ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இயக்க வரலாற்றில் "சந்திப்பும் - திருப்பமும்"
September 19, 2020 • Viduthalai • மற்றவை

அதிரடி க.அன்பழகன்

மாநில கிராமப்புறப் பிரச்சார அமைப்பாளர், திராவிடர் கழகம்

எந்த ஓர் இயக்கத்திற்கும் தத்துவம் என்பது தலையாயது. அத்தத்துவத்தை தலைமை ஏற்று நடத்திடும் - இலக்கு நோக்கி இயக்கிடும் தலைமை என்பது தத்துவத்தின் நோக்கத்தை வெற்றி அடையச் செய்யும் பங்கினை முழுதும் பொறுப்பேற்று முடித்திடும் ஆளுமை மிக்கது.

உயர்ந்த தத்துவத்தைக் கொண்ட இயக்கம் அல்லது அமைப்பு தலைமைத்துவத்தின் பொருத்தப்பாடின்மை காரணமாக நோக்கத்தை வென்றெடுக்க முடியாமல் போனதற்கு உலகில் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.

இயக்கத்திற்குத் தலைமை ஏற்ற பெரியார், அவரைத் தொடர்ந்து அன்னை மணியம்மையார், அவருக்கு பிறகு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் என மூன்று தலைமையில் பெரியாரின் திராவிடர் கழகமும் தொடர்ந்து இலக்கு நோக்கி முன்னெடுக்கப்படுவதோடு, தோல்வி அறியா இயக்கமாக - வளரும் இயக்கமாக - களமாடும் இயக்கமாக இருப்பது தலைமையின் ஆளுமையை - அறிவுடைமையை - வீரமிகு உணர்ச்சியை உலகிற்கு பறை சாற்றுகிறது.

இப்பெருமைக்குரிய இயக்கத்தின் வரலாற்றில் கண்ட களங்கள் - வென்ற இலட்சியங்கள் ஏராளம். இயக்கத்தின் இரத்த நாளமான தொண்டர்களின் அளப்பரிய செயல்கள், கொள்கையை நிலைநாட்டி ஆற்றிய சாதனைகள், மயிர்க்கூச்சரியச் செய்யும் வரலாற்றுக்குரிய நிகழ்வுகளாகும்.

இத்தகு பெருமைக்குரிய இயக்கத்தின் வரலாற்றில் பல சந்திப்புகள் பல திருப்பங்களை உருவாக்கியுள்ளன. அவற்றில் சில முக்கிய சந்திப்புக்களும், அதனால் விளைந்த திருப்பங்களையும்  இச்சிறு கட்டுரையின் வழியாகக் காண்போம்!

ஆசிரியர் கி.வீரமணி - வடபுலத்தவர்கள் சந்திப்பு:

ஆரிய ஆதிக்கத்தின் விளைவாக வர்ணதர்ம கொடுமையால் படிக்கும் உரிமை இழந்த சூத்திர, பஞ்சமர்களுக்கு கல்வி - வேலைவாய்ப்பு மிக முக்கியம் என்பதறிந்த பெரியார் வகுப்புவாரி உரிமை எனும் சீரிய திட்டத்தை - சமத்துவ சமுதாயம் பார்த்திட - ஜாதி நோய் முற்றிலும் அகன்றிட பெரியார் தந்த அந்த இடஒதுக்கீடு எனும் அருமருந்து சென்னை .... வேரூன்றி வளர்க்கப்பட்டு, இன்றைய தினம் தமிழ்நாடு மாநிலத்தில் 69 சதவிகிதம் எனும் நிலைக்கு உயர்ந்துள்ளது.

இந்த இடஒதுக்கீடு என்பது நடுவண் அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கு இல்லாததால், நாடெங்கும் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சமூகநீதி மறுக்கப்பட்டதைப் போக்கிட மண்டல் குழு பரிந்துரை செய்திட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவிகிதம் நடுவண் அரசில் இடஒதுக்கீடு - கல்வி, வேலைவாய்ப்பில் கொண்டு வர ஆசிரியர் அய்யா அவர்கள் அரும்பாடுபட்டார்கள்.

வடபுலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைக்குப் போராடக்கூடிய தலைவர்களான வி.பி.சிங், ஜெயில்சிங், சீதாராம் கேசரி, அர்ஜுன்சிங், ராம் சுயதேவ்சிங், கர்பூரிதாகூர், சந்திரஜித் யாதவ், மவுரியா, யன்பால்சிங், காஷ்யப் போன்றவர்களையும், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கும் போராடும் தலைவர்களான கன்சிராம், மாயாவதி, ராம் விலாஸ் பஸ்வான் போன்றவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பலமுறை  நேரில் சந்தித்து கலந்துரையாடல், கருத்தரங்கம், பிரதமர், குடியரசுத் தலைவர்களை நேரில் சந்திப்பு என நடத்தினார்கள். நாடெங்கும் 42 மாநாடுகள், 16  போராட்டங்களை நடத்தி பிற்படுத்தப்பட்டோருக்கான மண்டல் பரிந்துரை எதிரொலிக்கச் செய்தார். இந்திய அரசியலில் மதவெறி அணி - மதச்சார்பற்ற அணி என இனம் பிரித்தது. சமூகநீதிக்குரல் பாராளுமன்றத்தை அதிரச் செய்தது. தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயித்தது.

வி.பி.சிங் ஆட்சி வந்தது. மத்திய அரசில் இடஒதுக்கீடு கிடைத்தது. இதற்காக பெருவிலை தரப்பட்டது. வி.பி.சிங். அவர்களின் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். காங்கிரஸ் ஆட்சியில் சீதாராம் கேசரி, அர்ஜுன்சிங் ஆகியோர் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை மீண்டும் உறுதி செய்து சாதனை படைத்தனர்.

ஆசிரியர் அவர்கள் வடபுலத்தவர்களோடு நடத்திய சந்திப்புகள் - வரலாற்று முக்கியத்துவம் பெற்று இந்திய வரலாற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கு சமூகநீதியை வென்றெடுக்கும் திருப்பமாக அமைந்தன.

அன்னை மணியம்மையார் - காமராசர் சந்திப்பு:

1957- திராவிடர் கழக வரலாற்றில் ஏன் இந்திய வரலாற்றில் மிப்பெரிய போராட்டம் நடைபெற்ற ஆண்டு என்பது சரித்திரச் சிறப்புக்குரியது. இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதியை அங்கீகரிக்கும் சட்டப்பிரிவை தீயிட்டுக் கொளுத்தும் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்டது. 10,000க்கு மேற்பட்டோர் கொளுத்தினார்கள். 3000க்கு மேற்பட்டோர் சிறை ஏகினர். மூன்றாண்டு வரை கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. இருபது பேர் வரை இறந்தனர். சிறைக்குள்ளே இருவர் (பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி) ஆகியோர் இறந்து - சிறைக்குள்ளேயே புதைக்கப்பட்டனர். அச்சமயம் பெரியார் சிறையிலிருந்தார். அன்னை மணியம்மையார் இயக்கத்தை வழி நடத்தினார்.  அம்மா அவர்கள் முதலமைச்சர் காமராசரைச் சந்தித்து வாதிட்டு புதைக்கப்பட்ட பிணங்களை தோண்டிப் பெற்று மாபெரும் மக்கள் ஊர்வலத்தோடு இறந்தவர்களின் இறுதி நிகழ்வை நடத்தினார்.

ஊர்வலப் பாதைக்குத் தடை வந்தபோது உடனடியாக மறியலில் ஈடுபட்டு, அதனால் அனுமதி கிடைத்ததா வீரவணக்க ஊர்வலத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

சமத்துவத்திற்குத் தடையாக - மனித சமூகத்திற்கு இழிவு தரும் கேடாக இருந்த ஜாதியை நாட்டின் சட்டமே ஏற்கிறது என்பது பெரும் கொடுமை என்று பெரியார் கொதித்தெழுந்தார்.

இப்போராட்டத்தில் 3 ஆண்டு தண்டனை என்பதையறிந்தும் 10,000க்கு மேற்பட்டோர் கொளுத்தியுள்ளனர் (இது அரசின் புள்ளி விவரம்) உண்மை செய்தி, மேலும் பல்லாயிரத்தவர்கள் கொளுத்தினார்கள் என்பது பல பத்திரிகைகள் வழி அறிய முடிவதாகும்.

அன்னை மணியம்மையார் முதலமைச்சர் மாண்புமிகு காமராஜரை நேரில் சந்தித்ததன் விளைவு - சிறையில் சட்ட விதிமுறைக்கு எதிராக புதைக்கப்பட்ட உடல்கள் மீட்கப்பட்டன. மற்றொன்று புதைக்கப்பட்டவர்கள் ஓர் உன்னத இயக்கத்திற்காக, அரசியல் சட்டத்தின் குறைபாட்டையே நீக்குவதற்காக என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

உலகம் காணா இப்போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு வீரவணக்கம் செய்திட - மக்கள் திரள் முன் உடல் வைக்கப்பட்டது.

அதுவரை தந்தை பெரியாரின் அணுக்கத் தொடர், தாதி, இணையர், செயலாளர் என்ற அளவில் பார்க்கப்பட்ட மணியம்மையார் போர்க்குணம் மிக்க தலைமைப் பண்பு மிக்கவர் என்பதற்குச் சான்றாக அமைந்த சந்திப்பு அது!

தந்தை பெரியார் - காந்தியார் சந்திப்பு:

தந்தை பெரியார் அவர்கள் மகாத்மா என்று அழைக்கப்பட்ட காந்தியாரை 1927ஆம் ஆண்டு அன்று பெங்களூரில் சந்திக்கிறார்.

காங்கிரசலிருந்து வெளியேறினாலும் கூட மகாத்மா காந்தி மீது கொஞ்சம் நம்பிக்கை கொண்டவராகவே பெரியார் இருந்திருக்கக்கூடும். ஆனால், அவருக்கு வர்ணாசிரமத்தின் மீது இருக்கும் நம்பிக்கை குறித்து உறுதிப்படுத்திக் கொள்ள பயன்பட்டது 1927ஆம் ஆண்டு நடைபெற்ற பெரியார் காந்தியார் சந்திப்பு. ஆம், பெரியார் பார்வையில் மகாத்மா காந்தி, ஸ்ரீமான் காந்தி, காந்தியடிகள், காந்தியார் என்று மாறிய திருப்பம் இச்சந்திப்பின் விளைவுதான்! இருவரும் அதற்கு முன் சந்தித்திராதவர்கள் அல்ல. மகாத்மா காந்தியின் தொண்டராக மகாத்மா அறிவித்த போராட்டங்களையும், காங்கிரஸ் தலைவராக இருந்து தாமே முன்னெடுத்த போராட்டங்களையும் வெற்றிகரமாக நடத்தி எதிர் தரப்பை மட்டும் அல்ல. மகாத்மாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் தான் பெரியார். ஆனால் பார்ப்பனர் ஆதிக்கம் நிறைந்த காங்கிரசில் வெகு மக்களான பார்ப்பனர் அல்லாதார்க்கு உரிய உரிமைகள் கிடைக்காது என்று தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்ட பின் காங்கிரசிலிருந்து 1925இல் வெளியேறினார் பெரியார். 1924 ஆண்டு பெல்காம் காங்கிரசின் போது காந்தியார், பெரியாரைப் பார்த்து, (அன்றைய காலத்தில் ஈ.வெ.ராமசாமி என்று தான் அழைக்கப்பட்டார்) நீங்கள் பிராமண சமூகத்தவரைக் கடுமையாக எதிர்ப்பதாக அறிகிறேன். ஒருவேளை உங்களது கருத்தில் உண்மை இருந்தாலும் பார்ப்பனர்களே வெறுப்புக்குரியவர்களானாலும் அவர்களில் நல்லவர்களே கிடையாதா? என்று கேட்டார். அதற்கு பெரியார், ஆம் எனக்குத் தெரிந்த வரை பார்ப்பனர்களில் நல்லவர்கள் கிடையாது.  சமத்துவத்தை ஏற்போர் கிடையாது. எல்லோரும் வர்ணாசிரம தர்ம வாதிகள்தான் என்றார். இப்படிக் கூறியதும் நான் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன், உங்களுக்கு யாராவது பாராட்டும்படி படுகிறார்களா?, இல்லை என்றார் பெரியார். கோகலேவை மட்டும் காந்தியார் பரிந்துரைத்தார்.

இதற்குப் பிறகு 1927 பெங்களூர் சந்திப்பில் காந்தியாரின் உண்மை மனநிலையைப் புரிந்துகொண்டபின் அவரை தத்துவரீதியாக கடுமையாக எதிர்க்கும் நிலையில் போய்விட்டார். காந்தியாரிடம் தான் தந்துவிட்டு வந்த வாக்குக்காக அந்தச் சந்திப்பின் முழு விவரங்களை அப்போது வெளியிடாத பெரியார்,  அதன் சாராம்சத்தை 28.08.1927 குடிஅரசு இதழில் வெளியிட்டார்.

1, காங்கிரசு என்பதை ஒழிக்க வேண்டியது

2, இந்து மதம் என்பதை ஒழிக்க வேண்டியது.

3, பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது.

என்று குறிப்பிட்டுவிட்டு, இனி இது விசயமாய் காந்தியாரிடம் கலந்து பேசி முடிவு செய்ய ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

ஆனால், காந்தியடிகள்  வர்ணாசிரமத்தை எதிர்த்தால், அவர் நம்பிக்கை வைக்கும் பார்ப்பனர்கள் அவர் உயிருக்கு, ஆபத்தை உருவாக்குவார்கள் என்ற கணிப்பும் பின்நாளில் நிரூபிக்கப்படும் வகையில் கோட்சே என்ற பார்ப்பனரால் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது. அதற்கு முன் வரை காந்தியாரின் பார்ப்பன ஆதரவிற்காக காந்தியை எதிர்த்த பெரியார் அவர் கொலை செய்யப்பட்டதும், காந்தி நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று கூறினார்.