ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆதிசங்கரர் யார், 'தினமணி'க்குப் பதில்!
October 10, 2020 • Viduthalai • தலையங்கம்

ஆதிசங்கரர் யார்?

'தினமணி'க்குப் பதில்!

9.10.2020 நாளிட்ட 'தினமணி' நடுப் பக்கக் கட்டுரையின் தலைப்பு "ஆதி சங்கரரும் திராவிடமும்" என்பதாகும். கட்டுரையை எழுதியவர் ஊடகவியலாளர் கோதை ஜோதி லட்சுமி என்பவர் ஆவார்.

இவர் அடிக்கடி 'தினமணி'யில் ஒரு பக்கக் கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கக் கூடியவர். அவற்றில் பெரும்பாலும் ததும்புவது எல்லாம் 'தாம் ஒரு பிராமணர்' என்பதுதான்.

பார்ப்பனர்களின் இனப்பற்று என்பது நாடறிந்த ஒன்றே  - அதுவும் 'தினமணி' ஆசிரியரும் எத்தகையவர் என்பது நன்கு தெரிந்த ஒன்றே! இதனைத் 'தினமணி' படிக்கும் வாசகர்கள் அறிந்த ஒன்றே!

ஆதி சங்கரரை இந்தக் கட்டுரையில் - இதற்கு மேல் தலையில் தூக்கி வைத்து ஆட முடியாது என்கிற அளவுக்கு எழுத்துகள் அணி வகுத்து ஆரவாரம் செய்கின்றன.

ஆதிசங்கரர் பற்றி - நாம் சொன்னால் அதற்கு உள்நோக்கம் கற்பிக்கத் தயாராக இருப்பார்கள்!

அமெரிக்கா வரை சென்று பிராமண மதத்தை (இந்து மதத்தையல்ல) பிரச்சாரம் செய்த விவேகானந்தர் இதே ஆதிசங்கரர்பற்றி என்ன கூறுகிறார்?

"சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகண்ட நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர்.

இக்காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார் போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராம்மணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார்! அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக்கிடமாகின்றன. விதுரன் பிரம்மஞானத்தை அடைந்தான்; அது முற்பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தினால் என்கின்றார்.

நல்லது; இந்நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தையடைந் தால், உங்கள் சங்கரர் சொல்லுவது போலவே, அவன் முற்பிறப்பிலே பிராம்மணனாயிருந்த காரணத்தினால் அத்தகைய ஞானத்தை அடைந்தானென்று சொல்ல வேண்டுமா?

அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்? உயர்ந்த மூன்று வருணத்தாரும் வேதங்களை ஓதுவதற்கும், பிரம்மத்தை அடைவதற்கும் உரியவரென்று வேதம் கூறவில்லையா? வேதப் பிராம்மணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில் தமது புத்திசாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப்படாத தொன்று.

வாதத்திலே தோல்வியடைந்த எத்தனையோ புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கின. அவருடைய இதயத்தை என்னவென்று சொல்வது! 'வாதத்திலே தோல்வியுற்றோம்!' என்று நெருப்பிற் புகச் சித்தமாயிருந்த பவுத்தரும் மூடர். சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமன்றி வேறு என்ன?

புத்த தேவருடைய இதயத்தை இதனோடு ஒப்பு வைத்து நோக்குவாயாக, சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர்; 'பஹுஜன ஹிதாய பஹுஜன ஸுகாய' - பலருடைய இதத்திற்காகவும் பலருடைய நலத்திற் காகவும் வாழ்ந்தார். எவ்வளவு அகண்ட சிந்தை! எவ்வளவு இரக்கம்!"

"இரக்கம் அற்றவர் பிராமணன் என்பதில் செருக்குற்றவர் வருண தர்மத்திலே எத்தகைய  வெறி கொண்டவர்" என்று ஆதி சங்கரரின் முகமூடியைக் கிழித்து உள்ளத்தில் ஊற்றெடுக்கும் ஆரிய பிராமண நஞ்சை வெளியே எடுத்து அம்பலப்படுத்துகிறார். (ஆதாரம்: "சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்", பக்கம் 20-21) முடிந்தால் இதற்கு மறுப்புச் சொல்ல முன்வரட்டும்.

ஆரியர் - திராவிடர் என்பது கட்டுக்கதையாம்.

பிரித்தாளுவதற்காக பிரிட்டிஷாரின் தந்திரமாம். பார்ப்பனர்களின் பழைய புளித்துப் போன பல்லவிதான் இது.

கட்டுக் கதையா - உண்மை வரலாறு என்பதற்கு சல்லடை போட்டுத் தேடிஅலைய வேண்டாம் இதே 'தினமணி'யின் ஆசிரிய ராக இருந்த அய்ராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்றாரே - தொல் பொருள் ஆய்வில் குறிப்பிடத்தகுந்தவர் அவர் என்பதை ஏற்றுக் கொண்டால், அவர் கூறிய 'திராவிட' என்பதையும் ஏற்க வேண்டுமே - என்ன பதில்?

'தினமணி' வட்டாரத்துக்கு மிகவும் பிடித்தமான ஆர்.எஸ்.எஸின் குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர், ஆர்.எஸ்.எஸின் வேத நூல் என்று போற்றப்படும் Bunch of Thoughts ("ஞானகங்கை" என்று தமிழிலும் வெளிவந்துள்ளது) நூலில் "நாம் ஆரியர்கள் - அறிவு திற மிக்கவர்கள்" என்று மார் தட்டுகிறாரே - இதற்கு என்ன பதில்?

இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டமே என்று எத்தனை எத்தனை வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரத்துடன் குவித்திருக்கிறார்கள் - இவை எல்லாம் 'தினமணி' வகையறாக் களுக்குத் தெரியுமா, தெரியாதா?

"ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர் களை, ஆரியர்கள் தங்களுடைய புத்தகங்களில் தஸ்யூக்கள் என் றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக் கிறார்கள்."

சி.எஸ். சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எஸ்., ராமசாமி அய்யங்கார் எம்.ஏ. ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் "இந்திய சரித்திரம் முதல் பாகம்" எனும் நூலில் "இந்து இந்தியா" எனும் தலைப்பில் 16,17ஆம் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளனரே - இவர்களும் திராவிடர் இயக்கத்தின் தாக்கத்திற்கு  - பிரிட்டீஷாரின் தந்திரத்துக்குப் பலியாகி விட்டனர் என்று சொல்லப் போகிறார்களா?

"திராவிடர்களும், நாகர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் கள்" என்று டாக்டர் அம்பேத்கர் கூறியது தெரியுமா? (நூல்: "மண்ணின் மைந்தர்கள் மறைக்கப்பட்ட வரலாறு" (தமிழில்) பக்கம் 74,75) இவ்வாறு வரலாறுகள் குவிந்து கிடக்கின்றனவே!

கடைசியாக ஒரு கேள்வி "நீங்கள் ஆரியரா, திராவிடரா - அல்லது தமிழரா? - உங்கள் தாய்மொழி எது?" என்று கொஞ்சம் வெளிப்படையாக சொல்லுங்கள் பார்க்கலாம்.