ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆரியத் தந்திரங்கள் இனி பலிக்காது
October 12, 2020 • Viduthalai • தலையங்கம்

ஆரியர் - திராவிடர் பிரச்சினை பற்றிய விவாதம் பேசப்படாத, எழுப்பப்படாத கால கட்டத்தில் ஆரிய பார்ப்பனர் அதைப்பற்றி எல்லாம் மூச்சு விடவில்லை.

தென்னாட்டில் குறிப்பாக திராவிடர் இயக்கம் தோன்றி, ஆரியம் வகுத்த வருணாசிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த நிலையிலும், அது ஆரியருக்கு எதிரான இனவுணர்வை பொங்கி எழச் செய்த நிலையிலும், அதற்கு நேர்மையான வகையில் பதில் சொல்ல வக்கற்றபோது 'தினமணி' போன்ற ஆரியப் பார்ப்பனர்கள், ஏன் சங்கராச்சாரியார்கள் உட்பட ஆரியர் - திராவிடர் என்பது பிரிட்டீஷார் ஏற்பாடு செய்த பிரித்தாளும் சூழ்ச்சி என்று, அவாளுக்கே உரித்தான திரிபுவாதங்களில் இறங்கினர் என்பதுதான் உண்மை.

வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமல்ல;  தமிழ் இலக்கியங்களிலும்கூட ஆரியர் பற்றிப் பேசப்படுகிறதே!

எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான 'நற்றிணை'ப் பாடல் 170இல் முள்ளூர் நகரத்தில் ஆரியர்கள் வசித்தனர் என்று வருகிறதே! அகநானூற்றிலும் 'ஆரியர் துஞ்சிய பேரிசை' என்ற வரி இடம் பெற்றுள்ளது. பொன்வினையும் இமயமலைப் பகுதியில் ஆரியர்கள் இருந்தனர் என்ற தகவலை அகநானூறு 398ஆம் பாடல் தெரிவிக்கிறது.

இந்தியாவில் தேசிய கீதத்திலும் சரி, மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த் தாய் வாழ்த்திலும் சரி 'திராவிடம்' இடம் பெறவில்லையா? ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிடப் பல்கலைக் கழகமே சிறப்பாக செயல்பட்டு வருகிறதே!

தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தரான வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள் திராவிடக் கலைக் களஞ்சியத்தை உருவாக்கி, வாஜ்பேயி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷியிடம் ஒரு நகலைக் கொடுத்தபோது, 'திராவிட' என்ற சொல்லை நீக்கி விடலாமே என்று சொன்ன போது - தேசியக் கீதத்தில் இடம் பெறும் 'திராவிட'த்தை நீக்கினால், நானும் நீக்கத் தயார் என்று முகத்துக்கு முகம் சொன்னது எல்லாமே ‘தினமணி'க்கோ, அதன் நடுப்பக்கக் கட்டுரையாளருக்கோ தெரியாதா?

வரலாற்றில் உண்மைகள் பளிச் பளிச் என்று வெளியில் தெரிய ஆரம்பித்த காரணத்தால் - தங்களுக்கு எதிரான உணர்வை உண்டாக்குகிறதே என்ற நிலையில் ஆரியராவது - திராவிடராவது என்று எழுதத் தொடங்கியிருக்கும் பரிதாபம் நமக்கு நன்றாகவே தெரிகிறது.

'தினமணி' கட்டுரை மற்றொன்றையும் தெரிவித்து 'எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை' என்பதை நினைவூட்டுகிறது.

"நம் தேசத்தின் வரலாற்றைப் பற்றியோ, வாழ்வியல் முறை அல்லது தத்துவங்கள்பற்றியோ தெளிவு பெற வேண்டுமெனில் சனாதனக் குருமார்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் படித்தே தீர வேண்டுமாம்.  இங்கே எல்லாமே ஆன்மீகம் சார்ந்தது. எவை எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நம் முன்னோர் கருதினரோ, அவற்றை எல்லாம் இறை சிந்தனையோடு இணைத்தும், பிணைத்தும் வைத்தார்கள். உண்ணும் உணவு முதல் ஆத்ம விசார தத்துவங்கள் வரை அனைத்தும் நெறிப்படுத்தப்பட்டன. காலங் காலமாக அவை 'தர்மம்' என்ற சொல்லால் மக்கள் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக வாழ்வியலாய் நிலைப் பெற்றிருந்தன. வாழ்வியல் முறை என்று நாம் கண்டவையே  பின்னாளில் சமயம், மதம் என்று வழங்கலாயின" என்று கோதை ஜோதிலட்சுமி என்பார் ‘தினமணி' கட்டுரையில் வித்தாரமாகக் குறிப்பிட்டுள்ளார் (9.10.2020).

கோணிப் பைக்குள்ளிருந்த பூனை வெளியில் வந்தது என்று சொல்வதுண்டு. அது இதுதான். சனாதன குருமார்கள் சொன்ன அந்த தர்மத்தைத் தூக்கிப் பிடித்துள்ளனர் - அதுதான் ஆன்மீக நெறி என்றும் நிமிர்த்தப் பார்க்கிறார்.

இவர்களின் ஆன்மிகம், மதம், சமய குருக்கள் என்ற வட்டத்துக்குள் வருவதுதான் ஆரியர்களின் வேதங்கள் உபநிஷத்துகள், இதிகாசங்கள், புராணங்கள், இத்தியாதி - இத்தியாதி!

இவர்கள் தூக்கிப் பிடிக்கும் 'பகவான் கிருஷ்ணன்' அருளியதாகக் கூறப்படும் கீதை, 'பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும், பாவயோனியில் பிறந்தவர்கள்' என்று தானே கூறுகிறது. ஒரு பெண்ணாக இருந்து கட்டுரை எழுதும் சகோதரியார் இந்தஆன்மிகத்தை ஏற்றுக் கொள்கிறாரா?

நான்கு வருணத்தை நானே படைத்தேன் என்பதும், முதல் வருணம் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன் என்றும், நான்காம் வருணம் பிர்மாவின் பாதங்களில் பிறந்தவன் சூத்திரன் என்றும், அந்த சூத்திரன் ஏழு வகைப்படுவான் என்றும், அந்த ஏழில் ஒன்று விபச்சாரி மகன் என்றும் மனுதர்மம் கூறுகின்றதே - ஆன்மிகக் கண்ணோட்டத்தோடு இதனைக் கண்ணில் வைத்து ஒத்திக் கொள்ள வேண்டும் என்று இந்த 2020லும் 'தினமணி'கள் எதிர்பார்க்கின்றனவா?

காமம், துரோகம், படுக்கை இவைகளை மாதர் பொருட்டே மனுபடைத்தார் எனும் மனுதர்ம சுலோகத்தை சுத்தமாக அருவருப்பின்றி ஏற்கிறோம் என்று அறிவு நாணயத்தோடு கூற முன் வரட்டுமே பார்க்கலாம்.

அந்தக் கால சமயக் குருக்களை விட்டுத் தள்ளுவோம். ஆதிசங்கரரை முன்னிலைப்படுத்திதானே 'தினமணி'யில் கட்டுரை வெளிவந்துள்ளது. அந்த ஆதி சங்கரர் வழிவந்த காஞ்சி சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி- இந்தக் காலக் கட்டத்திலும் 'தீண்டாமை க்ஷேமகரமானது' என்று சொல்லுவதை ஏற்க வேண்டுமா?

விதவைப் பெண்கள் தரிசு நிலத்துக்கு ஒப்பானவர்கள் என்றும், வேலைக்குப்போகும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள் என்றும் மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் கருத்து குறித்து கட்டுரை எழுதுமா ‘தினமணி'?

உணவுப் பிரச்சினை வரை நம் முன்னோர்கள் நெறிப்படுத்தினார்களாம். 'நாங்கள் பூண்டு, வெங்காயம் தெரியாத பரம்பரை' என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சொன்னதை நினைத்துக் கொள்ளலாம்.

'தினமணி'யின் மற்றொரு அண்டப் புளுகு - ஆதி சங்கரர் 5 மடங்களை நிறுவினார் என்றும், அதில் ஒன்று காஞ்சிபுரம் என்றும் கதை அளக்கப்பட்டுள்ளது.

காஞ்சி மடம் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதல்ல என்பதை "அனைத்திந்திய பகவத் பாத சிஷ்யர்கள் சபை" (மதுரை) யால் வெளியிடப்பட்டுள்ள "தஷிணாம் நாயபீடம் சிருங்கேரியா காஞ்சியா?" எனும் நூல் காஞ்சி மடம் மோசடியானது என்பது காஞ்சி சங்கராச்சாரியார்கள் சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஜெயேந்திர சரஸ்வதி வகையறாக்கள் உயிரோடு இருந்தபோது வெளியில் வந்ததே - மறுப்பைக் காணோமே.

‘தினமணி' கட்டுரை திட்டமிட்டே - எழுச்சி பெற்றுள்ள இளைஞர்களைக் குழப்பவே எழுதப்பட்டுள்ளது. இது பெரியார் சகாப்தம் - மனு, மந்தாதா காலத்திற்கு இழுத்துச் செல்ல முயற்சிக்க வேண்டாம் - அது ஆரியத்தின் விரைவான அழிவுக்குத்தான் நாளைக் குறிக்கும் - எச்சரிக்கை!