ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒற்றைப் பத்தி - இராமனுக்குக் கடவுள் பிராமணன்!
August 6, 2020 • Viduthalai • மற்றவை

தசரதன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தான். அதற்கு முன்ன தாக இராமனுக்குச் சில உபதேசங் கள் செய்யுமாறு வசிட்டனாகிய அந் தணனிடம் வேண்டிக் கொண்டான். அவன் செய்யும் உபதேசங்களில் முதல் உபதேசமாவது:

“கரிய மாலினுங் கண்ணுத லானினும்

கை உரிய தாமரை மேலுறை வானினும்

பார் விரியும் பூதமொ ரைந்தினும் மெய்யினும் - பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால்”

(மந்தரை சூழ்ச்சிப் படலம்-7)

திருமாலைவிட, சிவனைவிட, நான்முகனை விட அய்ந்து பூதங் களை விட, சத்தியத்தை விட உயர்ந்தவர்களாம் அந்தணர்கள், என்னே கொடுமை!

கடவுள் அந்தணரைப் படைத் தாரா? அந்தணர்கள் கடவுளைப் படைத்தனரா? சிந்திக்கவும்.

திருவள்ளுவர் கூறிய

“அந்தணர் என்போர் அறவோர்   மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்”

என்னும் குறளின் பொருளை வைத்துப் பார்த்தாலும் ஈண்டுப் பொருந்தவில்லை. நீத்தார் கட வுளை விடப் பெரியராவரோ? அதனால் ஈண்டு அந்தணர் என்பது பார்ப்பனர்களையே குறித்து வருகிறது.

மேற்கண்ட இராமாயணப் பாடலுக்கு உரை எழுதிய வை.மு. கோபாலகிருட்டினமாசாரியார் விசேட உரையில்,

இவையனைத்திலும் உயர்ந் தோர் அந்தணர். எனவே, அவரை யின்றி உலகம் நின்று நிலவாதா தலின் உலகம் அளிக்கும் அரசர்க்கு அவரைப் பேணுதல் இன்றியமை யாதது என்றவாறு - என எழுதியுள்ளார்.

இந்த இடத்தில் இப்பாடலைப் பாடிய கம்பர் மீது நமக்கு வருத் தமில்லை. அக்கால அந்தணர்கள் எப்படி  இருந்தனர் என்பதைப் பாத்திரத்தின் மீது வைத்து நமக்குச் சுட்டிக் காட்டுகிறார்.

‘‘முதுமறை முதல்வன் முன்னர்த்    தோன்றிய

கடவுட் கணிகை காதலஞ் சிறுவர்

அருமறை முதல்வர் அந்தணர்     இருவரும்''

(மணிமேகலை - 13-94-96)

இவ்வடிகளுக்கு ந.மு.வே. நாட்டார் உரை காண்க.

இவன் இராமாயணத்தில் உயர்ந்த அந்தணனாக மாற்றப்படு கிறான். இராமனும் வசிட்டனுடைய உபதேசத்தைக் கேட்டு அவனைத் தெய்வமாக மதித்து வணங்குகிறான்.

மக்கள் குழுவை நான்கு வருணமாகப் பிரித்து, அதில் தங்களை உயர்ந்த வருணம் எனப் புராணங்களிலும், சாத்திரங்களிலும் எழுதி வைத்துக் கொண்டனர். இந்தப் புராணங்களுக்கும், சாத் திரங்களுக்கும் அரங்கேற்றம் வைத்தார்களா எனில், இல்லவே இல்லை. வைத்திருந்தால் இக்குற்றங் குறைகளைத் தட்டிக் கழித்திருப் பார்கள்.

திருமாலைவிடவும்,

கண்ணுதலான் சிவனை விடவும்,

நான்முகனான பிரம் மாவைவிடவும் பிராமணர் கள் உயர்ந்தவர்கள் என்று இராமனுக்கு வசிட்டன் உபதேசம் செய்கிறான்.

மறைந்த காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் கருத்தும் இதுதான்.

சென்னை நாரதகான சபாவில் தாம்பிராஸ் எனப்படும் தமிழ்நாடு பார்ப்பன சங்கத்தினர் சார்பில் நடத் தப்பட்ட ‘‘அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்'' நூல் வெளியீட்டு விழாவில் ஜெயேந்திர சரஸ்வதி என்ன பேசினார்?

‘‘எந்த ஆட்சியாக இருந்தாலும், அந்தணர் சொல்கின்றபடிதான் நடந் திருக்கிறது.  இராமர் ஆட்சி செய் தாலும், வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். நாயக்கர்களும் சரி, மராட் டிய மன்னர்களும் சரி அப்படித்தான் ஆட்சி செய்தனர்.

ஆண்டவன்கூட அப்புறம் தான் - அந்தணன்தான் முதலில்.''

‘நக்கீரன்', 15.11.2002

புரிகிறதா?

கடவுளுக்குமேல் பார்ப் பனர்கள்!

- மயிலாடன்