ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆத்திரம் ஊட்டுவர் - அதற்குப் பலியாக வேண்டாம்!
August 3, 2020 • Viduthalai • தலையங்கம்

1.8.2020 அன்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் உட்பட ஏழு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாம் தீர்மானம் கழகத் தோழர்களுக்கு வழி காட்டும் தீர்மானம். சமூக விரோத சக்திகள் - குறிப்பாக காவிக் கூட்டத்தினர் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, திருவள்ளுவர், புதுச்சேரி வில்லியனூரில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். சிலைகளை அவமதித்துள்ளனர். அவற்றின்மீது ஆங்காங்கே காவல்துறையிடம் புகார்கள் கொடுக்கப்பட்டும், பெரும்பாலான இடங்களில் காவல்துறை சரியான, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக, கழகத் தோழர்கள் எதிர்வினையாற்றத் தேவையில்லை. நம்மால் நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது என்ற நிலை இருக்கக் கூடாது என்றார் கழகத் தலைவர். கழகத் தோழர்களுக்கு ஒரு சரியான வழிகாட்டுதலை வழங்கியுள்ளார். கழகத் தோழர்களுக்கு ஆத்திரம் வருவது இயல்புதான். ஆனாலும் தந்தை பெரியார் சிலையை எந்த நோக்கத்தில் காவிகள்  அவமதித்து இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் என்பது கடந்த கால வரலாறாகும்.

தம் வாழ்நாளில் எல்லாம் தந்தை பெரியார் சந்திக்காத வன்முறையா? எத்தனையோ இடங்களில் செருப்பு வீச்சுகள், கல்லடிகள், முட்டைக்குள் மலத்தை வைத்து வீசப்பட்ட சம்பவங்கள், செருப்புத் தோரணங்கள் - இவற்றை எல்லாம் கடந்துதான் தந்தை பெரியார் அவர்கள் தம் கொள்கையில் பெரும் வெற்றியை ஈட்டினார்.

இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாடு தனித்தன்மை வாய்ந்ததாக, சமூகநீதி செழித்து வளரும் பூமியாக - கட்சிகள், ஜாதிகள், மதங்களுக்கு அப்பாற்பட்டு தலை நிமிர்ந்து இந்தியக் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும், ஒளியூட்டும் மாநிலமாகத் திகழ்கிறது என்றால், தந்தை பெரியார் எதிர்ப்புகளை எருவாக்கினார். கல்லடியைத் தம் கொள்கைக் கோட்டையின் அஸ்திவாரத்திற்குப் பயன்படுத்தியும் வந்ததால் தான், சகட்டுமேனிக்கு எதிரிகள் கையில் எடுத்த அதே அநாகரிக நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளக் கூடாது என்று தந்தை பெரியார் அவர்கள் கருஞ்சட்டைத் தோழர்களைக் கட்டுப்படுத்தியும், கொள்கை நெறிப்படுத்தியும் வந்ததால்தான், அது இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கழகத் தலைவர் அவர்கள் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் குறிப்பிட்டபடி, நாம் எதிர் வினையாற்ற வேண்டும் - அதை வைத்துக் கொண்டு பிரச்சாரங்களைக் கலவரங்களை உருவாக்கி, அரசியல் குளிர்காய வேண்டும் என்ற எதிரிகள் சூழ்ச்சி வலைக்குள் நாம் வீழ்ந்து விடக்கூடாது என்று ஓர் உண்மையான தலைவர், ஒரு சமூகப் புரட்சி இயக்கத்தை எப்படி வழி நடத்த வேண்டுமோ அந்த வகையில் வழிகாட்டும் கருத்தினை வலியுறுத்தினார்.

தந்தை பெரியார் நாகூர் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் கலாட்டா செய்தத் தோழரை மேடைக்கு கொண்டு வரச் செய்து, கூட்டம் முடிந்தவுடன், பொறுப்பான கழகத் தோழர்கள்மூலம் அவரைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்த பெரும் பண்பு என்பது நமக்கே உரித்தான ஒன்றாகும்.

ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை எதிர்க்கும் முறையில், தீப்பந்தத்தை கையில் எடுங்கள் - அவசரப்படாதீர்கள் - நாள் குறிப்பிடுவேன் என்று எதிரிகளை மிரட்டும் வேலையில் ஈடுபட்டார்களே  தவிர, அவசரப்பட்டு தீயை வையுங்கள் என்று சொல்லவில்லை.

காந்தியார் படுகொலை செய்யப்பட்டபோது பார்ப்பனர்கள் மீது கடும் வெறுப்பும் எதிர்ப்பும் - மும்பையில் வெடித்துக் கிளம்பி, பார்ப்பனர்கள் தாக்கப்பட்டு, அக்கிரகாரங்கள் எரிக்கப்பட்டு, 'கொந்தளிப்புத் தீ' பற்றி எரிந்த நேரத்தில், அதை விட தமிழ்நாட்டில் கடுமையாக பாதிப்பு நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பொறுப்பு வாய்ந்த உன்னத மக்கள் தலைவர் தந்தை பெரியார் வானொலிமூலம் மக்களை அமைதிப்படுத்திய பாங்குக்குப் பார்ப்பனர்கள் என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

அத்தகைய தலைவரின் சிலைக்குத்தான் செருப்பு மாலை அணிவித்து - காவிச் சாயம் பூசுகிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

தந்தை பெரியார் அவர்களைவிட தீவிரமாகப் போராட்டங்களை நடத்தியவர்கள் யாருமிலர். அப்படி போராட்டத்தை நடத்தும் போதுகூட, பொதுச்சொத்துக்கு நாசம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலே குறிப்பாக கவனமாக இருந்தவர்கள். அதற்கான கட்டளைகளையும் பிறப்பித்தார்கள்.

அதே வழியில், பல அரசு ஆணைகளை, நீதிபதியின் கொடும்பாவிகளை எரிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகம் அறிவித்து நடத்திய நேரத்தில், நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒரு வாளியில் தண்ணீரும், மற்றொரு வாளியில் மணலும் தயாராக இருக்கட்டும் என்று அறிவுறுத்தி, அதன்படி நடக்கவும் செய்தவர். ஆகவே, கழகத் தோழர்களே ஆத்திரமூட்டும் வேலையில் எதிரிகள் இறங்குவார்கள் - அதற்குப் பலியாகிட வேண்டாம் - வேண்டவே வேண்டாம்!