ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்!! (3)
October 23, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

செல்வம் - அதைச் சேர்ப்பது, நல்ல வழியிலே சேர்ப்பதும், துய்ப்பதும், பிறருக்கு அதன்மூலம் தரும் எல்லையற்ற இன்பத்தைக் கண்டுதானே மகிழ்வதைவிட பொருள் சேர்த்தவருக்கும் மிகு இன்பம் வேறு உளதோ என்கிறார் வள்ளுவர்.

செல்வம் - உடைமை என்றாலும் அவர் அதை பார்க்காத கோணமே இல்லை என்பதைப் படிக்கும்தோறும், படிக்கும் தோறும், குறள் ஒவ்வொரு முறையும் வியப்பு கலந்த மகிழ்ச்சியையும், உவகையையும் நமக்கு வற்றாது அள்ளித் தருகிறது - அறிவு ஊற்றாக!

அறன்ஈனும் இன்பமும் ஈனும்திறன் அறிந்து

தீது இன்றி வந்தபொருள் (குறள் 754).

பொருளைத் திரட்டுவதற்குரிய வழிவகை களை நன்கு அறிந்து யாரொருவருக்கும் கேடு விளைவிக்காமல், நல்ல வழியில் பெற்ற பொருளானது, நல்லவிதமான அறத்தையும் அளிக்கும், சிறந்த இன்பத்தையும் நல்கும் - என்பதே இதன் பொருளாகும்!

எனவே, பொருள் சேருவது நல்ல வழியின் மூலமே - யாருக்கும் கேடு விளைவித்துப் பெற்றால் அது ஒருவகை அபகரிப்பே ஒழிய, செல்வத்தை “சேர்த்தல்” ஆகாது. கொள்ளை யடித்துப் பொருள் சேர்க்கும் திடீர்க் குபேரர்கள் மனம் நிம்மதியைத் தருமா? ஒரு போதும் தராது - ‘குற்றம் புரிந்தவர் வாழ்வில் என்றும் நிம்மதி கொள்வதேது’ என்பதே உலக அறிவும் அனு பவமும்! அதனால்தான் ‘அறன் ஈனும்' என்றார் வள்ளுவர்.

அறன் ஈனுதல் என்றால் என்ன மெய்ப் பொருள்? வள்ளுவரே வழிகாட்டி விளக்கம் தந்துள்ளாரே நமக்கு - நாம் தடுமாற வேண்டாமே!

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற (குறள் 34).

மனத்தூய்மை - மனதில் குற்றங்குறை இல்லாத ஒழுக்க நிலைதான் அறன் - அனைத் தறன் - அந்த ‘அறன் ஈனும்’ நேர்மை வழியில் ஈட்டப் பெற்ற செல்வமும், உரிய முறையில் தேவைப்படுவோருக்கு உற்றுழி உதவுதலும்!

இதனை 760 ஆவது குறளில் மேலும் அழகாக விளக்கி இக்கருத்துக்கு வளமும், பொலிவும் ஏற்படுத்துகிறார் குறளாசன்! எப்படி?

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்

ஏனை இரண்டும் ஒருங்கு (குறள் 760).

நன்னெறியின் மூலம் வரக்கூடிய பொருள் மிகுதியாகத் திரட்டக் கூடியவர்களுக்கு, ஏனைய இரண்டும் என்பது அறமும் இன்பமும் ஒரு சேர எளிதாக வந்து சேரும் என்பது உறுதி.

"நேர்மையான வழியில் - தூய மனதினான், தூய முயற்சி, உழைப்பின் மூலம் சேர்க்கப்பட்ட செல்வமே எல்லையற்ற - நிரந்தர இன்பத்தைத் தரும்" என்கிறார்.

நான் பணத்தாசை கொண்டவன்தான்; பேரா சைக்காரன்தான் - எனக்கு அதில் தனி மகிழ்ச்சி தான் என்று கூறிய பெரியார் யாருக்காக இத னைச் சேமிக்கிறேன் - மக்களுக்காக - மக்களின் நல்வாழ்வுக்கான லட்சியமாகிய சமத்துவ பகுத் தறிவு சமதர்ம வாழ்க்கையை உருவாக்க எடுக் கும் முயற்சிகளுக்குப் பயன்படும் அமைப்பி னைப் பலப்படுத்திடத்தானே என்று வெறும் பேச்சால் அல்ல, செயலால் அல்லவா காட்டி, தான் திரட்டிய சொத்துக்களை ஜாதி, மதம், கட்சி பாராமல் நாணயமானவர்களையும், சுயநலமற்ற வர்களையும் அடையாளம் கண்டு - அவர்களின் வசம் ஒப்படைத்த தொலைநோக்கினால் தானே - தொல்லைகளை வென்று இன்று அவர் விரும்பிய லட்சியப் பயணத்தை மேற்கொள்ளப் பயன்படும் சீரிய வாகனமாக - வழிமுறைக்கான ஆயுதமாக - கருவியாக இருக்கிறது!

நேர்மை வழியில் வந்த பொருள் என்பதை வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதியரசர்களே மிகச் சிறப்பாகத் தீர்ப்பு அளித் தனரே!

எனவே, பொருளை சேர்ப்பது என்பதைவிட நேரிய வழியில் சேர்க்கும் பொருள் தான் தங்கும் என்று சொல்லும்போது சிலர் அவசரப்பட்டு இது என்ன மூடநம்பிக்கைப் போல கூறுகிறீர்கள் என்று மடக்கிக் கேட்கலாம்!

பதில் கூறுகிறோம் - விளங்கும் வகையில்.

தவறான வழியில் சேர்க்கப்பட்ட செல்வம் கேள்விக்குரியதாகிறது - சட்டத்தின் முன்!

சரியான வழியில் சேர்க்கப்பட்ட செல்வம் கேள்விக்குரியதாகிறது - சட்டத்திற்கு முன்!

ஆனால், இறுதியில் வெற்றி இரண்டாம் வகைக்கே! இறுதியில் சிரிப்பவன்தானே உண் மையான வெற்றி பெற்றவன் - இல்லையா?

எனவே நண்பர்களே, வள்ளுவரின் எச்சரிக் கையை செல்வம் சேர்ப்போர் அனைவரும் ஒரு வழிகாட்டும் நெறிமுறையாக (GUIDLINES) ஆகக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை

வைத்து இழக்கும் வன்கணவர் (குறள் 228).

தாம் திரட்டி வைத்திருக்கும் பெரும் பொருளை பிறருக்கு எந்த வகையாலும் கொடுக்காமல், பதுக்கி வைத்திருந்து, பின்னர் எக்காரணம் பற்றியோ இழந்து விடும் வன்கண் மையுடையவர்கள்தான், பிறர்க்குக் கொடுத்து அதனால் உண்டாகக்கூடிய மகிழ்ச்சியினால் தாம் அடையும் இன்பத்தை வாழ்நாளில் ஒருபோதும் கண்டறிந்திருக்க மாட்டார்கள்! என்பதை எவ்வளவு ஆணித்தரமாக - எச்ச ரிக்கை மணியடித்து, பகுத்தறிவுப் புலவர் வள் ளுவர் விளக்கி விட்டார் பார்த்தீர்களா? “வைத் திழக்கும் வன்கணாளர்களே, இனியாவது திருந் துவீர்களா” என்று கேட்கத் தோன்றுகிறதா?