ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய தலைவர் கலைஞர்!
August 24, 2020 • Viduthalai • மற்றவை

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் சமூகநீதிக் கருத்தரங்கத்தில் கே.பாலகிருஷ்ணன் உரை

சென்னை, ஆக. 24- இந்தியாவே திரும்பிப் பார்க்கக் கூடிய தலைவர் கலைஞர்! என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்.

சமூகநீதி கருத்தரங்கம்

கடந்த 7.8.2020 அன்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடை பெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதிக் கருத்தரங்கத்தில்' (காணொலி மூலம்) மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் நினைவு ரையாற்றினார். அவரது நினைவுரை வருமாறு:

ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை, வாழ்த்துகள்!

கரோனா என்கிற இந்தக் கொடுமையான நோய் உலகத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், நம்முடைய அன்றாட நிகழ்ச்சிகள் எல்லாம் முடங்கிப் போய், மக்களுடைய வாழ்நிலையும், வாழ்வாதாரமும் நொறுங்கிக் கிடக்கிற இப்படிப்பட்ட இந்த சூழ்நிலையில், ஒரு பொருத்தமான வடிவத்தில், டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை, வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த நிகழ்ச்சி, டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி என்று சொன்னாலும்கூட, இன் றைக்கு நாடு சந்திக்கின்ற பல்வேறு மோசமான நிலைமைகளை, நமக்குள்ளே ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக - மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது என்பதைத்தான் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட இயக்கங்களும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்றன

தமிழக வரலாற்றில், கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட இயக்கங்களும் - வரலாற்று நிகழ்வுகளில் இணைந்து பயணித் திருக்கின்ற, இன்றைக்கும் பயணித்துக் கொண்டிருக்கின்ற ஒரு சூழல் தமிழகத்தில் இருப்பதை நாம் பார்க்க முடியும்.

தந்தை பெரியார் அவர்களோடு, ஜீவா அவர்களும், சிங்கார வேலர் அவர்களும் இணைந்து பணியாற்றிய அந்த மகத்தான காலம் தமிழக அரசியல் வரலாற்றிலே ஒரு முத்திரை பதித்த காலம் என்றுதான் சொல்லவேண்டும்.

சமூகத்தில் இருக்கின்ற ஜாதீய ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து, மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்து, சமூகநீதி, பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்ற அதே நேரத்தில், சமூகத்தில் நிலவுகிற பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து, ஒரு சமதர்ம சமுதாயத்தை அமைக்கவேண்டும் என்கிற அந்த நிலை யிலேதான், அந்த மூன்று மகத்தான தலைவர்களும் இணைந்து அந்தப் பயணத்தை மேற்கொண்டார்கள். ஆனால், என்ன கார ணத்தினாலேயோ அந்தப் பயணம் இடையில் தடை பட்டு விட்டது. இரண்டு கூறுகளாகப் பிரிகின்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. அப்படியே பிரிந்தாலும், இன்றைக்கும்கூட இரு வேறு இயக்கங்கள் - இரு வேறு தத்துவங்கள் என்றாலும், நாம் இன்றைக்கும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கின்ற அந்த நிலைமையைத்தான் நாம் பார்க்கிறோம் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழகத்தினுடைய ஒரு மிகப்பெரிய ஆளுமையாக உயர்ந்திருக்கிறார் டாக்டர் கலைஞர்!

எனக்கு நினைத்துப் பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது - போக்குவரத்துகூட செல்ல முடியாத ஒரு பின்தங்கிய கிராமத் தில், ஒரு சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த டாக்டர் கலைஞர் அவர்கள், பெரிய பல்கலைக் கழகப் படிப்போ, வெளிநாட்டுப் படிப்போ இல்லாத அப்படிப்பட்ட கலைஞர் அவர்கள், தமிழகத் தினுடைய ஒரு மிகப்பெரிய ஆளுமையாக உயர்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அது சாதாரண விஷயமாக நாம் பார்க்கக் கூடாது.

அவர் தமிழகத்தினுடைய ஒரு ஆளுமை மட்டுமல்ல; இந்திய தேசமே திரும்பிப் பார்க்கக் கூடிய தலைவர்களுடைய பட்டியலில், டாக்டர் கலைஞர் அவர்களும் இடம்பெறுகிற அளவிற்கு இன்றைக்கு உயர்ந்திருக்கிறார் என்று சொன்னால், அது சாதாரண விஷயமோ அல்லது எளிதில் கடந்து போகிற விஷயமாக நாம் பார்க்க முடியாது என்பதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன்.

எல்லாத் துறைகளிலும் கலைஞர் அவர்கள் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்!

அரசியலில் அவர் ஆற்றியிருக்கிற மகத்தான பணியை எனக்கு முன்பு உரையாற்றிய தலைவர்கள், நண்பர்கள் மிக விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள்.

அவர் தொட்ட எல்லாத் துறைகளிலும் அவர் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் என்பதுதான் அவருடைய தனிச் சிறப்பு.

அது இலக்கியமாக இருக்கலாம், சினிமாவாக இருக்கலாம், எழுத்தாக இருக்கலாம், நாடகமாக இருக்கலாம், அரசியலாக இருக்கலாம் அல்லது பேச்சாக இருக்கலாம். எந்தத் துறையைத் தொட்டாலும், அந்தத் துறையில் உச்ச நிலையை அடைகிற அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

அவருடைய கடுமையான உழைப்பு என்கிற அந்த ஒன்றுதான் அவருடைய பின்புலம் - அவருடைய வளர்ச்சிக்குப் படிக்கல்லாக அமைந்திருக்கிறது என்பதை நாம் சுட்டிக்காட்ட முடியும்.

ஒரு பெரிய அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் அல்ல அவர். ஒரு பெரிய பொருளாதார பின்புலம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர் அல்ல அவர். ஆனாலும், தனக்கு ஏற்பட்ட எல்லா தடைகளையும், ஒரு மிகப் பின்தங்கிய சமூகத்தில் பிறந்திருந்தாலும்கூட, அந்தத் தடைகளை எல்லாம் அடித்து நொறுக்கி அவர் முன்னேறியிருக்கிறார். அதற்கு அடிப்படையான அம்சம் ஓய்வில்லாத ஒரு உழைப்பாளி டாக்டர் கலைஞர் என்பதைத்தான் நான் இங்கே பணிவோடு பதிவு செய்ய விரும்புகிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்து!

டாக்டர் கலைஞர் அவர்கள் இலக்கியத்தில் இந்த அளவு சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார் என்று பேசுகிறபொழுது பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார், ‘‘கலைஞர் அவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் உறங்குகிறார் என்பதை, அவருக்குத் தெரியாமலேயே நாம் கண்காணிக்கவேண்டும்'' என்று சொன்னாராம்.

அந்த அளவிற்கு அவர் எல்லையில்லாமல் உழைத்ததினு டைய விளைவாகத்தான் இன்றைக்கு நாமெல்லாம் அவரைப் பற்றி நினைவுகூருகிற அப்படிப்பட்ட சாதனையைப் படைத் திருக்கிறார் என்பதை நான் இங்கே மீண்டும் நினைவுகூர விரும்புகிறேன்.

ஓர் அரசியல் தலைவர் என்கிற முறையில், நிச்சயமாக மற்ற அரசியல் கட்சிகளோடு மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கத் தான் கூடும்.

அதுமட்டுமல்ல, உலகத்திலே தோன்றிய யாராக இருந்தா லும், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் இதுவரைக்கும் தோன்றியதும் இல்லை, இனி தோன்றப் போவதும் இல்லை. ஆனால், விமர்சனங்களையெல்லாம் கடந்து யார் மக்களின் மனதில் நிலை கொண்டிருக்கிறாரோ, அவரைத்தான் சமூகம் அங்கீகரிக்கின்றது - சமூகம் பாராட்டுகின்றது.

அப்படித்தான் டாக்டர் கலைஞர் அவர்களும், தன்மீது விமர்சனங்கள் இருந்தாலும்கூட, அவற்றையெல்லாம் தாண்டி இன்றைக்கு மக்களின் இதயங்களில் இடம்பெற்றிருக்கின்ற ஒரு தலைவர் என்று சொன்னால், அது மிகையாகாது.

அவர் தமிழுக்கு ஆற்றியிருக்கின்ற பணி சாதாரணமான பணியல்ல. இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் இருக் கின்ற அரசியல் தலைவர்களில், அவரைவிட அதிகமாக எழுதிக் குவித்தவர்கள் வேறு யாருமே இருக்க முடியாது.

தமிழ் மொழியை உயர் செம்மொழியாக மாற்றி, இன்றைக்கு அது செம்மொழித் தகுதியைப் பெறுகின்ற நிலைக்கு உயர்த்தியிருப்பவர்.

60 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினர்

அய்ந்து முறை முதலமைச்சர் - பலமுறை எதிர்க்கட்சித் தலைவர் - 60 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினர். அநேகமாக, தமிழக வரலாற்றில், போட்டியிட்ட எந்தவொரு தேர்தலிலும் தோல்வியடையாதவர் என்று சொன்னால், அது எப்படி சாத்தியமானது என்பது ஒரு பெரிய புதிராகத்தான் இருக்கிறது.

அதற்கு அடிப்படையான காரணம் என்னவென்றால், அவருடைய மதிநுட்பம் - அவருடைய உழைப்பு - இரவு பகல் பாராமல் தான் எடுத்துக்கொண்ட பணியில் சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற அவருடைய உறுதிதான் - இவற்றையெல்லாம் சாதித்துக் காட்டியிருக்கிறது என்பதை நான் சொல்ல விரும்பு கிறேன்.

இந்தியாவிலே நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பொழுது, மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட பொழுது, தன்னுடைய ஆட்சி அதிகாரம் போனாலும் பரவாயில்லை என்று, அதனை எதிர்த்துக் குரல் கொடுத்துக் களம் கண்டவர் டாக்டர் கலைஞர்.

நெருக்கடி நிலையை எதிர்த்ததினால்

அவருடைய ஆட்சி கலைக்கப்பட்டது!

ஏனென்றால், அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வந்தவுடன் அந்த அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதில்தான் அதிக நாட்டத்துடன் இருப்பார்கள் என்பது நம்முடைய நாட்டினுடைய ஒரு பண்பு. ஆனால், அந்தப் பண்புக்கு மாறாக, மக்களுடைய உரிமைகள் பறிபோகும்பொழுது, நம்முடைய பதவி பறிபோனால் என்ன என்கிற அடிப்படையில்தான், அந்த நெருக்கடி நிலையை எதிர்த்தார்; அதனால்தான் அவருடைய ஆட்சி கலைக்கப் பட்டது.

அதேபோல, இந்தியாவினுடைய அரசமைப்புச் சட்டத்தில், மாநில சுயாட்சி- மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்து போராடியவர். இந்தியாவைப் பொறுத்தவரையில் மாநிலங்கள் என்பது வெறும் ஒரு நிர்வாக அமைப்பல்ல. அது ஒரு இன, மொழியினுடைய அடையாளமாக இருப்பதுதான் இந்தியாவிலுள்ள மாநிலங்கள்.

ஒத்தக் கருத்துள்ள எல்லா தலைவர்களையும் ஒருங்கிணைத்து...

எனவே, மத்தியிலே கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி என்கிற அந்தக் கோரிக்கையை முன்வைத்து, தன்னோடு ஒத்தக் கருத்துள்ள எல்லா தலைவர்களையும் ஒருங்கிணைத்து, பரூக் அப்துல்லாவிலிருந்து மேற்கு வங்காளத்தில் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த ஹர்கிஷன்சிங் சுர்ஜித் போன்ற தலைவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்பதில் விடா முயற்சியாக இருந்து சாதனை படைத்தவர் என்பதை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

பெரியார் சமத்துவபுரம்- உழவர் சந்தை!

ஜாதீய ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்த சமூகத்தில், ஜாதீய ஒடுக்குமுறையிலிருந்து ஏதாவது ஒரு கண்ணியை உடைக்க வேண்டும் என்கிற முறையில், அவர் பெரியார் சமத்துவபுரத்தை உருவாக்கினார். எவ்வளவு மதிநுட்பமாக யோசித்து அதனை செய்திருக்கிறார் என்பதை நாம் பார்க்கவேண்டும்.

விவசாயிகளுடைய விளைபொருள்களை அவர்களே விற்க முடியாது; அல்லது வியாபாரிகளிடம்தான் விற்கவேண்டும்; அவர்களுக்கு நல்ல விலை கிடைக்காது என்கிற காரணத்தை அறிந்து, விவசாயிகளே விற்பனை செய்யக்கூடிய ‘‘உழவர் சந்தை''யை உருவாக்கியதும் சாதாரண விஷயமல்ல என்பதை நான் இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

இன்னும் சொல்லப்போனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில், அடுக்கிய மூட்டைகளிலேயே அடி மூட்டையாக இருக்கின்ற அருந்ததிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழகத்தில் எழுப்பி, அருந்ததிய மக்களையெல்லாம் ஒருங்கிணைத்து மகத்தான போராட்டத்தை நடத்தியபொழுது, அந்தப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறதே என்று பார்க்காமல், அந்தக் கோரிக்கையினுடைய நியாயத்தை ஏற்று, அதற்கு ஒரு சட்டத்தை உருவாக்கி, அருந்ததி மக்களுக்கு மூன்று சதவிகித இட ஒதுக் கீட்டை வழங்கி - அந்த இட ஒதுக்கீட்டில்கூட ஒரு சாதனையைப் படைத்தார் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதேபோல, 2006 ஆம் ஆண்டில் மிகப்பெரிய போராட் டத்தை நாங்கள் நடத்தினோம். அலுவலகங்களில் குடியேறுகின்ற போராட்டத்தை நடத்துவதற்காக, 5 லட்சம் பேரை நாங்கள் திரட்டுகின்ற நேரத்தில், எங்களை அழைத்துப் பேசி, பத்தாண்டு களுக்கு மேல் ஒருவர் ஓரிடத்தில் குடியிருக்கிறார் என்று சொன்னால், அந்த இடத்தை உடனடியாகப் பட்டா போட்டுக் கொடுக்கவேண்டும்.

அந்த இடத்தை ஆட்சேபகரமான புறம்போக்காக மாற்றி, பட்டா கொடுக்கவேண்டும் என்ற அரசாணையை நிறைவேற்றி, ஒன்றுமே இல்லாமல், புறம்போக்கில் பிறந்து, புறம்போக்கிலேயே வாழ்ந்து, புறம்போக்கிலேயே மரணமடைந்து அடக்கமாகிற அந்த ஏழை, எளிய பாட்டாளி மக்களுக்கு மூன்று செண்ட் நிலத்திற்குப் பட்டா வழங்கும் ஆணையை வெளியிட்டவர் என்பதையும் இங்கே நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

கலைஞர் அவர்களிடம் இருக்கின்ற சிறப்பு என்னவென்று சொன்னால், மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்தாலும்கூட அல்லது அரசியல் கட்சிகள் எதிரும் புதிருமாக இருந்தாலும்கூட, அதனை விரோதமாகக் குரோதமாகப் பார்க்காமல், ஜனநாயக அடிப்படையில் அந்தப் பிரச்சினையை அணுகுகின்ற தன்மை யைக் கொண்டவர் டாக்டர் கலைஞர்.

மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது

இன்றைக்கு மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது. ஒரு பாரதப் பிரதமர் அயோத்தியில் இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகின்ற விழாவில் கலந்துகொள்வது என்பது அரசமைப்புச் சட்டத்திற்கே ஏற்புடையதல்ல. அது அரசமைப்புச் சட்டத்தையே அவமதிக்கின்ற செயலாகும்.

1952 ஆம் ஆண்டில், சோமநாதர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில், இராஜேந்திர பிரசாத் அவர்கள் கலந்துகொண்டார். ஜவகர்லால் நேருகூட எதிர்த்தார். அதையும் மீறி அவர் அந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார். அது தவறு என்று நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதம் வந்தது.

ஆனால், இன்றைக்கு ஒரு பிரச்சினைக்குரிய இடத்தில் நடைபெற்ற கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள் வதன்மூலம், இந்திய அரசு, ஒரு மதச்சார்புள்ள அரசு என்ற நிலைமையை உருவாக்கியுள்ளது எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

அவசர நிலை காலத்தின்பொழுது மேற்கொள்ளப்பட்ட 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாகத்தான், மதச்சார்பின்மை என்ற வார்த்தை அங்கே சேர்க்கப்பட்டாலும், அது இந்திய நாட்டு அரசியலமைப்புக்கு மிகமிக அடிப்படையான ஒன்று என்பதினால்தான் அதனை நாம் ஏற்றுக் கொண்டிருக் கிறோம்.

எனவே, இன்றைக்கு அதற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த நாட்டின் அரசியல் சாசனம் உருவாக்கியிருக்கிற அனைத்து அம்சங்களும் இன்றைக்கு நொறுக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் அவருடைய கைப்பாவையாக மாறிக் கொண்டிருக்கிறது.

நாடாளுமன்ற ஜனநாயகம் இன்றைக்குப் பறிபோய்க் கொண்டிருக்கிறது

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதே கேள்விக்குறியாகி விட்டது. நாடாளுமன்றத்திலே எந்தக் கேள்விக்கும் பதில் சொல் லாத பிரதமராக இன்றைய பிரதமர் இருந்து கொண்டிருக் கிறார். நாடாளுமன்ற ஜனநாயகம் இன்றைக்குப் பறிபோய்க் கொண்டி ருக்கிறது.

உதாரணமாகச் சொல்லவேண்டுமானால், 370 என்கிற சிறப்புத் தகுதியை ரத்து செய்கிற தீர்மானத்தை நாடாளுமன்றத் தில் நிறைவேற்றுகிறார்கள்; அதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், அந்த வழக்கை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் தயாராக இல்லை.

அதற்குப் பதிலாக வேறு வேறு பிரச்சினை வழக்குகளை யெல்லாம் விசாரித்து தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, உச்சநீதிமன்றமே அதனுடைய நிலையில் இருக்கிறதா? என்கிற கேள்விதான் இன்றைக்கு எழுகிறது.

மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகளையெல்லாம் பறித்துக் கொண்டிருக்கிறார்கள்

அதேபோல, சி.பி.அய்.(CBI)யாக இருக்கட்டும்; வருமான வரித்துறையாக இருக்கட்டும். இந்த நாட்டினுடைய அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்டு இருக்கிற அத்தனை அம்சங்களை யும் தவிடுபொடியாக்கி, ஒரு ஏக மனிதனுடைய ஆட்சியாக இன்றைக்குக் கொண்டுபோகிற ஆபத்து வருகிறது. மாநிலங் களுக்கு இருக்கின்ற உரிமைகள் போதாது - இன்னும் கூடுதலாக வேண்டும் என்று டாக்டர் கலைஞர் அவர்கள் உள்ளிட்ட எல்லா தலைவர்களும் போராடினார்கள். இன்றைக்கு அளிக்கப்பட்ட உரிமைகளையெல்லாம் படிப்படியாக வேகமாகப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லாவற்றையும்விட  மிக ஆபத்தானது என்னவென்று சொன்னால், பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைப் புகுத்துவதைப்போல, இன்றைக்குப் பாடத் திட்டங்களில், கல்வி முறையை மாற்றிய மைப்பது என்பது மிக மோசமான ஒரு விளைவை உண்டாக்கும்.

நாமெல்லாம் சேர்ந்து, புதிய தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம்; இருமொழிக் கொள்கைத் திட்டத்தைத்தான் தொடரவேண்டும் என்று கோரி னோம். தமிழக அரசும் வேறு வழியில்லாமல், அதனையே அறிவித்திருக்கிறார்கள்.

மும்மொழித் திட்டத்தை எதிர்ப்பது, மறைமுகமாக மூன்றா வது இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளைத் திணிப்பதை எதிர்ப்பது என்பது மிகமிக முக்கியமான ஒன்று. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், அதோடு இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கை முடிந்து போவதல்ல. ஒட்டுமொத்தமான கல்வியை மாற்றுவதற் கான வேகமான முயற்சிகளை மேற்கொண்டுதான், இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அறிவித்திருக்கிறார்கள்.

பாரதீய ஜனதா கட்சி எப்பொழுதெல்லாம் மத்தியில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் அவர்கள் கல்வியில்தான் கைவைக்கிறார்கள்.

1999 இல் முரளிமனோகர் ஜோஷி

வரலாற்றுப் பாடங்களை மாற்றினார்!

1999 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவுடன், முரளிமனோகர் ஜோஷி வரலாற்றுப் பாடங்களை மாற்றி எழுதி வைத்தார். அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அய்க்கிய முற்போக்கு கூட் டணி அரசு, ஒரு ஆணையம் அமைத்து, அந்தப் பாடத்திட்டங் களைப் பரிசீலிக்கச் சொன்னபொழுது, அந்த ஆணையம் சொன்னது, ‘‘அந்தப் பாடத் திட்டங்களை நாம் அனுமதிக்கவே முடியாது; உடனடியாக அதனைத் திரும்பப் பெறவேண்டும். அது இந்திய வரலாற்றிற்குப் புறம்பான பாடத் திட்டங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது'' என்று சொன்னது அந்த ஆணையம்.

இப்பொழுது பாடத் திட்டங்களை மாற்றுவது, வரலாற்று நிகழ்வுகளை மாற்றி எழுதுவது, இப்பொழுதுகூட கோவிட்-19  பிரச்சினையில், பாடத் திட்டங்களைக் குறைக்க வேண்டும் என்கிற பெயரில், பெரியார் சிந்தனைப் பாடங்களை நீக்குகிறார் கள்; மதச்சார்பின்மைப் பாடங்களை நீக்குகிறார்கள்; கூட்டாட்சி முறை என்கிற பாடங்களை நீக்குகிறார்கள் என்பதையெல்லாம் நாம் பார்க்கின்ற நிலை இருக்கிறது.

அதேபோல, பொருளாதாரத்தில். சுற்றுச்சூழல் 2020 என்கிற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தத் திட்டம், அநேகமாக சுற்றுச்சூழலைப் பாழ்படுத்துகிற, கார்ப்ப ரேட்டுகளுக்குத் தாரை வார்க்கின்ற அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

கரோனா தொற்று முடிவதற்குள், இந்தியாவினுடைய வரலாற்றை முடித்துவிடுவார்கள்

கரோனா தொற்று காலத்தில், அதிரடியாக வேக வேகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கரோனா தொற்று முடிவதற்குள், இந்தியாவினுடைய வரலாற்றை முடித்து விடுவார்கள் என்கிற வேகத்தோடு அந்தப் பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. போராடிப் பெற்ற பொதுத் துறை எல்லாம் வேக வேகமாகத் தனியாருக்குத் தாரை வார்க்கின்ற நிலைமைகளைப் நாம் பார்க்கின்றோம்.

எனவே, டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகின்ற நேரத்தில், இரண்டு கட மைகளை நாம் ஆற்றவேண்டிய அவசியம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

ஒன்று, இன்றைக்கு இந்தத் தேசத்திற்கே மிகப்பெரிய ஆபத் தாக இருக்கின்ற மத்திய மதவெறியை ஆட்சியை எதிர்த்துத் தமிழகத்தில் ஒரு விரிந்த அணியை உருவாக்கி, நாம் அவர்களை முறியடிக்கவேண்டிய மகத்தான கடமையை நாம் ஆற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில், அதனுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில், அந்தப் பணி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிகரமாக நடந்திருக் கிறது. அதனுடைய தொடர்ச்சியாக, சட்டமன்றத் தேர்தலிலும் அந்தப் பணி வெற்றிகரமாக நடைபெறவேண்டும். அதற்குத் தமிழக மக்களைத் தயாரிக்கவேண்டிய மிக முக்கியமான பொறுப்பு - கடமை நமக்கு இருக்கிறது என்பதை நான் இங்கே அழுத்தமாக வலியுறுத்த விரும்புகிறேன்.

ரத்தக் கண்ணீர் வடிக்கக்கூடிய நிலைமை!

அதேநேரத்தில், தந்தை பெரியாரும் - டாக்டர் கலைஞர் அவர்களும், எந்த மாதிரியான கொள்கைகளைத் தமிழகத்தில் அரங்கேற்றினார்களோ, அந்தக் கொள்கைகள் தமிழக மக்கள் மத்தியில் ஆழமாக வேர் பிடித்து வளருவதற்கு நாம் இன்னமும் கூட சற்று அழுத்தமாகப் பணியாற்றவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

ஜாதி ஒழிப்பு பிரச்சாரத்தைத் தந்தை பெரியார் அவர்கள், தெருத் தெருவாகச் சென்று செய்தார்கள். ஆனால், இன்றைக்கும் தமிழகத்தில் ஜாதி ஒழிந்தபாடில்லை. ஜாதி ஒழிந்த பாடில்லை என்பது மட்டுமல்ல, ஜாதியக் கொடுமைகள் நாள் தோறும் நடப்பதைப் பார்த்தால், நமக்கு வேதனையாக இருக் கிறது. ரத்தக் கண்ணீர் வடிக்கக்கூடிய நிலைமை ஏற்படுகிறது.

இந்தக் கரோனா காலத்தில்கூட, கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் படு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். 150-க்கும் மேற்பட்ட கொடுமைகள் நடைபெற்றிருக்கின்ற செய்தி எதைப் போதிக்கின்றது?

எனவேதான், பெரியாரும், டாக்டர் கலைஞரும் வெறும் வாய் அளவி லேயே எழுப்புகின்ற முழக்கமாக மட்டுமில்லாமல், அவர்களுடைய தத்துவம், அவர்களுடைய கொள்கைகள் நடைமுறைக்குத் தமிழகத்தில் வரவேற்க வேண்டிய ஒரு தேவையும், அவசியமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒரு புதிய வரலாறு

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நான் எடுக்கி றேன் என்றுதான், டாக்டர் கலைஞர் அவர்கள், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்கிற சட்டத்தை நிறைவேற்றினார்.

உண்மையிலேயே அது ஒரு சாதாரண விஷயமல்ல - இந்தியாவில் அப்படியொரு சட்டத்தை நிறைவேற்றியிருப்பது என்பது ஒரு புதிய வரலாறு என்று சொன்னால், அது மிகை யாகாது. அது இன்றைக்கும் தமிழகத்தில், அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கிறது. அண்டை மாநிலமாக இருக்கின்ற கேரளத்தில், பினராயி விஜயன் தலைமையில் அமைந்துள்ள அரசு, அதற்குப் பிறகு சட்டம் இயற்றி, அந்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண் டிருக்கிறது. இன்னும் நாம் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, அடித்தட்டு சமூகத்தில் இருக்கிற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, இதர சமூகங்களில் இருக்கின்றவர்கள் இந்த நாட்டிலே அர்ச்சகர்களாக வரக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கவேண்டி இருக்கிறது.

அதேபோல, இன்றைக்குக் கோவில்களில் கூட வழிபாட்டு மொழி எது? என்று மிகப்பெரிய விவாதங்கள் நடைபெறுகிறது. இன்றைக்கும் தமிழகத்தில் இருக்கின்ற கோவில்களில், தமிழ் இல்லை என்பது எவ்வளவு பெரிய இழுக்கு என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

எனவே, இப்படிப்பட்ட தமிழகத்தில், நாம் தொடங்கிய அந்த மகத்தான பயணம் - இடையில் தடைப்பட்டுப் போய்விட்டதோ என்று சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே, அவற்றையெல்லாம் வெற்றிகரமாக நடைமுறைக்குக் கொண்டுவரக்கூடிய பணியையும் நாம் செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. அந்தப் பணியிலேயும் நம்மை இணைத்துக் கொள்ளவேண்டும்.

டாக்டர் கலைஞர் அவர்களுடைய இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் நாம் உறுதியேற்கும்பொழுது, இன்றைக்கு உருவாக்கப்பட்டு இருக்கிற ஜாதியக் கொடுமை - ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை தமிழகத்தில் முற்றாக ஒழிக்கின்ற உறுதியை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அதேபோல, இந்தியாவையே மிரட்டிக் கொண்டிருக்கின்ற, இந்தியாவின் எதிர்காலத்திற்கே மிகப்பெரிய ஆபத்தாக இருக்கின்ற இந்த மதவெறி அரசாங்கத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் தூக்கி எறியவேண்டிய ஒரு மகத்தான பணியிலே நம்மை நாம் இணைத்துக் கொள்ளவேண்டும்.

என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி!

அந்தப் பணியை நாம் வெற்றிகரமாக ஆக்குவதற்கு, டாக்டர் கலைஞர் அவர்களுடைய பணி - பங்களிப்பு நமக்கு ஒரு உந்து சக்தியாக அமையும் என்று இந்த நேரத்தில் சொல்லி, இந்நிகழ்ச்சியில் எனக்கு வாய்ப்பளித்த - இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கக் கூடிய திராவிடர் கழகத் தலைவர் அவர்களுக்கும், அதனுடைய அமைப்பைச் சார்ந்திருக்கின்ற நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்.