ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆய்வுத் திரட்டு (3) - ஒரு கதை கேட்போமா
October 29, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

ஒரு கதை கேட்போமா?

பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களிடம் அவரது மாணவர் முனைவர் ந.முத்து மோகன் கேட்கும் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் சிறந்த இலக்கிய மாகவே பயன்படுகிறது.

இலக்கியம் என்பதற்கு விளக்கம் சொன்ன சிந்தனையாளர் எமர்சன் கூறினார். 'Literature is the record of the best thoughts' - இலக்கியம் என்பது சிறந்த சிந்தனைகளின் ஆவணம் - அது முழுக்கப் பொருந்துகிறது.

இந்நூலில் ‘காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது' போன்ற பழமொழிகள் நம் முடைய சமூக வரலாற்றைச் சொல்லுகின்றன. ‘பழமொழிக்குப் பின்னால் கதைகள் உள்ளன' என்கிறார்.

உடனே ஒரு கேள்வி - “ஒரு கதை சொல்லுவீர்களா?”

ஒரு கதை சொல்லுவீர்களா?

“ஆசாரக்காரன் ஒருவன் சாப்பிடும் போது, எதிரில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவன் மொச்சைக் கொட்டையை நசுக்க, அது ஆசாரக்காரன் வாயில் விழுந்துவிட்டது. அந்த பாவத்தைத் தீர்க்க அவன் காசிக்குப் போனானாம். போகும் வழியில் ஒரு வீட்டில் ஆசாரத்தைக் காப்பாற்றும் வழிமுறையாக இலை போட்டுச் சாப்பிட்டு விட்டு, இலையை விட்டெரியப் போனபோது, “இலையை வைத்துப் விட்டுப் போ, இன்னொருவருக்கு வேண்டும், உனக்கு முன்பு பல பேர் சாப்பிட்ட இலை அது” என்றாளாம் அந்த வீட்டுக்காரி.

அடுத்த நேரம், இன்னொரு வீட்டில் இலை வேண்டாம் என ஒரு மண் சட்டியில் சாப்பிட்டானாம். சாப்பிட்டு முடித்ததும், சட்டியைக் கழுவும்போது கைதவறிக் கீழே உடைந்துவிட்டது. அந்த வீட்டுத் திண்ணை யிலிருந்த கிழவி, தன் கணவன் மரணப் படுக்கையில் இருக்கும் போது மூத்திரம் போகப் பயன்படுத்தியச் சட்டியை, தனக்கு இறுதிக்காலத்தில் பயன்படும் என வைத் திருந்ததை உடைத்து விட்டாயே! என்று கோபித்தாள்.

பின்னர் ஒரு தோட்டத்தில் வாழை இலையை அறுத்து கையோடு கொண்டு போய் வேறொரு வீட்டில் சாப்பிட்டான். ஆசாரத்தைக் காப்பாற்றிய திருப்தியுடன், அவ்வீட்டுத் திண்ணையில் அமர்ந்தான். அவ்வீட்டுக்காரி வெற்றிலைத் தட்டை முன்வைத்தாள். வெற்றிலையைப் போடும் போது பாக்கு இல்லை. பாக்கு எங்கே? கேட்டபோது மாடாக்குழியில் இருக்கிறது என்றாள் வீட்டுக்காரி. அங்கிருந்த கழிப்பாக்கை வாயில் போட்டுக் கடிக்கும் போது, பாக்கு இரண்டு துண்டானது. “உன் பற்கள் பலமானவைதான், நான் நாலைந்து நாட்களாக முயற்சித்தும் அதைக் கடிக்க முடியவில்லை’’ என்றாளாம் அந்த வீட்டுக்காரி. அவன் மனம் நொந்துபோய் “காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது’’ என்று ஊருக்குத் திரும்பினானாம்.”

இதில் ஆசாரக்காரன் என்று குறிப் பிடப்படுபவன் மேட்டிமை ஜாதியின் குறியீடுதான். இது ஒரு வகை மேட்டிமை ஜாதி குறித்த பகடி ஆகும்.

கதைகளும் பகடி இலக்கியங்களாக நாட்டில் - குறிப்பாக கிராமப்புறங்களில் உலா வரத்தானே செய்கின்றன - இல்லையா?

கதைகள் மூலம் கூட இப்படி இலக்கி யங்கள் - வாய்மொழியாக சொல்லப்படினும் கூட, அவைகளையும் அறிந்தால்தான் சமூக வாழ்வில் எத்தனை ஆசாரக்காரர்கள் என்போர் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் ஏமாற்றி வருகிறார்கள் என்பது புரியும்!