ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இராமஜென்ம பூமி டிரஸ்ட்டின் தலைவர் மகந்த் நிருத்திய கோபால் தாசுக்கு  கரோனா தொற்று
August 14, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் உள்பட மற்றவர்கள் மருத்துவ நடைமுறைப்படி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டாமா?

நாட்டின் பிரதமர் இதுபற்றி யோசிக்கவேண்டும்!

இராமஜென்ம பூமி டிரஸ்ட்டின் தலைவர் மகந்த் நிருத்திய கோபால் தாசுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் உள்பட மற்றவர்கள் மருத்துவ நடைமுறைப்படி தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டாமா? நாட்டின் பிரதமர் மோடி இதுபற்றி யோசிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில்  ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்ற இராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் - பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டார். அவருடன் உ.பி. ஆளுநர் ஆனந்தி பென்படேல், முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.

அரசமைப்புச் சட்ட மாண்புகளை - விழுமியங்களை

மீறிய செயல் அல்லவா?

மதச்சார்பற்ற அரசின் கோட்பாடுகளை  பிரமாணத்தின்மூலம் ஏற்ற அரசின் முக்கியப் பொறுப்பாளர்கள், இப்படி ஒரு குறிப்பிட்ட மத விழாவில் கலந்துகொள் வதும், அரசு இயந்திரத்தை முழுமையாக அதற்கு முடுக்கிவிட்டதும் அரசமைப்புச் சட்ட மாண்புகளை - விழுமியங்களை மீறிய செயல் அல்லவா என்ற கேள்விகள் நாட்டில் எழுந்தன; எவருமே பதில் அளிக்க வில்லை. தங்களுக்குள்ள அரசியல் பெரும் பான்மை நாடாளுமன்றத்தில் உள்ளது என்ற ஒரே துணிச்சலால் இப்படிக் காரியங் கள், அதுவும் கரோனா கொடுந்தொற்று (கோவிட் 19) நாளும் பெருகி, பலி எண் ணிக்கை கூடுதலாகி உலகின் பற்பல நாடுகளின் வரிசையில் முன்னே போகும் அவலமும் இருக்கும் நிலையில், இப் படிப்பட்ட நிலைப்பாடு சரியா என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை!

இராமஜென்ம பூமி டிரஸ்ட்டின் தலைவருக்குக் கரோனா

தொற்று உறுதி!

அவை ஒருபுறம் இருக்கட்டும். இன்று வந்துள்ள ஒரு செய்தி.

இராமர் கோவில் கட்டுவதற்கான இராமஜென்ம பூமி டிரஸ்ட்டின் தலைவர் மகந்த்  நிருத்திய கோபால் தாசுக்கு  கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் இராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்திராவின் தலைவர் மட்டுமல்ல; மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி டிரஸ்டின் தலைவரும்கூட!

அவர், உ.பி. முதல்வர் தலையீட்டின் காரணமாக, குர்காமில் உள்ள மெடிண்டா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி இன்றைய நாளேடுகளில் வந்துள்ளது.

மருத்துவ நடைமுறைப்படி தனிமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாமா?

இந்த நிலையில், அவ்விழாவில் கலந்து கொண்டு, அவரை நேரில் பார்த்துப் பேசியவர்கள் - நமது பிரதமர் மோடி அவர்கள், அவ்விழாவை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்தோர் ஆகியோர் மருத்துவ நடைமுறைப்படி தங்களைத் தனிமைப்படுத்திக் கொண் டிருக்க வேண்டாமா?

பிரதமர் - அவர் எக்கட்சியினராக இருந்தாலும், நமது நாட்டின் பிரதமர்; அவரது உடல்நலனும், ஆரோக்கியமும் பொதுக் கவலைக்குரிய ஒன்றாகும். இதில் யாருக்கும் அரசியல் பார்வையே வராது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஏற்கெனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா, கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டார்; சிகிச்சையும் பெற்று வருகிறார்.

முன்பு தன்னை வந்து சந்தித்தவர்களை யும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படிக் கூறினார் என்ற செய்தியும் வந்துள்ளது.

கரோனா கொடுந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முழு நலம் பெற்றுத் திரும்பவேண்டும்; அதிலும் பொதுவாழ்விலும், அரசியல் பொறுப்பு களிலும் உள்ள முக்கியஸ்தர்கள் - நலம் பெற்று, தமது பொதுத் தொண்டைத் தொடர வேண்டும் என்ற மனிதநேய உணர்வு அனைவருக்கும் உண்டு.

‘இந்து' ஆங்கில நாளேட்டில்  ...

இந்நிலையில், பிரதமர் அவர்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் இராமன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மகந்த்  நிருத்திய கோபால் தாசுடன் உரையாடி உள்ள நிலையில், அவர் தனிமைப்படுத்திக் கொள்வாரா என்ற ஒரு கேள்விபற்றி இன்று (14.8.2020) ‘இந்து' ஆங்கில நாளேட்டில்  ‘‘However, a source in the Prime Minister’s Office said that the PM was “not isolating” and is “on course to the Independence Day address''    என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

‘‘எப்படியிருப்பினும் பிரதமர் அலுவ லகத்திலிருந்து கிடைத்த ஒரு தகவலின்படி பிரதமர் மோடி தனிமைப்படுத்திக் கொள்ள மாட்டார்; சுதந்திர தின உரையை நிகழ்த்த ஆயத்தமாகி வருகிறார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொதுநலக் கண்ணோட்டத்தில்

மிகவும் முக்கியமானதாகும்

அவர் நலத்துடன் இருக்கவேண்டும் என்பது முக்கியம்; அதேநேரத்தில், அரசுகளும், மருத்துவர்களும் கூறியுள்ள அறிவுரை நடைமுறைகளையும் அவர் தவறாது கடைப்பிடிப்பது - நாட்டின் பொதுநலக் கண்ணோட்டத்திலும் மிகவும் முக்கியமானதல்லவா!

 

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை 

14.8.2020