ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆச்சாரியார் கூற்றும் அய்யாவின் பதிலும்
October 10, 2020 • Viduthalai • மற்றவை

திராவிடர் கழகம் பற்றி முதலமைச்சர் ஆச்சாரியார் கூற்று

திராவிடர் கழகம் நம்பர் 1 எதிரி

சில காலத்திற்கு முன் எனது முதல் நம்பர் எதிரி கம்யூனிஸ்ட்கள் என்று கூறினேன். இப்போது அதை மாற்றிக் கொள்கிறேன் . கம்யூனிஸ்ட்கள் முதல் நம்பர் எதிரியல்ல. திராவிடர் கழகத்தினர் தான் முதல் நம்பர் எதிரி.

இந்நாட்டில் ஜாதிப் பிரச்சினைதான் மிகத் தொல்லை கொடுக்கக் கூடியதாக இருந்து வருகிறது. ஜாதிப் பிரச்சினையை வைத்துக் கொண்டு திராவிடர் கழகம் நாட்டில் துவேஷப் பிரச்சாரத்தைச் செய்து வருகிறது.

ஜாதி வித்தியாசங்கள் இப்போது மறைந்து போய் விட்டன. மறைந்து போன ஒன்றை - அதாவது பிரேதத்தை - வைத்துக் கொண்டு திராவிடர் கழகம் ஜாதி  வித்தியாசமிருந்து வருகிறதாக பிரச்சாரம் செய்து வருகிறது.

திராவிடர் கழகத்தின் இத்தகைய விஷப் பிரச்சாரத் தைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று உங்களை (காங்கிரஸ் ஊழியர்களை) மண்டியிட்டு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். அவர்களது நடவடிக்கை மீது நீங்கள் பார்வையைச் செலுத்துங்கள் என்றால் அவர் களை ஒரு கை பாருங்கள் என்பதாக கிராமாந்தர மக்கள் கருதுவது போல் கருதி விடாதீர்கள். நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டியதெல்லாம் இவர்களது பிரச்சாரம் அரசியலிலே கலக்காமல் பார்த்துக் கொள்வதுதான். இதனால் நீங்கள் ஒற்றுமையாயிருக்க வேண்டியது அவசியமாகும்.

இனி கம்யூனிஸ்ட்களைக் குறித்து நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. கம்யூனிஸ்ட்களை விட கழகத்தார் கள் அபாயகரமானவர்கள். இவர்கள் பிரச்சாரம்தான் சாதாரண மக்கள் மனதைப் பற்றிக் கொள்கிறது. நம் சிறுவர்கள், சிறுமிகள், மனம் இதில் பெருமளவுக்குக் கவ்வியிருக்கிறது. இப்போது ஆந்திரர்கள் போய் விட்டார்கள். இனி தமிழ்நாட்டில் தங்கள் பிரச்சாரத்திற்கு நல்ல வாய்ப்பிருக்கிறதாக அவர்கள் நினைக்கலாம். இதற்கு இடம் தரலாகாது. ஒவ்வொரு இலாகாவிலும் எத்தனை பிராமணர்? எத்தனை வடகலை? எத்தனை தென்கலை? ஸ்மார்த்தர்கள் எத்தனை பேர்? என்ற பட்டியலைப் போட்டுக் காட்டலாம். அவர்களின் முக்கிய நோக்கமே - காங்கிரஸ்காரர்களின் மனதைக் கெடுக்க வேண்டுமென்பதுதான். இதெல்லாம் பார்க்கும்போது தான், மந்திரி சபையை விரிவுபடுத்த வேண்டுமென்று கருதுகிறேன்.

சாதாரண நபர் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட உத்யோ கத்தைக் கொடுத்தால் கூட, அவர் எந்த வகுப்பு? எந்த ஜாதி? என்பன போன்ற ஆராய்ச்சியில் இறங்கி விடு கிறார்கள். உடனே கிளர்ச்சி செய்ய ஆரம்பித்து விடு கிறார்கள். திராவிடர் கழகப் பத்திரிகைகள் தினம் துவேஷப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இவைகளைத் தண்டிப்பதென்றால் தினம், தண்டனை கொடுத்து வரலாம். தண்டனை கிடைத்தால் உடனே பெரும் கூச்சல் போட ஆரம்பித்துவிடுவார்கள். திராவிடர் கழ கத்தினர் இனிமேல் அதிக கோபப்படுவார்கள். அதைச் சமாளிக்க உங்களுக்கு மனோதைரியம் வேண்டும். இனி தமிழ்நாடு சந்தோசமாக இருக்க வேண்டுமானால் எப் படியாவது திராவிடர் கழகக் கணக்கை கட்டி வைத்துவிட வேண்டும். அவர்களது கணக்குப் புத்தகத்தை மூட்டை கட்டி வைத்துவிட வேண்டும். அவர்கள் செய்கை இனி வரலாற்றில்தான் இடம் பெற வேண்டுமேயல்லாது  நாட் டில் காணுமாறு விடக்கூடாது.  இதற்கான  நடவடிக்கையை காங்கிரஸ்காரர்களாகிய நீங்கள் எடுக்க வேண்டும்.

(சென்னை  தேனாம்பேட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் சென்னை மாநில முதலமைச்சர் சி.இராசகோபாலாச்சாரியார்)

- ‘விடுதலை’, - 4.10.1953

மூட்டைப் பூச்சிகள் - எறும்புகள்!

துவேஷத்தில் ஊறிப்போய் வகுப்புத் துவேஷத்தைப் பரப்பும் திராவிடர் கழகம் போன்றவை எறும்புகளுக்கும், மூட்டைப் பூச்சிகளுக்கும் சமம். ஆனால், எறும்புகளும் மூட்டைப் பூச்சிகளும் மறைந்திருந்து நம்மைக் கடிக் காதபடி வெளிப்படையாக வந்து கடிக்கின்றன. கடி பலமாக இருக்கும் போது இவைகளை நசுக்க வேண்டியது இயற்கையே.

வகுப்பு வித்தியாசங்கள்தான் அந்த எறும்புகளுக்கு வெல்லம் போல் இருக்கிறது. அந்த வெல்லத்தை அகற்றி விரட்டினால் எறும்புகள் நம்மை விட்டுச் சென்றுவிடும். இவ்வேலையை காங்கிரஸ் ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும். கம்யூனிஸ்ட்களை நாம் அடக்கிவிட்டோம். இந்த எறும்பு, மூட்டைப் பூச்சிகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும்.

(திருப்பூர் காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஆச்சாரியார்) விடுதலை - 6.10.1953