ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியர் விடையளிக்கிறார்
September 19, 2020 • Viduthalai • மற்றவை

கேள்வி: மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருவோர், பிரச்சினைகளுக்கு மட்டும், கடவுளின் மீது பாரத்தைப் போடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 - நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில்: அக்காலத்திலேயே - சுயமரியாதை மேடைகளில் ஒரு முழக்க வாசகம் உண்டு. “கையாலாகாதவருக்கு ‘கடவுள் துணை’ என்று! அதை கொரோனாவில் தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடியார் துவங்கி மத்திய நிதியமைச்சர் நிர்மலா அம்மையார் வரை கூறுகிறார்கள்!

 நாம் கடவுளைத் தேடிப் போய் கேட்கவோ முடியும்? இல்லாதவரைக் கண்டு எப்படி கேட்க முடியும்? எளிதில் தப்பிக்க இப்படி ஒரு குறுக்கு வழி!

கேள்வி: இழப்பீடும், வேலையும் வழங்கி 'நீட்' தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருப்பது பற்றி தங்கள் கருத்து என்ன?   - இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்

பதில்: தவறான கருத்து - ஏற்கத்தக்கதல்ல!

மனித நேயத்தோடு அணுகவேண்டியவற்றை இப்படிப் பார்ப்பதும், ஆறுதல் கூறவேண்டியர்களுக்கு இதைக் கூறுவதும் சரியல்ல.

கேள்வி: நீட் தேர்வு எழுத வந்த புதுமணப் பெண்ணிடம்  தாலி, மெட்டியை கழற்றச் சொன்னபோது இந்துக்களின் மனது புண்பட்டு விட்டது என்று சங்கிகள் குரல் எழுப்பாதது ஏன்?       - சீதாலட்சுமி, திண்டிவனம்

பதில்: சங்கையற்ற சங்கிகள் - சந்தர்ப்பவாதிகள்!

கழகத்தின்மீது பாய அவர்களுக்கு ‘மனம் புண்பட்டுவிட்டது’ என்பது ஒரு சாக்கு, அவ்வளவே!

தாலியை அடகு வைப்போரிடம் சென்று மீட்டதுண்டா இவர்கள்?

கேள்வி: ‘நீட் தேர்வைக் கொண்டு வந்தது, காங்கிரசு - தி.மு.க தான்’ என சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி பேசுகிறாரே இது பற்றி கூறுங்கள்?

               - வெங்கட. இராசா, ம.பொடையூர்

பதில்: இதுபற்றி பலமுறை பதில் கூறியிருக்கிறோம். நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டது தி.மு.க.!

இவர்கள் சொல்வதை வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், கலைஞர், ஜெயலலிதா காலத்தில் நீட் தேர்வு இல்லை என்ற நிலையை, இவர்களால் ஏன் உருவாக்க முடியவில்லை? இதைத் திசை திருப்பவே இப்படி ஒரு தவறான குற்றச்சாட்டு. ஆனால் மக்கள் மத்தியில் எடுபடாது.

கேள்வி: பகுத்தறிவாளர் கழகம் 1990-கள் வரை அரசுத்துறை அலுவலங்கள், பள்ளிக் கல்வி, உயர் கல்வித்துறைகளில் எழுச்சியுடன் செயல்பட்டது போல மீண்டும் சூழல் ஏற்படுமா?              - மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில்: அடுத்த 8 மாதங்களுக்குப் பிறகு வரலாறு திரும்பும்! நம்பிக்கையோடு இருங்கள் சித்து!

கேள்வி: ‘குடிஅரசு’ இதழில் வெளிவரும் முன்பே ‘குமரன்’ சொ.முருகப்பா, சிங்கப்பூர் அ.சி.சுப்பையா போன்றோர் முன்னெடுத்ததே தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்றும், அதை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் என்று சொல்லுதல் பொருந்தாது என்றும் சிலர் எழுதுகிறார்களே?

               - கோ.பாண்டிவளவன், வேலாம்பாளைம்

பதில்: 1935 முதல் தனது ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஏடுகளில் தொடர்ந்து பயன்படுத்தியவர் தந்தை பெரியாரைத் தவிர வேறு யார்?

பெரியாரின் பெருமையை இப்படி திரிபுவாதங்களால் ஒரு போதும் குறைத்துவிட முடியாது!

‘சுயமரியாதை’ என்ற சொல் அகராதியில் பெரியாருக்கு முன்பிருந்தே இருக்கிறது என்று சொன்னால் போதுமா? நடைமுறையில் அதைக் கொண்டு வந்தவர் யார் என்பதல்லவா முக்கியம்?

கேள்வி: இவ்வாண்டு பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களில், பகிர்வுகளில் பெருமளவில் இளைஞர்களைப் பார்க்க முடிகிறதே?

               - முகிலா, குரோம்பேட்டை

பதில்: இளைஞர்களின் வழிகாட்டி மட்டுமல்ல, போர்க்கருவியும் பெரியார்தான்!

பெரியார் கொள்கைகளைப் பின்பற்றுவதிலும், பெரியாரை உறுதியாகப் பற்றிக் கொள்வதிலும் இளைஞர்கள் உறுதியுடன் உள்ளனர்.

கேள்வி: விவசாய சீர்திருத்த மசோதாக்களைக் கண்டித்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் விலகியுள்ளார். அவ்வளவு ஆபத்துக்குரிய சட்டங்களா அவை?         - ந. சம்பத் குமார், தஞ்சாவூர்

பதில்: கார்ப்பரேட்டுகளிடம் விவசாயத்தை, விவசாயிகளின் நலனைப் பலி கொடுக்க வழிவகுக்கும் ஆபத்தானவை என்பதால் தான்!

கேள்வி: அறிவியல் சார்ந்து நீங்கள் விரும்பிப் படிக்கும் துறை எது?

- தென்றல், ஆவடி

பதில்: “மிச்சியோ காக்கு” என்ற ஜப்பானிய அமெரிக்கப் பேராசிரியர் எழுதிய நூல்கள் பல நான் விரும்பிப் படிப்பவை. அதுபோலவே ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ரிச்சர்டு டாக்கின்ஸ், கார்ல்சேகன் ஆகியோரின் அறிவார்ந்த அறிவியல் நூல்களையும் விரும்பிப் படிப்பேன். இவை உலகியலை நன்கு விஞ்ஞான வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் விளக்கும் அறிவு விளக்க நூல்கள்.

சிறப்புக் கேள்வி

பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

கேள்வி: மூவாயிரம் ஆண்டுகள் மட்டுமே வரலாறு கொண்ட ஆரியத்திற்கு பன்னிரண்டாயிரம் ஆண்டுக்கால வரலாற்றை வரைய முற்பட்ட துணிவு எவ்வாறு ஏற்பட்டது? அய்யாயிரம் ஆண்டுக்கால அரப்பா நாகரிகம், பதினோராயிரம் ஆண்டுகள் முந்தையதாகக் கடல்கொண்ட பூம்புகார் தமிழ் நாகரிகத்தின் தொன்மையை மெய்ப்பிக்க வல்லமை கொண்டிருந்தாலும் இவற்றைப் புறக்கணித்து ஒரு பண்பாட்டு வரலாறா?

பதில் 10: மிக்க நன்றி பேராசிரியர் அவர்களே, அருமையான கேள்வி இது!

ஆர்.எஸ்.எஸ். என்ற ஆக்டோபஸ், தனக்கு “ஜனநாயகம்” மூலம் கிடைத்துள்ள “பெரும்பான்மை” என்ற மிருக பலத்தால், அதை வாய்ப்பாக்கிக் கொண்டு, தனது ஆதிக்கக் கரங்களோடு இப்படி துணிந்து இறங்கிவிட்டது. பல அரசியல் அமைப்பு நிறுவனங்கள், ஊடகங்களை வளைத்தும், அச்சுறுத்தியும் வைத்துள்ள நிலையில் இப்படி ஒரு வரலாற்றுப் புரட்டை நிகழ்த்த ஆயத்தமாகிவிட்டார்கள்.

தங்களைப் போன்ற அறிஞர் பெருமக்கள், கட்டுரைகள் - காணொலிகள் மூலம் இந்த ஆபத்து, புரட்டு பற்றி மக்கள் மன்றத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கி, மக்களுக்கு இந்த ஆபத்தைப் புரிய வைத்து, தடுத்து நிறுத்திட முன் வரவேண்டும். இதனை விளக்கினால் ‘குட்டு’ உடைந்து நொறுங்கிவிடும்.