ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியர் விடையளிக்கிறார்
September 26, 2020 • Viduthalai • கழகம்

கேள்வி 1. திராவிட இயக்க நூற்றாண்டு என்பதை 1916இல் தொடங்கிய பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் இருந்து கணக்கில் கொள்வதா? அல்லது சுயமரியாதை இயக்கம் தொடங்கிய 1925இல் இருந்து கணக்கில் கொள்வதா?

- த.யாழ் திலீபன், தருமபுரி

பதில் 1: 1916-லிருந்து கணக்கிடுவதுதான் சரியானதாக இருக்கும்; காரணம், அது பார்ப்பனரல்லாதார் கல்வி உரிமைகளைக் கேட்பதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு கட்சி. ‘திராவிடன்’ என்றுதான் மொழி, கலை, நாகரிகம், பண்பாட்டு அடிப்படையில் அமைந்த நம் இனப்பெயரை நாளேட்டிற்குச் சூட்டினர். அரசியல் கட்சியாகியது அது. 1925 இல் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் - தந்தை பெரியார் சமூகப் புரட்சியையே மய்யமாக்கிக் கொண்ட ஓர் இயக்கமாகவே தொடர்ந்தது! எனவே, 1916 தான். அதை அய்யாவும், அண்ணாவும், கலைஞரும் ஏற்றனர். நாமும், நூற்றாண்டு விழாவை அந்த அடிப்படையில்தான் கொண்டாடி உள்ளோம்!

கேள்வி 2. ராமர் கோயில் அறக்கட்டளை வங்கிக் கணக்கில் போலி காசோலை மூலம் ரூபாய் 6 லட்சம் திருட்டு எதனைக் காட்டுகிறது?

- நெய்வேலி க.தியாகராசன்,

கொரநாட்டுக் கருப்பூர்.

பதில் 2: இராமனின் சக்தியையும், இராமராஜ்ஜியத்தின் முன்னோட்டத்தையும் காட்டுகிறது. இதுபோல் முன்பே பல கோடி அளவில் நடந்த ஊழல்பற்றி செய்திகள் வந்துள்ளன. இது ஒரு துளிதான்.

கேள்வி 3. “காங்கிரஸ் கட்சியால் 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை பிரதமர் நரேந்திர மோதி 5 ஆண்டுகளில் செய்துள்ளார்” என்கிறாரே மத்திய அமைச்சர் அமித் ஷா. அவரின் கருத்தை ஏற்கிறீர்களா?

- வை.கண்ணன், ஏலாக்குறிச்சி

பதில் 3: ஆம்! ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய்; ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்று இதுவரை 12 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு - இத்தியாதி, இத்தியாதி!

வேலிக்கு ஓணான்தான் சாட்சி போலும்!

கேள்வி 4. கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. என்பதை நம்மவர்கள் உணர்ந்தபாடில்லையே! முக்கியமான பலரின் இழப்புகள் நம்மை வருந்தச் செய்கின்றனவே அய்யா!

- முகிலா, குரோம்பேட்டை

பதில் 4: ஆம்! நம்மை நாமே மிகவும் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். தனிமைப்படுத்தி நிற்பது, முகக்கவசம் அணிவது, சோப், கிருமி நாசினியை அடிக்கடிப் பயன்படுத்துவது, சத்துள்ள உணவு, போதிய உடற்பயிற்சி, மன இறுக்கமின்றி கடமையாற்றப் பழகுதல் மிகவும் தேவை.

எதுவும் நம் கையில்தான் உள்ளது! ‘ஆண்டவனிடமும் - ஆள்பவரிடமும்‘ இல்லை என்பதே உண்மை!

கேள்வி 5. இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம்?

- தி.கி.முருகன், நாமக்கல்

பதில் 5: தேடுகின்றோம்; தேடுகின்றோம், தேடிக் கொண்டே இருக்கின்றோம்.

புது வரலாறு படைக்கும் 4 மணிநேரத்தில், 8 மசோதாக்கள் நிறைவேற்றம்; எதிர்க்கட்சிகள் இல்லாமல் அவையை நடத்திய புதுமையிலும் புதுமை! மசோதாக்கள் எல்லாம் குரல் வாக்கின் மூலம் நிறைவேற்றப்பட்டன - கூச்சலில்கூட! விந்தை - விசித்திரம் - வியப்பு!

கேள்வி 6. மின்சாரம், கல்வி, விவசாயம், மருத்துவம் எதிலும் அரசுக்கு வேலையில்லை; எல்லாவற்றையும் சந்தை பார்த்துக் கொள்ளும் என்றால் அரசாங்கம் எதற்கு?

- இரா.முத்துக்கிருஷ்ணன்,

மேற்கு மாம்பலம்

பதில் 6: இதுதான் இன்றைய மக்களின் மில்லியன் டாலர் கேள்வி!

கேள்வி 7. நீங்கள் விரும்பிக் கேட்கும் இசை, பாடல்கள் எப்படிப்பட்டவை?

- கு.அன்புச் செல்வன், வேதாரண்யம்

பதில் 7: கருத்தாழமும், மனதுக்கு மகிழ்ச்சியும் தரும் - பாடல்கள்! பழைய பாடல்களில் உள்ள குளுமையும், பொருளும், ஈர்ப்பும் புதிய பாடல்களில் (குறிப்பாக திரைப்படப் பாடல்களில்) இல்லையே!

கேள்வி 8. வேலைவாய்ப்பு, கொரோனா பாதிப்பு, இடப்பெயர்வினால் இறப்பு, பொருளாதாரம், பி.எம்.கேர்ஸ் என்று எதைக் கேட்டாலும் ழிஷீ ஞிணீtணீ என்கிறதே மத்திய பா.ஜ.க. அரசு?

- தென்றல், ஆவடி

பதில் 8: மக்கள் இதிலிருந்தே முன்பு அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறிய குறைந்த ஆட்சி; நிறைந்த ஆளுமை (Minimum Government with Maximum Governance) என்பதற்கு இதுதான் பொருள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

கேள்வி 9. மகளிரணியை வைத்து தி.மு.க. சுவரெழுத்துகளை அழிப்பது, அதன் மூலம் சண்டை இழுப்பது, பிறகு போலிக் கட்டுடன் போஸ் கொடுப்பது என்று Cheap Politics-இல் இறங்கியுள்ளதே பி.ஜே.பி. அது எடுபடுமா தமிழ்நாட்டில்?

- கமலா தேவி, கன்னிகாபுரம், சென்னை

பதில் 9: ரவுடிகளைச் சேர்த்து கட்சியை நடத்துகிறார்கள் என்று ஒரு பெண்ணே அக்கட்சித் தலைவர் வீட்டின்முன் விசித்திரப் போராட்டம் நடத்தியுள்ளார். ஜஸ்டீஸ் சந்துரு ஒரு கட்டுரையே இதுபற்றி ‘தமிழ் இந்து’ நாளேட்டில் எழுதியுள்ளார் (11ஆம் பக்கம் காண்க!).

 

சிறப்புக் கேள்வி:

தமிழன் பிரசன்னா,

திமுக செய்தித் தொடர்பு

இணைச் செயலாளர்

கேள்வி 1. தற்போது திராவிடம் பேசும் சிறு சிறு குழுக்கள் நிறைய உருவாகி வருகின்றன. அவை திராவிடர் கழகம் எனும் பேரியக்கத்தை எந்த வகையில் பாதிக்கிறது-இல்லை உறுதுணையாக இருக்கிறது?

பதில் 1: நன்றி தோழர் தமிழன் பிரசன்னா!

திராவிடர் கழகம் இந்த சிறு குழுக்களால் மட் டுமல்ல; வேறு எந்த குழுக்களாலும்கூட பாதிக்கப்படு வதில்லை. ஆணி வேருக்கு சல்லி வேர்களாக இருக் கட்டும்; வேர்ப் புழுக்களாக என்றும் அவை மாறி விடக் கூடாது!

திராவிடம் என்று கூறிவிட்டு, தனித்தனியே குழுக்கள் செயல்படும் நிலையில் நம் சக்தி சிதறிட வாய்ப்பு உள்ளது. அதுபற்றி அவர்கள் சிந்திப்பது மிகவும் அவசியம். அதுவும் இந்தக் காலகட்டத்தில்! உரிமையுடனும் தோழமை, சகோதரத்துவ உணர்வு டனும் கூறுகிறோம்.

கேள்வி: 2. பகுத்தறிவுச் சிந்தனையுடைய திராவிட இயக்கங்களை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டு, ‘ஹிந்து விரோதி’ என்று Branding செய்து, அதன் உயரிய நோக்கங்களை நிறைவேற்ற முடியாமல் செய்யும் சதி வெளிப்படையாகத் தெரிகிறதே? இதை எப்படி முறியடிப்பது?

பதில் 2: சதியை முறியடிப்போம்;

நான் தான் திராவிடன் என்று நவில்கையில்

தேன்தான் நாவெல்லாம் என்பதோடு,

வான்தான் நம் எல்லை என்கிறபோது,

எவன்தான் நம்மை வெல்ல முடியும்.

வீண்தான் 'அவாள் முயற்சி!'

நமது தொடர் பணி தொய்வின்றி நடந்தாக வேண்டும் - கொள்கைச் சிந்தனையோடு - பயணம் தொடரட்டும்!