ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இந்தியாவில் நிலவும் கண்ணுக்குத் தெரியாத ஒரு மனித நேய நெருக்கடி
August 13, 2020 • Viduthalai • மற்றவை

ஹர்ஷ் மந்தர்

பல செய்தியிதழ்களின் உள்பக்கங்களிலிருந்தும்,  பல தொலைக்காட்சித் திரைகளிலிருந்தும், கொடிய துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஏழை மக்கள் பெரும்பாலும் மறைந்தே போயினர். நாட்டில் ஊரடங்குச் சட்டம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு புலம் பெயர்ந்து வேலைக்கு வெளியூர்களுக்குச் சென்ற மக்களில் பெரும்பாலோர் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பியவுடன்,  அவர்களின் வாழ்வை சீரழித்துக் கொண்டிருந்த வேலையில்லாத் திண்டாட்டம், கடும் பசிப் பிணி போன்ற மிகுந்த கவலையும் துன்பமும் அளிக்கும் துயரங்கள் ஏதோ ஒரு வழியில் கடந்து சென்றுவிட்டது போலவே தோன்றியது.

ஆனால் நாட்டில் நிலவும் உண்மை நிலை அதற்கு நேர் மாறானதாக இருக்கிறது. நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதாரச் செயல்பாடுகளும் முன் எப்போதும் இல்லாத அளவில் கைவிடப்பட்டதன் பேரழிவு ஏற்படுத்திய பாதிப்பு, ஏற்கெனவே படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது என்றாலும், அந்த பாதிப்பு முழுமையாக நீங்குவதற்கு இன்னமும் நீண்டதொரு காலம் பிடிக்கும்.. என்றாலும், அரசு, பணக்காரர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் கண்ணுக்குப் புலப்படாத ஒட்டு மொத்த அலட்சியம் ஏழை மக்களை மிகப் பெரிய அளவில் துன்புறச் செய்துள்ளது.

தேவைகளில் மூழ்கிக் கிடக்கும் ஏழைகள்

டில்லியில் உள்ள மிகப் பெரிய சுடுகாட்டிற்கு அருகே யமுனை நதிக்கரைகள் மீது,  யமுன புஷ்டா என்று அழைக்கப்படும் ஆற்றங்கரையில் சரிவாக இருந்த சாலைதான் 4000 வீடிழந்த மக்களின் வாழ் விடமாக இருந்தது.  சாதாரண நாட்களில் அவர்கள் ஏதாவது கூலி வேலை செய்து, பெரும்பாலும் உணவு விடுதிகள் மற்றும் கட்டடப் பணிகளில் வேலை செய்து உயிர் வாழ்ந்து வந்தார்கள். அந்த வேலையும் கிடைக் கும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்பதுடன், அதில் அவர்களுக்கு மிகமிகக் குறைந்த அளவு ஊதியமே அளிக்கப்பட்டு வந்தது. என்றாலும், குருத்வாராக்கள், கோயில்கள், தர்காக்கள் போன்ற மத அறக்கட்டளைகள் வழங்கும் உணவையும், தங்கள் ஊதியத்தையும் கொண்டு எவ்வாறோ பசியில்லாமல் வாழ்வதற்கு அவர்கள் முயன்றனர். நான் அத்தகைய மக்களை அண்மையில் சந்தித்தேன். அவர்கள் அடைந்துள்ள ஏமாற்றமும், அவர்களை அலட்சியப் படுத்தி தனிமைப்படுத்தியுள்ள முறையும் சொற்களில் கூற இயலாத அளவில், துன்பம் அளிப்பவையாக இருந்தன. அவர்கள் செய்வதற்கான வேலைகளும் இப்போது இல்லை. கோயில்களும் தங்கள் அன்ன தானத்தைப் போதுமான அளவில் மறுபடியும் செய்யத் தொடங்கிவிடவில்லை. சமைக்கப்பட்ட உணவை இலவசமாக வழங்குவது என்ற டில்லி அரசின் திட்டத் தின் பெரும் பகுதி செயலற்றுப் போயுள்ளது.

வாழ்வாதாரம் துண்டிக்கப்பட்டது

இத்திட்டத்தின் உச்ச கட்டத்தில் நாள்தோறும் 1000 மய்யங்களில் 10 லட்சம் பேருக்கு உணவளிக்கப்பட்டது. ஒரு கரண்டி சாப்பாட்டுக்காக தினமும் பல மணி நேரங்கள் கடும் வெய்யிலில் நிற்கவேண்டிய அவலத் திற்கு மக்கள் உள்ளானது பற்றி அப்போது நான் அதை விமர்சனம் செய்தேன். அந்த அன்னதானத் திட்டத்தை மேலும் பரிவு, மரியாதை, இரக்கத்துடன் ஏற்பாடு செய்து நடத்தியிருக்க முடியும் என்றாலும், மக்களை திடீரென்று கொடிய பசிப் பிணியில் ஆழ்த்திவிட்ட நேரத்தில், அதுவும் மக்களுக்கு  ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது. அவர்களது வாழ்வாதாரம் துண்டிக்கப்பட்ட பிறகு,  பசிப்பிணியின் கொடுமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு சிறு தனிப்பட்ட அறக்கட்டளைகள் அளித்த உணவைத் தவிர மக்களுக்கு வேறு எந்த வழியும் இருக்கவில்லை.

மற்ற நகரங்களில் வீடிழந்து வாடும் ஏழைகளுக்காக என்னுடன் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் நாடு முழுவதிலும் உணவு பெறுவதற்கான உரிமை இயக்கத் தொண்டர் களாகப் பாடுபடும்,  கர்வான்-ஈ-மொஹபத்  உணவு நிவாரண மய்ய சேவையாளர்களாக வேலை செய்யும்   எனது சம தோழர்கள் அனைவரும் இவற்றை விட அதிகக் கவலை அளிக்கும் வகையில் நாடு முழுவதிலும் உணவு கிடைக்காமல் மக்கள் பட்டிணி கிடக்கும் நிலையைப் பற்றித் தெரிவிக்கும் தகவல்கள் நாள்தோறும் வந்து குவிந்து கொண்டுதான் இருக் கின்றன. காடுகள், பாலைவனங்கள், மலைகள், ஆற் றுத் தீவுகள், ஒடுக்கப்பட்டவர்களின் அடைக்கப் பட்ட குடியிருப்புகள் போன்ற நாட்டுப் புறங்களில் வாழும் சமூகங்களும் இவ்வாறு பட்டினியால் பீடிக்கப் பட்டு உள்ளன. சாதாரண நாட்களில் கூட அவர்கள் பசி, பட்டினியின் ஓரத்தில்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள்

குடிபெயர்ந்து வெளியூர்களுக்குச் சென்று  வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அனுப்பும் பணத்தையே தங்கள் வாழ்வாதாரத்துக்கு அவர்கள் நம்பிக் கொண் டிருந்தனர். இன்றோ, தாங்கள் வேலை செய்த இடங் களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்துள்ளவர்களுக்கு உணவளிக்க வேண்டிய நிலை யில் அவர்கள் இருக்கிறார்கள். அன்றாடக் கூலி வேலை செய்பவர்கள், நெசவாளிகள், கைவினைஞர் கள்,  வீடுகளில் வேலை செய்பவர்கள், ரிக்ஷா இழுப் பவர்கள், தெருக்களில் பொருள்களைக் கூவி விற்கும் சில்லறை விற்பனையாளர்கள் ஆகியோர் எல்லாம் எப்போதுமே நிலை தடுமாறிய வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் தங்களது அத்தியாவசியத் தேவையில் மிக மிக ஆழமான நிலையில் வீழ்ந்துவிட்டனர். சிறுசிறு நிறுவனங்களில்  இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள், உணவு விடுதிகளில் வேலை செய்தோர், வீட்டு வேலைகளைச் செய்தவர்கள், பாலியல் தொழில் செய்தவர்கள்,  இசைக் குழுப் பணியாளர்கள்,  தனியார் பள்ளிகளில் பணியாற்றும் குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்களும் கூட, மாண வர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் ஆகிய கோடிக்கணக்கான மக்கள் இந்தப் பட்டினிப் பட்டாளத்தில் புதியதாகச் சேர்ந்துள்ளனர்.

இப்பணியாளர்கள் அனைவருடன்,  10 கோடி மக்களுக்கும் மேலான வசதியற்றவர்கள், நினைவு தெரியாத காலம் முதல் கற்று வைத்திருக்கும் வழிகளில், கடுமையான பட்டினியில் வாழ்ந்திருப்பதற்கான  மர பணு வழியில் தங்களை கடினமானவர்களாக ஆக்கிக் கொண்டனர். முதலில் தங்கள் உணவில் இருந்து நீக்குவதற்கு அவர்கள் கற்றுக் கொண்டவை, தங்களால் விலை கொடுத்து வாங்க இயலாத பருப்பு, பால், பழங்கள், காய்கறிகள் போன்ற சத்துணவுகளைத்தான். வெறும் அரிசிச் சோற்றையும், கோதுமை ரொட்டியை உப்புடன் சேர்த்தும் தாங்கள் உண்டு உயிர் வாழ்ந்து வந்ததாகப் பல குடும்பத்தினர் கூறியுள்ளனர். அடுத்த படியாக அவர்கள் கைக்கொண்ட உத்தி, ஒவ்வொரு வேளையும் சாப்பிடும் உணவின் அளவைக் குறைப் பதும், ஒரு நாளில் பல  முறை சாப்பிடுவதைக் குறைப் பதும்தான். இவ்வாறு செய்வது எவ்வளவு குறைவாக உணவு உண்டாலும்,  தாங்கிக் கொள்ளும் ஆற்றலை அவர்களது உடலுக்கு அளிக்கிறது.

இந்த நிலையில் இருந்து ஏழைக் குடும்பத்தினர் மேலும் சரியும்போது, வெறும் வயிற்றுடன் தூங்க வேண்டிய அவர்களது இரவுகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போகிறது. தினமும் ஒரு வேளை உணவாவது கிடைக்கும் என்று பள்ளி அல்லது மழ லையர் பள்ளிகளை முன்னர் சார்ந்து இருந்த பிள்ளை கள் இப்போது, சாப்பிடவோ அல்லது விற்கவோ ஏதா வது கிடைக்கும் என்று குப்பைகளில் தேடிப் பொறுக்குவது உள்ளிட்ட வேலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

பொதுக் கொள்கைகளின் தோல்விகள்

வேகமாகக் கொழுந்து விட்டுப் பரவும் கரோனா தொற்று நோயும், அதைத் தடுப்பதற்காகப் பிறப்பிக்கப் பட்ட ஊரடங்குச் சட்டத்தின்  பொருளாதார பாதிப்பும்  கோடிக்கணக்கான மக்களை மீளமுடியாத வறுமை யிலும் பட்டினியிலும் ஆழமாகத் தள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறது என்று எண்ணற்ற உலகலாவிய செய்திகள் தொடர்ந்து எச்சரித்துக் கொண்டே இருக் கின்றன.  2020ஆம் ஆண்டு அனைத்துலக நாடுகள் அவை யின் பல்கலைக் கழகம் ஒன்று  வெளியிட்ட 'முன் னெச்சரிக்கை இல்லாமல் அமைதியாகப் பேரா பத்தை உருவாக்க இயன்ற கோவிட் தொற்று நோயின் தன்மை' என்ற தனது ஆராய்ச்சிக் கட்டுரையில்,  40 கோடி மக்கள்,  தினமும் 1 . 90 ரூபாய் வருவாய் பெறும் புதிய வகை கொடிய வறுமைக்குள் வீழும் அபாயத்தில் இருக்கின்றனர் என்று மதிப்பிட்டுள்ளது. அதை விட அதிக அளவில் கவலை தருவது என்னவென்றால்,   உலக அளவிலான வறுமை நிலவும் இடம், நடுத்தர வருவாய்ப் பிரிவு மக்கள் சமூகத்தினர் வாழும் நாடுகளிடையேயும், தெற்காசியா மற்றும் கிழக்காசிய நாடுகளிடையேயும்  மாற்றம் பெற உள்ளது என்பது தான். பிளவுபட்ட அல்லது போதுமான அளவில் அல்லாத சமூகப் பாதுகாப்பு நடைமுறைகள் ஏற் கெனவே நிலவும் சூழ்நிலைகள் காரணமாக இந்தப் பாதிப்பு மேலும் தீவிரமடைந்து வருவதுடன் எதிர் காலத்தில் பல ஆண்டு காலம் நீடித்து நிலைத்திருக்கக் கூடியதாக இருக்கும் என்றும் 25 கோடி மக்கள் கொடிய வறுமையில் வீழும் அபாயத்தில் உள்ளனர் என்றும் ஜூலை மாதத் தொடக்கத்தில் வெளியிட்ட ஓர் ஆய்வு அறிக்கையில், மிகைப்பட்ட வறுமை மற்றும் மனித உரிமைகளுக்கான அய்க்கிய நாடுகள் அவையின் சிறப்பு அறிவிப்பாளர் பிலிப் ஆட்சனும் இதே போல மதிப்பிட்டுள்ளார். வறுமையை முடி வுக்குக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவ்வளவு மோசமான முறையில், சிறிதள வும் பயனே அளிக்காமல் இருந்துள்ளன என்பதையும்,  அந்த உண்மையை இந்தத் தொற்று நோய் எவ்வாறு இடைவிடாமல் வெளிப்படுத்தியுள்ளது என்பதையும்  அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதை விட்டுவிட்டு, தற் போது மேற்கொண்டு வரும் முயற்சிகள் தெளிவாகத் தோல்வி  அடைந்து வருகின்றன என்பது நன்றாகத் தெரிந்த பின்னும்,  அவற்றை இரு மடங்காக அரசுகள் ஆக்கி நடைமுறைப்படுத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது நிலவும் மனித நேய நெருக் கடிகளின் அளவையும் ஆழத்தையும் வைத்துப் பார்க்கும்போது,  பொதுக் கொள்கைகளின் தோல்வி பற்றி அவர் வெளிப்படுத்தும் கவலையும்  கோபமும் நியாயமானதாகவே தெரிகிறது. முதலில், நாட்டில் நிலவும் பசிக் கொடுமை, மக்களின் வாழ்வா தாரங்களின் அழிவு  ஆகியவற்றின் அளவைப் பற்றி  இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் சிறிதளவாவது புரிந்து ஏற்றுக் கொண்டனர். நாட்டின் பொருளாதார நிலையை மீண்டும் மலரச் செய்வதற்கு, குறிப்பாக மிகப் பெரும்பாலான மக்களை வேலைகளில் ஈடு படுத்தும் விவசாயத் துறை நீங்கலான இதர துறைகளான மத்திய, சிறு, குறு தொழில் துறையை மீண்டும்  புதுப்பிப் பதற்காக,  பெரும்பாலும் துன்புறும் மக்களுக்கு நேரடி பண உதவிகளை வங்கிகள் மூலம் அளிப்பதற்குப் பதிலாக மத்திய நிதி அமைச்சர் இத் தொழில் நிறுவனங் களுக்கு வங்கிகள் மூலம் கடன் கொடுப்பதையே ஆதரித்தார்.  தொழில் உற்பத்தியும் தேவையும் வீழ்ந்து விட்டபோது, பெரும் அளவிலான தொழிலதிபர்கள், வங்கிக் கடன் வசதிகளைப் பெற்று சிறிதளவாவது சாதிக்க முடியுமா என்பதைப் பற்றி அவர் கவலைப் படவே இல்லை.

இரண்டாவதாக, தொழில் துறையில் முதலீடு களைப் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன், தொழி லாளர் உரிமைகள், பாதுகாப்பு விதிகளில் இருந்து தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிப்பதன் மூலமும், பாதுகாப்பற்ற மாபெரும் தொழிலாளர்களின் பெரும் அளவிலான துன்பங்களைத் தீர்ப்பதற்கு மாறாகவும்,  அவர்களின் பாதுகாப்புக்காக திடமான தடுப்புச்  சட்டச் சுவர்களைக் கட்டமைப்பதற்கு மாறாகவும்,  முறைசாரா  தொழில் துறை தொழிலாளர்களுக்குத் தற்போதுள்ள மிகமிகக் குறைந்த அளவிலான சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்கும் மறுத்ததன் மூலமும்,  பல் வேறுபட்ட தொழிலாளர் சட்டங்களைத் தொழிற் சாலைகள் கடை பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனை களை மூன்று ஆண்டு காலத்திற்கு நிறுத்தி வைப்பதன் மூலமும்,  தொழிலாளர் வேலை நேரத்தை 12 மணி நேரமாக நீட்டித்ததன் மூலமும்,  பல்வேறுபட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பில் இருந்து தொழிலாளர்களுக்குத்  தற்காலிக விலக்கு அளிப்பதன் மூலமும்,  நாட்டின் எல்லையைத் தாண்டி தொழிலாளர் களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமும்,  உடைந்து போன நாட்டின் பொருளாதார நிலையைச் சரி செய்வதற்கான முயற்சிகளை சில அரசுகள் மேற் கொண்டன. 

அரசால் கைவிடப்பட்டவை

கோவிட்-19 தொற்று நோய் நாட்டில் பரவுவதற்கு முன்னரேயே, உலகில் பசித்திருக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையிலான 117 நாடுகளின் 2019 ஆம் ஆண்டு பட்டியலில், இந்தியா 102 ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடு களை விடவும் இந்தியா மிகவும் பின்தங்கியிருந்தது. 45 ஆண்டு காலத்தில் முன் எப்போதுமே இல்லாத அளவில் வேலையில்லாத் திண்டாட்டத்தில்  சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இந்திய நாட்டின் பொருளா தாரம் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தது. தீயின்றி நெருப்புப் பற்றி புகைந்து கொண்டிருக்கும் இத்தகைய சிக்கலுக்கிடையே  உலகிலேயே மிகமிகக் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு சட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்டது பொருள்களின் தேவை மற்றும் உற்பத்தி இரண்டையுமே ஒரு நாள் இரவிலேயே ஏறக்குறை முழுவதுமாகத் தடுத்து நிறுத்திவிட்டது. நொறுங்கிப் போன, காலாவதி ஆன பொதுச் சுகாதார நடைமுறைகளைக் கொண்டிருந்த உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநில அரசுகளிடையே கோவிட் -19 தொற்றுநோய்,  பரவிக் கொண்டிருந்தபோது, நகரங் களில் இருந்த உயர்தர தனியார் சுகாதார, மருத்துவ வசதிகளின் பயனாளிகளின் பட்டியல்களில் ஏழைகள் சேர்க்கப்படவில்லை என்பதால், இது தொடர்பான ஏழைகளின் துன்பங்கள் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்லும். தொற்று நோய்க் கிருமி களால் துளைக்கப்பட்டு,  பசி, வறுமை ஏமாற்றத்தால் பீடிக்கப்பட்ட மக்கள், எந்த வித நம்பத் தகுந்த உதவி களும் செய்யப்படாமல் அரசால் கைவிடப்பட்டனர்.

இவை அனைத்துக்கும் இடையே, அரசியல் கட்சி களின் தலைமையின் கீழ் அமைந்திருந்த அரசுகளும், மத்திய தர வருவாய்ப் பிரிவினரும், மக்களின் துன் பங்களைக் கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்து  கொண்டு, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதிலும், மாநில அரசுகளைக் கவிழ்ப்பதிலும்  ராணுவத்திற்கு விமானங்களை வாங்குவதிலும், கருத்து மாறுபாடு கொண்டவர்களை சிறைகளில் அடைத்தும்,  அயோத்தியில்  இடைக்கால மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவது என்ற பிரிவினை வாத செயல்திட்டங்களை நிறைவேற்றுவ திலும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர், நாள்படத் தீராத பசி, பட்டினி, வறுமை ஆகிய கடும் நோய்களில் கோடிக்கணக்கான இந்திய மக்கள் நாள்தோறும் கண் ணுக்குத் தெரியாமல் விழுந்து கொண்டிருப்பதுதான் கடந்த அரை நூற்றாண்டில் நிகழ்ந்த மிகமிக மோச மான மனிதநேய சிக்கலாகும்.

நன்றி: 'தி இந்து', 7.8.2020

                தமிழில் : த.க.பாலகிருட்டிணன்