ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆசிரியர் விடையளிக்கிறார்
September 12, 2020 • Viduthalai • கழகம்

கேள்வி: அன்றைய நரேந்திரன் (விவேகானந்தர்) முதல் இன்றைய நரேந்திரமோடி வரை சூத்திரர்களே பார்ப்பனர்களுக்கு அம்புகளாக உள்ளார்களே அய்யா?           - வி.சடகோபன்,  குடியாத்தம்

பதில்: பார்ப்பனியம் - ஆரியத்தின் பலமும் சூழ்ச்சித் தந்திரங்களும், நம் கையைக் கொண்டு நம் கண்ணை குத்தும் துரோகிகளை, விபீஷணர்களைத் தங்களது அம்பாக்கி வருவதும், அதன் மூலம் வெற்றி பெறுவதும் புராண காலந் தொட்டு இன்றுவரை வாடிக்கையானதுதானே!

எனவேதான், எதிரியை விட துரோகிகள் யார் என்பதை உணர்வதும், மன்னிப்புக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்கள் என்பது உணர்த்தப் பட வேண்டியதும் அவசியமாகும்.

கேள்வி: ஜாதி உணர்வு இருக்கின்ற அளவுக்குத் தமிழரிடத்தில் தன்மான, இனமான உணர்வு இல்லாமல் போனதற்கு என்ன காரணம்?

                - நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில்: இனமான உணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தானே ஜாதிகள் உருவாக்கப்பட்டன! மற்ற நாடுகளில் இனங்கள் ஒன்றிணைந்து குரல் தருவது இங்கே இல்லாததற்கு மூலகாரணம் ஜாதி பிரிவுகளும் பிளவுகளும்.

97 பேர்களுக்கு முன் மூன்று பேர் சிறுபான்மை. ஆனால், 97-ம், தனித்தனியே 97 ஆகி நிற்கும்போது, 1 சிறியது; 3 பெரியது அல்லவா? அதே கதிதான்.

கேள்வி: "வெறுக்கத் தெரிந்தவனே வெற்றி பெறுவான்!" என்ற சொற்றொடரை பெரியார் எப்போது பயன்படுத்தினார். அதற்கு தத்துவார்த்த விளக்கம் என்ன?

               - கி தளபதிராஜ், மயிலாடுதுறை

பதில்: ஆதிக்கத்தை, சுரண்டலை, அறியாமையை, பேதத்தை வெறுத்தால் தான் அதனை ஒழிக்க முடியும்; நோயை வெறுத்தால் தானே சுகாதாரத்தை வரவழைக்க முடியும். அதுபோல அதன் தத்துவார்த்தம் தனி மனித வெறுப்பு என்பதல்ல. தத்துவ ரீதியாக, அமைப்புரீதியாக வெறுத்து ஒதுக்க வேண்டும் என்றார்.

உலக அமைதி விரும்புவோர் போரை வெறுப்பது போல! சுயமரியாதை இயக்கத் துவக்கத்திலே ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை, பேதம், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பயன்பட்ட சொற்றொடர் இது!

கேள்வி: தமிழில் பத்திரிக்கை நடத்தி பிழைத்து வரும் சிலர்,  சமஸ்கிருதம் தொன்மையானது, செம்மொழித் தகுதி பெற்றது தமிழுக்கு இணையானது என நீட்டி முழக்குகிறார்களே... பிறகேன் அவர்கள் சமஸ்கிருதத்தில் பத்திரிகைகளை வெளியிடுவதில்லை?  - மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில்: நல்ல கேள்வி! வாங்கிப் படித்து வருமானம் வர வழி வேண்டாமா? அவாளே கூட பலரும் படிக்க முடியாதே! எல்லாம் சுரண்டலுக்கு வழிவகை தான்! அவாளுக்குச் சொல்லியா தரவேண்டும்?

கேள்வி: மெய்யியலை விட்டுவிட்டு சமூக விடுதலை அடைந்திட முடியுமோ?

               - ஏ.ஜே.லிங்கேசுவரன் (இணையம் வழியாக)

பதில்: மெய்யியல் என்றால் தத்துவம் (Philosophy); அது மதம் அல்ல. சமூக விடுதலைக்கு மூலகாரணமாக தத்துவங்கள் மீது நின்று போரிட்டால் அந்தக் களம் பயன் தருவதாக நிச்சயம் அமையும். 

இப்போது மெய்யியல் Philosophy - Religion இரண்டும் ஒன்றே என ஆன்மீக அவியல் நடைபெறுவதும் ஒரு வேடிக்கையே!

கேள்வி: கிறிஸ்துவரல்லாதோர், இஸ்லாமியரல்லாதோர், பார்சிகளல்லாதோர் அனைவரும் இந்துக்கள் என்ற வரையறை எந்தச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது? யாரால், எப்போதிருந்து இந்த அளவுகோல் முன்னிறுத்தப்பட்டது?

               - கி.மணிமேகலை, பரமக்குடி

பதில்: ஹிந்து லா (Hindu Law) என்று பெரும்பாலான இந்திய மக்களை மத அளவுகோலால் அளக்கும் சட்டத்தில் இது வரையறையாக வகுக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்கார நீதிபதிகள் ஜோன்ஸ்  - நெல்சன் போன்றவர்களால் புகுத்தப்பட்ட ‘இந்து லா’வில் இடம் பெற்றது.  

கேள்வி: ‘அரியர்ஸ் மாணவர்களுக்கு பாஸ்!’ என்று வெளிவந்த அறிவிப்பு பெரும் குழப்பத்துக்கு வழிவகுத்துவிட்டதே...   - பெ.தமிழ்ச்செல்வன், நன்னிலம்

பதில்: ‘மனிதக் கடவுள்’களால் தான் இப்படி மகிமைகளையும் அற்புதங்களையும் செய்ய முடியும். ஆறறிவுள்ள சராசரி மனிதர்கள் செய்ய முடியாது.

கேள்வி: தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று  மம்தா உறுதியாக இருக்கும்போது, தமிழக அரசு இன்னும் தன் முடிவை அறிவிக்கவில்லையே?             - சி.முத்துவேல், நாங்குநேரி

பதில்: முதுகெலும்பு உள்ளவர்கள் முழங்குகிறார்கள்; இல்லாதவர்கள் பதுங்குகிறார்கள்! அவ்வளவுதான்.

கேள்வி: தமிழ் ஊடகங்களில் வரும் விவாத நிகழ்ச்சிகளைக் குறித்தெல்லாம் நேரடியாக மத்திய நிதி அமைச்சரே தொடர்புகொண்டு ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறாராமே!          - கு.வீரபாண்டி, ஆர்.எஸ்.மங்கலம்

பதில்: லகானைப் பிடித்துள்ள காவிகளின் பிடிப்பு எப்படி ஊடகச் சுதந்திரத்தை பாதித்துள்ளது என்பதற்கு இது நல்ல சான்றாகும். கார்ப்பரேட் முதலாளிகள் நிதி அமைச்சர் தயவில் வாழ்பவர்கள். ஆதலால் அது எளிதாகிறது போலும்!

சிறப்புக் கேள்வி

மருத்துவர் சோம.இளங்கோவன்,

இயக்குநர், பெரியார் பன்னாட்டமைப்பு

சிகாகோ

கேள்வி: ஒரு நல்ல தொண்டன் தான் சிறந்த தலைவன் ஆகமுடியும் என்பதை உணராத மாயமான்கள் நிறைய உள்ளனவே?

பதில்: மாயமான்கள் அல்ல; அதிவிரைவில் மாயும் மான்கள் அவை. ஒரு போதும் பாயும் மான்கள் ஆக மாட்டா!

தலைவன் தன்னை முதல் தொண்டனாகக் கருதி அடக்கமும் அன்பும் கொண்டு வழி நடத்தும் போது தான் வெற்றி எளிதாகிறது.

கேள்வி: வேதங்கள் என்பவை வெங்காயங்கள், பெரிதாக ஊதப்பட்டுள்ள பலூன்கள் என்பதை நமது பேச்சாளர்களுக்கு விளக்கி அவர்கள் மூலம் மக்களிடம் எடுத்துரைக்க முடியுமா அய்யா?

பதில்: இப்போது உள்ள சூழ்நிலையில் சற்று நிதானித்து செய்யலாம். ஊதி ஊதிப் பெருக்கும் பலூன், திடீரென்று வெடிக்கும் என்பது இயற்கை நியதி.

காலம் கனியட்டும் - வரலாறு திரும்பும்! பொய்களுக்கு நிரந்தர சிம்மாசனம் கிடையாது - வரலாற்றில்!