ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இந்திய ஜனநாயகத்தின் மீது ஃபேஸ்புக் தொடுத்திருக்கும் போர்!
September 5, 2020 • Viduthalai • இந்தியா

வினோத் ஆறுமுகம்

பேஸ்புக் என்றாலே பிரச்சனைகள்தான்! அய்ரோப்பாவில், பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக, பல மில்லியன் டாலர்கள் அபராதம் கட்டியது. அமெரிக்காவில், சமூக சிவில் உரிமை அமைப்பு, பேஸ்புக் நிருவனத்தின் வர்த்தக முறையே, “Hate For Profit” என்று வரையறுக்கிறது.

உலகம் முழுவதும் இப்படி பொறுப்புணர்வில்லாமல் செயல்படும் ஒரு நிறுவனம், இந்தியாவில் அறம் சார்ந்து தொழில் நடத்துவார்கள் என்ற நம்பமுடியுமா? நாங்கள் அறம் சார்ந்து செயல்படப் போவதில்லை என்று தான் பேஸ்புக் நிறுவனத்தின் நடவடிக்கைகள் சொல்லாமல் சொல்லுகின்றன. லாபம் என்ற ஒற்றைக் குறிக்கோளில், இந்தியாவில் ஆளும் அரசின் கைப்பாவையாக மாறி இருப்பது இப்போது நிரூபணமாகியுள்ளது.

பேஸ்புக் என்றால் சைபர் வெளியில், சமூக வலை நிறுவ உதவும் தளம். மனிதர்கள், எந்நேரமும் சமூகமாக இயங்க விரும்புவார்கள். அதையே உட்கார்ந்த இடத்தில், ஒரு லாப்டாப் அல்லது ஸ்மார்ட் போன் உதவியுடன் உலகில் உள்ள அனைவருடனும் இணையலாம் என்றால், அதுவும் இலவசம் என்றால்! கரும்பு தின்னக் கூலியா?

ஆனால் பேஸ்புக், வேறு விதமாக பயனாளர்களின் தகவல்களை, அவர்களின் நடவடிக்கைகளை கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும், விளம்பர நிறுவனங்களுக்கும் வாரி வழங்கி அதன் மூலம் பணம் ஈட்டுகிறது. விளம்பர நிறுவனங்களும் அறிவியல் பூர்வமான உளவியல் மற்றும் மார்கெட்டிங் நுட்பங்களைப் பயன்படுத்தி பயனாளர்களை வசியம் செய்து பொருட்களைத் தலையில் கட்டிவிடலாம்.

இந்தியாவை பொருத்தவரை, சிக்கல் கொஞ்சம் நுட்பமானது. இந்தியாவில் இருக்கும் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த பலர், வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளை பேஸ்புக்கில் பதிவிட்டார்கள். இதில் சில பேச்சுக்கள் கலவரம் வர காரணமாக இருந்தது. பேஸ்புக் நிறுவனத்தின் “வெறுப்பு பேச்சு” கொள்கைப்படி, பலர் புகார் தெரிவித்தும், பேஸ்புக் நிறுவனம் அதை நீக்கவில்லை.

ஏன் நீக்கவில்லை?

பேஸ்புக் நிறுவனத்தின், கொள்கை முடிவெடுக்கும் முதன்மை மேலாளர் அங்கி தாஸ் என்பவர், ஆளும் கட்சியிடம் பேரம் பேசும் (லாபி) அதிகாரியும் ஆவார். உலகிலேயே ஒரு லாபியிஸ்ட்டைக் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரியாகவும் வைத்திருந்த ஒரே நிறுவனம் பேஸ்புக்கின் இந்திய நிறுவனம் மட்டும் தான். அதுமட்டுமல்ல, பேஸ்புக் நிறுவனத்தில் பல மேலாண்மை அதிகாரிகளும், ஆளும்கட்சி அரசியல்வாதிகளின் பக்கங்களில் பதியும் வெறுப்பு பேச்சுக்கள், வீடியோக்களை நீக்க கூடாது என மறைமுகமாகச் செயலபட்டிருக்கிறார்கள். அப்படி நீக்கினால், அது பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய முதலீடு, வர்த்தகம், லாபம் போன்றவற்றை பாதிக்கலாம் என, கண்டு கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் ரிலைன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ததும் குறிபிடத்தக்கது.

இந்தத் தகவல்கள் முழு ஆதாரத்துடன் அமெரிக்கப் பத்திரிகைகளால் முதலில் வெளிக்கொண்டு வரப்பட்டது. பேஸ்புக்கில் வேலை செய்த ஒரு ஊழியர், ஆளும் கட்சியின் அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சு பதிவுகளை நீக்க வேண்டாம் என்று பேஸ்புக் நிறுவனத்தின் உள் இருந்து கட்டளைகள் வந்த இ-மெயில், சாட் போன்றவற்றை வெளியிட்டார். இது அறம் சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, இது இந்திய ஜனநாயகத்தின் மீதான 'சமர்' என அந்த ஊழியர் நினைத்திருக்கக் கூடும். இதை அறிந்து பேஸ்புக் நிறுவனம், உடனடியாக நடவடிக்கை எடுத்தது, அந்த ஊழியரை வேலை நீக்கம் செய்தது.

அறம் என்றால் பேஸ்புக்கிற்க்கு அலர்ஜி. இதை அமெரிக்காவின் சிவில் உரிமைப் போராளிகளும், பத்திரிகையாளர்களுமே சொல்லுகிறார்கள். பல முறை பேஸ்புக் வெறுப்புப் பேச்சு பதிவுகளால் பிரச்சனைகள், கலவரங்கள், கொலைகள் நடந்தால், அதைச் சுட்டிக்காட்டினால் கூட,பேஸ்புக் நிறுவனம் அதை நீக்கக் காலதாமதம் செய்யும். அய்ரோப்பாவில் கடுமையான அபராதம் என்பதால், அங்கு பேஸ்புக் நிறுவனம், 'விஷத்தை அடக்கி வைத்துக்கொள்ளும் பெட்டிப் பாம்பாக' இருக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை, ஆளும் கட்சிக்குத் தன்னை விசுவாசியாக காட்டிக்கொண்டது பேஸ்புக். இதைப் பற்றி 2019 வெளிவந்த, ‘The Real Face of Facebook In India' புத்தகம் எச்சரித்தது. ஆனால், அப்போது இந்தப் புத்தகம் இதற்கான ஆதாரங்களை முன் வைக்கவில்லை.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘The Wallstreet Journal' எனும் செய்தி நிறுவனம், முறையாக விசாரணை நடத்தி, பேஸ்புக் மீது இந்த குற்றச்சாட்டை முன் வைத்த போதுதான் பேஸ்புக் வசமாக சிக்கிக்கொண்டது. இன்று நாளொரு செய்தியாக பேஸ்புக் நிறுவனம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக எப்படியெல்லாம் வளைந்து கொடுத்திருக்கிறது. ஆளும் கட்சியின் ஆதரவுப் பக்கங்களுக்கு விளம்பர நிதி வரவும், ஆளும் கட்சியை விமர்சிக்கும் பக்கங்களை நீக்குவது வரை எப்படியெல்லாம் பாரபட்சமாக நடந்து கொண்டிருக்கிறது என ஆதாரப்பூர்வமான செய்திகள் வந்தவாறே உள்ளது.

ஒரு காலத்தில் சைபர் வெளியில் எந்த விதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றும், ஜனநாயகத்தைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை, இன்று பேஸ்புக் மாதிரியான கார்ப்பரேட் நிறுவனங்கள் மூடநம்பிக்கை ஆக்கிவிட்டன. அறம் எல்லாம் கிடையாது! லாபம் வந்தால் போதும், அதற்காக சமூகத்தில் எந்த ஆபத்தையும், வெறுப்பையும் உருவாக்கவும், கலவரங்களுக்குத் துணைபோகவும் தயாராகிவிட்டது.

இது இந்திய ஜனநாயகத்தின் மீது ஒரு பெரு நிறுவனம் தொடுத்திருக்கும் போர்!