ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இன்னும் எவ்வளவுக் காலத்திற்கு இந்த உறக்கம்
October 9, 2020 • Viduthalai • தலையங்கம்

இன்னும் எவ்வளவுக் காலத்திற்கு இந்த உறக்கம்?

மருத்துவப் படிப்பில் மாநிலங்களில் இருந்து பெறப்படும் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு “ஜீரோ”! முற்றிலுமாக மறுக்கப்படுவது குறித்து அகில இந்திய பிற் படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளித்திட்ட புகார் மனுவின் அடிப்படையில், ஆணையத்தின் தலைவர் டாக்டர் பக்வான் லால் சகானி, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவ சேவைகளுக்கான இயக்குநரக அதிகாரி ஆகியோரை 8.10.2020 மதியம் 3 மணிக்கு ஆணையத்தின் தலைமை அலுலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திட உத்தரவிட்டுள்ளார்.

முன்னர், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தொடுத்த வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் 27.7.2020 அன்று அளித்திட்ட உத்தரவில், மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் கொண்ட ஒரு குழுவை நியமித்து, ஓபிசி பிரிவினர்க்கான இட ஒதுக்கீட்டை முடிவு செய்திட உத்தரவிட்டிருந்தது. இதன்படி, மத்திய அரசு 7.9.2020 அன்று குழு நியமித்து அதன் முதல் கூட்டம் 22.9.2020 அன்று டில்லியில் நடைபெற்றுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி (27.7.2020) மூன்று மாதங்களுக்குள் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முடிவு செய்து அறிவிக்க வேண்டும். அதன்படி வரும் 27ஆம் தேதிக்குள் அதற்கான குழு தன் முடிவை அறிவிக்க வேண்டும்.

மூன்று மாத அவகாசம் என்பது அதிகபட்சமே தவிர, குழு நினைத்தால் 10 நாள்களுக்குள்ளேயே அறிவித்திட முடியும்.

இடஒதுக்கீடு அளிக்கப்படுவது கட்டாயம் - அவசியம் என்று உயர்நீதிமன்றம் அறுதியிட்டு தீர்ப்புக் கூறிய பிறகு, இதில் நூல் பிளந்து பெரிய ஆய்வுகள் செய்வதற்கு ஒன்றுமில்லை.

இந்தக் குழு நினைத்திருந்தால், உயர்நீதிமன்றம் அறிவித்த சில நாட்களிலேயே முடிவை அறிவித்திருக்க முடியும். அப்படி அறிவித்திருந்தால் நடப்புக் கல்வியாண்டிலேயே பிற்படுத்தப் பட்டோருக் கான இடஒதுக்கீடு மருத்துவக் கல்வியில் கிடைத்திருக்க முடியும். பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீடு சட்டம் இரண்டு வார காலத்திலேயே செயல்பாட்டுக்கு வரவில்லையா? மனம் இருந்தால் மார்க்கம் உண்டே! இதற்கிடையே பிற்படுத்தப்பட்டோர் தேசிய ஆணையம் இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர், மருத்துவ சேவைகளுக்கான இயக்குநரக அதிகாரி ஆகியோர் ஆணையத்தின் முன் தோன்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது.

உண்மையைச் சொல்லப் போனால் இந்தப் பிரச்சினையே தேவையில்லாத ஒன்று.

மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்கு மருத்துவக் கல்லூரிக்கான தொகுப்பில் இடங்கள் அளிக்கப்பட்ட நிலையில், அந்தந்த மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீட்டின் அளவுபடி வாய்ப்பு அளிப்பது என்பது இயல்பாகவே உள்ள சட்டநிலைதானே!

தாழ்த்தப்பட்டவர்களுக்கு அப்படிதானே அளிக்கப்பட்டது. ஏனிந்த பிரித்தாளும் சூழ்ச்சி? மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் பிற் படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறதே!

அப்படி இருக்கும் போது, மாநிலங்களின் இடங்களை மத்திய தொகுப்பாக வைத்துக் கொண்டுள்ள நிலையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உண்டா என்ற கேள்வி எங்கே இருந்து எழுந்தது?

நியாயமாக இந்தப்  பிரச்சினையில் குழப்பத்தை உண்டாக்கியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

எவ்வளவுப் பெரிய கொடுமை - மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சட்டரீதியான உரிமை எவ்வளவுத் திமிரும், எதேச்சதிகாரமும், சமூக அநீதி வெறியும் இருந்திருந்தால் தடுக்கப்பட்டிருக்கு முடியும்?

பிற்படுத்தப்பட்டோர் தானாகட்டும் - தங்களுடைய உரிமையைத் தட்டிப் பறிக்கும் ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போர்க்கோலம் - போர்க்களம் கண்டு இருக்க வேண்டாமா?

தமிழ்நாட்டில் மட்டும் களம் கனலாகத் தகிக்கிறது. இதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்களால் கட்டமைக்கப்பட்டு தொடர்ச்சியாக செயல்படக் கூடிய திராவிடர் கழகம் என்ற சமூகப் புரட்சி இயக்கம், அதன் தலைவர், திராவிட கட்சி இவைகளால் ஊக்கம் பெற்ற வெகு மக்களின் உணர்வு - இவைதான் தமிழ்நாடு என்ற மண் கனலாக கொதித்து நிற்பதற்கு முக்கிய காரணம் ஆகும். இந்த நிலை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இல்லாத காரணத்தால் ஆதிக்க சக்திகள் தானடித்த மூப்பாக மூக்கைப் பிடிக்க உண்டு அஜீரணத்தில் திளைக்கக் கூடிய நிலை.

மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்குரிய 27 விழுக்காடு இடம் ஏன் கொடுக்கப்படவில்லை என்று தமிழ்நாடு கேட்பது தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லவே!

மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர 42 மாநாடுகளையும், 16 பேராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தி, அதில் வெற்றி பெற்றது என்றால் அதன் பலன் தமிழ்நாட்டுக்கு மட்டும்தானா? இந்தியா முழுமைக்கும் தானே!

இந்தப் பிரச்சினையிலும்; அதே கண்ணோட்டம்தான் திராவிடர் கழகத்திற்கு; இந்திய அளவில் மத்திய தொகுப்புக்கு 8000 இடங்கள் அளிக்கப்படுகிறது. 2600 இடங்கள் கிடைக்க வேண்டிய இடத்தில் வெறும் 165 இடங்கள் மட்டும்தான் பிற்படுத்தப்பட்டோருக்கு - என்ன கொடுமை இது?

மத்திய அரசு துறைகளில் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு  2009 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. அந்தக் கணக்குப் படி பார்த்தால் 11 ஆண்டுகள் பிற்படுத்தப்பட்டோர் வஞ்சிக்கப்பட்டு உள்ளனரே. ஆண்டுக்கு 2000 இடங்கள் பாதிப்பு என்று வைத்துக் கொண்டாலும், இந்த 11 ஆண்டுகளில் 22 ஆயிரம் பிற்படுத்தப்பட்டோர் டாக்டர்கள் ஆவது வழிப்பறி செய்யப்பட்டுள்ளது என்றுதானே பொருள்?

சட்டம் இருந்தும், அதற்கு மாறாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதே - இந்த இழப்புக்கு யார் பொறுப்பு?

சமூகநீதியாளர்களே, பிற்படுத்தப்பட்ட வெகு மக்களே, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே, இந்தியா முழுமையும் எண்ணிக்கையில் பல்லாயிரக்கணக்கில் இருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களே.

இந்த உறக்கம் நியாயம்தானா? இந்த அநீதியை ஒழிக்க முன் வர வேண்டாமா? இந்த உணர்ச்சி எல்லாம் வெகு மக்களுக்குத் தப்பித் தவறி வந்து விடக் கூடாது என்பதுதான் ராமன் கோயில், கங்கை சுத்திகரிப்பு, இந்துத்துவக் குரல்கள்.

குறட்டைவிட்டது போதும் எழுவீர்! எழுவீர்!!