ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
உன்னவனும் என்னவனும்!
August 15, 2020 • Viduthalai • மற்றவை

உனக்கும்

ராமசாமிதான்

          எனக்கும்

          ராமசாமிதான்!

உன்னவன் 

காவிய நாயகன்!

          என்னவன்

          காலத்தின் நாயகன்!

முனிவரோடு சென்று 

வேள்வி காத்தவன்

உன்னவன்!

          வேள்விகள் எதிர்த்து 

          கேள்வி கேட்டவன்

          என்னவன்! 

மாய மான் துரத்தி

மாமியைத் தொலைத்தவன்

உன்னவன்!

          அறிவைப் புகுத்தி

          பூமியைப் புரட்டியவன்

          என்னவன்!

மறைந்திருந்து

தாக்கியவன்

உன்னவன்!

 

          நேருக்கு நேர்

          சமர் செய்தவன்

          என்னவன்!

குகனோடு

ஐவரானவன்

உன்னவன்!

          மானுடத்தையே

          அரவணைத்தவன்

          என்னவன்!

சாஸ்திரத்திற்காகச்

சம்பூகனைக் கொன்றவன்

உன்னவன்!

          சம்பூகனுக்காகச்

          சாஸ்திரத்தைக் கொன்றவன்

          என்னவன்!

சலவைக்காரனால்

அழுக்கானவன்

உன்னவன்!

          சலவைக்காரனையும்

          துவைத்து நிமிர்த்தியவன்

          என்னவன்!

உன்னவன்

கால்பட்டு

அகலிகை விழித்தாளாம்!

          என்னவன்

          சொல் கேட்டு

          பெண்ணெனும் பேரினமே எழுந்தது!

உன்னவனின்

செருப்புகள் அரசாளலாம்!

          என்னவனின்

          நெருப்பு மக்களை ஆளும்!!

               - பெ.கனகவேல்