ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒற்றைப் பத்தி - கே.சொக்கலிங்கம் அய்.ஏ.எஸ்.
August 13, 2020 • Viduthalai • மற்றவை

தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைச் செயலாளரும், முதலமைச்சர் அண்ணாவின் முதன்மைச் செயலாளருமான திரு.கே.சொக்கலிங்கம் அய்.ஏ.எஸ்., அவர்கள் சென்னை பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்ட (15.2.2001) ஒரு தகவல் முக்கியமானது - இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டியதும்கூட!

அரசுத் துறையில் பார்ப்பனர் அல்லாதாரை - பார்ப்பன அதிகாரிகள் எப்படி எல்லாம் மட்டம் தட்டுவதிலும், தலையெடுக்காமல் செய்வதிலும் கவனமாக இருந்தார்கள் என்பதை நீண்ட காலம் தமிழ்நாடு அரசுத் துறையில் பணியாற்றிய அனுபவமும், திறமையும் கொண்ட அவர் தெரிவித்த தகவலைப் படியுங்கள்!

‘‘எனக்கு ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்டில் செலக்க்ஷன் கிடைத்தது. 1946 ஆம் ஆண்டில் கோயம்புத்தூருக்குச் சென்று நான் பயிற்சியில் சேர்ந்தேன். அங்கு நஞ்சுண்டையா என்ற ஒரு ஹெட்கிளார்க் இருந்தார். இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அவர் ஒரு ‘பிராமணர்.' நான் அந்த பக்கம் அறையில் உள்ளேன். அவர் சொல்லுகிறார், நம்ம ஆபீசுக்கு நான்கு பேர் வந்திருக்கிறார்கள். நான்கு பேரும் ‘சூத்திரப் பசங்க' என்றார். இப்படி எல்லாம் நடந்த காலம் அது. ரொம்ப கஷ்டம்.

என்னுடைய பக்கத்து பங்களாவில் சிவசங்கரம் பிள்ளை என்பவர் கலெக்டராக இருந்தார் சேலத்தில். அவர் எனக்கு ஒரு ரிப்போர்ட் எழுதினார். Out Standing young Officer, Very promising  என்று எழுதினார். என்னுடைய கன்சர்வேட்டர் குப்புசாமி அய்யர் என்பவருக்கு அந்தத் தபால் போனது.

அவர் நினைத்திருந்தால், எதை வேண்டுமானாலும் எழுதியிருக்கலாம். கலெக்டர் சிவசங்கரம் பிள்ளை எழுதிய ரிப்போர்ட்டை குப்புசாமி அவர்கள் எடுத்துக் கொண்டு கலெக்டர் சிவசங்கரம் பிள்ளை அவர்களைப் பார்க்கப் போனார்.

கலெக்டரைப் பார்த்து குப்புசாமி அய்யர் கேட்கிறார். நீங்கள் எப்படி இந்த மாதிரி எழுதலாம்? He is very promising officer என்று எழுதியிருக்கிறீர்கள். அவரைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டார்.

கலெக்டர் சிவசங்கரம் பிள்ளை வெரி ஸ்ட்ராங் மேன். குப்புசாமி அய்யருடைய முகத்தைப் பார்த்து விட்டுக் கேட்டாராம். இதற்காகவா வந்திருக்கிறீர்கள் என்று. ஆமாம் என்று அவர் சொன்னாராம்.

You Get out first. முதலில் நீங்கள் வெளியே போங்கள் என்று கலெக்டர் சொன்னார்.

மறுநாள் இந்த சம்பவத்தை மாவட்டக் கலெக்டர் சிவசங்கரம் பிள்ளை அவர்கள் என்னிடம் சொன்னார்.

என்ன உங்களுடைய கன்சர்வேட்டர் ஒரு மாதிரியான ஆள் போலிருக்கிறதே. அவர் என்னிடம் பேசுவதற்கு இங்கே வருகிறாரே என்று சொன்னால், அந்த அளவுக்கு ஒரு வெறுப்பு உணர்ச்சியை நம்மீது பிராமணர்கள் காட்டினார்கள். மற்றவர்களை அடக்க வேண்டும். கீழே தள்ளி வைக்க வேண்டும் என்றொரு எண்ணம் இருந்த காலம். இவைகளை எல்லாம் மாற்றியவர் தந்தை பெரியார் அவர்கள்.

என்று திரு.கே.சொக்கலிங்கம் அய்.ஏ.எஸ். கூறியது கவனிக்கத்தக்கது.

- மயிலாடன்