவலகத்தின் பெயர்ப் பலகை உள்ளிட்ட புகைப் படத்தை முகநூலில் பதிவு செய்து, அதன் தலைப்பில் “விபச்சார விடுதி” என்று ஆபாச வார்த்தையை

விஸ்வா.எஸ் என்பவர் பதிவு செய்துள்ளார். இதனால் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் ஆத்திரமூட்டப்பட்டு உள்ளனர். இத்துடன் பெண் உரிமை செயல்பாட்டாளர் ஒருவர் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தவறான நோக்கத்துடன் வெளியிட்டுள்ளார்.

இந்த மோசமான குற்றச்செயல் ஒருவரால் மட்டும் செய்யப்படக் கூடியது அல்ல. மதவெறி, ஜாதி வெறி மூலம் சமூக அமைதியை சீர்குலைக்கும் சதிகாரக் கும்பல் இதுபோன்ற குற்றச் செயல்களை திட்டமிட்டுச் செய்து வருவதாக அறிகிறோம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 95 ஆண்டுகளாக நாட்டின் விடுதலைக்கும், பின்னர் நாட்டின் பாதுகாப் பிற்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் அரசமைப்புச் சட்ட எண்ணத்தில் நின்று செயல்பட்டு வருகின்ற கட்சி ஆகும். இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக் கப்பட்டுள்ள மூத்த அரசியல் கட்சி ஆகும்.

22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

கட்சியின் அரசியல் கொள்கை வழி செயல்பாட்டை சகித்துக் கொள்ள முடியாத வெறுப்பு அரசியலை பரப்பி வருகிற சட்டவிரோத சமூக விரோதக் கும்பல்களால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது மரியாதையை சீர்குலைக்கும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. மாநில தலைமை அலுவலகத்தை அவதூறு பரப் புரைக்காக பயன்படுத்திய குற்றவாளி குறித்து சென்னை பெருமாநகர காவல்துறை ஆணையர் அவர்களிடம் 17.07.2020 அன்று புகார் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்யவும், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும் 22.07.2020 புதன் கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்று தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.

கட்சி உறுப்பினர்களும், அமைப்புகளும் தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்து முகக்கவசம் அணிந்து ஊரடங்கு உத்தரவுகளை அனுசரித்து ஆங்காங்கு கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.

சமூக விரோத சக்திகளுக்கு எதிராக நடைபெறும் ஜனநாயக போராட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்று ஆதரிக்குமாறு அறைகூவி அழைக்கிறது.

- இவ்வாறு தோழர் முத்தரசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

திராவிடர் கழகம் அறிவிப்பு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள தகவலும், நடப்புகளும் அதிர்ச்சிக்குரியன.

ஆட்சி அதிகாரம் தங்களுக்கு அரவணைப்பாக இருக்கும் ஒரே காரணத்தால், எந்த எல்லைக்கும் சென்று வெறியாட்டம் போடலாம், கொச்சைப்படுத்தலாம் என்ற போக்கில் மதவாத சக்திகள்  கண்மூடித்தனமாக ஈடுபட்டு வருகின்றன என்பதற்கு தோழர் முத்தரசன் அவர்களின் அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ள நிகழ்வும், அதற்கு எதிரான போராட்டமும், அறிவிப்புமே சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.

ஏன் இதுவரை

கைது செய்யவில்லை?

இதுகுறித்து 17 ஆம் தேதி புகார் கொடுக்கப்பட்டதற்கு காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பின்னணி என்ன? இந்தப் போக்கு நீடித்தால் நாடே ஒழுங்கு மீறல் என்ற போக்கைச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதா?

மாநில அரசு, மத்திய அரசின்  கண்ஜாடைக்குக் காத்திருப்பதுபோல பல விடயங்களிலும் செயல்பட்டு வருவது நல்ல அறிகுறியல்ல! சட்டமும், விதிமுறைகளும் எல்லோருக்கும் பொதுவானது என்பது நினைவில் இருக்கட்டும்.

ஆர்ப்பாட்டத்தில்

திராவிடர் கழகமும் பங்கேற்கும்

தோழர் முத்தரசன் அவர்கள் அறிக்கை - போராட்டம் என்பது கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் சார்ந்ததல்ல - பொது ஒழுக்கத்தை, நியதியை விரும்பும் அனை வருக்குமான போராட்டமாக இதனைக் கருதவேண்டும்.

இந்தப் போராட்டத்தை திராவிடர் கழகம் வரவேற்கிறது. 22 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில், அவர்கள் எந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களோ அங்கெல் லாம் ஊரடங்கு உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியுடன் அறவழிபட்டு ஈடுபடுமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

 

கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

19.7.2020