ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒரு பேட்டி: ஆர்.பி.எஸ். அளித்த பதில்கள்
October 11, 2020 • Viduthalai • கழகம்

வினா:  தாங்கள் முன்னின்று நடத்திய முக்கிய நிகழ்ச்சிகள், மாநாடுகள்.

விடை: 1955-இல் மன்னை வட்ட திராவிடர் கழக மாநாடு, அய்யா, ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர். 1958-இல் சுதந்திரத் தமிழ்நாடு மாநாடு. மன்னையில் தந்தை பெரியார், ஜி.டி.நாயுடு, சி.பா.ஆதித்தனார், குத்தூசி குருசாமி, நடிகவேள் எம்.ஆர்.இராதா முதலியோர் பங்கு கொண்டனர்.
1969-இல் மன்னார்குடியில் வட்ட சமுதாய சீர்திருத்த மாநாடு 1981-இல் குடந்தையில் மாவட்ட திராவிடர் கழக மாநாடு.

1982-இல் மன்னார்குடியில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா.
தஞ்சாவூரில் குடி அரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் கலந்து கொண்ட மாநாடுகள் (24.5.87, 25.5.87). மறுபடி யும் அதே தஞ்சாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாடு, சமூக  நீதி மாநாடுகள் (25.5.1990, 26.5.1990) (இம் மாநாட்டிலும் கியானி ஜெயில்சிங், உச்ச நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) ஓ.சின்னப்ப ரெட்டி, முதலமைச்சர் கலைஞர் முதலியோர் கலந்து கொண்டனர்.  இவையெல்லாம் நானாகத் தனிப்பட்ட முறையில் செய்தவையல்ல. கழகத் தோழர்களின் பெரும் ஒத்துழைப் போடுதான்! மன்னார்குடியைப் பொறுத்த வரையில் கழகத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு.  கே.ஆர்.ஜி. பால், பாப்பையா என்ற பாபு, உள்ளிக்கோட்டை பக்கிரிசாமி, க.நல்ல தம்பி போன்றோர் இயக்கத்திற்கு உழைத்தவர்கள். மன்னார்குடியில் நாகம்மையார் மன்றத்தைக் கட்டும் பணியை தந்தை பெரியார் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அக் கட்டடத் திறப்பு விழாவுக்கு தந்தை பெரியார், குன்றக்குடி அடிகளார், நடிகவேள் ராதா முதலி யோர் வந்தனர்.

அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று கோரி தந்தை பெரியார் அவர்கள் ஒரு போராட்டத்தை அறிவித்தார்கள். மன்னார்குடி ராஜகோபால் சாமி கோயில் கருவறைக்குள் நுழைவது என்று முடிவு செய்து, அதற் கான போராட்டக் குழுவுக்கு என்னைத் தலைவராகத் தந்தை பெரியார் நியமித்தார்கள்.

வினா: எந்தெந்த போராட்டங் களில் கலந்துகொண்டு இருக் கிறீர்கள்?

விடை:  அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட் டத்தைத் தவிர அனேகமாக அய்யா காலத்திலிருந்து ஆசிரியர் வீரமணி அவர்கள் காலம்வரை எல்லாப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு இருக்கின்றேன். 

வினா: உங்களைச் சுற்றிலும் இளைஞர்கள் எப்பொழுதும் மொய்த்துக்கொண்டு இருக் கிறார்களே-அதன் இரகசியம் என்ன ? 

விடை: பொதுச் செயலாளர் அவர்கள் இடும் கட்டளைகளை எங்களால் நிறைவேற்ற முடிகிறது என்றால் அதற்குக் காரணம் நம் இளைஞர்களே! அவர்களைத் தட்டிக் கொடுத்தால் காரியம் வெற்றிதான்! இந்த எளிமையான அணுகுமுறைதான் வெற்றியின் இரகசியம். இதைப் புரிந்து கொள்ளாமல் இளைஞர்கள் வருவது போட்டிக்கு என்று நினைத்தால் கெட்டது காரியம். இதில் நம் 'சுயநலமும்' இருக்கிறது. இளைஞர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் காரியம் முடிந்துவிடுகிறது. அதனால் ஏற்படும் பெருமையும் மாவட்ட தலைவருக்கு வருகிறது. இது பலபேர்களுக்குப் புரிவதில்லை .

வினா: நமது பொதுச்செயலாளர் அவர்களின் பணிகள் 

விடை: அடுத்தடுத்துப் போராட்டங்கள், நிகழ்ச் சிகள், மாநாடுகள், செயல்கள் என்று வேகமாகப் போய்க் கொண்டு இருக்கிறார். அவர் வேகத்துக்கு ஈடு கொடுப்பது என்பது எளிதானதல்ல. நாட்டில் அவ்வப்பொழுது ஏற்பட்டு வரும் நிகழ்ச்சிகளுக்கு ஈடு கொடுத்துதானே ஆகவேண்டும்; அதைத்தான் அவர் செய்து வருகிறார். தந்தை பெரியார் என்ற இமயமலை இருந்த இடத்தில் வேறு யார் இருந்து காரியமாற்றப் போகிறார்கள் என்று உலகமே நினைத்தது. நமது பொதுச் செயலாளர், அய்யாவிடம் பெற்ற பயிற்சியின் பலத்தால் செயல்பட்டு பெரியார் அவர்களுக்குப் பெருமை சேர்த்துவிட்டார். அப்படி ஒருவர் கிடைக்காமல் போயிருந்தால்... நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. 

வினா: கடைசியாகத் தாங்கள் சொல்ல விரும்புவது... 

விடை: இந்த இயக்கத்தில் எவ் வளவோ கஷ்ட நஷ்டங்கள் இருந் தாலும் ஒரு சரியான இயக்கத்தில் இருந்துவருகிறோம். நாட்டுக்குத் தேவையான தொண்டைச் செய்து வருகிறோம் என்று நினைக்கிறபொழுது மிகுந்த பெருமையாக இருக்கிறது. மனநிறைவும் கிடைக்கிறது. 

வினா: உங்கள் வீட்டில் உங்கள் பிள்ளைகள் இந்த இயக்கத்தில் தொடர்கிறார்களா?  

விடை: இங்கு வேறு கட்சிக்கும், கொள்கைக்கும் இடம் கிடையாது. எனது மகன் சித்தார்த்தன் நான் பெருமைப்படும் அளவிற்கு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவன். மகள்கள் இருவர் திருமணமாகி நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள்,

- தந்தை பெரியார் 114ஆம் ஆண்டு பிறந்த நாள்  விடுதலை மலரில் ஆர்.பி.எஸ். அளித்த பேட்டி: கண்டவர்: கலி. பூங்குன்றன்