ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இந்தியாவின் மானம் அய்.நா. வரை!
September 25, 2020 • Viduthalai • தலையங்கம்

கோரக்பூரில் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி அன்று பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பல குழந்தைகள் மரணம் அடைந்தன. மருத்துவமனை நிர்வாகம் விநியோக நிறுவனத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டருக்கு உரிய நிலுவைத் தொகையை பல மாதங்களாகக் கொடுக்காததால் சிலிண்டர் விநியோகத்தை அந்நிறுவனம் நிறுத்தியது.   இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை உண்டாகி குழந்தைகள் மரணம் அடைந்ததாகச் செய்திகள் வெளியாகின.

அப்போது மருத்துவமனை அதிகாரி டாக்டர் கலீல் கான் உடனடியாக செயல்பட்டு, தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்ததால் குழந்தைகள் மேலும் மரணம் அடையாமல் தடுக்கப்பட்டது. ஆனால் உத்தரப்பிரதேச பாஜக அரசு டாக்டர் கலீல் கான் மீது இந்த மரணத்துக்குப் பொறுப்பு சுமத்தி, அவரை சிறையில் அடைத்தது. அதன் பிறகு பல நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் வருடம் ஏப்ரல் 25 ஆம் தேதி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கலீல் கான் தனது பணியைச் சிறப்பாகச் செய்ததாகவும், ஆக்சிஜன் விநியோகம் குறித்த எந்த ஒரு நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டதே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.   ஆனால் கலீல்கான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பிறகு மாநில அரசுப் பணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

கலீல் கான் மீது தேசியப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் பாய்ந்தன.  இதனால் அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசிக்கப் பிடிக்காமல் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் நகரில் வசித்து வருகிறார். அவர் தமக்கும், பா.ஜ.க. அரசுக்கும் இடையில் உள்ள பிரச்சினைகளை சர்வதேச அளவுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

தவறு செய்தது அரசுதான்! குழந்தைகளை தன் சொந்த செலவில் காப்பாற்றியவர் ஒரு டாக்டர். ஆனாலும் குற்றவாளியே நீதிபதியாகித் தண்டிக்கும் அவலம் நடந்தேறியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி அன்று அய்.நா. சபையின் மனித உரிமைப் பிரிவு - இந்திய அரசுக்கு 11 வழக்குகள் குறித்து விளக்கம் கோரி கடிதம் எழுதி இருந்தது.  அதில் டாக்டர் கலீல் கான் வழக்குக் குறித்தும், குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட சர்ஜீல் இமாம் வழக்குக் குறித்தும் விளக்கம் கோரப்பட்டிருந்தது.  இந்த இரு வழக்குகளிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோர் மீது மனித உரிமை மீறல் நடந்ததாகவும், சிறையில் கொடுமைகள் செய்யப்பட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அய்நா மனித உரிமைப் பிரிவுக்குக் கலீல் கான் அனுப்பியுள்ள கடிதத்தில், ”எனது வழக்கு குறித்து இந்திய அரசிடம் விளக்கம் கோரியமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து அமைதியாகப் போராட்டம் நடத்திய ஆர்வலர்களைக் கைது செய்து அரசு கொடுமை செய்துள்ளது.   அவர்கள் இதற்கு எதிராக எழுப்பிய கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ளவில்லை."

"நான் சிறையில் இருந்த போது மனதளவில் மற்றும் உடலளவில் பல சித்திரவதைகளை அனுபவித்தேன். எனது 7 மாத சிறை வாசத்தில் பல நாட்கள் உணவு மற்றும் குடிநீர் தரப்படவில்லை.  மதுரா சிறையில் கூட்டத்துடன் நான் அடைக்கப்பட்டிருந்தேன்.   என் மீது தேசியப் பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததால் மூன்று முறை தண்டனை நீட்டிக்கப்பட்டு, நான் உயர்நீதிமன்றத்துக்குச் சென்று சிறையில் இருந்து வெளியே வந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் அதிகாரத்தில் இருக்கும் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் தரமும் போக்கும் எந்த அளவுக்குக் கொடூரமானது என்பதற்கு மேற்கண்ட டாக்டரின் குமுறல் போதுமானது. அவர் சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக, கண்மூடித்தனமாக சட்ட ஏவல்களும், சித்திரவதைகளும் நடந்திருக்கின்றன.

பா.ஜ.க.வால் அய்.நா. அளவுக்கு இந்தியாவின் மானம் கப்பல் ஏறுவது வெட்கக் கேடே!