ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்!! (2)
October 22, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

கதைகளுக்குள் உலா வருவதற்கு முன் அந்த நூலில் கூறப்படும் சில அனுபவ அடிப்படை யிலான உலகியல் கருத்துகள் மிகவும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கவை மட்டுமல்ல.  வாழ்க்கைக்கு மிகவும் பயன்படக் கூடிய கருத்துகளும் ஆகும்.

கதை துவங்கு முன்பே இதோ ஒரு சிந்தனை முத்துச் சிதறல் - படிப்போமோ?

“ஒரு நாள் அவன் படுத்திருக்கும்போது, தூக்கம் வரவில்லை. ஆழ்ந்த யோசனை உண் டாயிற்று. சேகரித்த செல்வம் நிறைய இருந்த போதிலும் அதைச் செலவழித்துக் கொண்டே போனால் அது மைபோல் கரைந்து போய் விடுகிறது.

சேர்த்த செல்வம் சிறிதளவே இருந்தாலும், அதை மேலும் மேலும் வளர்த்தால், எறும்புப் புற்றுபோல் பெருகிக் கொண்டே இருக்கும். ஆகவே செல்வம், அதிகமாக இருந்தாலும், அதை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டே இருக்க வேண்டும்; பெறாத செல்வத்தைப் பெருக்க முயலவேண்டும் - பெற்றதைக் காப் பாற்ற வேண்டும் - காப்பாற்றியதை விருத்தி செய்ய வேண்டும்.

பத்திரப்படுத்தி வைக்கும் செல்வம்கூட பலவித இடையூறுகளால் நாசம் அடைந்து போகும். வாய்ப்புக் கிடைத்தபோது, தகுந்தபடி முதலீடு செய்யாத பணம், கைக்கு வராத பணத்துக்குச் சமம். ஆகவே கிடைத்த பணத்தை பாதுகாத்து, பெருக்கி, சிறந்த முறையில் முதலீடு செய்ய வேண்டும்.

சேர்த்த பணத்தைக் காக்க வேண்டும் என்றால், அதைப் புழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். குளத்தில் அதிக நீர் இருந்தால் அதற்கு வடிகால் வேண்டும் அல்லவா? பழகிய யானைகளைக் கொண்டு காட்டு யானைகளைப் பிடிப்பது போல், பணத்தைப் போட்டுத்தான் பணத்தை ஈட்ட வேண்டும்.

ஆசையிருப்பினும் பணம் இல்லாத ஏழையால் தன்னிடம் குவிந்த செல்வத்தை, தானும் அனுபவியாமல், நற்காரியங்களுக்குச் செலவிடாமலும் இருப்பவன் சுகம் பெற மாட்டான். அவனைப் பணம் படைத்த முட்டாள் என்றே கூறவேண்டும் என்று எண்ணத் தொடங்கினான்” என்று அக்கதை துவங்குகிறது!

இதில் பணம், செல்வத்தைச் சேர்ப்பது - சேர்த்த செல்வத்தை பாதுகாப்பது எப்படி? பெருக்குவது எப்படி? என்பவையும், உரிய முறையில் அனுபவிக்க வேண்டியதும், நற்காரி யங்களுக்குச் செலவழிப்பதும் முக்கியம் என்ற கருத்தும் வற்புறுத்தப்படுகிறது.

அதனை நம் கண்ணெதிரே வாழ்ந்து காட்டிய தந்தை பெரியாரின் செல்வப் பெருக்கமும், அதே நேரத்தில் சிக்கனமும், அதன் பிறகு அச்செல்வம் மக்கள் அனைவருக்குமே உரியது என்ற அள வில், பெருக்கியும், சிக்கனத்தைக் கையாண்டும், தனது சொந்த சொத்துக்களின் வருமானத்தையும், பொது வாழ்வில் அவருக்கென மக்கள் தந்த அன்பளிப்பு, நன்கொடைகளையும் ஒரு சேரப் பெருக்கி பிறருக்குப் பயனுறச் செய்தார்.

புத்தக விற்பனைகளில் கிடைத்த சொற்ப லாபத்தையும் கூட முதலீடுகள் - மறு முதலீடுகள் செய்தும், பணத்தைப் பெருக்கி, ஒரு பொது அறக்கட்டளையாகச் செயல்படுத்திக் காட்டிய வர் தந்தை பெரியார்!

அறிஞர் அண்ணாவும், அவரது தம்பிமார் களும் தந்தை பெரியாரை விட்டு 1949 இல் பிரிந்து இயக்கத்தை விட்டு வெளியேறிய கால கட்டத்தில் நடைபெற்ற பலவித கருத்தியல்களில் “தந்தை பெரியாரிடம் உள்ள இயக்கப் பணம் 5 லட்சம் என்னாவது” என்று சிலர் கேட்க, அறிஞர் அண்ணா அவர்கள் “அது அய்யாவிடமே இருக் கட்டும் - அது பத்திரமாகவும் இருக்கும்; அதை அய்யா பெருக்கியும் காட்டுவார்” என்றார்!

அதுபோலத்தான் பல மடங்காகப் பெருக் கினார் அய்யா தந்தை பெரியார்!

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் உருவாக்கிய பொது அறக்கட்டளையை வருமான வரித்துறை அங்கீகரிக்காது, அதற்கு 15 லட்ச ரூபாய் வரி கட்ட ஆணையிட்டது என்ற தகவல் பலரும் அறிந்ததுதான்.

ஆனால், அந்த வருமான வரித் துறை - அறக்கட்டளைக்கு வரியே 15 லட்ச ரூபாய் என விதித்தது என்றால், அதை விடக் கூடுதலான சொத்து அதனிடத்தில் இருந்தது என்பதற்கான ஆதாரம் ஒப்புதல் அல்லவா?

அய்யா தந்தை பெரியார் 5 லட்சத்தை எப்படி பெருக்கியுள்ளார் பார்த்தீர்களா?

முன்பு ஒரு கல்வியாளர் தந்தை பெரியார் பற்றிக் கூறியது வெகு பொருத்தமானது. “பெரியாரின்  சிக்கனம் தமிழ்நாட்டின் சிக்கனம். அந்த சிக்கனம் யாருக்கும் பயன்படாத செல்வம் - சிக்கனம் என்று ஆகிவிடாது - அனைத்தும் மக்கள் நலனுக்கே பயன்படும் ஒப்பற்ற சிக்கனம்'' என்று கூறியது நிரூபணம் ஆகிவிட்டதே.

குழந்தைகள் விடுதி,

தொழில்நுட்பக் கல்லூரி,

மருந்தியல் கல்லூரி,

பல்கலைக்கழகம்,

பதிப்பகத்தின் மூலம் பகுத்தறிவுப் பிரச்சாரம்

- முதலிய பலவும்.

எனவே மக்கள் நலனில் பயன்படுவதாயிற்று.

திருவள்ளுவர் செல்வம்பற்றிக் கூறுகையில் சிறந்த நடைமுறைக் கருத்தை - சமூக சிந்த னையை எப்படி அனுபவத்தாலான அறிவியல் கருத்தாகக் கூறியுள்ளார் என்பதை நாளை பார்ப்போமா?