ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒரு பூவைப் பறித்ததால் பூகம்பமா
August 28, 2020 • Viduthalai • தலையங்கம்

ஒரு பூவைப் பறித்ததால் பூகம்பமா?

ஒடிசா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உயர் ஜாதிக்காரர்களுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ஒரு பூவைப் பறித்ததால் 40 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் இரு மாதங்களாக ஒதுக்கி வைக்கப்பட்ட கொடுமை - இதுதான் சுதந்திர இந்தியாவா? சுதந்திரம் என்பது யாருக்காக? என்ற வினாவை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து ஏஎன்அய் நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:

ஒடிசா மாநிலம் தென்கனல் மாவட்டம் காண்டியோ கட்டேணி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் உயர்ஜாதியினருக்குச் சொந்தமான நிலத்திலிருந்து சூரியகாந்திப் பூவைப் பறித்தார். அதனால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 40 குடும்பத்தினர் ஊரைவிட்டு விலக்கி வைக்கப்பட்டனர்.

அதன்மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 40 குடும்பத் தினரில் எவரும் கிராமத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

அரசின் நியாயவிலைக்கடைகளில் பொருள்கள் வாங்குவதற்குத் தடை போடப்பட்டது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த ஆசிரியர்கள் வேறு பகுதிக்கு பணியிட மாற்றம் பெற்றுக்கொண்டு செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களாக அப்பெண்ணின் பெற்றோர் உயர்ஜாதி வகுப்பாரிடம் எவ்வளவோ கெஞ்சியும், மன்னிப்புக் கேட்டும், சமூக ஒதுக்கல் திரும்பப் பெறப்படவில்லை. தற்பொழுது காவல்நிலையத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

அக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவரான பிஜய் குமார் நாய்க் என்பவர் கூறுகையில், “சூரிய காந்திப்பூவைப் பறித்ததால், தாழ்த்தப்பட்ட வகுப்பினரான நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டோம்.  இதுகுறித்து காவல்நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு கட்டுப்பட்டு வரவில்லை.  சில நாள்களுக்குப்பின்பு மீண்டும் நாங்கள் புகார் கொடுத்தோம். அதன்பிறகு தற்பொழுது அதிகாரிகள் முன்னிலையில் தீர்வு காணப்பட்டுள்ளது” என்றார்.

உயர்ஜாதி வகுப்பைச்சேர்ந்த ஹர்மோன் மொகாலிக் என்பவர் கூறுகையில், “தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், எங்கள் சமூகத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட சிறிய பிரச்சினைதான் இது. அதிகாரிகள் முன்னிலையில் தீர்க்கப்பட்டுவிட்டது” என்றார்.

கிராமத் தலைவர் பிரணாபந்துதாஸ் கூறியதாவது, “இது நடந்து இரண்டு மாதங்களாகிறது. ஆனால், பிரச்சினை சமூக ரீதியில் திரும்பிவிட்டது. இன்று காவல்நிலையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் தீர்க்கப்பட்டுவிட்டது. இரு தரப்பிலும் கூடி முடிவு செய்தபடி, இதற்கு முன்பு எப்படி வாழ்ந்துகொண்டிருந்தோமோ அப்படியே தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

ஒரு பெண் ஒரு பூவைப் பறித்ததால் ஒரு சமூகமே தள்ளி வைக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?

காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டும் காவல்துறை விசாரனை நடத்தியும் உயர்ஜாதியினர் எந்த சமாதானத்திற்கும் ஒத்து வரவில்லை என்பது, அம்மாநிலத்தில் ஜாதி ஆணவக் கொடுமை எந்த உயரத்தில் பறக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டேயாகும்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் உயர்ஜாதிக்காரரிடம் மன்னிப்புக் கேட்டும், கெஞ்சிக் கூத்தாடியும், ஜாதி ஆணவத் திமிர் இறங்கி வரவில்லை.

சம்பந்தப்பட்ட பகுதியில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் வேறு பகுதிக்கு மாற்றப்பட நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பதெல்லாம் சாதாரணமானதுதானா?

உயர்ஜாதி சமூகத்தலைவரும், கிராமத் தலைவரும் 'இது ஒரு சிறிய பிரச்சினைதான்; அதிகாரிகள் தீர்த்து வைத்து விட்டனர்‘ என்று எவ்வளவு அலட்சியமாகக் கருத்துக் கூறுகிறார்கள்.

ஒரு பூவை ஒரு பெண் பறித்ததற்காக இரண்டு மாதக் காலமாக 40 குடும்பங்களை விலக்கி வைப்பது சின்ன பிரச்சினையா?

தீண்டாமை வன்கொடுமை ஒழிப்புச் சட்டம் என்று ஒன்று இருக்கிறதே - அதிலிருந்து ஒடிசா விலக்குப் பெற்றுள்ளதா?

காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் தீண்டாமையை அனுசரித்த உயர் ஜாதியினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

கட்டப் பஞ்சாயத்து நடத்துவதுதான் காவல்துறையின் வேலையா - கடமையா?

ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா? என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு இதுவரை விடையில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

குடியரசுத் தலைவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால், கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்ட 'பாரத புண்ணிய பூமியில்‘ நாம் எல்லோரும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் குடிமக்கள் என்ற அறிவு நாணயத்தோடு, பூரிப்போடு மார்தட்டிச் சொல்லப் போகிறோமா?

உ.பி. முதல் அமைச்சர் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு வரப்போகிறார் என்றவுடன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சோப்பும், வாசனைத் திரவியங்களும் அளிக்கப்படும் நாடு இது.

ராமன் கோயில் கட்டப்படும் மாநிலத்தின் முதல் அமைச்சர் வேறு எப்படி இருப்பார்? சம்பூகன் என்பவன் ஒரு சூத்திரன் என்பதால் வாளால் வெட்டிக் கொன்ற ராமனின் பெயரால் ராஜ்ஜியம் அமைப்போம் என்கிறார்கள். அப்படி அமைந்தால் நாடே ஒடிசாவாக மாறிவிடும் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சுதந்திர நாளில் குடியரசு, நாளில் கொடியேற்றி, மிட்டாய் வழங்குவது சுதந்திரமல்ல. பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் ஜாதி ஒழிப்புக்குப்பின் தேசியக் கொடி ஏற்றினால், அதற்குப் பெயர்தான் உண்மையான சுதந்திரம் ஆகும்.