ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஓமன் பன்னாட்டு திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
July 18, 2020 • Viduthalai • கழகம்

காணொலி மூலம் தமிழர் தலைவர் கருத்துரை

"நான் மானமிகு சுயமரியாதைக்காரன்!" - கலைஞர்

* கலி. பூங்குன்றன்

ஓமன் - பன்னாட்டு திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் 97ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் காணொலி மூலம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்

30 மணித்துளிகள் கருத்துரை வழங்கினார்.

I.  அந்த இளமை!

கலைஞர் என்று சொல்லும் பொழுது அவர் பல்திறன் கொள்கலன்! பேச்சாளர், எழுத்தாளர் - எழுத்தாளர் என்கிற போது கதை, புதினம், கவிதை, நாடகம், திரைத் துறையில் கதை வசனம், பாடல்கள், கட்சித் தலைவர், அய்ந்து முறை முதல் அமைச்சர் என்ற இத்தகையச் சிறப்புகளையும் ஆற்றலையும் ஒரு சேரக் குவிந்த பன்முகத் தன்மை கொண்ட கொள்கலன் என்று தமிழர் தலைவர் தொடக்கத்திலேயே அடையாளப் படுத்தினார். இந்தச் சாதனையை இன்னொரு வராலும் முறியடிக்கவே முடியாது.

அதே  நேரத்தில் தந்தை பெரியார் குருகுலத்து மாண வராக பொது வாழ்வை தனது 14 வயதில் தொடங்கிய கலைஞர் அவர்கள் இந்த இயக்கத்தில் சேர்ந்தால் பதவி கிடைக்கும் - பவிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காலடி எடுத்து வைத்தவர் அல்லர்.

1938இல் பள்ளி மாணவராக இந்தியை எதிர்த்து ‘ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்! நீ நாடிவந்த நாடல்லவே!’ என்ற எக்காளமிட்டு தமிழ்க் கொடியை ஏந்திய இளந்தோள் அவருடையது என்று குறிப்பிட்ட கழகத் தலைவர் - மாணவர் பருவத்தில் இயக்கப் பணி பிரச்சாரம் எந்த அளவில் இருந்தது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்கினார்.(கலைஞரும் தானும் பயணம் செய்த அந்த நிகழ்வினை விளக்கினார்)

1946ஆம் ஆண்டில் திருத்துறைப்பூண்டிக்கு அருகே சங்கந்தி என்ற ஊரில் பொதுக்கூட்டம் முடிந்து இரவு தங்கியது ஒரு கழகத் தோழர் வீட்டுத் திண்ணையில்; இயக்கத் தோழர் களின் திண்ணைகளும், முடி திருத்தும் நிலையங்களும்தான் எங்களின் முசாபரி பங்களா, பயணியர் விடுதி; சொகுசு ஓட்டல்கள் அல்ல என்ப தையும் நினைவூட்டினார்.

சங்கந்தி பொதுக்கூட்டம் முடிந்து ஒரு தோழர் வீட்டின் திண்ணையில் உறங்கச்சென்றோம். கொசுக்கடி தாங்க முடியவில்லை. கலைஞர் சொன்னார் - நாம் இரவு முழுவதும் தூங்க முடியாது. இரவே திருத்துறைப்பூண்டி புறப்பட்டு விடலாம் என்றார். எதில் பயணிப்பது? கார் போன்ற வாகனம் நமக்கேது அந்தக் காலகட்டத்தில்? ஒரு கட்டை வண்டி கூண்டு கிடையாது. சுற்றிலும் முளைக்குச்சிகள்!

புறப்பட்டோம் அந்தக் கட்டை வண்டியில்; திருத் துறைப் பூண்டி நகருக்கு வருவதற்கு 10மைலுக்கு முன் ஒரு இஸ்லாமிய தோழரின் வீட்டுத் திண்ணையில் விடியற்காலை சென்று படுத்தோம் என்று ஆசிரியர் தங்கள் அனுபவத்தைச் சொன்ன போது காணொலியில் கலந்து கொண்டவர்களுக்கு இப்படிக் கூடவா என்று ஆச்சரியப்பட்டிருப்பர் என்பதில் அய்யமில்லை.

II. கட்சித் தலைமை-ஆட்சித் தலைமை

கலைஞர் அவர்கள் கட்சித் தலைமை ஆட்சித் தலைமையை பெறுவதற்கு அவர் கடந்து வந்த பாதை எளிதானதல்ல - எவ்வளவோ இடர்ப்பாடுகள் - உழைப்பு - போராட்டம் சிறைச்சாலை என்று பல கட்டங்களை, காட்டாறுகளைத் தாண்டி வந்திருக்கிறார்.

அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில் முதலில் அவர் சந்தித்தது தனது  ஆசான் தந்தை பெரியாரைத் தான்! சென்னையிலிருந்து திருச்சி சென்று தந்தை பெரியாரை தனயன் தம் தோழர்களுடன் (கலைஞர் உட்பட) சந்தித்தார்.

‘அய்யா, நீங்கள் எங்களை வழி நடத்த வேண்டும்!’ என்று வாஞ்சையுடன்  கேட்டு கொண்டார். குறைந்த காலமே அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் ஏற்க நேர்ந்திருந்தாலும், மூன்று முக்கிய முத்திரைகளைப் பதித்துச் சென்றார்.

1) தாய் நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்!

2) சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட வடிவம்.

3) இந்திக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை. இருமொழிக் கொள்கையே!

(தமிழும், ஆங்கிலமும்தான் என்று ஒருமனதாக சட்டம் செவித்தார்).

அறிஞர் அண்ணா எதிர்பாராதவிதமாக நம்மைவிட்டு மறைந்தார்.

அடுத்த முதல் அமைச்சர் யார்? அண்ணாவுக்கு அடுத்த படியாக நாவலர்தான் இருந்தார். அண்ணா மறைந்த நிலையில் கூட தற்காலிக முதல் அமைச்சர் பொறுப்பை நாவலர் தான் ஏற்றார். ஆனாலும், அண்ணா மறைந்த நிலையில் கட்சிக்குள் பிரச்சினை ஏற்படத்தான் செய்தது. நாவலரா - கலைஞரா என்ற பிரச்சினை வந்தது.

அப்பொழுது தந்தை பெரியார் சென்னை அடை யாறில் எங்கள் வீட்டில்தான் கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கி இருந்தார். இந்த நேரம் தான் இங்கு இருப்பது அவசியம் என்று கருதினார். பிரச்சினைகளை உன்னிப் பாகக் கவனித்துக் கொண்டிருந்த தந்தை பெரியார் என்னை அழைத்தார்.

“கலைஞரிடம் நான் சொன்னதாக சொல்லுங்கள். இந்த சூழ்நிலையில் முதல் அமைச்சர் பொறுப்பினை கலைஞர்தான் ஏற்க வேண்டும் அதுதான் எனது முடிவு” என்று சொல்லிவிட்டு வரச் சொன்னார்.

அய்யாவின் கட்டளையை ஏற்று, கோபாலபுரத்தில் வீட்டில் இருந்த கலைஞரைச் சந்தித்து, அய்யா சொன்ன கட்டளையை எடுத்துச் சொன்னேன். அவருக்கோ ஒரு வகையில் அதிர்ச்சி. ஆனாலும் சொன்னவர் - ஏன் கட்டளையிட்டவர் பெரியார் ஆயிற்றே! சிற்சில நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தன.  இறுதியில் தந்தை பெரியார் நினைத்ததே நடந்தது. முதல் அமைச்சர் பொறுப்பைக் கலைஞர் ஏற்றார். பிறகு கட்சியின் தலைமைப் பொறுப் பையும் ஏற்றார். நாவலர் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். தந்தை பெரியாரின் கவலை எல்லாம் திமுக கெட்டி யான பூட்டுதான். ஆனால் யாரும் கள்ளச் சாவி போட்டு விடக் கூடாதே என்று கவலையுடன் சொன்னார். அந்த வகை யில்தான் தந்தை பெரியார் திமுகவுக்குள் நடந்த பிரச்சினையை அணுகினார்.

III.  ஆட்சியின் சாதனைகள்

அய்ந்து முறை முதல் அமைச்சராக இருந்து சாதனைப் படைத்தவர் கலைஞர்.

அவர்தம் ஆட்சியின் சாதனைகள் முத்தாய்ப் பானவை. திராவிட இயக்கத்தின் கொள்கையில் முதன் மையானது ஜாதி ஒழிப்பே! அண்ணா அவர்கள்முதல் அமைச்சராக இருந்தபோது, ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கினார்.

அந்த ஜாதி ஒழிப்புத் திசையில், தந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதாகும். அப்போது கலைஞர் முதல் அமைச்சர்; போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார்.

அப்பொழுது தந்தை பெரியார் சொன்னார். நான் ஒரு சமூக போராளி - நான் போராட்டம் நடத்துகிறேன் - நீங்கள் முதல் அமைச்சர் - சட்டப்படி நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யுங்கள் - என்னைக் கைது செய்யுங்கள் - சிறை யிலும் அடையுங்கள் என்றார்.

முதல் அமைச்சர் கலைஞர் அதிர்ந்தார். ‘உங்களைக் கைது செய்வதற்கா நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம்?’ நீங்கள் விரும்பியபடி அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை நிறைவேற்றித் தருவோம் என்று உறுதி அளித்தபடி, மூன்று முறை சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார். அதன்படி  இப்பொழுது இரு கோயில்களில் அர்ச்சகர் நியமனம் நடந்திருக் கிறது.

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை ஏற்று, கலைஞர் ஆற்றிய சாதனையில் இது குறிப்பிடத் தகுந்ததாகும். (அதுபோலவே பெரியார் நினைவு சமத்துவபுரம் எல்லா ஜாதியினரும் ஒரே வளாகத்தில் பேதங்களுக்கு இடமின்றி சமத்துவமாக வாழ வழி வகுத்தார்)

திராவிட இயக்கத்தின் விழுமிய கொள்கைகளுள் ஒன்று பெண்ணுரிமையாகும்.1929ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் - பெண்களுக்குச் சொத்துரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தன் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றிக் கொடுத்தவர் கலைஞர் அவர்கள் (1989). இதற்கிடையே அண்ணல் அம்பேத்கர் மத்திய சட்ட அமைச்சராகவிருந்தபோது ‘இந்து கோட்பில்’ என்ற இந்து சீர்திருத்த சட்டத்தைக் கொண்டு வந்தார். அதன்படி பெண்களுக்குச் சொத்துரிமைக்கு வழி செய்யப்பட்டது. இது நடைபெற்றது 1952களில்.

ஆனால், சனாதனிகள் கடுமையாக எதிர்த்தனர். குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள் எதிர்த்த நிலையில், அந்த சட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில், Ôஎனக்குக் கொள்கைதான் முக்கியம் - பதவியல்ல!Õ என்று கூறி சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து வெளியில் வந்தவர் அந்த இலட்சிய வீரர் அண்ணல் அம்பேத்கர். அன்று மத்திய அரசால் செய்ய முடியாததை தனது ஆட்சியில் சாதித்துக் காட்டினார் கலைஞர். அது போலவே திமுக அங்கம் வகித்த மத்திய ஆட்சியில் 2005இல் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கலைஞர் அவர்கள் தம் ஆட்சியில், இந்தியை எந்த நிலை யிலும் திணிக்கவோ, நுழைய விடவோ அனுமதிக்கவில்லை. இதில் திராவிட இயக்கத்தின் பார்வை என்பது - இந்தி எதிர்ப்பு ஒரு மொழி போராட்டமல்ல, மாறாக ஒரு கலாச்சார எதிர்ப்பு போராட்டம் என்பதாகும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சாதனையில் முத்தாய்ப்பான ஒன்று- தமிழுக்கு செம்மொழி தகுதியைச் சட்ட ரீதியாக பெற்றுக் கொடுத்ததாகும்.

மாநில உரிமையில் எப்பொழுதும் உறுதியாக இருந்தார் அவர்.

ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்!

வன்முறை தவிர்த்து வறுமையை ஒழிப்போம்! 

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

மத்தியில் கூட்டாட்சி!

மாநிலத்தில் சுயாட்சி!

என்ற முழக்கங்களில் உறுதியாக இருந்தவர்.

இன்று ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15ஆம் தேதி ஒவ் வொரு மாநில முதல் அமைச்சரும் தேசியக் கொடியை ஏற்று கிறார்கள் என்றால், அதற்குக் காரணமான உரிமையை வாங்கிக்கொடுத்தவர் கலைஞரே!

அந்தக் கொடி உயரே பறக்கிறது என்றால், ‘கலைஞர் வாழ்க! வாழ்க!!’ என்று சொல்லிக் கொண்டு பறப்பதாகப் பொருள்!

உங்களைப் பற்றி ஒரு வரியில்  சொல்லுங்கள் என்று பத்திரி கையாளர் கேட்டபோது - “மானமிகு சுயமரியாதைக்காரன்!” என்றார் மானமிகு கலைஞர்.

IV.  இதுதான் திராவிடர் இயக்கம்

திராவிடர் இயக்கம் என்பது ஆயிரங் காலத்துப்பயிர் - இந்நாட்டு மக்களுக்கு விடியலைத் தந்த இயக்கம். இதனை எந்தக் கொம்பனாலும் வீழ்த்த முடியாது.

தந்தை பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர் அறிஞர் அண்ணா அண்ணா, அண்ணாவால் அடை யாளம் காட்டப் பட்டவர் கலைஞர். கலைஞரால் அடையாளம் காட்டப்பட்டவர் தளபதி ஸ்டாலின்.

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்றார் வள்ளுவர்; கலை ஞரின் உழைப்பை வரித்துக் கொண் டவர் தளபதி ஸ்டாலின். தந்தை மகன் என்ற உறவில் அல்ல - தலைவர் தொண்டர் என்ற அடிப்படையில். இவர் தலைமையில் புதிய தமிழகம்  உருவாகும் என்பதில் அய்யமில்லை!

கலைஞர் படைக்க விரும்பிய - தந்தை பெரியார் காண விரும்பிய சமூகத்தைப் படைப்போம் - அவருக்குப் பிறந்த நாள் விழா எடுக்கும் இந்த நாளில் அத்தகைய உறுதியை ஏற்போம்.

கலைஞர் வாழ்க! வாழ்க!!

அவர் காண விரும்பிய சமுதாயம் வருக, வருக!

என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

V.  பகுத்தறிவும் இனநலமும்

நான் யார்?

கேள்வி: உங்களைப்பற்றி நீங்கள் ஒரு வரியில் சுயவிமர்சனம் செய்யுங்களேன். கலைஞர்

பதில் : மானமிகு சுயமரியாதைக்காரன்.

(குங்குமம் - 30.4.2006)

நான் பகுத்தறிவாளனே!

தீவிரப் பகுத்தறிவாளர் நீங்கள். ஆனால் ஏதோ ஒரு வகை யில் கடவுள், கடவுள் நம்பிக்கை குறித்த கேள்விகள் உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த முரண்பாட்டை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

நான் பகுத்தறிவாளன் என்ற நிலையில் எள்ளளவும் மாற்றமில்லை. மஞ்சள் துண்டு அணிவது கடவுள் நம்பிக்கை யினால் அல்ல என்பதையும்; அதற்கான காரணத்தையும் பல முறை விளக்கி இருக்கிறேன். ஒரு பகுத்தறிவாளனை அறிவியல் ரீதியான உண்மைகள் மட்டும் ஆட்கொள்ள முடியுமே தவிர, மூடநம்பிக்கைகள் எதுவும் துரத்திக் கொண்டிருக்க முடியாது. என்னைச் சேர்ந்த ஒரு சிலரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் கவலைப்படுவது கிடையாது. அவர்கள் தேவையான தெளிவில் லாத நிலையில் குழப்பத்தில் இருப்பதாகவே கருதிக்கொள்வேன். முதிர்ந்த பண்பாடு முரண்பாடாகி விடாது.

- (ராணி, 3.8.2008, பக்கம் - 6)

சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவன்!

சேகர் குப்தா: நீங்கள் உங்களது அறிக்கை ஒன்றில், ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்? என்று கேட்டிருக் கிறீர்களே?

கலைஞர்: அது என்ன ஒரு பெரிய கேள்வியா?

சேகர் குப்தா: இவ்விஷயத்தில் காங்கிரசில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. நீங்கள் தேவையற்ற அறிக்கை கொடுத் திருக்கிறீர்கள் என்று கருதுகிறார்கள். வால்மீகி ராமாயணத்தை மேற்கோள்காட்டி ராமர் குடித்தார் என்று கூறினீர்கள்...

கலைஞர்: ஆமாம். நான் வால்மீகி ராமாயணத்தைத் தருகிறேன். நீங்கள் தயவு செய்து அதைப் படித்துப் பாருங்கள். எங்களுக்கு அந்தத் திட்டம் (சேது சமுத்திரம்) வேண்டும்! நான் இப்பொழுது முதலமைச்சராக இருக்கி றேன். ஆனாலும், நான் ஒரு சுயமரியாதைக்காரன்! நாங்கள் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள்! பெரியாரின் மாணவர்கள்!

சேகர் குப்தா: நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?

கலைஞர்: ஆமாம். ஒரே ஒரு கடவுளை நம்புகிறேன்.

சேகர் குப்தா: எந்தக் கடவுளை நம்புகிறீர்கள்?

கலைஞர்: எனது மனசாட்சியை.

(என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் கலைஞர் அளித்த பேட்டியிலிருந்து)

எதில் அதிக விருப்பம்?

கேள்வி: அரசியல் தலைவர் கலைஞர். தமிழறிஞர் கலைஞர் இதில் எதை அதிகமாக விரும்பு கிறீர்கள்?

கலைஞர்: இந்த இரண்டையும்விட அய்யாவின் மாணவர் கலைஞர், அண்ணாவின் தம்பி கலைஞர் என்பதையே அதிகம் விரும்புகிறவன் நான்.             - (தினகரன் பேட்டி - 6.5.2006)

மகிழ்விப்பது எது?

2001ஆம் ஆண்டு நவம்பரில் ஆங்கில ஏடு சார்பில் ‘இந்துஸ் தான் டைம்சில்’ கலைஞரிடம் சிறப்புப் பேட்டி எடுத்தனர். அதில் கடைசியாகக் கேட்கப்பட்ட கேள்வி இது.

உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய இலட்சிய வெற்றி எதுவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

கலைஞரின் பதில் இது.

ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சுக் கேட்க வந்து குழுமியிருப் போர் அனைவரும் தமிழர்களாக இருக்கிறார்கள். ஆனால் கூட்டம் முடிந்து கலைந்து செல்லும்போது தனித்தனி ஜாதி களாகக் கலைந்து செல்கிறார்கள். அந்த நிலை மாறி, தமிழர்களாகவே கூட்டத்தில் அமர்ந்து எழுந்து செல்லும்போது தமிழர்களாகவே கலைந்து செல்லும் காலம் வந்தால் அதுதான் நான் எதிர்பார்க்கும் இலட்சிய வெற்றி என்பதாகும்.

மானமா? மகுடமா?

பதவியொரு முள்மாலை; இலக்கியப் பணி எனக்கு முல்லைச்சரம்.

பதவியொரு நெடும்பள்ளம்; பொதுப்பணி எனக்குப் பொதிகைக் குன்றம்.

மானமா? மகுடமா? எனக் கேட்டால் மானத்தை மட்டுமே மதிக்கும் மனிதன் நான்.

கிரீடமா? தலையா? எனக் கேட்டால் கிரீடமே போதுமென இளிக்கின்ற கிறுக்கனல்ல நான்.

அதனால்தான் உறவுக்குக் கைகொடுப்போம் என்றுரைத்துப் பதவி துறவுக்கும் தயாராகப் பத்தாண்டுக்கும்மேல் கழித்தவன் நான்.

பணிபுரியும் வாய்ப்புத்தான் பதவி.

பதவி, பவிசு, படாடோபம் எல்லாமே ஊதிய பலூனைப்போல் வெடித்துவிடும்; பண்பார்ந்த தொண்டொன்றே வானைப்போல் நிலைத்து நிற்கும்.

(தொலைக்காட்சியில் கலைஞர் அவர்கள் பாடிய கவிதையிலிருந்து ... 14.4.1990)

மானமிகு இல்லையேல்...

நான் தலைவனாக விளங்குகின்றேனோ இல்லையோ, இளமை தொட்டு தென்னையின் விழாத மட்டைகள் தரும் பயன்களையும், விழுந்த மட்டைகள் தரும் பயன்களையும், மறைந்த மட்டைகள் விட்டுச் சென்ற வடுக்களையும் கண்டு ணர்ந்து தொண்டுள்ளத்தைத் தொலைக்காமல் இருப்பவன். மானமிகு இல்லையேல், மாண்புமிகுக்கு மதிப்பில்லை என்று அறிந்தவன்.

- (முரசொலி - 15.9.2006)