ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவித் துண்டு காவிகளைப் புரிந்துகொள்ளுமா, அ.தி.மு.க.
July 24, 2020 • Viduthalai • தமிழகம்

எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவித் துண்டு காவிகளைப் புரிந்துகொள்ளுமா, அ.தி.மு.க.?

புதுச்சேரி மாநிலத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவித் துண்டைப் போர்த்தியுள்ளது காவிக் கூட்டம்.

தமிழகத் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மட்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் பெரியார் சிலைக்குக் காவிச் சாயம் பூசப் பட்டபோது, யாருக்கோ நடந்ததுபோல் முதலமைச்சரும், அமைச்சர் ஜெயக்குமாரும் ‘‘சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று பேட்டி கொடுத்தனர்.

தந்தை பெரியாரைப்பற்றி ஒரு வரிகூட சொல்லாமல்,  பா.ஜ.க. எஜமானர்களுக்கே அஞ்சிக் கருத்துக் கூறினர்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்ததுபோல, இப்பொழுது அ.தி.மு.க.வின் நிறுவனர் எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவி துண்டு போட்டு, தாங்கள் யார் என்று காட்டிக் கொண்டு விட்டது காவிக் கூட்டம்.

தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கம்போது, பா.ஜ.க. பரிவாரம் தன் ஆளுமையை அ.தி.மு.க.மீது செலுத்தும் அறி குறிதான் இது. தனிப்பட்டவர் செயல் என்று அலட்சியப் படுத்தினால், அது அ.தி.மு.க.வுக்கு நல்லதல்ல!

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். டில்லியில் இருந்தபோது முன் அனுமதியின்றி சந்திக்க வந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், மண் டைக்காடு கலவரம் குறித்த வாக்குவாதத்தில் முதலமைச் சரின் கையைப் பிடித்து இழுத்ததும் (1983),

அந்நிகழ்ச்சி குறித்து ஆர்.எஸ்.எசை  முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கண்டித்த வரலாறு எல்லாம் அ.தி.மு.க. அமைச் சர்களுக்குத் தெரியுமா?

எச்சரிக்கை! எச்சரிக்கை!!  அ.தி.மு.க.னரே, எச்சரிக்கையாக இருங்கள். இந்த சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.,காரர்களின் விடயத்தில்!

அவர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை; அவர்கள்மீது புகார் கொடுத்தால், புகார்கள் குப்பைத் தொட்டியில் என்னும் நிலை நீடிக்கும்வரை அவர்கள் அத்துமீறலாகத்தான் நடந்துகொள்வார்கள்.

புதுச்சேரி நிகழ்வுக்குப் பிறகாவது புத்தி கொள்முதல் பெறுமா அ.தி.மு.க.?

 

ஆர்.எஸ்.எஸ்., பற்றி எம்.ஜி.ஆர்.!

17.2.1983 அன்று சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பற்றி செய்தியாளர்களிடையே தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கீழ்க்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

கேள்வி:  ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்படுமா?

பதில்: நேற்று நான் டில்லியில் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளை பார்ப்பதற்காகப் புறப்பட முயன்ற நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் “இந்து

மஞ்ச்’’ என்ற பெயரில் 40, 50 வயதுக்காரர்கள், படித்தவர்கள், யோசித்து செயல்படும் தகுதி உள்ளவர்கள் என் முன்னால் நின்று கொண்டு தமிழ்நாட்டில் 15 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள்; என்னைப் பார்க்க வேண்டும் என்றார்கள். நான் உடனே பார்க்க முடியாது. முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்றேன். அதற்காக “ஒழிக’’ என்று சொன்னார்கள்.

அவர்கள் நடந்துகொண்ட முரட்டுத்தனமான செய்கை யைப் பார்க்கும் போது, இதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கமா? என்று நினைக்கத் தோன்றியது. அதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் என்றால், அது இந்த நாட்டுக்கும், தமிழ்நாட்டுப் பண்புக்கும் ஒத்து வராதது. நேரத்தையும் முன்னதாக குறித்து வாங்கவில்லை. உண்மைக்கு மாறான தகவலையும் சொல்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள்- அவ்வாறு மட்ட மாக நடந்து கொண்டார்கள். என்னை தடை செய்ய முயற் சிக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்கள்.

அது ஆர்.எஸ்.எஸ். இயக்கமானாலும், எதுவானாலும் இப்படிப்பட்ட செயல் அதற்கு பெருமை தரக்கூடியது அல்ல. இந்து மதத்தை இப்படி எல்லாம் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டில் இதுவரை எனக்கு இப்படிப்பட்ட அனுபவம், கீழ்த்தரமாக அவர்கள் நடந்ததுபோல அனுபவம் இதுவரை நடந்ததில்லை.

இதுபோல மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அல்லது மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கொடுத் தால் என்னாகும்? இரண்டுக்கும் இணைப்பாக நான் பாலத்தைப் போல இருப்பதை உடைக்க விரும்புகிறார்கள்.

ஒழுக்கமற்ற ஆர்.எஸ்.எஸ்.

எனக்கு இதைப் பார்த்த பிறகு ஆர்.எஸ்.எஸ். மீது பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ். என்றால் ஒழுக்கமானவர்கள், கட்டுப்பாடு ஆனவர்கள் என்று சொல்வார்கள். ஆனால், அவ்வளவையும் அங்கு தகர்த்து எறிந்து விட்டார்கள் அந்தப் பெரியவர்கள். இந்த வளர்ச்சி நாட்டுக்கு நன்மை ஆனது அல்ல.

இங்கு இந்து முன்னணி, அங்கு ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியில் ஆதிக்கம் செலுத்துவது ஆர்.எஸ்.எஸ். இயக்கமா? அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் இந்து முன்னணி என்ற பெயரில் இருக்கிறார்களா? என்பதையும் உணர வேண்டும்.

இதுதான் அவர்கள் கட்டுப்பாடு, ஒழுக்கம் என்றால் அதுபற்றி கேள்வி கேட்க வேண்டியதே இல்லை. இப்படிப் பேசுவதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடை செய்யும் நோக்கம் வந்து விட்டதோ என்று கருதி முடிவு செய்ய வேண்டாம்.

எந்த மதம் ஆனாலும் தன் மதத்தைப் பரப்ப நாகரிக மான முறையிலும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையிலும் பிறர் மனதை மாற்ற, கருத்து விளக்கத்தின் மூலமாக அந்தப் பணிகளைச் செய்ய முழு உரிமையும் இந்த அரசு தரும், தந்து வந்தும் இருக்கிறது.  -இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

எம்.ஜி.ஆரோடு இருந்த மின்துறை அமைச்சர் மாண்பு மிகு பண்ருட்டி எஸ்.இராமச்சந்திரனை ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் பிடித்துத் தள்ளி இருக்கின்றனர்.