ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இலங்கை கடற்கொள்ளையர்கள் வன்முறை தமிழக மீனவர்களின் வலைகள் பறிப்பு
September 7, 2020 • Viduthalai • தமிழகம்

வேதாரண்யம்,செப்.7  நாகை மாவட்டம் வேதார ண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுதுறை ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான படகில் கோபி (46), சுகுமாறன் (42), வேலவன் (45), காளிதாஸ் (20) ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 4.9.2020 அன்று பிற்பகல் 2 மணியளவில் மீன்பிடிக்கச் சென்று கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந் தனர். அப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆறு பேர் இரண்டு படகில் வந்து மீனவர்களை காமகுரோத வார்த்தைகளால் திட்டி அவர்கள் படகில் வைத்திருந்த டார்ச்லைட், திசைகாட்டும் கருவி, 20 லிட்டர் டீசல், 600 கிலோ எடையுள்ள ரூபாய் மூன்று லட்சம் மதிப்புள்ள வலைகளை அறுத்துச் சென்று விட்டனர். மேலும் கோபி என்ற மீனவரை இரும்பு கம்பியால் தாக்கி மண்டையை உடைத்தும், சுகுமாறன் வேலவன் ஆகியோரைத் தாக்கியும் விரட்டி அடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் கடந்த 5.9.2020 அன்று அதிகாலை கரை திரும்பி பஞ்சாயத்தாரிடம் விவரம் தெரிவித்துவிட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தினரிடம் புகார் அளித்துள்ளனர்.

 

இணைய வழிக் கல்வி கட்டாயமல்ல

தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு

சென்னை,செப்.7 இணைய வழிக் கல்வியில் சம வாய்ப்பைப் பெறமுடியாமல் ஏழை,எளிய மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், இணைய வழிக் கல்வி கட்டாயமல்ல என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வரும் நிலையில், அரசு பள்ளிகளிலும் பாடங்களை நடத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது.  அதன்படி கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல், 14 தொலைக்காட்சிகளின் மூலம் வகுப்பு வாரியாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது.

இதனிடையே, மாணவர்களிடம் இணையம்மூலம் கல்வி கற்க ஏற்ற சூழல் நிலவுகிறதா? என்பதை கண்டறிய தமிழகம், கருநாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 95விழுக்காடு மாணவர்களிடம் இணையவழிக் கல்வி மூலம் கல்வி கற்பதற்கு ஏற்ற சூழல் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், தமிழகத்தில் 1,740 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 3 விழுக்காடு மாணவர்களிடம் மட்டுமே திறன்பேசி இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,  இணைய வழிக் கல்வியை பள்ளி மாணவர் களுக்கு எந்த காரணத்தைக் கொண்டும் கட்டாயப்படுத்தக் கூடாது. பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தினால் மின்னஞ்சல் மூலம் பெற்றோர் புகார் தெரிவிக்கலாம். மேலும், இணையவழி வகுப்புகளுக்காக வருகைப் பதிவேடு, மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது. அனைத்துப் பள்ளிகளிலும் இணைய வழிக் கல்வியைக் கண்காணிக்க ஆலோசகர்களை  நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.