ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒடுக்கப்பட்ட மக்களிடையே மோதல் போக்கா
August 12, 2020 • Viduthalai • கழகம்

ஒடுக்கப்பட்ட மக்களிடையே மோதல் போக்கா?

தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மோதல் போக்கு என்னும் செய்தி பெரிதும் கவலையளிக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

நமக்குள்ளேயே மோதலா?

கடந்த 4.8.2020 அன்று தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி என்னும் கிராமத்தில் 'அருந்ததியர்' என்று நமக்குள் அழைக்கப்படும் சமுதாயத்தைச் சேர்ந்த மாடத்தி என்னும் மூதாட்டி இறந்த நிலையில், பள்ளர், பறையர் என்று நம்மில் அழைக்கப்படு பவர்களுக்கான பொது சுடுகாட்டில், அவரை அடக்கம் செய்வதற்காக, ‘பள்ளர்கள்' வசிக்கும் பகுதி வழியாக உடலை எடுத்துச் சென்றபோது, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்தத் தெருவழியாக இறந்த மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்லக்கூடாது என்று பிரச்சினை செய்திருக்கிறார்கள்.

தமிழ்ப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த வர்கள் மூலம் காவல்துறைக்குத் தகவல் அனுப்பிட, காவல்துறையினர் தலையிட்டு,  கலவரத்திற்கு இடம் இல்லாமல் ஆக்கப் பட்டது என்பது ஆறுதல் அளிக்கக் கூடியது தான் என்றாலும்,

இந்தப் பிரச்சினை ஏன் ஏற்பட்டது - பள்ளர்கள் என்று அழைக்கப்படுபவர்களாக இருந்தாலும் சரி, அருந்ததியர் என்று  அழைக்கப்படுபவர்களானாலும் சரி, பறை யர்கள் என்று அழைக்கப்படுபவர்களா னாலும் சரி - இவர்கள் எல்லாமே ஹிந்து மதம் என்னும் வருண சமூக அமைப்பில், நான்காம் வருணமென்னும் மனுதர்மத்தில் சூத்திரர்களுக்கும் கீழே என்று வைக்கப்பட் டுள்ளவர்கள் - அவர்ணஸ்தர்கள் என்று ஆண்டாண்டுக் காலமாக அவமதிக்கப்பட்ட வர்கள் - மனித உரிமை மறுக்கப்பட்டவர்கள் - பறிக்கப்பட்டவர்கள்!

தந்தை பெரியாரும் -

அண்ணல் அம்பேத்கரும்!

இந்தக் கொடுமையை எதிர்த்துத்தான் வடக்கே அண்ணல் அம்பேத்கரும், தெற்கே தந்தை பெரியாரும்  தம் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டார்கள்; அதனால் ஓரளவு உரி மைகள் கிடைக்கப் பெற்றன. எனினும், ஜாதி இழிவு முற்றிலும் துடைக்கப்படவில்லை.

இன்னும் கல்வி நிலையில், வேலை வாய்ப்பில், ஏன் பொருளாதார நிலையிலும் கூட மற்றவர்களுடன் ஒப்பிடும்போது வெகு தொலைவில், கண்ணுக்கு எட்டாத தூரத்தில்தான் உழன்று கொண்டிருக்கிறோம்!

அண்ணல் அம்பேத்கர் சொன்ன ஏணிப்படி ஜாதி அமைப்பு (Graded inequality) என்ற முறையிலிருந்து விடுதலை பெற முடியவில்லை; தீண்டாமை ஒழிக்கப் படுகிறது என்பதற்குப் பதிலாக ஜாதி ஒழிக் கப்படவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் இந்திய அரசமைப்புச் சட்டத்தையே கூடக் கொளுத்தி சிறை சென்ற வரலாறு உண்டு.

 வழிகாட்ட வேண்டியவர்கள் வழிதவறலாமா?

இந்த உண்மை நிலையை நம் ஒடுக்கப் பட்ட மக்கள் மத்தியிலே எடுத்துக் கூறி, சகோதரத்துவத்தை உருவாக்கப் பாடுபட வேண்டிய, வழிகாட்டவேண்டிய நம் சமூகத்தில் படித்த - ஓரளவு உயர்ந்த நிலையில் உள்ள சிலர், தவறான வழி காட்டுகிறார்களோ என்று எண்ணும்போது நெஞ்சம் கனக்கிறது.

நாமோ ஆண்டாண்டுக்காலமாக ஒடுக் கப்பட்டுக் கிடக்கிறோம். இந்த நிலையில், நமக்குள்ளேயே நவீன ஒடுக்குமுறை - மட்டத்தில் உசத்தி யார் என்ற அடிப் படையில் மோதிக் கொள்வது -  எந்த நோக்கத்துக்காக, ஜாதி, ஆதிக்கப் புரியினரால் உருவாக்கப்பட்டதோ,  அந்த நோக்கத்தை மேலும் வளர்ப்பதற்கும், வெற்றி பெறச் செய்வதற்கும் நாமே துணைப் போகலாமா? நாமே ஜாதிப் பெருமையெல்லாம் பேசுவது - எத்தகைய கீழிறக்கம்!

நாமே தீண்டத்தகாதவர்கள் என்று ஆக்கப்பட்டுள்ள நிலையில், நமக்குள் ளேயே தீண்டாமை என்பது எத்தகைய கொடுமை!

உதவிடத் தயார் !

தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப் பட்ட மக்களும், ஒருங்கிணைந்து ஜாதி ஒழிப்புக் களத்தில் நிற்கவேண்டுமே தவிர, ஜாதிக் களைக்கு நீரூற்றி, எருபோட்டு காவல் காக்கும் வேலையில் ஈடுபடலாமா?

இந்தப் பிரச்சினையில் ஏதாவது உதவவேண்டும் என்று முன் கை யார் நீட்டினாலும், அவர்களின் கரங்களைப் பற்றிக்கொண்டு உதவிடத் திராவிடர் கழகம் எப்போதும் தயாராகவே உள்ளது.

ஓங்கட்டும் ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமை-

ஒழியட்டும் ஜாதி என்னும் கொடு நோய்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

12.8.2020