ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இயக்கத்தில் கட்டுப்பாடான ஒற்றுமையையும் கூட்டுப் பொறுப்பையும் உண்டாக்க வேண்டியது மிகவும் அவசியம்
July 22, 2020 • Viduthalai • கழகம்

‘‘ஒப்பற்ற தலைமை-3'' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வில் தமிழர் தலைவரின் சிறப்புரை

சென்னை, ஜூலை 22 இயக்கத்தில் கட்டுப்பாடான ஒற்றுமையையும் கூட்டுப் பொறுப்பையும் உண்டாக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

‘ஒப்பற்ற தலைமை'

கடந்த 4.7.2020 மாலை 5.30 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' (பொழிவு-3) எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

மதுரை கருப்புச் சட்டைப் படை மாநாடு

மதுரை கருப்புச் சட்டைப் படை மாநாட்டின்போது பார்ப்பனர்களும், காங்கிரஸ்காரர்களும் சதியாலோசனை செய்து 12.05.1946 ஆம் தேதி மதுரையில் நடத்தின காலித் தனங்களைப் பற்றிக் காங்கிரஸ் பத்திரிகைகள் ஒரே கட்டுப் பாடாக உண்மைகளை மறைத்து வேண்டுமென்றே பல பொய்களைக் கற்பித்து காலித்தனங்களை ஆதரிக்கும் முறையிலும் கருப்புச் சட்டைப் படையினரைப் பொது மக்கள் வெறுக்க வேண்டுமென்ற தன்மையிலும் வெளி வந்த பல செய்திகள் என் கவனத்துக்குக் கொண்டுவரப் பட்டன. அதில் அசோசியேட் பிரஸ் சேதியும் மேற்கண்ட காரியங்களுக்கு உதவி புரியும் தன்மையிலே இருந்ததையும் பார்த்தேன். இவ்வளவும் போதாமல், டில்லி ரேடியோவும், நமது மாகாண ரேடியோக்களும் பார்ப்பனச் சேதிகளைப் பரப்பியதையும் கேள்விப்பட்டேன். அதன் பிறகு மதுரை சம்பவம் விஷயமாய்க் கருப்புச் சட்டைப் படை மாநாட்டுத் தலைவர் என்ற முறையிலும் திராவிடர் கழகத் தலைவன் என்ற முறையிலும் ஒரு அறிக்கை விட்டிருக்கிறேன். முழு விபரங்களும் சரியானபடி, தெரிய வேண்டுமென்று கருதி அவைகளைத் தெரிந்த பின்பும். இங்கே பேசுகிறேன்.

என் அறிக்கையை இன்றைய காங்கிரஸ் பத்திரிகைகள் சரியானபடி பிரசுரிக்காதென்றும், ரேடியோக்கள் ஒலிபரப் பாது என்றும் எனக்குத் தெரியுமானாலும் நம்மவர்கட்கு அந்தச் சேதிகளை நாம் மறுக்கிறோம் என்பதாவது தெரி யட்டும் என்பதற்காகப் பல பத்திரிகைகளுக்கும் அசோசி யேட் பிரசுக்கும் ஒரு விவரமான அறிக்கை விட்டேன். லிபரேட்டர் தவிர வேறு எந்தப் பத்திரிகையும் சரியாகப் பிரசுரிக்கவில்லை.

மதுரை கருஞ்சட்டைப் படை மாகாண மாநாடு 11ஆம் தேதி காலையில் மதுரை இரயில்வே ஸ்டேஷனிலிருந்து தலைவர்கள் ஊர்வலம் துவங்கிற்று. அந்த ஊர்வலம் சுமார் 5,000 கருப்புச் சட்டைப்படை தொண்டர்களோடு, 50,000 மக்கள் புடைசூழ வாத்திய கோஷங்களுடன் ஆறு மைல் தூரம் மதுரை நகரம் சுற்றிச் சுமார் 11 மணிக்கு ஷெனாய் நகரைச் சேர்ந்த வைகையாற்றில் அமைக்கப்பட் டிருந்த தியாகராயர் - நாகம்மையார் என்ற பந்தலை அணு கிற்று. ஊர்வலத்தில் கோஷங்கள் வானைப் பிளந்தன என்றாலும்,  கோஷங்களில் இயக்கத் தலைவர்களுக்கு வாழ்த்தும், கழகக் கொள்கைகள் இவற்றைச் சொல்லி அவற்றிற்கு வெற்றியும் தவிர பார்ப்பனர், காங்கிரஸ் ஆகியவைகளைப் பற்றியோ மற்றும் “அழிக”, “ஒழிக” என்கின்ற மொழிகள் கொண்ட எவ்வித கோஷமுமோ யாரும் செய்யக்கூடாது என்று கண்டிப்பான திட்டம் செய்து, அம்மாதிரியான கூச்சல் ஏதும் இல்லாமலே வெற்றி கரமாக ஊர்வலம் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது. மாநாடு துவங்கி முறையே பாட்டு, கொடியேற்றுதல், திறப்பு விழா, தலைவர் உரை முறைகளும் மிக்க அமைதியுடனும், உற் சாகத்துடனும் நடைபெற்றன. எனது தலைமை உரையில் கருப்புச் சட்டைப்படைக் கொள்கைகளைப்பற்றி பின்னால் முடிவுரையில் விளக்குவதாகச் சொல்லிவிட்டு முகவுரை யில் பெரிதும் படையினரும், தொண்டர்களும் அடக்கமா கவும், ஒழுக்கமாகவும், நம்மியக்கத்தினர் அல்லாதவர்கள் இயக்கக் கொள்கைகளில் மாறுபாடுடையவர்கள் நம்மிடம் அனுதாபம் காட்டும் முறையிலும் நடந்து கொள்ள வேண் டும் என்றும், எவர் மனமும் புண்படும்படியான எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாதென்றும், குறிப்பாகப் பேசு வதிலும், ஒலி ஒலிப்பதிலும், மற்றவர்களை வசியப்படுத்தும் முறையில் இருக்க வேண்டுமே தவிர நம்மீது வெறுப்பு ஏற்படும்படி இருக்கக் கூடாதென்றும், மிக்க தெளிவாகவும், கண்டிப்பாகவும் நமது சில இயக்கப் பிரமுகர்கள், பிரச்சார கர்கள் என்பவர்கள் மனதிலும் தைக்கும்படியாகவும் பேசிவிட்டு, என் பேச்சு முடிவில் நான் அதிகமாக, நாம் நடந்து கொள்ளவேண்டியவைகளைப் பேசியதற்கும், அவர்களை மிரட்டியதற்கும் மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு, என் பேச்சை முடித்திருக்கிறேன். மற்றும் குறிப்பாகக் காங்கிரஸ் கம்யூனிஸ்டு இயக்கங்களில் இருந்துவரும் பார்ப்பன ஆதிக்கம் ஒழித்து வரும் சகுனம் இப்போது தெரிவதனால் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகளு டைய நட்பைப் பெறவும் முயல வேண்டும் என்றும் பேசி இருக்கிறேன். இந்தப் பேச்சுக்கள் பத்திரிகை நிருபர்கள் பதிந்து கொண்டதையும் பார்த்தேன். சி.அய்.டி. ரிப்போர்ட் டர் மிக்க கவனமாகக் குறித்தவைகளையும் பார்த்தேன்

அடுத்தாற்போல் இரவு நடக்கப் போகும் நாடகமும் மிக்க அடக்கமான தன்மையிலும் நடைபெறவேண்டும் என்றும் திட்டம் செய்தேன். இவ்வளவு ஜாக்கிரதையாக நான் இருந்தும் தொண்டர்களும் ஒழுங்காக நடந்தும், மதுரையிலுள்ள சில பார்ப்பனத் தோழர்கள் இதைப்பற்றி யெல்லாம் கவனியாமல் ஊர்வல ஒழுங்கையும், பெரும் கூட்டத்தையும், ஊர்வலத்தில் கோச்சு வண்டியில் இருந்த தலைவர்களை, சவுராஷ்டிரர்கள், சில பார்ப்பனர்கள் உள்பட அவரவர்கள் வீட்டில் இருந்தபடி வணங்கினதும், மரியாதை செலுத்தினதும் பற்றிய பொறாமையே பிரதான மாகக் கொண்டு, இதற்கு எப்படியாவது ஒரு காரியம் செய்து மக்களிடத்தில் இவர்களுக்கு வெறுப்பு உண்டாக்க வேண்டிய முறையில் சதி செய்ய வேண்டிய அவசியத்துக்கு வந்துவிட்டார்கள். அதில் மதுரை வக்கீல் தோழர் வைத்திய நாத அய்யர் என்பவர் இரண்டு விதத்தில் முக்கியஸ்தராகி அட்டுழியத்தை அவசியமாக்கி விட்டார் என்று தெரிகிறது.

அவையாவன:

  1. மதுரையில் பொதுவாக இருந்து வரும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கிற பேத உணர்ச்சி
  2. தோழர் வைத்தியநாத அய்யர் ஆச்சாரியார் கட்சியைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் அவருக்கு மதுரையில் மதிப்பு இல்லாமல் போனதோடு, அவர் பேரில் மதுரை காங்கிரஸ் பார்ப்பனரல்லாதாருக்கு வெறுப்பு அதிகமாய் இருந்ததும், அவருக்கு அங்கு மேடையே இல்லாமல் இருப்பதும், வீதியில் நடக்கக்கூட போதிய தாராளம் இல்லாமல் இருந்ததுமாகும். இந்த இரண்டு காரியத்துக்கும் பரிகாரம் தேட வேண்டிய முறையில் மதுரை அட்டூழியத்திற்கு அவர் பிறப்பிடக்காரராக ஆக வேண்டியவராகிவிட்டார். அதனாலேயே இந்த அட்டூழி யத்திற்கு வழி சொல்லிக் கொடுக்கவும், துவக்கப்படுவதற்கு செலவு கொடுக்கவும். இவர் பேரில் வெறுப்புள்ள காங்கிரஸ் தலைவர்களைக் கண்டு நேசம் பேசவும் முனைந்தார் என்றும் தெரியவருகிறது

12 ஆம் தேதி காலையில் சில காங்கிரஸ்காரர்கள் முத லில் காலித்தனமாக மதுரையிலுள்ள கருப்புச் சட்டைப் படை காரியாலயத்தில் புகுந்து, கொடியை இறக்கி கொளுத் தியதோடு, அங்குள்ள பிரசுரங்களையும் மற்ற சாமான்களை யும் எடுத்து நாசப்படுத்தியிருக்கிறார்கள். பிறகு வெளியில் கட்டப்பட்டிருந்த இயக்கக் கொடிகளையெல்லாம் அவிழ்த்து நாசப்படுத்தியுள்ளார்கள். இவற்றின் மூலம் காலிகள் தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட வெறியைத் தெருவில் தென்படும் கருப்புச் சட்டைப் படையைச் சேர்ந்த பெண்களிடமும், ஆண்களிடமும் பாய்ந்து அவர் களைத் தாக்குவதில் பயன்படுத்திக் கொண்டார்கள். இதற் குள்ளாகக் கருப்புச்சட்டை படைக்காரர்கள்  கோயிலுக்குள் செருப்புப் போட்டுக் கொண்டு போனார்களென்றும், பெண்களை அவமதித்து விட்டார்கள் என்றும் விக்கிரகங் களைத் தொட்டு விட்டார்கள் என்றும் தகரக்குழாய்மூலம் ஊதி பொது மக்களைக் கிளப்பிவிட ஆரம்பித்து விட் டார்கள்.  இதில் கலந்த சில காலிகள் தாங்களும் கருப்புச் சட்டை போட்டுக்கொண்டு விக்கிரகங்களைக் குறை கூறி இருக்கிறார்கள். அதோடு கூடவே அன்று இரவு “போர் வாள் நாடகம் நடத்தத் தயாராய் இருந்த நடிகத் தோழர், ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்த இடமாகிய திண்டுக்கல் ரோட்டிலுள்ள ‘ராஜபவனம்' என்கிற கட்டிடமாகிய நடிகமணி ராதா அவர்கள் வீட்டிற்குச் சென்று அட்டூழியம் துவக்கிவிட்டார்கள். இப்படிக் காரியங்கள் நடந்து கொண்டிருக்கும் பொழுது செய்கை நடந்த இடத்துக்குச் சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மைல் தூரமுள்ள கொட்ட கைக்குச் சில தொண்டர்கள் வந்து இம்மாதிரி காரியம் டவுனுக்குள் நடப்பதாகத் தொண்டர் தலைவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் என்னிடம் சொன்னார் கள். நான் உடனே யாவரும் கொட்டகைக்குள் வரவேண்டு மென்றும், கொட்டகையை விட்டு வெளியே செல்லக் கூடாதென்றும் கண்டிப்பாகத் திட்டப்படுத்திவிட்டேன்.

ஆனால் சில தொண்டர்கள் நடிகமணி இராதா அவர் களையும், அந்த வீட்டிலுள்ள தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டுமென்று சுமார் 100 பேர்கள் வரையில் அவசரமாக டவுனுக்குள் ஓடியிருக்கிறார்கள். அது எனக் குத் தெரியாது என்றாலும், அந்தக் கூட்டத்தை அப்படியே தடுத்து ஒரு இடத்தில் பந்தோபஸ்தாக வைத்துவிட்டார்கள் என்பதை அறிந்தேன். இந்தச் சேதி தெரிந்த திராவிடர் கழகப் பொதுக்காரியதரிசி தோழர் திராவிடமணி அவர்கள் இந்தத் தொண்டர்களை அழைத்துக் கொண்டு வருவதாகச் சொல்லி, ஒரு சப் இன்ஸ்பெக்டரைக் கூட்டிக் கொண்டு டவுனுக்குள் சென்றார். அவரை வழிமறித்து அடித்து இருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், கொட்டகைக்குள் ஜனங்களுக்கு பெரிய பீதியும், பயமும், ஆத்திரமும், பதட்டமும் ஏற்பட்டுவிட்டன. இதையறிந்த நான் ஜனங் களுக்கு சமாதானம் சொல்லி அடக்கிக் கொண்டு இருந் தேன். அதுபோது ஜில்லா சூப்பிரண்டும் சில போலீஸ் அதிகாரிகளும், நகர மாஜிஸ்டிரேட்டுகளும் கொட்ட கைக்குள் வந்து, நகரத்தில் நடக்கும் காலித்தனங்களைப்பற்றி வருத்தத்தோடு விளக்கி, நம்மை யாவரையும் வெளியில் போகவேண்டாமென்றும், ஜாக்கிரதையாக இருக்க வேண் டும் என்றும், தாங்கள் போதிய பாதுகாப்பு அளிப்பதாகவும் சொன்னார்கள். காலித்தனத்திற்குக் காரணம் கருப்புச் சட்டைப் படைக்காரர்கள் கோயிலுக்குள் பெண்களைக் கேவலப்படுத்தினார்கள் என்பவைகள் சொல்லப்படுகின் றன என்று சொன்னார்கள். நான் அதைக் கூட்டத்தினரிடம் சொல்லிக் கண்டிக்கும் போது டி.எஸ்.பி. அவர்கள் இந்தப் படி உங்கள் தொண்டர்கள் செய்ததாக நான் சொல்ல வில்லை. காங்கிரஸ்காரர்களும், கலகக்காரர்களும் சொல் லுகிறார்கள் என்று சொன்னார். அது காலிகள் அக்கிரமத் தைத் துவக்குவதற்காக இந்த வார்த்தைகளைக் கற்பனை செய்து கொண்டதாக டி.எஸ்.பி. ஜாடையாகக் காட்டுகிறார் என்றும் எண்ணப்பட்டது. அதற்கேற்றாற்போல் வந்த முக்கியமான உத்தியோகஸ்தர்களில் ஒருவர் இன்றைய ஆட்சி அப்படியிருக்கிறதே, நாங்கள் என்ன செய்ய முடியும் என்று வருந்தினார். நான் உடனே போலீசாருக்குச் சம்பிரதாயமாக நன்றி சொல்லிவிட்டு, கூட்டத்தை முடித்துவிட்டு ஜாகைக்குச் சென்றுவிட்டோம். கூட்டம் முடிவதற்கு முன்பே திராவிட மணியும் நல்ல அடி வாங்கிக் கொண்டே திரும்பி வந்துவிட்டார். மாநாட்டு ஜனங்கள் மிக்க அமைதியாக கொட்டகையை விட்டு வெளிவந்து பல பக்கங்களுக்கு தனித்தனியாய்ச் சென்றவர்கள் போக சுமார் 2,000, 3,000 பேர் வரையில் ஷெனாய் நகரில் ஏற் படுத்தியுள்ள பல கட்டடங்களில் போய்த் தங்கிக் கொண்டார்கள். போலீஸ் அதிகாரிகள் மாஜிஸ்டிரேட்டுடன் வந்து சாப்பாட்டுக்கு வெளியில் போகாதீர்கள் என்றும், சாப்பாடு வரும்படி செய்கிறோமென்றும் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். பிறகு விசாரித்ததில் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்த ஓட்டல்களில் காங்கிரஸ்காரர்கள் புகுந்து சாப்பாடுகளை நாசம் செய்துவிட்டதாகவும், சாப்பாடு வராதென்றும் தெரியவந்தது.

கொஞ்ச நேரத்துக்குள் தடிகளுடனும், கல்லுகளுடனும் காலிகள் வந்து பிரதிநிதிகள் தங்கியிருந்த கட்டடங்கள் மீது கல்லெறியவும், உள்ளே நுழையவும் ஆரம்பித்தார்கள். ரிசர்வ் போலீசார் துப்பாக்கிகளுடன் இருந்து அவர்கள் கட்டடங்களுக்குள் புகாமல் தடுத்துவந்தார்கள். எனினும் அவர்கள் கலகமும், கல்வீச்சும் நடந்தவண்ணமாகவே இருந்தனர். இதே சமயத்தில் தோழர் வைத்தியநாதய்யர் வந்து காலிகளுடன் குலாவி, காலிகளின் புகழ் வார்த்தை களைப் பெற்றுக் கொண்டு, ஆசிர்வதித்துவிட்டுப் போனார் என்றும் தெரியவந்தது. கொட்டகையில் தீ பற்றி எரிந்துவிட்டதென்று தெரியவந்தது. போலீசாருக்கும் அடியென்றும், ஒரு போலீஸ்காரர் குத்தப்பட்டாரென்றும், ஜில்லா சூப்பிரண்டுக்கு கல்லடிபட்டு காயம் ஏற்பட்ட தென்றும் போலீசார் காலிகளைச் சுட்டார்கள் என்றும் தகவல்கள் எனக்கு வந்த வண்ணமாக  இருந்தன.

மாலையில் டி.எஸ்.பி., டி.அய்.ஜி., டவுன் மாஜிஸ்டிரேட் முதலியவர்கள் அனுதாபம் தெரிவித்துப் பிரதிநிதிகளை ஊருக்குப் போக வசதிகள் செய்து கொடுப்பதாகவும், எப்போது போகிறார்கள் என்றும் கேட்டனர். ‘காலை முதல் சாப்பாடு இல்லையாதலால் இன்றே அனுப்பிவிடுங்கள் என்று சொன்னேன். அந்தப்படியே ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டு வண்டிகள் அனுப்புவதாகச் சொல்லி சென்றுவிட்டார். ஊருக்குள் ஊரடங்குச் சட்டம் போடப் போவதாகவும், ஆதலால் யாவரும் வெளியில் போவ தற்குப் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொல்லிப் போய்விட்டனர். ஜனங்களும் அன்றிரவே அநேகர் புறப்பட்டு விட்டார்கள். காலிகளால் அடிபட்டவர்கள் சுமார் 100 பேருக்குக் குறையாது எனலாம். காலிகள், பிரதிநிதிகள் தங்கிய இடத்திலிருந்து கொள்ளையடித்ததும், பிரதிநிதிகள் இடத்திலிருந்து அடித்துப் பிடுங்கியதும் ஆன வகையில் நஷ்டம் ஏற்பட்டது சுமார் 5,000, 6,000 ரூபாய் இருக்கலாம். கொட்டகை முதலியவை எரிக்கப்பட்டதில் நஷ்டம் 10,000, 15,000 ரூபாய் இருக்கலாம். வெளியூர் பிரதிநிதிகளில் இரண்டொரு வரைக் காணவில்லை என்று சொல்லப்படுகிறது.

நடிகமணி இராதா அவர்கள் வீட்டில் காலிகள் செய்த காலித்தனத்தினால் நாசமானதும், காணாமல் போனதுமான பொருள் சுமார் 1000 ரூபாய் இருக்கலாமென்று சொல்லப் படுகிறது. பொதுவாக இந்தக் காலித்தனத்துக்குக் காரணஸ் தர்களில் தோழர் வைத்தியநாத அய்யர் அவர்களே முக்கியமானவரும், முதன்மையானவரும் என்று பல இடங்களிலிருந்து சேதிகள் வந்துகொண்டு இருக்கின்றன. அதற்கேற்றாற்போல் கலவரத்துக்கு மறுநாளே மதுரை பார்ப்பனர்கள் ஒன்று சேர்ந்து கருப்புச் சட்டைப் படைக் காரர்களால் தங்களுக்கு பயமாயிருக்கிறதென்றும், மந்திரி கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பத்திரிகைகளில் அறிக்கை விட்டிருக்கிறார்கள். தோழர் வைத்தியநாத அய்யரும் “எங்க அய்யா குதிருக்குள் இல்லை” என்கிற பழமொழியை அனுசரித்துத்தான் இந்தக் கலவரத்தில் பிரவேசித்ததற்குச் சமாதானம் சொல்லும் முறையில் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். அந்த அறிக்கை எந்த விதத்திலும் அதிகாரமுறையில் வைத்தியநாத அய்யருக்கு சம்பந்தப்பட்டதல்ல. அவர் மதுரையில் காங்கிரஸ் பிரதிநிதி என்று ஒப்புக் கொள்ளப்பட்டவருமல்ல. அங்குள்ள காங்கிரஸ் பார்ப்பனர் அல்லாதாருடைய வெறுப்புக்கு ஆளானவர் அப்படிப்பட்டவர் அபாண்டமான ஒரு அறிக்கையை வெளியிட முன்வந்ததானது அவருடைய சம்பந்தத்தை உறுதிப்படுத்தத்தக்கது ஆகும். மந்திரி சபையோ பார்ப்பனர் ஆதிக்கத்தில் உள்ளது, சட்ட சமாதான மந்திரி பார்ப்பனர். இந்த நிலையில் நியாயம் பார்க்கவும், கிடைப்பதும் முடியாததாகும். மதுரை கலவரத்திலிருந்து இனி அவனவனுக்கு அவனவனேதான் பாதுகாப்புக்குப் பொறுப்பாக வேண்டும்.

இவ்வளவு நாள் திராவிடர் கழகம், கருப்புச் சட்டை என்பதை எல்லாம் எவ்வளவோ கட்டுப்பாடாக தந்திரமாக மறைத்து வைத்திருந்த பார்ப்பனப் பத்திரிகைகள் தம்மை யும் அறியாமல் விளம்பரப்படுத்தும்படியான அளவுக்கு வந்துவிட்டார்கள். அவர்களின் விளம்பரத்தால் கருப்புச் சட்டைப்படை, திராவிடர் கழகம் ஆகியவைகளின்  சேதி இந்தியாவெங்கும் பரவ நேரிட்டதானது இரு நல்ல வாய்ப்பு என்றே சொல்லலாம். மதுரை சம்பவத்திற்குப் பிறகும் நம்மவர்கள் பலர் இம்மாதிரி கூட்டங்களுக்கு கருப்புச் சட்டை அணியாமல் வருவதும், நம்மிலேயே பலர் பரிகசிப்பதும், வருந்தத்தக்கதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். இப்படிப்பட்டவர்களை பொதுமக்கள் வெறுக்க வேண்டும். இயக்கத்தில் கட்டுப்பாடான ஒற்றுமையையும் கூட்டுப் பொறுப்பையும் உண்டாக்க வேண்டியது மிகவும் அவசியம். அங்கத்தினர்கள் சேர்ப்பதைப்பற்றி யாரும் சரியானபடி கவலையெடுத்துக் கொள்ளவில்லை. நிதி திரட்ட யாரும் முன்வரவில்லை. மற்றபடி ஆங்காங்கு ஆடம்பரமான காரியங்கள் ஏராளமான பணச்செலவிலும் நடந்து வருகின்றன.

தனிப்பட்டவர்களின் பெருமைக்கும், போகபோகத் துக்கும் பயன்படும் கட்சி பலன் அளிக்காது என்பதோடு நிலைநிற்காது என்றும் சொல்லலாம். சிறுபிள்ளைகளாய் இருக்கிறவர்கள் கட்சிக்காக உழைப்பதை முதலாவதாக வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்காலம் மிக்க நெருக் கடியானது என்பதை உணருங்கள். நம்முடைய வேலை முக்கியமானதும், கஷ்டமானதும் நம்மைத் தவிர வேறு எவரும் செய்வதற்கு இல்லாததுமான காரியம் ஆகும். இதில் ஒருவனுக்கு உண்மையான கவலையிருக்குமானால், அவர்கள் தன்னல மறுப்புக்குத் தயாராக இருக்க வேண்டி யவர்கள் ஆவார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் ஏதாவது நலன் எற்பட்டால்தான் உண்டு. வருங்காலம் நமக்கு மிக்க அடக்குமுறைக் காலமாய் இருக்கும். ஆதலால் சற்று கவலையோடு கவனிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.  (‘குடிஅரசு' சொற்பொழிவு - 25.05.1946, 01.06.1946)

- தொடரும்