ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
எங்கெங்கும் ஆர்.எஸ்.எஸ். மயம்
September 22, 2020 • Viduthalai • தலையங்கம்

பாஜக எங்கெல்லாம் ஆட்சியில் அமர்கிறதோ அங்கு எல்லாம் கடைமட்டத்தில் இருந்து உயர் பதவிகள் வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களை தங்களது கொள்கைக்கு முழு அளவில் ஆதரவானவர்களை தொடர்ந்து நிரப்பி வருகிறது. தேர்தல் நேரங்களில் அவர் களுக்கு சாதகமாக செயல்படும் வகையில் இவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். 

மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சிவ்ராஜ் சிங் சவுகான் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கிராம உதவியாளர் பணி முதல் தலைமைச் செயலக அதிகாரிகள் வரை பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்தவர்கள் மற்றும் தங்களின் கொள்கைக்கு ஆதர வானவர்களை நியமித்து வந்தார். இதனால் தான் வெட்ட வெளிச்சமான வியாபம் ஊழலைக் கூட எந்த ஒரு சான்று களும் இல்லை என்று கூறி உள்ளூர் காவல்துறை அந்த வழக்கை கைவிட்டது. அவ்வப்போது சாட்சிகள் கூற முன் வந்தவர்கள் அய்யத்திற்கிடமான முறையில் மரணமடைந்து வந்தனர்.  

இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது. மத்திய புலனாய்வுத்துறையும் வழக்கை கைவிட்டுவிட்டது, நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக கூறி வழக்கை தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டு வருகிறது, 

இந்த நிலையில் 2018-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத் தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தது, ஆனாலும் கமல்நாத்திற்கு தனது அலுவலகத்தில் இருந்தே பெரும் தலைவலி காத்திருந்தது, அவரது அலுவலக உதவியாளர் 2 பேர் அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றே விடுப்பில் சென்றுவிட்டனர். ஆகையால் பதவி யேற்று கையெப்பமிடவேண்டிய முக்கிய கோப்புகள் கிடைக்காமல் பதவியேற்ற பிறகும் தனது அலுவல்களை தொடர முடியாமல் இருந்தார். அமைச்சரவை விரிவாக் கத்தின் போதும் துறை அமைச்சரவை செயலாளர்கள் ஒத்துழைக்கவில்லை. இதனால் அமைச்சரவை இலாகா ஒதுக்குவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 

இதனால் கோபமடைந்த கமல்நாத் சுமார் 400-க்கும் மேற்பட்ட உயரதிகாரிகளை இடமாற்றினார். இருப்பினும் எதிர்க்கட்சியான பாஜகவினரைவிட அவரது அலுவலக அமைச்சரவை அதிகாரிகளே அதிகம் குடைச்சல் கொடுத்தனர். கமல்நாத் பதவியேற்றது முதல் 2020-மார்ச் பதவி விலகும் வரை அதிகாரிகளுடனே அவருக்கு அதிகம் போராட வேண்டி இருந்தது, இது தொடர்பாக கமல்நாத்தே நேரடியாக பேட்டியளித்திருந்தார்.  

கமல்நாத் முதலமைச்சராக இருந்தாலும் பல்வேறு அதி காரிகள் சிவ்ராஜ் சிங்கிடம்தான் அதிகம் தொடர்பு வைத் திருந்தனர். மண்டசூர் என்ற பகுதியைச் சேர்ந்த வேளாண் துறை உயரதிகாரி ஒருவர் கமல்நாத்திற்கு நாங்கள் அறிக்கை தரவேண்டிய அவசியமில்லை. அவர் மிகவும் சொற்ப காலம் மட்டுமே முதல்வராக இருப்பார். ஆகையால் அலு வலகத்தில் கமல்நாத் படம் அவசியமில்லை என்று கூறியிருந்தார். இது வாட்ஸ் அப்பில் காணொலியாக வந்தது, இருப்பினும் இவர் மீது கமல் நாத் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.   காவல்துறை யிலும் சில அதிகாரிகள் சிவ்ராஜ் சிங் சவுகானிடமே தொடர் பில் இருந்தனர் என்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் குற்றம் சாட்டி இருந்தது,  காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போதே ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயன்றது, அப்போது பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப் பினர்களுக்கு மாநில காவல்துறை பாதுகாப்பு அளித்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டி இருந்தது. இறுதியில் கமல்நாத் ஆட்சியைக் கவிழ்த்து சிவ்ராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வர் ஆனதும் கமல்நாத் நியமனம் செய்த அனைத்து அதிகாரிகளையும் மாற்றி மீண்டும் பழைய தனது ஆதர வாளர்களையே நியமித்தார்.

அதே போல் கருநாடகாவிலும் இந்த அவலம் தொடர் கிறது. கட்சி சார்பற்று இருக்கவேண்டிய பல அய்.ஏ.எஸ். மற்றும் அய்பிஎஸ் உயரதிகாரிகள் பாஜக பிரமுகர்களின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முதலாவதாக சென்று பங்கேற்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பாஜகவினர் கொடுக் கும் சாதாரணமான புகார்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில்கூட ஆளுநர் ஒரு கால கட்டத்தில் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து அலுவலர்களை அழைத்து நேரிடையாக ஆலோசனை நடத்தும் போக்கு இருந்து வந்தது.

கடும் எதிர்ப்புத் தமிழ்நாட்டில் இருந்து வெடித்துக் கிளம்பிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் என்ன நடக்கும் என்று சொல்லவும் முடியாது. எந்தவிதமான விதிகளும் மரபுகளும் பிஜேபி நிர்வாகத்தில் கால்  தூசுக்குச் சமமே!