ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
உ.பி.யிலும், பஞ்சாபிலும் கிளர்ந்தெழுந்த சமூகநீதி இயக்கங்கள்
October 1, 2020 • Viduthalai • கழகம்

காணொலியில் கழகத் தலைவர் | 3 நூற்றாண்டுகளில் சமூகநீதித் தொடர் - 7

கலி. பூங்குன்றன்

காணொலியில் நேற்று (30.9.2020) மாலை 6.30 மணிக்கு கழகத் தலைவர் பேசியதாவது:

இதுவரை நிகழ்த்தப்பட்ட காணொலியில் தென் மாநிலங்களில் எழுந்த சமூகநீதி இயக்கங்கள், அவற்றின் தாக்கங்கள் குறித்தும் பேசினேன்.

இன்றைய உரையில் உத்தரப்பிரதேசத்திலும், பஞ்சாபிலும் தோன்றிய இரு சமூகநீதி இயக்கங்கள் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை இயக்கங்களின் எழுச்சிகள் வரலாற்றில் இருட்டடிக்கப்பட்டு விட்டன. வரலாறு என்றாலே அது ஆரிய வரலாறாகவும் வேதங்களின் வரலாறாகவும்தான் காட்டப்பட்டு வந்திருக்கின்றன.

ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து முகிழ்த்த இயக்கங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவில்லை.

குறிப்பாக வடநாட்டில் உத்தரப்பிரதேசத்தில் அச்சு தானந்தர் தலைமையில் தாழ்த்தப்பட்டவர்களின் எழுச்சி இயக்கம் தோன்றியது. 1879 முதல் 1939 வரை வாழ்ந்தவர் அவர்.

இவருடைய வாழ்க்கை வரலாறு என்பது பல விதங்களில் தந்தை பெரியார் வரலாற்றை ஒட்டியதாக அமைந்துள்ளது. தந்தை பெரியார் திருமணம் ஆனதற்குப் பிறகு துறவியாக வடமாநிலங்கள் சென்றார் என்றால், அச்சுதானந்தரே, திருமணத்திற்கு முன்பே துறவியாகப் பல இடங்களிலும் சுற்றி வந்தவர் ஆவார்.

"உத்தரப் பிரதேசத்தில், குறிப்பாக நகர்ப்புற மய்யங்களில், விளிம்புநிலை வாழ்க்கையும், மிகக்கீழான தொழில் அனுபவமும் தாழ்த்தப்பட்டவர்களிடையே கபீர், ரவிதாசரைப் பின்பற்றித் தீவிர மரபைப் புதுப் பிப்பதற்கும் தொல்குடி மக்களின் சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்குமான பின்னணியை உருவாக்கியது.   புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் விடுதலைப் போராட்டத்தை சுவாமி அச்சு தானந்தர் (1879-1939), ராம் சரண் (1889-1939) தலைமையில் தொடங்கினர். தாங்களே அடைந்த அவமான அனுபவங்கள் அவர்களைப் பார்ப்பனச் சமூகத்திலிருந்து வெளித்தள்ளின. சமூக மேம்பாட் டுக்கான அடை யாளத்தைக் கட்டமைப்பதன் பின்னணியில் அவர்கள் உந்துசக்திகள் ஆயினர். துணைக் கண்டத்தில் இருந்த மற்ற தலித், அடித்தட்டுத் தலைவர்களைப் போல இவர்களும் ஜாதி, கலாச்சாரம், சமூகம் பற்றிய பார்ப்பன வளவளப்புகளை மறுத்து சமூக நீதியை வேண்டினர்.

மைன்புரி மாவட்டத்திலிருந்து வந்த துறவி அச்சுதானந்தன் உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டவர் விடுதலை இயக்கத்தின் முக்கியக் கருத்தியலாளர். சிறிதுகாலம் ஆரியசமாஜத்துடன் தொடர்பில் இருந்தார். இந்துக்கள் யாவரையும் வேதங்கள் மற்றும் பிராமணர் களின் அடிமைகளாக்குவதுதான் அதன் நோக்கம் என்பதை விரைவில் அவரும் அவருடைய தோழர் களும் புரிந்து கொண்டதன் பின்னர், அதைவிட்டு நீங்கினார்கள். வேதங்களின் மீதான அழுத்தம் ஜாதிப் படிநிலைக்கும் மேலும் ஜாதி வேறுபாடுகளை வலுப் படுத்துவதற்கும் தெய்வீக அனுமதி தேடுவதாகும் என்பதை அவர்கள் உணர்ந்தனர். ஆரிய சமாஜம் கட்டமைப்புச் செய்த உயர் ஜாதி இந்துக்களின் சேனையினால் அதிர்ச்சியடைந்த தாழ்த்தப்பட்டவர்கள், அதன் ஒரே நோக்கம் இந்து சமுதாயத்தை முஸ்லிம் களுக்கு எதிராகப் போருக்கு ஆயத்தப்படுத்துவது என்றும் கீழ் ஜாதிகளை மேம்படுத்துவதற்கு அதன் முயற்சி அந்தத் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் நினைத்தார்கள். பிறகு ஆரிய சமாஜம் தீண்டாமையை ஒழிக்க முற்படவில்லை, சுத்தி (சுத்தம் செய்வது - Purification) என்பது தீண்டப்படாதவர்கள் மீது உயர் ஜாதியினரின் கட்டுப்பாட்டை நிரந்தரம் ஆக்குவதற்கான தந்திர உபாயம் என்று புரிந்து கொண்டார்கள். "தூய்மைப்படுத்துவது பற்றிய அதன் செயல்கள் மிக புத்திசாலித்தனமான ஏமாற்றுகள், வர்ணாசிரமத்தின் புத்திசாலித்தனமான வார்த்தை ஜாலங்கள்” என்று அறிவித்தார் அச்சுதானந்தர். ஆரிய சமாஜத்தின் கலப்புத் திருமண முயற்சிகள் வெறும் கண்துடைப்பு என்றும், அது உண்மை என்றால் இருபிறப்பாளர்க்கும் (பார்ப்பனர்களுக்கும்) கீழ் ஜாதிகளுக்கும் இடையில் கலப்புத் திருமணம் செய்து நிலைநாட்டட்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

தாழ்த்தப்பட்ட சமூக சிந்தனையாளர்கள் பிறப்பின் அடிப்படையிலான உழைப்பு மற்றும் உழைப்பாளர் பிரிவினையை எதிர்த்தனர். இதனால் வேலைகள் பல ஜாதிகளுக்கும் பலவிதமாகப் பரவலுக்கான வாய்ப்பு மறைந்து ஒடுக்கப்பட்ட ஜாதிகளின் தொடர்ந்த ஏழ்மை, கல்வியின்மை, பிளவுபடும் தன்மை ஏற்பட்டன. அச்சுதானந்தர்  பரப்பிய ஜாதிக்கு எதிரான உணர்வு ஓர் இயக்கமாக மாறி மாநில முழுவதும், குறிப்பாகக் கான்பூர், லக்னவ், அலாகாபாத், வாராணசி போன்ற நகர்ப்புற மய்யங்களில் பரவியது. 

ஒருகாலத்தில் இந்தியாவில் இருந்த அசலான குடிமக்களை ஆதி இந்துக்கள் என்று அழைத்தனர். அவர்கள்தான் இன்றைய தலித் மக்களுடைய முன் னோர்கள். அவர்கள் வேதத்துக்கு முந்தி இருந்ததாகச் சொல்லப்படும் சமநீதி நிறைந்த மதம் ஒன்றினைப் பின்பற்றினர். ஆரியர்கள் ஆதி இந்துக்களை - தாசர்கள், தஸ்யூக்கள் என்று அவர்கள் குறிப்பிட்டவர்களை - வீரத்தினால் அல்ல, வஞ்சகத்தாலும் ஏமாற்றும் தன்மை யாலும்  கைப்பற்றி ஆதிக்குடிமக்களை ஏழ்மைக்கும் அடிமைத்தனத்திற்கும் ஆளாக்கினர். யாரெல்லாம் மிக உற்சாகமாக சமத்துவத்தைப் போற்றினார்களோ, அவர்கள் எல்லாம் மிக மிகத் தரத்தில் கீழ்த் தள்ளப் பட்டார்கள். அதனால் இந்துக்களும் தீண்டப்படாத வர்களும் என்றும் இரு துருவங்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

முக்கியமாக, தலித் சிந்தனையாளர்கள் தங்கள் சொந்த அறிவொழுங்கு (கல்வி) அமைப்பை உருவாக்க வேண்டும் என்றார்கள். அதன் வாயிலாகத் தங்கள் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும், மனுவி லிருந்து காந்தி வரை புரிந்து கொள்ள முடியும். அதன்வழி தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெறமுடியும். வெறும் சீர் திருத்தவாத அணு குமுறையை எடுப்பதை விட்டு, சமூக அநீதியையும் ஜாதிப்பிரிப்பையும் வளர்க்கும் கலாச்சார ஒழுங்கமைவை முற்றிலுமாகச் செப்பனிட வேண்டும். அவர்கள் வார்த்தைகளை எடுத்துரைக்கும் கரே (1984: 85) அவர்களது விதித்தல்களைப் பின்வருமாறு சுருக்கி உரைக்கிறார்:

தங்கள் எதிர்ப்பியக்கத்தின் மய்யமான தாழ்த்தப் பட்டவர்களின் தனி அடையாளம் என்பதை உறுதிப் படுத்தி, அச்சுதானந்தர் ஆதி-இந்து சபை என்பதை 1920களில் ஏற்படுத்தினார். நகர்ப்புற தாழ்த்தப்பட்ட வர்களில் படித்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வலைப்பின்னல் வாயிலாக அந்தந்தப் பிரதேசத்தில் சபை தனது செயல்பாடுகளைப் பரப்பியது. அதன் தலைவர்கள் உள்ளூர் ஜாதிப் பஞ்சாயத்துகளிலும் சமூக - மதக் கூட்டங்களிலும் பேசுவதற்குக் கால முறை யாக அழைக்கப்பட்டனர். கான்பூரின் ரவிதாசிகளும் (தீண்டப்படாதவரின் அமைப்பு) பெருக்குவோர்களும் அச்சுதானந்தரைத் தங்கள் தலைவராகப் போற்றித் தங்கள் கூட்டங்களில் அவரைப் பேச அழைத்தனர். அலகாபாத்திலும் லக்னவிலும் ரவிதாசிகள் இந்த இயக்கத்திற்குத் தங்கள் ஆதரவை வழங்கினர். உயர்ஜாதி இந்துக்களிடமிருந்து தாங்கள் தனித்துப் பிரிந்ததைக் கொண்டாடப் பொதுக்கூட்டங்கள் நடத் தினர். அலகாபாத்தில் 1928-29இன் கும்பமேளா ஆதி-இந்துமதத்தின் உரத்த முழக்க அறிவிப்பைக் கேட்டது. மேளாவில் ஆதி-இந்து பக்திக்குழுக்கள் யாவினதுமான ஒரு மகோத்சவம் நடத்தப்பட்டது. அதில் கபீர்பந்த்தி, ரவிதாசி, சிவநாராயணி குழுக்கள் பங்கேற்றன.

ஆதி-இந்து விடுதலைக் கருத்தியலின் மிக முக்கியமான கூறு, வெகுமக்கள் கல்வி. சமூக, கலாச்சார விடுதலையிலும், பொருளாதார நிலையின் மேம் பாட்டிலும் கல்வியின் பங்கினை அதன் தலைவர்கள் வலியுறுத்தினர். உயர் ஜாதிகள் தாழ்த்தப்பட்டவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு அவர்களது எழுத்தறி வின்மைதான் முக்கியக் காரணம். அவர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகள் வழங்கும் வேலைகளிலிருந்து ஒதுக்கிய தற்குக் காரணமும் அதுவே. வாழ்க்கை, மதம், கலாச்சாரம் பற்றிய பார்ப்பனச் சிந்தனைகளிலிருந்து விடுபட்டுச் சுயசிந்தனைக்கும், தன்னிச்சையான உலகப் பார்வையை உருவாக்கிக் கொள்வதற்கும் கல்வியே முக்கியமானது. விமரிசனச் சிந்தனையும் ஆழ்ந்து உள்நோக்கிய சிந்தனையும், உண்மையான அறிவுக்கும் பாதைகள். இவை உண்மைக்கும் பொய்ம்மைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் கண்டறிய உதவி செய்யும். இப்படி வேறுபாடு கண்டறிதல், சமூகத்தில் ஒருவனது கீழ்ப்பட்ட அந்தஸ்திற்கான பொருத்தமின்மை, பொய்ம்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் என்று சக தாழ்த்தப் பட்டவர்களுடன் உரையாடும்போது அச்சு தானந்தர் கூறினார்.

அச்சுதானந்தர் சிறந்த இலக்கியவாதி நாடக எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர் ஆவார்.

கட்டை விரலை துரோணாச்சாரியாரிடம் தானமாக கொடுத்த ஏகலைவன் பற்றியெல்லாம் பேசுகிறார். அச்சுதானந்தர். சம்பூகன் கொலை நியாயமானதா என்ற வினாவை எழுப்பினார்.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் மாநாடுகளை நடத்தினார். இதுபோல் 11 மாநாடுகளை நடத்தியுள்ளார். 1917இல் டில்லியிலும் 1928இல் சென்னை யிலும் அத்தகைய தாழ்த்தப்பட்டவர்களின் எழுச்சி மாநாடுகளை நடத்தியுள்ளார்.

பஞ்சமர்களும், சூத்திரர்களும் இணைந்து பார்ப் பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்று போர்க் குரல் கொடுத்தார்.

பார்ப்பனர்களைவிட வெள்ளையர்கள் மேலான வர்கள் என்றார். கல்வியை வெள்ளையர்கள்தான் கொடுப்பார்கள் - பார்ப்பனர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது என்றார்.

(வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருக்கும்போதே பார்ப்பனர் - பார்ப்பன அல்லாதோர் பிரச்சினைக்கு ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் இங்கு டெமாக்கிரசி இருக்காது 'பிராமினோ கிரசி' தான் இருக்கும் என்று 1925இல் சேலம் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் கூறியதை இங்கு நினைவு கூரலாம்).

சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வந்த போது - தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், நீதிக் கட்சியும், வரவேற்றதுபோலவே அச்சுதானந்தர் அவர்களும் பெருந்திரளோடு வரவேற்றார்.

60 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தார் - அவர் வரலாறு இருட்டடிக்கப்பட்டு விட்டது. சமூக நீதியாளர்களை நாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம்.

உத்தரப்பிரதேசத்தில் அச்சுதானந்தர் போர்ப்பறை கொட்டினார் என்றால் பஞ்சாபில் மங்கூராம் 1925ஆம் ஆண்டில் ஆதிதர்மம் என்ற ஓர் அமைப்பை நிறுவினார். ஒடுக்கப்பட்ட மக்களாகிய நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். 7 கோடி பேர்கள் எங்களுக்கு எஜமானர்கள் பார்ப்பனர்களா? என்ற கேள்வியை எழுப்பினார். கசாப்புக் கடைக்காரனிடம் ஆடுகள் உரிமையை எதிர்பார்க்க முடியுமா? என்று கேட்டார்.

செருப்புத் தைக்கும் ஒரு தொழிலாளியின் மகன் மங்கூராமுக்கு அவர் தந்தை ஆங்கிலக் கல்விக்கு ஏற்பாடு செய்தார். 14 ஆண்டுகள் மங்கூராம் அமெரிக்கா சென்று கல்வி கற்று மீண்டபோது, பழைய நிலையே சமூகத்தில் இருந்ததை கண்டு வெகுண்டார்.

இந்த நாட்டின் அசலான மக்கள் நாங்கள்தான்.  சகோதரர்களே, நாம் ஏழுகோடிப் பேர். ஆனால் இந்து என்று கணக்கிடப்பட்டிருக்கிறோம். நம்மைத் தனித்துப் பிரித்து, சுதந்திரம் அடைவோம். 

மங்கூராமின் திட்டத்தில் முதல் விஷயம், தாழ்த்தப் பட்டவர்களின் புதிய அடையாளமான ஆதி-தர்மச் சமுதாயத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்க வைப்பதுதான். 1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அவரது கட்டளைப்படி, நான்கு லட்சம் தாழ்த்தப் பட்டவர்களுக்கு மேல் தங்களை ஆதி-தர்மிகள் என்று அடையாளப் படுத்திக் கொண்டனர். மீட்புக்கான நோக்கத்துடனும், எண்ணிக்கை பலத்துடனும் ஆதி-தர்மிகள் அரசியல் அமளியில் இறங்கினர். பிற இடங்களிலும் உள்ள தாழ்த்தப்பட்ட அமைப்புகளைப் போல, ஆதி-தர்மிகளும் பார்ப்பனக் காங்கிரஸையும் காந்தியையும் எதிர்த்தனர். சுதந்திரம் என்றால் மேல் ஜாதி இந்துக்கள் அரசாங்கம்தான் என்றால் எங்களுக்குச் சுதந்திரமே வேண்டாம் என்ற முழக்கத்தை எழுப்பினர். பரந்த சமூக ஒருங்கிணைப்புக்குத் தேவையான முன் நிபந்தனையாக இதுவரை ஒதுக்கப்பட்ட சமுதாயங் களுக்குப் பொருளாதார, அரசியல் வட்டங்களில் கவுரவமும், பிரதிநிதித்துவப் பங்கும் வேண்டும் என்று கூறினர். ஜனநாயகக் கொள்கைகளை எழுப்பி, மேல் ஜாதியினர் தங்கள் ஒடுக்குதலைக் கைவிட்டு, நேர்த்தி யாகச் சமநீதி மாற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ஆதி-தர்மிகள் வேண்டினர். 

காந்தியார் - அம்பேத்கர் ஆகியோரின் புனா ஒப்பந்தத்தை எதிர்த்து தந்தி கொடுத்தார் மங்கூராம். (அய்ரோப்பிய சுற்றுப் பயணத்தில் இருந்த தந்தை பெரியார் அவ்வாறே தந்தி கொடுத்ததையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்) தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜன் என்று காந்தியார் சொன்னதை ஏற்க மறுத்தார். நாங்கள் விஷ் ணுவுக்குப் பிறந்தவர்களானால் நீங்கள் சைத்தானுக்குப் பிறந்தவர்களா என்று எதிர் கேள்வி வைத்தார்.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் ஏராள உட்பிரிவுகள், ஜாதிகள் இருந்தன. அண்ணல் அம்பேத்கர் கூறிய ஏணிப்படி ஜாதி அமைப்பு முறை.

கல்வியும், வேலை வாய்ப்பும் தேவை என்ற நிலை: அதனையடுத்து அரசியல் பதவிகள் என்று வந்த போது ஜாதிக் குழுக்களின் தலைவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொண்டது அமைப்பைப் பலகீனப்படுத்தியது. ஜாதிக் குழுக்களின் தலைவர்கள் அவரவர்கள் தங்களை முதன்மைப்படுத்திக் கொண்டனர்.

ஜாதி என்பது ஆண்டிபயாடிக் மருந்தில் சிறிதளவு விஷம் சேர்ப்பதற்குச் சமமாகும். கல்வி வேலை வாய்ப்புக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர தங்கள் ஜாதிதான் உயர்ந்தது என்று ஜாதிப் பெருமை பேசுவதும், அதனை நிலை நாட்டுவதும் விபரீதமானகும்.

நம் நாட்டில் கூட சமூகநீதியை ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டே இன்னொரு பக்கத்தில் ஜாதியப் பெருமை பேசும், ஜாதியை மூலதனமாக வைத்து அரசியல் நடத்தும் தலைவர்களையும் அமைப்புகளையும் பார்க்க முடிகிறது - அந்த நிலை பஞ்சாப்பிலும் ஏற்பட்ட காரணத்தால் அந்த அமைப்பும் பலகீனப்பட்டது.

94 ஆண்டுகள் வாழ்ந்த மங்கூராம் வயது முதிர்ந்த நிலையில் இளைஞர்களிடம் இயக்கத்தை ஒப்படைத்தார்.  பதவி மோகத்தில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு அமைப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டனர் என்பது சோக வரலாறு.

பார்ப்பனர் வெற்றிக்கும், நம் மக்களின் தோல்விக்கும் இந்த மனப்பான்மையும்,  செயல்பாடுகளும்தான் முக்கியக் காரணம். பல சமூகநீதி இயக்கங்கள், அவற்றின் நிறுவனர்கள் மறைவிற்குப் பிறகு மறைந்து போனதற்குக் காரணமே தலைவர்கள் மறைவிற்குப் பிறகு அந்த இயக்கங்கள் பதவி அரசியல் பாதையைத் தேர்ந் தெடுத்துக் கொண்டதுதான்.

தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு அவர்களின் கொள்கை நிலைத்திருப்பதற்கும், இன்னும் சொல்லப் போனால், தீவிரமாக செயல்படுவதற்கும் காரணம் எந்த நோக்கத்துக்காக - எந்த அணுகுமுறையில் தந்தை பெரியார் உருவாக்கிச் சென்றாரோ அந்தத் தடத்தில் சறுக்கல் இல்லாமல் திராவிடர் கழகம் பயணிப்பதுதான்' என்றார் கழகத் தலைவர்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் வரவேற்புரையாற்ற, கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் நன்றி கூற காணொலி  உரை நிறைவுற்றது.