ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இடஒதுக்கீடு என்றால் எரிவது ஏன்
July 15, 2020 • Viduthalai • தலையங்கம்

இடஒதுக்கீடு என்றால் எரிவது ஏன்?

சமூகநீதி, இடஒதுக்கீடு என்றாலே இந்தப் பார்ப்பனர்களுக்கு ஏற்படும் எரிச்சல் இருக்கிறதே - அதனை அளவிட முடியாது  - முடியவே முடியாது.

இந்த வார 'துக்ளக்' இதழில் திரும்பிய பக்கம் எல்லாம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கூச்சல்-ஆத்திரம் - கிண்டல் - கேலி இவற்றின் ஒட்டு மொத்தமான கூட்டல் - பெருக்கல்தான்.

2001ஆம் ஆண்டில் சோ ராமசாமி எழுதியதுவரை எடுத்துப் போட்டு எக்காளம்!

'சோ' போன்றவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதில் என்ன ஆச்சரியம்? முற்றும் துறந்த முனிபுங்கவர் என்று மூச்சுக்கு மூச்சு முழங்கும் அவாளின் காமகோடி - பெரியவாள் மூத்த சங்கராச்சாரியாரே 'இடஒதுக்கீடு விஷயத்தில் நான் கொஞ்சம் கம்யூனலாகவே பேசுகிறேன்.Õ ('தெய்வத்தின் குரல்; 3ஆம் பகுதி) பெரியÔவாளே' அப்படி சொல்லும்பொழுது இந்த 'வால்கள்' எப்படியெல்லாம் ஆடும் என்பது எல்லோருக்குமே தெரியும்.

சேலத்தில் நடைபெற்ற 'பிராமண' மாநாட்டில் (9.3.1946) சர்.சி.பி.ராமசாமி அவர்கள் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.

"வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தால் அரசியல் நிர்வாகத்தில் தகுதியும், வினைத்திட்பமும் (Merit And Efficiency) கெடும் என்ற பல்லவியை நீங்கள் (பிராமணர்கள்) தொடர்வதால் பிராமணரல்லாதாரின் மனதைப் புண்படுத்துவதுமன்றி, அவர் கள் பகைமையையும் பெருக்கிக் கொள்ளுகிறீர்கள்"  என்று பார்ப்பனர்கள் மாநாட்டிலேயே நேருக்கு நேராகச் சொல்லி மொத்தினாரே சர்.சி.பி. - அப்பொழுது முதல் இப்பொழுதுவரை புத்திக் கொள்முதல் பெறாதது ஏன்?

'பதவி உயர்வில் இடஒதுக்கீடு' குறித்து மாநிலங்களவையில் திருவாளர் சோ ராமசாமி பேசினார் (2001) என்று இப்பொழுது அதனைத் 'துக்ளக்' வெளியிடுகிறது.

என்ன பேசினார்? "அரசு ஊழியத்தில் உள்ளவர்கள் நம்பிக்கையையும் இது (பதவி உயர்வில் இடஒதுக்கீடு) நாசம் செய்யும். கடுமையாக உழைக்கும் நேர்மையான ஊழியர், ஒரு குறிப்பிட்ட வகுப்பில் பிறக்கவில்லை என்ற காரணத்துக்காக, ஓரம்கட்டுகிறபோது அவருடைய தன்னம்பிக்கை எந்த அளவில் இருக்கும்? அம்மாதிரியான ஊழியர்கள் தங்கள் பிறப்பினால் ஏற்படுகிற சுமையை பணியிலிருந்து ஓய்வு பெறுகிறவரையில் தாங்கிக்கொள்ள வேண்டியதுதானா? இது முழுமையான அநீதி!" என்று நாடாளுமன்றத்திலேயே முழக்கு முழக்கு என்று முழங்கியுள்ளார்.

குறிப்பிட்ட ஒரு குலத்தில் பிறந்ததனாலேயே இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வி உரிமை மறுக்கப்பட்டார்கள், எத்தனை எத்தனை நூற்றாண்டு காலம் வரை இந்த இழிவுச் சுமையைத் தாங்கிக் கிடந்தார்கள் என்பதைப் பற்றிப் பார்ப்பனர்கள் கவலைப்பட வேண்டாம் - குறைந்தபட்சம் நினைத்தாவது பார்த்ததுண்டா?

30 ஆண்டுகள் 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் ஒரு கால கட்டத்திலாவது பதவி உயர்வு கிட்டும் என்று எதிர் பார்த்திருக்கும் நிலையில், தேர்வு ஒன்றில் வெற்றி பெற்றதை வைத்து மட்டும் அய்.ஏ.எஸ்., அதிகாரியாகி - நேற்று முளைத்த அந்த இளைஞன் உயர்ந்த அதிகாரத்தில் அமர்ந்து ஆட்டிப் படைக்கிறானே - அது எந்த ஊர் நியாயம்?

20, 30 ஆண்டுகால உழைப்பு, அனுபவம் எல்லாம் ஒரே ஒரு தேர்வு மூலம் தூக்கி எறியப்படுகிறதே!

என்றைக்காவது இதுகுறித்து எழுதியதுண்டா? விமர்சித் தது உண்டா? எழுத மாட்டார்கள், விமர்சிக்க மாட்டார்கள். ஏன் தெரியுமா? அய்.ஏ.எஸ். என்றால் இண்டியன் அட்மினிஸ்ட் ரேட்டிவ் சர்வீஸ் அல்ல - உண்மையில் (AIR) ஆல் அய்யர் அண்ட் அய்யங்கார் சர்வீஸ்தானே! அதனால் அதுகுறித்து எல்லாம் மூச்சுவிட மாட்டார்கள்.

வெகுதூரம் போக வேண்டாம்! அண்மைக் காலமாக தனியார்த் துறைகளிலிருந்து 'லேட்டரல் என்ட்ரி' என்ற பெயரால், மத்திய அரசில் காலியாக உள்ள 1300 இயக்குநர்கள் மற்றும் உதவிச் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் பதவிகளுக்குப் பார்ப்ப னர்களைக் கொண்டு வந்து குவிப்பது எந்த வகையில் சரியானது?

ஓர் இணைச் செயலாளர் பதவிக்கு மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 200 முதல் ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 200 வரை.

வருமானவரித்துறை, கலால் துறை, இரயில்வே, தொலைத் தொடர்பு, அஞ்சல் துறை உள்ளிட்ட 37 அரசுத் துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களே தகுதி உயர்த்தப்பட்டு அரசின் செயலாளர்களாகப் பதவி உயர்வு பெறுவது மரபு!

இப்பொழுது அந்த இடங்களுக்குத் தனியார்த் துறைகளிலிருந்து பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே கட்டிப்பார்த்து பணி நிய மனம் செய்யும் பொழுது, காலங்காலமாக உழைத்து, பதவி உயர்வை எதிர்பார்த்தவர்கள் - 'சோ' வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், அவர்களின் தன்னம்பிக்கை எந்த அளவில் இருக்கும்? எவ்வளவு பெரிய சுமையை அவர்கள் தாங்க வேண்டி யிருக்கும்?

தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்ததால் எந்த நிர்வாகம் சீர்குலைந்தது? ஆதாரத்துடன் நிரூபிக்கட்டுமே பார்க்கலாம்.

சமூகநீதியில் நீண்ட காலமாக நிலவிவரும் ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கு அரசுகள் சில ஏற்பாடுகளை செய்யத்தான் வேண்டும்.

இதனை உணர்ந்துதான் நீதிக்கட்சி ஆட்சியில், பனகல் அரசர் பிரீமியராக இருந்தபோது - பதவியிலும் இடஒதுக்கீடு முறையைக் கொண்டு வந்தது. (M.R.O. Public Ordinary Service G.O.No. 658 Dated 15.8.1922).

இந்த வரலாறு எல்லாம் தெரியாமல் 'துக்ளக்' வகையறாக்கள், அக்கிரகாரவாசிகள் வயிற்றில் உலக்கையை எடுத்துக் குத்திக் கொண்டு குடல் சரிய வேண்டாம்! 1946இல் சர்.சி.பி.ராமசாமி அய்யர் சொன்னதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.