ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இராம ராஜ்ஜியம்
August 6, 2020 • Viduthalai • தலையங்கம்

இராம ராஜ்ஜியம்?

ஒரு பட்டப் பகலில் 450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தை, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், நிர்வாண சாமியார்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி இடித்துத் தரை மட்டமாக்கி விட்டனர்.

மதச் சார்பின்மை பேசும் இந்தியாவின் இலட்சணம் இதுதானா என்று உலக நாடுகள் உதட்டைப் பிதுக்கின.

உத்தரப்பிரதேச மாநில முதல் அமைச்சராக இருந்த கல்யாண்சிங், "உயர்நீதிமன்றத்தில், நடக்கப்போவது கரசேவை தான் வேறு எந்த வன்முறையும் வெடிக்காது  - உத்தரவாதம் தருகிறேன்?" என்று சத்தியம் செய்தார்.

ஆனால் நடந்தது என்ன? பாபர் மசூதி அடித்து நொறுக்கப்பட்டது (இன்னொரு கால கட்டத்தில் பிஜேபி மூத்த தலைவர்களின் பேச்சை நம்பி மோசம் போனேன் என்று கல்யாண்சிங் ஒப்பாரி வைத்ததுண்டு) உ.பி. ஆட்சி கலைக்கப்பட்டது என்பது வரலாறு.

இதில் மிகவும் துயரமும், வெட்கமும் பட வேண்டிய கீழ்நிலை என்னவென்றால், இந்தக் குரூரமான நிகழ்வு நடந்து 28 ஆண்டுகள் ஆன பிறகும்கூட, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இதுவரை ஒருவர்கூடத் தண்டிக்கப்படவில்லை என்பதுதான்!

அதைவிட மரியாதைக்கேடு என்னவென்றால் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட பெரிய மனிதர்கள் எல்லாம் இந்தியா வின் பிரதமராகவும், துணைப் பிரதமராகவும் மத்திய அமைச் சர்களாகவும், ஆளுநர்களாகவும் ஆனார்கள் என்பதுதான்.

இருப்பவர்களிலேயே மிகவும் நேர்மையானவர் என்று புகழப்பட்ட வாஜ்பேயி - லிபரான் ஆணையத்தின் அறிக்கையிலே இடம்பெற்ற குற்றவாளிகளுள் ஒருவர். ஆனால், ஆணையம் அப்படி குறிப்பிட்டதற்காக நாடாளுமன் றத்தையே நடக்கவிடாமல் நிலைகுலைய வைத்தனர்.

பாபர் மசூதி இடிப்புக்கு முதல் நாள், லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அடல் பிகாரி வாஜ்பேயி என்ன பேசினார்?

நாளை கரசேவை நடக்கப் போகிறது. கூரிய கற்கள்மீது அமர்ந்து கரசேவை நடத்த முடியுமா? மேட்டை எல்லாம் சமன் செய்து அதன்மீதுதான் கரசேவை நடக்கும் என்று இரட்டை அர்த்தம் தொனிக்க- அதாவது பாபர் மசூதி என்ற மேட்டை இடித்து, சமப்படுத்தி அதன்மீது அமர்ந்து கரசேவை நடக்கும் என்று பேசினாரா இல்லையா?

இன்னொரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தை இடித்தவர்களிடத்திலேயே, இடித்தவர்களின் மதம் சார்ந்த கோவிலைக் கட்டிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றால் இதன் பொருள் என்ன?

கொள்ளை அடித்தவன் கையிலேயே வீட்டுச் சாவியையும் வீட்டையும் பொருளையும் ஒப்படைத்தது போன்றது ஆகாதா?

இந்தியாவில் நூற்றுக்கணக்கான புத்தக் கோயில்கள் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன. இதற்குக் கல்வெட்டு ஆய்வுகள், தொல்பொருள் ஆய்வுகள் எல்லாம் நிரம்பவே உண்டு.

அயோத்தியில் செய்ததுபோல - சம்பந்தப்பட்ட இந்துக் கோயில்களை எல்லாம் புத்தக் கோயில்களாக மாற்றத் தயார்தானா? அத்தகைய கேள்விகள் எழத்தானே செய்யும்.

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலே புத்தர் கோயில்தான். அந்த உருவம் புத்தரின் நின்ற கோலம் என்று ஆய்வுகள் வெளிவந்துள்ளனவே! என்ன செய்ய உத்தேசம்? பிரச்சினைக்குரிய அயோத்தி இப்போது தோண்டும் போது பவுத்தக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்ததாகத் தானே செய்திகள் வந்துள்ளன. ஒரு பவுத்தத் துறவி கூட அதற்காகப் பட்டினிப் போராட்டத்தில் இறங்கினாரே கடந்த மாதத்தில்! என்ன சொல்லப் போகிறார்கள் இப்போது?

அயோத்தியில் நடந்திருப்பது நியாய விரோதமான, நீதிக்கு விரோதமான, நேர்மை, பண்பாடு - அறிவு நாணயம் இவற்றிற்கு நேர் எதிரான மிகப்பெரிய தீங்காகும். தீய செயலுக்கான முடிசூட்டு விழாவாகும்.

இதற்கு ஆட்சி அதிகாரம், நீதிமன்றம்வரை துணை போய் விட்டதே என்று எண்ணும்பொழுது வலுத்தவன் கை ஓங்குவதுதான் 'ஒன்னாம் நம்பர் நாயகம்' என்றாகிடவில்லையா?

இதற்குள்தான் ஒழுக்கம், கட்டுப்பாடு, நாகரிகம் என்பதெல்லாம் உயிர் வாழ வேண்டும் போலும்!

130 கோடி மக்கள் உள்ள ஒரு துணைக் கண்டத்தில் பிரதமர் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு தலைமை தாங்கி இருக்கிறார். இது எதைக் காட்டுகிறது? அயோத்தியில் நடைபெற்ற சடங்குகள், மந்திரங்கள், வேள்விகள், கோஷங்கள் அதில் பங்கேற்றவர்களைக் கொண்டு, இது யாருக்கானது என்பதும் விளங்கிடவில்லையா?

இராமனின் நியாயமே வருணசிரமத் தன்மை கொண்டது என்கிறபோது - அவன் பெயரால் ராஜ்ஜியம் அமைக்க விரும்புவோரின் ராஜ்ஜியம் இப்படித்தான் இருக்கும்.