ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒரு தியாகத் தீபத்தைப்பற்றி காணொலியில் தமிழர் தலைவர் வ.உ.சி.யும் - தந்தை பெரியாரும்
September 6, 2020 • Viduthalai • மற்றவை

* கலி. பூங்குன்றன்

கப்பலோட்டிய தமிழர் என்று அறியப்பட்ட வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி (1872) நேற்று  (5.9.2020) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் "வ.உ.சி.யும் - தந்தை பெரியாரும்" எனும் தலைப்பில் அரியதோர் உரையை ஆற்றினார். பார்வையாளர்கள் கழகத் தலைவர் உரையின் முடிவுக்குப் பிறகு தெரிவித்த கருத்துப் போல, ஏராளமான புதிய தகவல்களையும், தரவுகளையும் அடுக்கடுக்காக திராவிடர் கழகத் தலைவர் ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார். தந்தை பெரியாருக்கும், வ.உ.சி.க்கும் இருந்த நெருக்கத்தை, சகோதரப்பான்மையை விளக்கிக் கூறினார்.

வருவாய் தரும் வழக்குரைஞர் தகுதி, சொத்து, வசதி வாய்ப்புகள் எல்லாம் இருந்தும், கடைசிக் காலத்தில் வறுமைத்தேள் கொட்டப்பட்டு, எண்ணெய்க் கடை வைத்து வாழ்க்கையை நகர்த்தும் நிலைபற்றி உருக்கத் துடன் கூறினார்.

காஞ்சிபுரத்தில் நகராட்சியில் 1961ஆம் ஆண்டில் வ.உ.சி.யின் உருவப் படத்தைத் திறந்து வைத்து பேசுகையில், தந்தை பெரியார் உருக்கமுடன் கூறியதை, கழகத் தலைவர் படித்துக்காட்டிய போது கல் நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும் - தழுதழுக்க வைக்கும். சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைக்கு அவர் ஆளானதை மிகவும் உருக்கமுடன் கூறினார்.

வ..உ.சி.யின் தியாகத்தை, தன்னல மறுப்பை ஒப்பிடும்போது ராஜாஜி போன்றவர்களின் 'தியாகம்' என்பது எல்லாம் குறிப்பிடத்தக்கதாகவே  இருக்க முடியாது. ஆனாலும் ராஜாஜியால் கவர்னர் ஜெனரலாக முடிந்தது. கவர்னர் ஆக முடிந்தது.

வெள்ளையரை எதிர்த்துக் கப்பல் விட்ட வ.உ.சி.க்கோ 28 ஆண்டுகள் கடுஞ்சிறை. வக்கீல் தொழிலுக்கான சன்னத் ரத்து. விதேசியை எதிர்த்து சுதேசி! என்ற உணர்வுடன் தன் முழு வாழ்வையே அர்ப்பணித்த வ.உ.சி.க்குக் கிடைத்தது என்ன என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காங்கிரசு கட்சியை விட்டே வெளியேறிய ராஜாஜி (அப்பொழுது "ஆகஸ்டுத் துரோகி!" என்று தூற்றப்பட்டதுண்டு).

வெளியேறிய ராஜாஜிக்கு பதவிக்கு மேல் பதவி என்று போட்டியிட்டுக் கொண்டு வந்தன.

ஆனால் செக்கிழுத்த செம்மலுக்கோ - வெஞ்சிறையில் கொடுந் துயரங்களை அனுபவித்த வ.உ.சி.க்கோ கடைசிக் காலத்தில் சோற்றுக்குத் திண்டாடும் நிலை.

காரணம் என்ன? முன்னவர் தோளில் பூணூல், பின்னவர் தோளில் பூணூல் இல்லை என்பதுதானே என்று கழகத் தலைவர் கூறிய கருத்தை யாரே மறுக்கக் கூடும்?

தந்தை பெரியார், வ.உ.சி., திரு.வி.க., டாக்டர் வரதராஜூலு நாயுடு போன்றவர்கள் காங்கிரசில் இருந்து தொண்டாற்றிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது 1916-17இல் சென்னை மாநிலத்தில் நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்டு,  பார்ப்பனர் அல்லாதார் மத்தியில் பெருஞ் செல்வாக்குப் பெற்று வந்தது. அதைக் கண்டு மருண்ட காங்கிரஸ் பார்ப்பனர்கள் ஒரு தந்திரம் (அதுதானே அவர்கள் வழக்கம்) செய்தார்கள். காங்கிரசு கட்சிக்குள்ளேயே இரண்டு அமைப்புகளை உண்டாக் கினார்கள். நாங்களும், நீதிக்கட்சி கூறும் அந்த வகுப் புரிமையை ஆதரிக்கிறோம்! என்று சொன்னார்கள்.

தந்தை பெரியார் போன்றவர்கள் அதனை நம் பினார்கள். ஆனால் போகப் போக உண்மை புரிந்தது. நேஷனலிஸ்ட் அசோசியேஷன் என்ற அமைப்பின் தலைவர் விஜயராகவாச்சாரியார், செயலாளர் ராஜகோ பாலாச்சாரியார். துணைத் தலைவர் பதவிக்கு வ.உசி. அவர்களின் பெயர் முன் மொழியப்பட்டது. ராஜாஜிக்கு அது பிடிக்கவில்லை. தந்தை பெரியாரோ - வ.உ.சி. துணைத் தலைவர் என்பதில் உறுதியாக இருந்தார். பிரச்சினையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர்.

பெரியாரின் கை ஓங்கியிருந்த நிலையில் ராஜாஜி என்ன செய்தார்? அய்ந்து துணைத் தலைவர்கள்! என்று அறிவித்து, துணைத் தலைவர் என்ற பதவிக்கு மரியாதை இல்லாமல் ஆக்கி விட்டார்.

பார்ப்பனர்களின் புத்தியும், போக்கும் தந்தை பெரியார் அவர்களுக்கு அப்பொழுதுதான் புரிய ஆரம் பித்தது.

தந்தை பெரியார் காங்கிரசுக்குச் சென்ற அந்தத் தொடக்கக் கால கட்டத்திலேயே, பார்ப்பனர்களின் ஆதிக்க உணர்வைப் புரிந்து கொள்ளும் சம்பவங்கள் நடந்தன. (ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் வகுப்புரிமை தீர்மானத்தை தந்தை பெரியார் கொண்டு செல்லுவதும், எதையாவது சாக்குப் போக்குச் சொல்லி அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்து வந்ததும் - மேலும் பார்ப்பனர்கள் பற்றி தீர்க்கமாக உணரும் நிலை தந்தை பெரியார் அவர்களுக்கு நேரடி அனுபவத்தின் மூலமே திட்டவட்டமாகத் தெரிந்து விட்டது).

வ.உ.சி. டாக்டர் வரதராசலு நாயுடு, திரு.வி.க. போன்றவர்களும் உணர்ந்தனர்.

1927 நவம்பர் 5ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற சேலம் ஜில்லா மூன்றாவது அரசியல் மாநாட்டிற்குத் தலைமை வகிக்கும்படி வ.உ.சி.யைக் கேட்டுக் கொண்டனர்.

அவரது தலைமை உரை 52 பக்கங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அரிய இனவுணர்வு உரை! சமூகநீதி எக்காளம், தந்தை பெரியாரின் அருமையையும் உணர்த்தும் உரையாகும். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அந்தத் தலைமை உரையிலிருந்து குறிப்பிட்ட பகுதியைப் படித்துக் காட்டினார்.

பார்ப்பனர்களைப்பற்றி வ.உ.சி.

"பிராமணரல்லாதார்கள் ஆகிய தமிழர்களின் முன்னோர்கள் பிராமணர்களின் முன்னோர்களாகிய ஆரியர்களை "மிலேச்சர்" என்றும், யாகத்தின் பெயரால் கண்டவற்றையெல்லாம் தின்பவர்களென்றும், நினைத்த வற்றையெல்லாம் செய்பவர்களென்றும் சொல்லியும், நிகண்டு முதலிய நூல்களில் எழுதி வைத்தும், அவர் களைத் தொடாமலும், அவர்கள் தொட்ட பொருள்களைக் கொள்ளாமலும், அவர்களைத் தொட நேர்ந்தபோது குளித்தும், அவர்களை இழிவுபடுத்தி வந்தார்கள்.  அவ்விழிவை ஒழிப்பதற்கு வழி என்ன என்று அவ்வாரியர்கள் ஆலோசனை செய்தார்கள். உடனே தங்களைப் பிராமணர்கள் என்றும், மற்றைத் தமிழர்க ளெல்லாம் சூத்திரர்களென்றும், சொல்லவும் எழுதவும் தலைப்பட்டார்கள். அவ்வாறு தாங்கள் மேலான ஜாதியார் என்றும், தமிழர்களெல்லாம் கீழான ஜாதியார் களென்றும் நடத்தையிலும் காட்டினார்கள்."

"இராஜாங்க உத்தியோகங்களும் ஸ்தல ஸ்தாபன உத்தியோகங்களும், பொது ஸ்தாபன உத்தியோகங்களும் நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு ஜாதியாருக்கும் அந்தந்த ஜாதியாரின் எண்ணிக்கை விதிப்படி பகிர்ந்து கொடுக் கப்பட்டாலன்றி, நம் தேசத்தாருள் ஒற்றுமை உண்டாகப் போவதே இல்லையென்பதும், நமக்குள் ஒற்றுமை உண்டாக்காமல் நாம் உண்மையான சுய அரசாட்சி அமைக்கப் போவதே இல்லையென்பதும் மனித அறிவுடைய எவர்க்கும் தெளிவாக விளங்கத்தக்கவை. இவ்வுண்மைக்கு மாறாகப் பேசுகின்றவர் யாவராயினும் மனித அறிவில்லாதவர்.

தந்தை பெரியார் பற்றி....

"தாங்கள் மேலான ஜாதியார்கள் என்று கொண்ட கொள்கை அழியாதிருக்கும் பொருட்டுப் பிராமணர்கள் மற்றைய ஜாதியார்களுக்கு விதித்த அபராதத் தண்டனையை மாற்றிக் கொள்வதற்குரிய அதிகாரம் பிராமணரல்லாதார்கள் கையிலேயே இருக்கிறதைக் கண்டுபிடித்து நம் திருவாளர் ஈ.வெ.இராமசாமி நாயக்கரவர்கள் பிராமணரல்லாதார்களுக்குக் கூறி, அதனை உபயோகிக்கும்படி செய்து கொண்டு வரு கிறார்கள். அவ்வதிகாரத்தைப் பிராமணரல்லாதவர்கள் ஊக்கத்துடன் உறுதியாகச் செலுத்தித் தங்கள் அபராதத் தண்டனையை மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்"

(5.11.1927 சேலம் ஜில்லா மூன்றாவது அரசியல் மாநாட்டிற்கு தலைமை வகித்து கப்பலோட்டிய வீர தமிழர் வ.உ. சிதம்பரனார் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்).

தந்தை பெரியார் வெளியிட்ட சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய "ஞானசூரியன்" எனும் நூலுக்கு (பதிப்பு 1927) வ.உ.சி. அளித்த  அணிந்துரையில் பொதிந்த கருத்துக்கள் ஆரியப் பார்ப்பனர்களை எந்த அளவுக்கு வரலாற்று ரீதியாக ஆழமாக உணர்ந்தவர் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.

அந்த அணிந்துரையின் ஒரு பகுதியை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் காட்டினார்.

"பிராமணப் புரோகிதர்களும், பூசாரிகளும், பிராமணரல்லாதாருடைய பொருள்களைக் கவரு வதற்குத் தொன்று தொட்டுச் செய்து வரும் சூழ்ச்சி களையும், மோசங்களையும், கொலைகளையும், பிற பல தீய செயல்களையும் எடுத்துக் கூற வேண்டும்.

'இந்து சமயம்' என்பதன் பொய்களையும், புரட்டுக் களையும், ஆபாசங்களையும், அச்சமயப் பெயரால் செய்யப்படும் சடங்குகளின் வாயிலாகவும், பிராமண ரல்லாதார் தாழ்த்தப்படுவதையும், அக்கொள்ளைகளி னின்றும், தாழ்வினின்றும் பிராமணரல்லாதார் தப்புவதற்குரிய அவசியத்தையும், வழிகளையும் விளக்கிக் கூற வேண்டும்"

என்று எவ்வளவு அழுத்தந் திருத்தமாக, ஆழமாக வ.உ.சி. எழுதியிருக்கிறார்என்பதை எடுத்துக்காட்டினார் தலைவர் ஆசிரியர்.

திருக்குறளுக்கு உரை எழுதிய வ.உ.சி. அவர்கள் 'கடவுள் வாழ்த்து' என்ற பகுதி திருவள்ளுவரால் எழுதப்பட்டதல்ல - பிற் சேர்க்கை என்பது வ.உ.சி.யின் ஆய்வு என்ற தகவலும் ஆசிரியர் உரையில் முக்கியமானது.

நாகப்பட்டணத்தில் நடந்த  சுயமரியாதை இயக்க மாநாட்டில் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்த வ.உ.சி. அவர்கள் இந்தப் படத்தை காலை, மதியம், இரவு என்று மூன்று வேளையும் வணங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்றால், எந்த அளவுக்குத் தந்தை பெரியார்மீதும், அவரின் தொண்டின்மீதும் மதிப்பும், அக்கறையும், அவசியமும் கொண்டு இருந்தார் என்பதை விளங்கிக் கொள்ளலாம் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.

வ.உ.சி. வாழ்ந்த காலத்திலும்சரி, மறைந்த காலத்திலும் சரி, வ.உ.சி.யின்மீது பார்ப்பனர்களுக்கு இருந்த பகை உணர்வு மாறவேயில்லை.

ம.பொ.சிவஞானம் அவர்கள் வ.உ.சி.க்கு சிலை நிறுவ வேண்டும் என்ற ஒரு முயற்சியை எடுத்தபோது, சத்தியமூர்த்தி அய்யர் மிகக் கடுமையாக எதிர்த்ததை ம.பொ.சி.யே வேதனையுடன் குறிப்பிட்டதையும் ஆசிரியர் மேலும் ஒரு கூடுதல் தகவலைத் தெரிவித்தார்.

காங்கிரசில் தீவிரமாக இருந்த தந்தை பெரியார், வ.உ.சி., திரு.வி.க., டாக்டர் வரதராஜூலு நாயுடு ஆகியோர் காங்கிரசில் தொடர்ந்து நீடிக்கவில்லை என்ற கூடுதல் தகவலையும் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார்.

வ.உ.சி.யின் கடைசிக் காலம் வறுமையின் உச்சக் கட்டம். அந்த நேரத்தில் தந்தை பெரியாருக்கு ஒரு கடிதம் எழுதினார் (தனியே காண்க).

அந்தக் கடிதத்தை தந்தை பெரியார் உயிரோடு இருந்தவரை வெளியிடவில்லை. வரலாற்றுக் காரணத் துக்காகவும், வ.உ.சி.யின் நிலை எந்தஅளவுக்கு வாழ்வின் துயரத்தில் தள்ளப்பட்டார் என்ற உண்மை வெளியில் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் நாங்கள் வெளியிட்டோம் என்றார் கழகத் தலைவர்.

கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு அன்னை நாகம்மையாருடன் சென்ற தந்தை பெரியார் வ..உ.சி.க்குத் தம் சொந்த செலவில் டிக்கெட்  எடுத்துக் கொடுத்து  அழைத்துச் சென்றது என்பதெல்லாம், தந்தை பெரியாருக்கும், வ.உ.சி.க்கும் இருந்த நெருக்கத்தையும், நிலையையும் எடுத்துக்காட்டுவதாகும்.

பார்ப்பனர் அல்லாதார் - பூணூல் அணியாதவர்  என்ற ஒரே காரணத்தால் ஒரு மாபெரும் கல்வியாளரை, சிந்தனையாளரை, தியாகச் சீலரை வரலாறு இருட்டடித்து விட்டதையும், அவரை பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்தவர் என்று ஜாதிச் சங்கத்தினர் சுருக்கிவிட்ட அவலம்தான் என்னே? என்றும் வேதனையுடன் குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர். இருட்டடிக்கப் பட்ட வரலாற்றை திராவிடர் கழகம் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் என்ற உத்தரவாதத்தைத் தந்து தனது முத்திரை உரையை முடித்தார்.

"நீதிக்கட்சி" பற்றி வ.உ.சி.

"நீதிக்கட்சி தோன்றிய பிறகுதான் தமிழர்கள் அந்தஸ்து உயர்ந்துள்ளது. நீதிக்கட்சிதான் தமிழ் மக்களிடத்துப் பிடிப்பும் - தமிழர்களின் வாழ்வில் ஒரு உருப்படியான சேவையும் செய்துள்ளது.

உதாரணமாக, நான் முன்பெல்லாம் 'இந்து' பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றபோது திரு. கஸ்தூரி ரெங்க  அய்யங்கார் அவர்கள் "வாடா சிதம்பரம்" என்றழைத்துப் பேசுவார். ஆனால் நீதிக்கட்சி கொள்கை தமிழ்நாட்டில் கோலோச்சிய பிறகு ஒரு நாள் போனேன். "வாங்கோ சிதம்பரம் பிள்ளை சவுக்கியமா?" என்று அழைத்தார்.

- வ.உசிதம்பரனார் சென்னை நேப்பியர் பூங்காவில் ஆற்றிய உரை.  உரையைச் செவி மடுத்தவர், காஞ்சி கல்யாண சுந்தரம். தகவல்: பல்லவன்

தந்தை பெரியார்பற்றி வ.உ.சி.!

திரு. இராமசாமி நாயக்கரைப்பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப்பற்றி அய்ரோப் பாவில் பார்லிமெண்டில் பேசப்படுகின்றது என்றால் நாயக்கரின் புகழைப்பற்றி நான் என்ன சொல்வது?

திரு. நாயக்கரிடத்தில் உள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனத்திற்படும் உண்மையை ஒளிக்காமல் செல்லும் ஓர் உத்தம குணந்தான். அவரை எனக்கு 20 வருடமாய்த் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்த பின், நானும் அவரும் விலகி விட்டோம். பிறகு, நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நடத்தப் பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால் நானும் என்னாலான உதவியை அவ்வியக்கத்துக்குச் செய்து வருகிறேன். சுருங்கச் சொல்லின், நாயக்கரவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும்விட பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும்.

கப்பலோட்டிய தமிழர் வ.உசிதம்பரம் (பிள்ளை) அவர்கள் 1928ஆம் ஆண்டில் கூறியது.