ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இந்தியா முழுமைக்கும் அவசரமாக அவசியமாக அய்யா தேவைப்படுகின்றார்
September 17, 2020 • Viduthalai • தலையங்கம்

தந்தை பெரியார் 142ஆம் ஆண்டு பிறந்த நாள் (1879) இன்று. மறைந்து 47 ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன. உடலால் அவர் மறைந்தார் என்பது உண்மை. ஆனால் தத்துவத்தால், தொலை நோக்குப் பார்வையால், பகுத்தறிவுச் சிந்தனையால், சமத்துவ சமதர்மக் கோட்பாட்டால், பாலியல் உரிமை என்னும் மனிதநேயத்தால், ஜாதி ஒழிப்புக் குறிக்கோளால் தமிழ்நாட்டு எல்லைகளையும் கடந்து மானுடத்தின் இழைகளில், இரத்தவோட்டத்தில் கலந்து, அவர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் இன்னல்கள், தடைகள், அச்சுறுத்தல்கள், உரிமைப் பறிப்புகள் நிகழும் போதெல்லாம் அவற்றிலிருந்து விடுதலை பெற துணிச்சலையும், அறிவையும் வாரி வழங்கியிருக்கிறார்.

அவர்போல் வாழ்வில் அனுபவக் கடல்களை நீந்தி வெளி வந்தவர் யாருமிலர். எந்தப் பிரச்சினையை அவர் முன் நிறுத்தினாலும் அதற்கான திறவுகோல் அவரின் அனுபவக் களஞ்சியத்திலிருந்து தட்டுப்பாடின்றிக் கட்டாயம் கிடைக்கும்.

சமுதாயத்துக்கு மட்டுமல்ல - தனி மனிதனுக்கும் வெளிச்சம் கிடைக்கும். சோறும், வயிறும், ஆண் பெண் உறவும், பிள்ளைக் குட்டிகள் - சம்பாத்தியம் என்பதுதான் வாழ்க்கை என்றால் விலங்குகளிடமிருந்து மனிதன் எப்படி விலக்காக இருக்க முடியும். அதனையும் கடந்த வாழ்வு இல்லையா? என்பது தந்தை பெரியாரின் அறிவார்ந்த வினாவாகும்.

"மனிதன் தனாகப் பிறக்கவில்லை. எனவே அவன் தனக்காக வாழக் கூடாதவன்" என்று அவர் கூறியதில் ஒளிரும் உயர் தொண்டறப் பண்பை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதற்குச் சாட்சியங்களை எங்கும் போய்த் தேட வேண்டாம். அவரின் வாழ்வைவிட வேறு சாட்சியம் ஏது? தொண்ணூற்று அய்ந்து வயதிலும், உடல் உபாதையிலும் ஊர் ஊராக அலைந்து அலைந்து திரிந்து, மக்கள் மத்தியில் அடேயப்பா, எத்துணை எத்துணை சிந்தனை விதைகளை விதைத்து முளைக்கச் செய்தார்.

ஜாதி ஒழிப்பைத் தன் மூச்சாகக் கொண்ட அவர், ஜாதி சங்க மாநாடுகளில் கலந்து கொண்டு ஜாதிப் பெருமைப் பேசும் மக்களின் மண்டையில் அடித்து - 'மனிதனாக வெளியில் வா' என்ற சொல்லும் துணிவு யாருக்கு இருக்க முடியும்?

'நீ என்ன தான் ஜாதி பெருமை பேசினாலும், பார்ப்பானுக்குக் கீழ் சூத்திரன் தானே! வேசி மகன்தானே!' என்று அவர் போட்ட சூட்டுக்கோல் சுள்ளென்று உரைக்கச் செய்யவில்லையா - சுயமரியாதை உணர்வை ஊட்டவில்லையா?

எத்தனையோ தலைமுறை தலைமுறையாக ஜாதிப் பட்டத்தைச் சுமப்பது - சுகமானது, கவுரவமானது என்று எண்ணித் திளைத்துக் கொண்டிருந்தவர்களிடம் அவரின் அறிவார்ந்த சுனையான பேச்சும், கேள்வியும் ஒரு மாநாட்டு மேடையிலேயே அந்த ஜாதிப் பட்ட அசிங்கத்தைத் தூக்கி எறியச் செய்ததே!

எத்தனைக் கால நோயை ஒரு சிட்டிகையில் தீர்த்துக் கட்டினாரே - அது வீண் போகவில்லையே! இன்றைக்குப் பெயருக்குப்பின் ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொள்ள வெட்கப்படும்படிச் செய்தது சாதாரணமானதுதானா? இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டில் பார்ப்பான்கூட அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரி பட்டங்களைப் போடாத - போட்டுக் கொள்ள முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டாரே!

புத்தர் காலத்தில் தொடங்கிய போராட்டம் இடையில் தோல்வியுற்று ஆரியம் கொழுத்து மேலோங்கி நின்ற நிலையில் வரலாற்றில் இரண்டாம் புத்தராகத் தோன்றி, ஆரியத்தின் அகங்கார ஆணவத்தின் தோலை உரித்துத் தொங்கவிட்டாரா இல்லையா?

இப்பொழுது அரசியலில் நுழைந்து, வேறு வேறு வித்தைகளைக் காட்டி, வேதியத்தை வீறு கொண்டு  எழச் செய்யலாம் என்று எத்தனிக்கிறார்கள்.

என்றாலும் தமிழ்நாட்டில் அந்தப் பருப்பு வேகவில்லை. அந்தக் காரணத்தால்தான் சிலையாக நிற்கும் தந்தை பெரியார்மீது சினத்தைக் காட்டுகிறார்கள் - சிலைகளை சிதைக்கிறார்கள் - காவிச் சாயம் ஊற்றுகிறார்கள். காவிகள் சிலைமீது சாயத்தை ஊற்றலாமே தவிர, அந்த சிலைக்குரிய சித்தாந்த சீலத்தின் நக நுனியைக்கூட சீண்ட முடியாது.

ஒரு சேதி தெரியுமா? தமிழ்நாட்டுச் சட்டப் பேரவையில் 234 உறுப்பினர்கள் என்றால் ஒரே ஒரு பார்ப்பான்தான். எந்த அரசியல் கட்சியும்கூட தேர்தலில் வேட்பாளராகப் பார்ப்பனரை நிறுத்தத் தயாராக இல்லையே!

செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தாலும், அவர் மரணத்துக்குப்பின் அவர் பெயரை நிமிடத்துக்கு ஒரு தடவை உச்சரிக்கும் அமைச்சரவையில்கூடப் பார்ப்பான் கிடையாதே!

இந்தியாவின் இதர பகுதிகளில் இருப்பவர்கள் இந்த அதிசயத்தை எண்ணி எண்ணி வியக்கிறார்கள். இந்த நிலை எங்கள் மாநிலத்திலும் ஏற்படாதா என்று ஏங்குகிறார்கள்.

ஆம். காலம் கனிய ஆரம்பித்து விட்டது. வடபுலத்துப் பல்கலைக் கழக மாணவர்கள் சமூகநீதிக் கொடியை - பதாகையை ஏந்தி வர ஆரம்பித்து விட்டனர் அவர்களின் ஒரு கையில் தந்தை பெரியார், இன்னொரு கையில் அண்ணல் அம்பேத்கர் படம்.

நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்த உறுப்பினர்கள் வாழ்க பெரியார், வெல்க திராவிடம்! என்று ஒலிக்கவில்லையா!

உன்னிப்பாக பிற மாநிலத்தவர்கள் கவனிக்க ஆரம்பித்து விட்டனர். அதுவும் சங்பரிவாரின் ஆட்சி அதிகாரம் பயணிக்கும் பார்ப்பனத் திசையைக் கண்டு சீறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் திசையைத் திருப்பும் சுக்கான் பெரியார்தான் என்ற எண்ணம் வெடித்துக் கிளம்ப எல்லா வகையாலும் தட்ப வெப்ப நிலையைத் தங்களை அறியாமலேயேஆரியம் உருவாக்கிக் கொடுத்து வருகிறது. கல்வியில் கை வைத்து விட்டார்கள் அல்லவா?  அதுவே பாரதூர விளைவுகளை சந்திக்கும் சரியான சந்தர்ப்பம்!

இனி நமது பணியே நோய் முற்றிக் கிடக்கும் இந்தியத் துணைக் கண்டத்தின் பகுதிகளுக்கெல்லாம். தந்தை பெரியார் என்ற மாமருந்தை விநியோகம் செய்வதுதான். ஒரு மெழுகுவத்தி ஆயிரம் ஆயிரம் மெழுகுவத்திகளை ஒளி ஏற்ற உதவும் அல்லவா!

பெரியார் தேவைப்படுகிறார் - தேவைப்படும் பருவம் முளைத்துவிட்டது.

வெற்றி நமதே - பயணிப்போம் - அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!