ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
எனது நினைவுகளில் பி.பி.மண்டல்
August 1, 2020 • Viduthalai • மற்றவை

- வழக்கறிஞர் ப.செந்தூர்பாண்டியன்,

சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளை

எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் (தற்போது தென்காசி மாவட்டம்) சங்கரன்கோயில் - புளியங்குடி சாலையில் உள்ள வீரீருப்பு ஆகும். நான், பிறப்பால், பிற்படுத்தப்பட்ட (யாதவ) சமூகத்தைச் சார்ந்தவன். ‘இடஒதுக்கீடு', ‘சமூகநீதி' போன்ற திராவிடர் இயக்கக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவன். தற்போது மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறேன்.

எனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. அது, 1979ஆம் ஆண்டின் ஜூன் அல்லது ஜூலையாக இருக்கலாம். அப்போது எனக்கு சுமார் 31 / 32 வயது இருக்கலாம். நான் நெல்லையில் வழக்கறிஞராக இருந்த நேரம். இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிககையை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 27% இடஒதுக்கீட்டுக்கு பரிந்துரை செய்த, மண்டல் கமிசன் தனது விசாரணைக்காக நெல்லை வந்திருந்தது. இக்குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த பி.பி. மண்டல் (பிந்தேசுவரி பிரசாத் மண்டல்) அவர்களின் பெயராலேயே அது அறியப்பட்டிருந்தது. சமூகவியல் அறிஞரான மண்டல், பீகாரின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் தனது பணியை முடித்துவிட்டு நெல்லை வந்த மண்டல், சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார். நெல்லையில் அவர் தங்கி இருந்த இரு நாட்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது. பல்வேறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அங்கு வந்து, தங்கள் சமூகங்களின அவல நிலையை குறித்து மண்டலின் முன் சாட்சியம் அளித்தார்கள்.

மண்டலுடன் வந்திருந்த, பின்னாளில், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவரும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருமான திரு.வீரராகவன் என்பாரால் நானும் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டிருந்தேன். ‘நெல்லை மாவட்ட யாதவர் சங்க செயலாளர்' என்ற தகுதியின் அடிப்படையில் தான் நான், எனது கருத்துகளை முன்வைத்தேன்.

மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரம் ஆகிய நிலைகளில், பொதுவாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், குறிப்பாக யாதவ மக்களுக்கும் உரிய வாய்ப்பு அளிக்கப்படாத அவல நிலையை புள்ளி விவரங்களுடன் ஆணித்தரமாக வாதாடி நிறுவினேன். யாதவர்கள் உள்ளிட்ட பிற்படுத் தப்பட்ட மக்களின் பரிதாபமான சமூக பொருளாதார நிலையினை எடுத்துக் கூறினேன். ஆடு மாடுகள் வளர்த்தும், விவசாயம், நெசவு, மட்பாண்டம், தச்சு போன்ற தொழில்களில் ஈடுபட்டும் கடின வாழ்க்கையில் அவர்கள் உழன்று வருவதை விவரித்தேன்.

“பார்ப்பன உயர்ஜாதி ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தின் காரணமாக வரலாறு நெடுக சமூகம், கல்வி - அரசு வேலை ஆகிய நிலைகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்த சூழலின் பின்புலத் தின் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே உருவாகியிருந்த தாழ்வு மனப்பான்மையின் காரணமாக, தங்களின் பிள்ளைகள் உயர் கல்வி கற்று, அரசுப் பணி, அதிகார மய்யங்களில் இடம் பெறுவதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணராமலேயே இருந்து வருகிறார்கள் என்பதையும் மண்டலின் முன் விளக்கினேன். பிற்படுத் தப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் கருத்துகளை மண்டல் குழு கவனமாகக் கேட்டறிந்தது. மாநில அரசிற்கு உட்பட்ட அளவில் அரசுப் பணி மற்றும் கல்வி நிலையங்களில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, ஏற்கெனவே ஓரளவு இடஒதுக்கீடு இருந்து வந்த நிலையில், இந்தியா முழுவதிலும் பரந்து விரிந்து காணப்படும் மாபெரும் அளவிலான கல்வி மற்றும் அரசுப் பணி நிறுவனங்களை ஏராளமான எண்ணிக்கையின் கொண்டுள்ள, மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைகளில், இம்மக்கள் இடம் பெறுவதற்கு உரிய இடப்பங்கீட்டுக்கான உரிமையும், வாய்ப்பும் அளிக்கப்பட்டால மொத்த மக்கள் தொகையில்  சுமார் 52% அளவிலான எண்ணிக்கையை இம்மக்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலைகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி, அது, இந்தியத் துணைக் கண்டத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும்' என்ற மண்டலின் கருத்து மேலும் உறுதிப்படுவதற்கு நாங்கள் அளித்த சாட்சியங்கள் உறுதுணையாக அமைந்தன.

மண்டல் விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில், சாட்சியங்கள், தங்கள் சமூகங்களின் அவல நிலையை விளக்கிக் கொண்டு வரும் போது, அந்த வாதங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் அமைந்த, கேரளப் பயணத்தின் போது, தான் அறிய நேர்ந்த ஒரு நடைமுறை (1970களின் பிற்பகுதியில் நடந்தது) நிகழ்வை மண்டல் அப்போது கூறினார், ‘கேரளாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரபல வழக்கறிஞர் இருந்தார். அவரது உதவியாளராக பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தார். வழக்குகளின் பொருட்டு கட்சிக்காரர்கள் தரும் பணத்தை, அந்த உதவியாளர் பெற்றுத் தருவார். தன் கைக்கு வந்த பணத்தை, கையை மேலே உயர்த்திப் பிடித்துக் கொண்டு கீழே போடுவாராம். அப்போது, தன் கையை - பிச்சை எடுப்பது போல் - கீழே தாழ்த்தி ஏந்திக் கொண்டு அந்தப் பணத்தைப் பிடித்துக் கொள்வாராம் அந்த வழக்கறிஞர். இதுவே மண்டல் கூறிய அந்த நிகழ்வு.

மண்டல் குழுவின் விசாரணை நடந்து கொண்டு வந்த போது, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒரு பிரிவான புரத வண்ணார் சமூகத்தின் பிரதிநிதிகள் மண்டலைச் சந்தித்து தங்கள் சமூகம் படும் துயரை விவரித்தனர். புரத வண்ணார்  சமூகத்தவர் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். பழங்காலத்தில் 'பார்க்கக்கூடாத ஜாதியினர்' (Unseeable) என்று அடையாளப்படுத்தப்பட்டு, மற்றவர்கள், அவர்களைப் பார்த்தாலே 'தீட்டு' ஒட்டிக் கொள்ளும் என்று கருதும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர். இத்தகைய சமூக வன்கொடுமை நடைமுறையில் இருந்த காலத்தில், இம்மக்கள் பகலில் நடமாடுவதற்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தனர். அப்போது இவர்கள் நடமாடுவதற்கு இரவில் மட்டுமே அனுமதி அளிக்கப் பட்டிருந்தது. நெல்லை மாவட்டத்தில் இவர்கள் கணிசமாக இருந்தார்கள். இவர்களின் படுதுயரமான நிலையை உணர்ந்த மண்டல், இவர்களது அனைத்துக் கோரிக்கைகளும் மிகமிக நியாயமானவை எனப் பதிவு செய்தார்.

மண்டல் குழுவின் விசாரணை முடியும் தருவாயில், திரு.மண்டல் அவர்கள் தனது தொலைநோக்கு அறிவினால் ஒரு விசயத்தை முன்னுணர்ந்து சொன்னார். 'நான் நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, மத்திய அரசில் கல்வி மற்றும் வேலை பெறுவதற்கான இடப்பங்கீடு உரிமையை அளிக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்து விடுவேன். ஆனால் பார்ப்பன ஆளும் வர்க்கத்தினால் ஆட்டிப் படைக்கப்படும் சூழலில், ஆட்சியில் உள்ள எந்த அரசும் அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்த முன்வராது. இதை மீறி எந்த ஆளும் கட்சியாவது இதனை அமல்படுத்தத் தொடங்கினால், பார்ப்பன ஆளும் வர்க்கத்தின் தூண்டு தலால், அந்த ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளே ஆட்சியைக் கவிழ்த்துவிடும்‘ என்று கூறிவிட்டு, என்னைச் சுட்டிக்காட்டி, 'அப்படி ஒரு பெரும் பின்ன டைவான நிலை ஏற்பட்டால், உங்களைப்போன்ற இளைஞர்கள் முன்வந்து போராடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். மண்டல் என்ற மாபெரும் சமூக விஞ்ஞானியின் அந்த அறிவுரை இன்னும் என் மனதில் பசுமையாகப் பதிந்துள்ளது.

விசாரணையின் இடையே, பனை நுங்கையும், பதனீரையும் மண்டல் விரும்பி உண்டதைக் காண முடிந்தது. பனை மரம் வழங்கும் இந்த உணவுப் பொருட்கள் வைதீகப் பார்ப்பனியத்தால் 'தீட்டுக்குரியன' என விலக்கப்பட்ட உணவுகள் ஆகும் என்ற செய்தியும் இங்கு இடைபிறவரலாகச் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

'இந்தியா முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் கல்வி நிலையங்களிலும், அரசுப் பணிகளிலும் 27% அளவு இடப்பங்கீடு வழங் கிட வேண்டும்‘ என்ற தனது அறிக்கையை 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசிடம் தாக்கல் செய்தார் மண்டல். ஆனால் கெடுவாய்ப்பாக அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 1982இல், தனது 64ஆவது வயதில் மண்டல் காலமானார். தன் கடும் உழைப்பின் பயனை, தன் மக்கள் பெற்று உயரும் நிலையைக் காணாமலேயே மண்டல் மறைந்து விட்டார்.

மண்டல் கணித்தது போலவே, அவரது அறிக்கை பல ஆண்டுகளாக இருட்டில் முடக்கப்பட்டது. பின்னர், 1980களின் பிற்பகுதியில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற அமைப்புகள் நடத்திய போராட்டங்களினாலும், அவற்றின் விளைவாக யாதவர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் ஏற்பட்ட எழுச்சியினாலும், மீண்டும் மண்டல் அறிக்கை வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் அரசியல் அதிகாரம் சார்ந்த, அதாவது தேர்தல் வாக்கு சார்ந்த பேசு பொருளாகவும் மாறியது. இத்தகைய எழுச்சி வடநாட்டிலும் பரவியது. கன்ஷிராம், லாலுபிரசாத், முலாயம் சிங் போன்ற தலைவர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்திப் போராடினார்கள். இத்தகைய அரசியல் சூழலின்ஆதரவோடு, 1989 டிசம்பரில் வி.பி.சிங் பிரதமர் ஆனார். ஆட்சிக்கு வந்ததும் மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்தி அரசாணை வெளியிட்டார்.

இங்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் கூர்மையாக கவனிக்க வேண்டிய முக்கியமான அரசியல் நிகழ்வு ஒன்று உண்டு. அதுதான், பார்ப்பன - இந்துத்துவ அமைப்புகளான, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியன மண்டல் அமலாக்கம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடு ஆகும். 'மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது‘ என்ற காரணத்திற்காக, வி.பி.சிங் அரசிற்கு வெளியே இருந்து ஆதரவு கொடுத்து வந்தது பாரதீய ஜனதா கட்சி. ஆனால், ஆட்சிக்கு வந்த வி.பி.சிங், தனது முதல் வேலையாக, மண்டல் குழு பரிந்துரைகளை அமலாக்கம் செய்து அரசாணை பிறப்பித்த வரலாற்று நிகழ்வு, “தலைவலி போய் திருகு வலி “ஏற்பட்ட அனுபவமாக பா.ஜ.க.வுக்கு அமைந்தது. அதாவது மண்டல் கமிசன் அமலாக்கம் என்பது, 3% மக்கள் தொகை இருந்து கொண்டு - மத்திய அரசின் கல்வி - வேலைவாய்ப்பு, அதிகார மய்யங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்ற பார்ப்பன சமூகத்தின் செல்வாக்கை அசைத்துப் பார்க்கக் கூடியது, என்ற 'ஆழ்ந்த' கவலையே பா.ஜ.க.வுக்கு அச்சம் ஏற்படக் காரணம். ஆனால், 'இந்து' என்ற பெயரில் பார்ப்பன சக்திகள் உருவாக்கியிருந்த அடையாள உருமறைப்புக்குள் பிற்படுத்தப்பட்ட மக்களையும் உள்ளிழுத்துக் கொண்டிருந்த நிலையில் (இசுலாமியருக்கு எதிராக நடத்தப்படும் மத மோதல்களுக்கு அடியாட்கள் வேண்டுமல்லவா?) மண்டல் கமிசனை நேரடியாக எதிர்த்துப் போராட முடியாமல் அது திணறியது. ஏனென்றால், நேரடியாக மண்டலை எதிர்த்தால் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு கிடைக்காமல் போய்விடும் என்று அது கருதியது. எனவே, 'உப்புக் கண்டம் பறி கொடுத்த பாப்பாத்தியின் நிலை’யிலேயே அப்போது பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.யும் இருந்தன.

பார்ப்பன சமூகம் சந்தித்த இச் சிக்கலை பார்ப்பன இந்துத்துவ அமைப்புகள் எப்படி எதிர்கொண்டனர் என்பதுதான், பிற்படுத்தப்பட்ட மக்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய விசயமாகும். அதாவது, மண்டல் பரிந்துரையை தீவிரமாக அமலாக்கி வரும் வி.பி.சிங்கின் ஆட்சியைக் கவிழ்ப்பதே இந்துத்துவ சக்திகளின் முதல் இலக்காக இருந்தது. அரசு கவிழ வேண்டுமானால், வெளியே இருந்து இந்துத்துவ பா.ஜ.க. அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெற வேண்டும். ஆனால், இதற்கு ஒரு 'சாக்கு' வேண்டும். காத்திருந்த ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வுக்கு கிடைத்த அந்த 'சாக்குத்தான்' பாபர் மசூதி விவகாரம். பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என பரப்புரை செய்வதற்காக அத்வானியால் ரத யாத்திரை நடத்தப்பட்டது. எங்கும் மதக்கலவரச் சூழல் உருவாக்கப்பட்டது. அதாவது பிற்படுத்தப்பட்டோர் - சமூகநீதி - மண்டல் கமிசன் என்ற வரிசையில் சென்று கொண்டிருந்த அரசியல் விவாதம் 'இந்துக்கள்' - பாபர் மசூதி - இராம ஜென்ம பூமி என்பதாக மடை மாற்றப்பட்டது. அத்வானியின் ரதம், பீகாருக்குள் நுழையும் போது, முதலமைச்சர் லாலு பிரசாத் அதனைத் தடுத்து அத்வானியைக் கைது செய்தார். பார்ப்பன இந்துத்துவ அமைப்புகள் எதிர்பார்த்துக் கிடந்த 'சாக்கு' அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. வி.பி.சிங்கின் ஆளும் கூட்டணியில், லாலு பிரசாத்தின் அமைப்பும்அங்கம் வகித்து வந்த நிலையில், அத்வானி கைதைக் காரணமாகக் காட்டி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை பா.ஜ.க. திரும்பப் பெற்றது. அரசு கவிழ்ந்தது. மண்டலின் தொலைநோக்கு உண்மையானது.

பாபர் மசூதிக்கு எதிரான இந்துத்துவ அமைப்புகளின் இந்நிலைப்பாடு மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, இசுலாமியருக்கு எதிரானதாகத் தோன்றும். ஆனால், அடியாழத்தில் அது பிற்படுத்தப்பட்ட 'இந்துக்களுக்கு' எதிரான பார்ப்பனச் சதியாகும். வி.பி. சிங் அரசு கவிழ்க்கப்படுவதற்கு சுமார் 20 நாட்கள் முன்னர், நெல்லைக்கு வந்த அத்வானி, சமூக நீதி - மண்டல் கமிசனை எதிர்த்து விசம் கக்கியதை நானே நேரில் கேட்டேன்.

வி.பி.சிங் அரசைக் கவிழ்த்து விட்டாலும், இந்துத்துவச் சக்திகளால் மண்டல் விவகாரத்தில் முழு வெற்றியைப் பெற முடியவில்லை. 1992ஆம் ஆண்டில், இந்திரா - சகானி வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற விசாரணைக் குழு 'மண்டல் பரிந்துரைகள் செல்லும்' என்று தீர்ப்பு வழங்கியதே இதற்குச் சான்றாகும்.

மண்டல் கமிசன் அமலாகத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், பார்ப்பன உயர்ஜாதியினர், அதனை எதிர்த்துத் தொடர்ந்த மேற்சொன்ன வழக்கின் காரணமாக, 'மத்திய அரசின் வேலைவாய்ப்பில் மட்டுமே 27% இடஒதுக்கீடு தரப்படும்‘ எனத் தீர்பபு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் வந்த காங்கிரஸ் அரசில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த அர்ஜுன் சிங்கின் முயற்சியால், அது கல்வித் துறைக்கும் நீட்டிக்கப்பட்டது. இது மண்டல் அறிக்கை பெற்ற அடுத்த வெற்றி, எனினும் சமூக நிதிப் பயணத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.

“சமூக நீதிக் காவலர்களான‘ வி.பி.சிங், பி.பி.மண்டல் ஆகியோரை பிற்படுத்தப்பட்ட மக்கள் நன்றியோடு நினைவு கூறும் வகையில், அவர்களின் பிறந்த நாட்களை தமது இல்ல விழாக்களாக கொண்டாட வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்கள் செல்ல வேண்டிய வழி 'சமூக  நீதி' வழியே தவிர, மதவாத வழி அல்ல!