ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியர் விடையளிக்கிறார்
July 25, 2020 • Viduthalai • மற்றவை

சிறப்புக் கேள்வி

மு.வீரபாண்டியன், 

மாநில துணைச் செயலாளர்,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

நீண்ட நெடிய பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர், இட ஒதுக்கீடு, சமூகநீதியின் அடையாளமாகத் திகழும் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களிடம் வினாக்களை வினவும் அரிய சந்தர்ப்பத்திற்கு மகிழ்ச்சி.

கேள்வி 1: திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கங்களும் கொள்கை அளவில் வெவ்வேறா? அவை இன்னும் நெருக்கம் காண என்ன வழி?

கேள்வி 2: இன்றுள்ள வகுப்புவாத, கார்ப்பரேட் அரசியல் சூழலில் திராவிட இயக்கங்கள், பொது வுடைமை இயக்கங்கள், தலித் இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள் இன்னும் நெருங்கி வர, ஒரு பொது மேடை காண என்ன வழி?

பதில்: நன்றி தோழர் வீரபாண்டியன் அவர்களே!

இரண்டு கேள்விகளுக்கான பதில்களையும் இணைத்தே சொல்கிறேன்.

இரண்டு இயக்கங்களும் கொள்கை அளவில் வேறே அல்ல; நீண்ட பல காலம் அதன் திட்டங்கள் வேறு திசை மாறிச் சென்றன. வர்க்கம் - வர்ணம் என்று விவாதித்தது. எதிரிகளை பலம் அடையச் செய்தது!

நம்நாட்டு ஜாதி ஒழிப்பு - வர்ண ஒழிப்புதான் வர்க்க ஒழிப்புக்கே மூலதாரம் - மனுதர்மமே அதற்குரிய சரியான சான்று! ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் தலைமை, சமூக நீதியில் சரியான பார்வைக்கும் பாதைக்கும் வந்துள்ளது என்பதால் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஅய்), துவக்கம் முதலே இதில் ஒரு தெளிவுடன் இருந்தது. மாறாக மார்க்சிஸ்ட் கட்சி பொருளாதார அளவுகோலை வற்புறுத்தியது - ஆர்.எஸ்.எஸ். விரித்த வலையில் வீழ்ந்தது போன்றதொரு நிலை.

இவை இன்று சரி செய்யப்பட்டது. பொது உரிமை முதலில் வந்தால் பொதுவுடைமை தானே மலரும் என்றார் தந்தை பெரியார்.

அதுமட்டுமல்ல... பொது உரிமையில்லாமல் பொது உடைமை வந்தாலும் அது சரியான பயன்தராது என்ற தெளிந்த சிந்தனையோடு சொன்னார் தந்தை பெரியார்.

சோவியத் ரஷ்யாவுக்கு 1932இல் செல்வதற்கு முன்பே, கம்யூனிஸ்ட் அறிக்கையை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து தனது 'குடிஅரசு' வார ஏட்டில் வெளியிட்ட தந்தை பெரியாருடன், இயக்கத்துடன் ஏற்பட்ட தேவையற்ற உரசல்கள் இப்போது இல்லை. சமூகநீதி களத்தில் மக்களைத் தயாரித்து பிரச்சாரத்தில் இறங்க வேண்டும். உண்மையாக லட்சியத்திற்குப் போராடும் நாம் அனைவரும் எந்த அமைப்பாக இருந்தாலும் - தந்தை பெரியார் சுட்டிய நமது எதிரி யார்? நண்பன் யார்? என்பதை சரியானபடி அடையாளம் கண்டறிந்து, அதற்கேற்றபடி வியூகம், போராட்டம், பிரச்சாரம் அமைத்தல் அவசியம்!

எது நம்மைப் பிரிக்கிறதோ அதை அலட்சியப்படுத்துவோம்.

எது நம்மை இணைக்கிறதோ அதை அகலப்படுத்துவோம்; ஆழப்படுத்துவோம்! இணைந்து போராடுவதற்கும் களத்தில் வெற்றிக் கனி பறிப்பதற்கும் இதுதானே சரியான முறையாக இருக்க முடியும்!

லட்சியம் முக்கியம்; பதவி அதன்பின்! அதையும் மறந்து விடாமல், கூட்டணி அல்லது தேர்தல் உடன்பாடுகளில் கூட பிடிவாதமற்ற நீக்குப்போக்கு! எதிரி வென்றுவிட இடமளித்தல் கூடாது என்பதற்கு முன்னுரிமை - இவற்றை முதன்மையாக்க வேண்டும்.

மதவெறித் தீயை, ஜாதித் தீயை, பண வெறி, பதவி வெறித் தீயை  அணைக்கும் பெரும் அவசர முயற்சியில் அனைவரும் நாம் தண்ணீரும் மணலும் கொண்டு வர வேண்டும். நம் கூட்டுக்குள் பெட்ரோல் எடுத்து வருபவர் எவரும் நுழைந்து விடவும் கூடாத எச்சரிக்கையுடனும் செயல்படல் அவசியம்!

பொதுஉடைமை கொள்கைதனை திசையெட்டும் சேர்த்து ஜாதி-பெண்ணடிமை மறுத்து - புதியதோர் உலகு காண நம்பிக்கையுடன் ஒருங்கிணைந்து உழைத்தால் வெற்றி நமதே!கேள்வி : PM Cares பற்றி...   - க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

பதில் : அ. 2014இல் பிரதமர் மோடி பதவிக்கு வருமுன்னர், "ஆட்சியில் வெளிப்படைத் தன்மை" (Transparency) என்று கூறித்தான் பெரும்பான்மை மக்களால் வாக்களிக்கப்பட்டு பதவியேற்றார்.

அதற்கு நேர்முரணாக உள்ளது பி.எம்.கேர்ஸ் நிதி! அது பற்றி எந்த தகவலும் பொதுமக்களுக்கோ, அறிந்து கொள்ள விரும்புவோருக்கோ கிடைக்கும் நிலையில்லையே என்ற எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு அவரோ, அமைச்சர்களோ பதில் அளிக்கவில்லை.

ஆ. தேசியப் பேரிடர் நிதி, பிரதமர் நிவாரண நிதி என்ற நிதிகள் காலங்காலமாய் இருக்கிறபோது CSR என்ற கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி - கார்ப்பரேட்காரர்களின் நன்கொடைகள் ஏன் அதில் மட்டும் குவியவேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் இரண்டாவது கேள்விக்கும் அவரிடமிருந்தோ, அரசின் துறையிடமிருந்தோ ஏனோ பதில் இல்லை?

கேள்வி : ‘கடவுள் ராமர் நேபாளியாமே!?’’       - இளையராஜா, பிலாக்குறிச்சி

பதில் : இராமர் கடவுள் - புராணக் கற்பனையே! வரலாறுகள் புராணங்களின் தொகுப்பு அல்ல. எனவேதான் 2020லும் இராமர் கோயில் என்று துவங்கும் நேரத்தில் இப்படி ஒரு பெரும் "பூதம்" கிளம்புகிறது - அண்டை நாட்டிலிருந்து - அதுவும் பழைய "ஹிந்துநாடு" என்று அழைக்கப்பட்ட நேபாளத்திலிருந்து!

பதில் அளிக்கும் பொறுப்பு இராம பக்தர்களுக்கே!

கேள்வி : நீட் தேர்வின் ஆபத்து பற்றி பல பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லையே ஏன்?              - வெங்கட. இராசா, ம.பொடையூர். 

பதில் : நமது மக்களின் அறியாமை, அலட்சியம் புதிதல்லவே, காலங்காலமாய் காண்பதுதானே! தீயை அணைக்க, தீயணைப்புப் படை வரும் வரை காத்திருக்கும் புத்திசாலிகளாயிற்றே நம் மக்கள் பலர் - விழிப்புணர்வு இல்லாத சமூகம் அதனால்தான் வீழ்ச்சியிலிருந்து எளிதில் மீள மறுக்கிறது!

கேள்வி : வேதங்களையும் ஸ்மிருதிகளையும் முதன்மையெனக் கொண்டு பின்பற்றி வாழும் பார்ப்பனர்கள் கூட “வர்ண சங்கரம்“ என்பதை மறந்து ஜாதி விட்டு, மதம் விட்டு திருமணம் செய்கிற காலத்தில் அவர்களால் சூத்திர ஜாதிகளாக நிர்ணயிக்கப்பட்டவர்கள் ஆணவக் கொலை அளவுக்குச் செல்வதை எவ்வாறு புரிந்துகொள்வது?           - கிருபாகர் ராஜ், பெருங்களத்தூர் 

பதில் : பார்ப்பனர்களிடம் நடந்த இனக்கலப்பு, ஜாதி மறுப்பு எதுவும் ஆணைவக் கொலைகளில் முடிவதில்லை; அவர்கள் ‘காலத்தை ஒட்டி மாறக் கூடியவர்கள்! ‘வரதட்சணை’ பிரச்சினை தீர்ந்ததே என்ற உள்ளூர மகிழ்ச்சியும், வெளியே சில நேரங்களில் பொய்க் கோபமும் தலை நீட்டும்; பிறகு சரியாகி விடும். (பல பார்ப்பன நண்பர்கள் குடும்ப நிகழ்வுகளை வைத்தே கூறுகிறோம்)

கேள்வி : சோனியா காந்தியின் வரவுக்கு பின் காங்கிரஸ் கட்சியின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மாற்றம் அடைந்துள்ளதா? காரணம் என்ன?

                - தகடூர் தமிழ்ச்செல்வி, தருமபுரி

பதில் : ஆம். நல்ல திருப்பம். சமூக நீதியில் அவர்கள் சரியான பார்வையுடன் அக் கட்சியை எடுத்துச் செல்லுகிறார் என்பதும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று! இதுதான் நேரு காட்டிய வழி! இடையில் ஏனோ வழி தடுமாற்றம் - அதன் விளைவுதான் ஏற்பட்ட தோல்விகள்!

கேள்வி : அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் இராமன் பிறந்தார் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, கோயில் கட்டும் பணிக்கான தொடக்க விழா, ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாபர் மசூதியை சட்ட விரோதமாக இடித்ததற்காக நிலுவையில் உள்ள சிபிஅய் வழக்கின் விசாரணை தற்போது நடைபெறுவதும், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறுவதும் சரியா?

                - மன்னை சித்து, மன்னார்குடி - 1.

பதில் : சட்ட நிபுணர்களும் இராமனுடைய வாரிசுகளும் பதில் அளிக்க வேண்டிய இந்த கேள்விக்கு சாமான்யன் பதில் அளித்தால் அது சரியாக இருக்குமா தோழர்?

கேள்வி : அகில இந்திய அளவில் ‘சமூகநீதிக்கான அணி’யைத் தாங்களும், ‘மாநில சுயாட்சிக்கான கூட்டமைப்பை’ தி.மு.க தலைவர் தளபதியும் கட்டமைக்கும் பெரும் பணி மேற்கொள்ளப்பட இது சரியான தருணம் தானே?

                - சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில் : இயல்பாகவே அது நமது இன எதிரிகளாலும், அரசியல் சூதுமதியினராலும், ஆட்சியாளர்களாலும் உருவாக்கப்பட்டு வருகிறது. காலம் கனிந்து வருவது காலத்தின் கட்டாயமாகி விட்டது - இனி சமூக நீதியும் சுயாட்சி உரிமையும்தான் லட்சியப் போர் - கொள்கைப் போர்களாக களங்களில் நிற்கும்! அதை திசை மாற்றவே தற்போது பல பம்மாத்துகள் - எடுபடுமா அவை!

கேள்வி : சமூகநீதியினால் பலன் பெற்ற மேனாள் மருத்துவ மாணவர்களான இன்றைய மருத்துவர்கள், நீட், மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு மறுப்பு போன்ற பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் போது அவர்களைப் பற்றிய தங்களது பார்வை?         - சு.வனவேந்தன், ஓசூர்

பதில் : நாம் செய்யும் பணி நன்றிப் பாராட்டாத - எதிர்பார்க்காத பணி என்று நம்மை பக்குவப்படுத்தி விட்டார் தந்தை பெரியார்! வான் மழை போல நம் கடமை, நமது லட்சியப் போராட்டங்கள் - அதுவும் பருவம் தவறாது பெய்வது போன்றதே!

தண்ணீர்ப்பந்தலில் தாகமெடுத்து குடித்தவர்கள் நன்றியா செல்லுகிறார், தண்ணீர் தருபவரைப் பார்த்து மகிழ்ச்சி கூட அடைவதில்லையே!